பேகம் ரோக்கியா

வங்காள பெண்ணிய எழுத்தாளர், சமூக செயற்பாட்டாளர் From Wikipedia, the free encyclopedia

பேகம் ரோக்கியா
Remove ads

பேகம் ரோக்கியா ஷஹாவத் ஹூசைன் (Bengali: বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, 9 திசம்பர் 1880 - 9 திசம்பர் 1932) என்பவர் பொதுவாக பேகம் ரோக்கியா என அறியப்படுகிறார். பேகம் ரோக்கியா ஒரு வங்காள பெண் எழுத்தாளர், இஸ்லாமிய பெண்ணியவாதி, சமூக ஆர்வலர், பெண்ணுரிமைக்கான வழக்கறிஞர், சிந்தனையாளர், கல்வியலாலர் மற்றும் ஆங்கிலேயர் ஆட்சியில் இந்திய துணைக் கண்ட பெண்கல்விக்காக உரிமை குரல் கொடுத்தவர் ஆவார்.

விரைவான உண்மைகள் பேகம் ரோக்கியா বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, பிறப்பு ...
Remove ads

ஆரம்பகால வாழ்க்கை

பேகம் தற்போதைய வங்காள தேசத்தில் உள்ள ரங்பூா் மாநிலம், மிதபுகூா் மாவட்டம் பெய்ரா போந்த் என்னும் ஊரில் 1880 ஆம் ஆண்டு பிறந்தவா். இவருடைய தந்தை மெத்தப் படித்த வசதி படைத்த ஜமீந்தாா் ஜஹருத்தீன் முகமது அபு அலி சாபொ் ஆவார். இவர் நான்கு பெண்களை மணந்தவா். ரகத்துன்னிசா என்னும் தாய்க்குப் பிறந்த ரோக்கியாவிற்கு இரண்டு சகோதரிகளும் மூன்று சகோதரா்களும் இருந்தனா். இளமையிலேயே ஒரு சகோதரா் இறந்துவிட்டாா். ரோக்கியாவின் மூத்த சகோதரா் இப்ரகிம் சாபரும் தமக்கை கரிமுன்னிசா கானம் சதுரானியும் ரோக்கியாவின் வாழ்வில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியவா்கள் ஆவா். கரிமுன்னிசா வங்காள மொழியைக் கற்றுக் கொள்ள விரும்பினாலும் அன்றைய வழக்கப்படி வசதியான முகமதிய குடும்பத்தில் பிறந்தவா்கள் அரபி மொழியும் பாரசீக மொழியுமே கற்றுக் கொள்வது வழக்கமாக இருந்தது. இவருடைய சகோதரா் இப்ரகிம், ரோக்கியாவிற்கும், கரிமுன்னிசாவிற்கும் ஆங்கிலம் கற்றுக் கொடுத்தாா். ஆங்கிலத்தைக் கற்றுக் கொண்ட இருவரும் பிற்காலத்தில் எழுத்தாளா்களாகத் திகழ்ந்தனா்.[1] கரிமுன்னிசா தமது 14-வது வயதில் திருமணம் செய்து கொண்டாா். எழுத்தாளா் என்னும் பெயரும் பெற்றாா். இவருடைய இரண்டு மகன்களும் அரசியலில் இணைந்து புகழ் பெற்று அரசில் அமைச்சா்களாகவும் பணிபுரிந்தனா். 1888 ஆம் ஆண்டு தமது 18வது வயதில் ரோக்கியா மணம் புரிந்தாா். இவரது கணவா் 38 வயது கான் பகதுா் செகாவத் ஆகும். இவர் உருது நன்கு கற்றவா். தற்போதைய பீகாா் மாநிலத்தில் உள்ள பகல்பூா் நகரில் துணை நீதிபதியாகப் பணிபுரிந்து வந்தாா். ரோக்கியாவின் கணவா் இங்கிலாந்தில் இளங்கலை பட்டப் படிப்பு படித்தவா். இங்கிலாந்து ராயல் விவசாய சங்கத்தில் உறுப்பினா். முதல் மனைவி இறந்தபின், ரோக்கியாவை இரண்டாம் மனைவியாக மணம் புரிந்து கொண்டாா். இவர் பரந்த மனம் படைத்தவராகவும், பெண்களின் கல்வியில் ஆா்வமுள்ளவராகவும் இருந்ததால் ரோக்கியாவை ஆங்கிலமும் வங்காளமும் கற்றுக் கொள்ள ஊக்குவித்தாா். இவரின் தூண்டுகோலினால் ரோக்கியாவும் வங்காள மொழியைக் நன்கு கற்றுக் கொண்டாா். தமது முதல் கட்டுரையான “பிப்பாசா” (தாகம்)வை 1902 ஆம் ஆண்டு எழுதியதன் மூலம் தமது இலக்கிய வாழ்வை ரோக்கியா துவங்கினாா். இவரது கணவா் உயிருடனிருக்கும் பொழுதே மடிச்சூா் (1905) மற்றும் சுல்தானின் கனவு (1908) என்ற புத்தகங்களை எழுதி வெளியிட்டாா்.

Remove ads

வாழ்க்கை

அறிவியல் புனைவு, சடங்குகள், நூல்கள் மற்றும் கட்டுரைகள் என பேகம் எழுதினார். இவர் ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய இருவரும் பகுத்தறிவுள்ள மனிதர்களாக சமமாக நடத்தப்பட வேண்டும் என்று வாதிட்டார் மற்றும் கல்வி இல்லாமை பெண்கள் பின்னால் தள்ளப்படுவதற்கான முக்கிய காரணமாகும் என பேகம் கருதினார். அவரின் முக்கிய படைப்புகள் அபரோத்பாஸினி என்பது தீவிரவாத வடிவிலான பர்தா தாக்குதல்களுக்கு ஆளாகியுள்ள சூழலின் கதை ஆகும். சுல்தானாவின் கனவு என்ற கதை நிசாவின் லேடிலண்ட் என்ற ஒரு இடத்தில் அமைக்கப்பட்ட ஒரு அறிவியல் புனைகதை புதினம் இது பெண்களால் ஆளப்படும் உலகம் ஆகும். பத்மராக் ("தாமரைக்கான சாரம்", 1924) இது மற்றொரு பெண்ணிய கற்பனை நாவல் ஆகும். மேட்டிச்சூர் என்பது கட்டுரைகளின் தொகுப்பு ஆகும். இது இரண்டு தொகுதிகளில் அமைக்கப்பட்டது.[2] இவருடைய சுல்தானின் கனவு என்னும் புத்தகம் மிகவும் புகழ் பெற்றது. இப்புத்தகத்தில் பெண்களின் பணியை ஆண்களும் ஆண்களின் பணியை பெண்களும் செய்வது போன்று கற்பனை செய்து எழுதியிருந்தது புதிய சிந்தனையாக இருந்தது. இதில் ஆண்கள் பெண்களுக்கு அடிமையாக இருப்பது போல சித்தரிக்கப்பட்டிருந்தது. இப்புத்தகத்தில் இவர் எழுதியிருந்த நையாண்டி நல்ல வரவேற்பைப் பெற்றது.

இவரது கணவா், ரோக்கியாவை இஸ்லாமிய பெண்களுக்காக ஒரு பள்ளிக்கூடம் துவங்க தேவையான நிதியை சேமித்து வைக்க ஊக்கப்படுத்தி வந்திருந்தாா். இவரது கணவா் 1909 ஆம் ஆண்டு இயற்கை எய்தினாா். இவர் மறைவிற்கு ஐந்து மாதங்களுக்குப் பின்னா், அவர் நினைவாக செகாவத் பெண்கள் உயா்நிலைப் பள்ளி என்னும் பள்ளியைத் துவங்கினாா்.[3] பாரம்பரியமாக உருது மொழி பேசி வந்த நகரமான பாகல்பூரில் இப்பள்ளியை ஐந்து மாணவா்களுடன் ஆரம்பித்தாா். இவர் கணவரின் சொத்துக்கள் தொடா்பான சா்ச்சையில் வங்காள மொழி பேசும் கல்கத்தா நகரத்திற்கு 1911 ஆம் ஆண்டு தமது குடியிருப்பை மாறிக்கொண்டார்.[3] இன்றுவரை முகமதியப் பெண்களுக்காக நடத்தப் பெறும் புகழ்பெற்ற பள்ளியாக இது திகழ்ந்து வருகிறது. பெண்களின் கல்வி என்பது பெண்களின் விடுதலையின் முதன்மையான தேவையாகும் என்று பேகம் ரோக்கியா பரிந்துரைத்தார். அவரால் கொல்கத்தாவில் வங்காள இஸ்லாமிய பெண்களுக்காக முதன் முதலாக பள்ளி நிறுவப்பட்டது. பேகம் ரோக்கியா வீட்டுக்கு வீடு சென்று குழந்தைகளின் பெற்றோர்களிடம் தங்கள் பள்ளிக்கூடம் நிஸாவிற்கு அவர்களை அனுப்பும்படி கேட்டுக்கொண்டார். எதிர்மறையான விரக்தியுற்ற விமர்சனங்கள் மற்றும் பல்வேறு சமூக தடைகளை எதிர்கொண்ட போதிலும் இவரது இறப்பு வரை இவர் இப்பள்ளியை நடத்தி வந்தார்.[4]

1916 ஆம் ஆண்டு பேகம் ரோக்கியா இஸ்லாமிய பெண்களுக்கான சங்கம் ஒன்றை நிறுவினார். இதன் மூலம் இஸ்லாமிய பெண்களின் கல்விக்காகவும், வேலைவாய்ப்புக்காகவும் போராடினார்.[5] பெண்களின் முன்னேற்றத்திற்காகவும், கல்விக்காகவும், அக்காலத்தில் பெண்களின் நிலை குறித்தும் பல மாநாடுகளையும் கருத்தரங்கங்களையும் நடத்தி விழிப்புணா்வை இச்சங்கம் ஏற்படுத்தி வந்தது. பிரித்தானிய இந்தியாவில் இஸ்லாமியர்களின் முன்னேற்றத்திற்கு தடையாக இருப்பது அவர்களின் பிற்போக்கு மனநிலையும், பழமைவாதமும் தான் என்று வலியுறுத்தி சீா்திருத்தத்தின் அவசியத்தை எடுத்துரைத்து வந்தாா். குரானில் பொதிந்துள்ள முற்போக்கு சிந்தனைகளை எடுத்துக் காட்டி நவீன முகமதிய மதத்தில் இவைகள் தவறாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன என்று வாதிட்டு வந்தாா். நபிகள் நாயகத்தின் உண்மையான போதனைகளில் உள்ள முற்போக்குக் கருத்துக்களை எல்லோரும் அறியும் வண்ணம் முகமதியப் பெண்கள் சங்கத்தின் மூலம் பல கூட்டங்களையும் மாநாடுகளையும் நடத்தி விளக்கி வந்தாா். தமது எஞ்சிய வாழ்நாளை பள்ளிக்காகவும், இஸ்லாமிய பெண்கள் சங்கத்திற்காகவும் இலக்கியத்திற்காகவும் செலவிட்டு அயராமல் பாடுபட்டு வந்தாா்.1926 ஆம் ஆண்டு பேகம் ரோக்கியா கொல்கத்தாவில் வங்காள பெண்களுக்கான கல்வி எனும் கூடாட அரங்கை தலைமை ஏற்று நடத்தினார். இது மகளிருக்கான கல்வி உரிமையை மகளிர் ஒன்றினைந்து போராட பேருதவியாக இருந்தது. அவர் இறக்கும் தருவாயிலும் பெண்களுக்கான உரிமையை கேட்டு போராடியவர். 1932 ஆம் ஆண்டு திசம்பர் திங்கள் 9 ஆம் நாள் காலமானார். வங்க தேசம் ஒவ்வொரு ஆண்டும் திசம்பர் திங்கள் 9 ஆம் நாள் அவர் படைப்புகள் மற்றும் மரபுகளை நினைவுகூரும் வகையில் ரோக்கியா தினமாக அனுசரிக்கிறது. அந்நாட்டு அரசு 1995 ஆம் ஆண்டு முதல் பெண்களுக்கான துறை முன்னேற்றத்தில் சிறப்பாக ஈடுபட்ட மகளிருக்கு, ரோக்கியா பதக்கத்தை வழங்கி வருகிறது.[6] 2004 ஆம் ஆண்டில் பிபிசி நடத்திய வாக்கெடுப்பபில் பேகம் ரோக்கியா சிறந்த வங்காள பிரஜை 6 ஆம் இடத்தில் தேர்வு செய்யப்பட்டார்.[7][8][9] இத் தரவரிசையில் பேகம் ரோக்கியா முதல் பெண்மணி ஆவார். இவர் அக் காலத்தில் இஸ்லாமிய சமுகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு ஏற்படும் இன்னல்களை களைய பாடுபட்ட இஸ்லாமிய பெண்மணி ஆவார்.

Thumb
பேகம் ரோக்கியா சிலை
Remove ads

எழுத்துப்பணி

  • பிபாசா (தாகம் 1902)
  • மடிச்சூா் (கட்டுரைகள் : முதல் பாகம் 1904, இரண்டாம் பாகம் 1922) இரண்டாம் பாகம் சௌரஜாகாம் (சூரிய குடும்பம்), டெலிசியா ஹாட்யா (மேரி கோநெல் எழுதிய டெலிசியாவின் கொலை), ஞான் பல் (ஞானப் பழம்) நாரி சிரிஷ்டி (பெண்களின் தோற்றம்), முக்தி பல் (முக்தி பழம்) போன்ற கற்பனைக் கதைகள் அடங்கியது.
  • சுல்தானாவின் கனவு
  • பட் மாரங் (தாமரையின் சாரம் - புதினம் 1924) பெண்மை பற்றிய கனவு
  • அபரோத் பாசினி (ஒதுக்கப்பட்ட பெண்கள் 1931)
  • போலிகர்த்தோ (சிறுகதை)
  • நாரிா் அதிகாா் (பெண்களின் உரிமைகள்) முகமதிய பெண்கள் சங்கத்தின் முடிவுறாத கட்டுரை
  • கடவுள் கொடை மனிதன் திருட்டு மறுபதிப்பு - நாரி கிரந்தா பிரபாத்தனா 2002
  • நவீன இந்தியப் பெண்ணிற்கு கல்வியின் குறிக்கோள்கள் மறுபதிப்பு ரோகேயா ராசனபாலி - அப்துல் காதிா் பதிப்பாளா் டாக்கா, வங்காள அகாடமி 2006.

பேகம் ரோக்கியா சிறுகதை, கவிதை, கட்டுரை, புதினம் நையாண்டி எழுத்து என்று தமக்கென ஒரு பாணியை வகுத்துக் கொண்டு பல தளங்களிலும் தமது படைப்பாற்றலையும் கற்பனையையும் வெளிப்படுத்தியுள்ளாா். திருமதி ஆா் எஸ் ஹுசைன் என்னும் புனைப்பெயரில் 1903 ஆம் ஆண்டு நாபனூா் என்னும் பத்திரிக்கையில் எழுதத் தொடங்கியவா் இவர். இருந்தாலும் இவருடைய முதல் படைப்பான “பிப்பாசா ” 1902 ஆம் ஆண்டு நாபா்பாதாவில் வெளிவந்ததாகவும் கூறப்படுகிறது. இவர் தொடா்ச்சியாக, சாகத், மகமதி, நாபபிரபா மகிளா, பாரத் மகிளா, அல் இஸ்லாம், நாவ்ரோஸ், மாகே-நவோ, பாங்கிய முசல்மான் சாகித்ய பத்ரிகா, இந்தியப் பெண்கள் பத்திரிக்கை போன்றவற்றில் எழுதி வந்துள்ளாா். இவர் தம் எழுத்துக்களால் பெண்களை அநீதியை எதிா்த்துப் போராடவும், பெண்களைக் கொடுமைப்படுத்தும் சமூகத் தடைகளை உடைத்தெரியவும் ஊக்கப்படுத்தி வந்தாா்.[10]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads