பேராசிரியர் சி.கோவிந்தராசனார்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பேராசிரியர் சி.கோவிந்தராசனார்
கண்ணகி கோயிலைக் கண்டு பிடித்து, இவ்வுலகிற்கு அறிவித்தப் பெருமைக்கு உரியவர் பேராசிரியர் சி.கோவிந்தராசனார் அவர்களாவார்.
கண்ணகியின் அடிச்சுவட்டில், கண்ணகி பயணித்த பாதை வழியே பயணித்து, பதினேழு ஆண்டுகள் நடந்து, கண்ணகி கோயிலைக் கண்டு பிடித்த ஆய்வாளர் இவர்.
பேராசிரியர் சி.கோவிந்தராசனார் அவர்கள், தஞ்சாவூர், கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின், கரந்தைப் புலவர் கல்லூரியில் பேராசிரியராகப் பணி புரிந்தவர்.
சிலப்பதிகாரத்தில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டதன் பயனால், 1945 ஆம் ஆண்டு, மயிலாடுதுறை என்று, இன்று அழைக்கப்பெறுகின்ற, மாயுரம் சென்றார்.
மாயுரம் முழுதும் வாடகை மிதிவண்டியில் சுற்றி வந்து, விசாரித்த போது, காவிரிப் பூம்பட்டிணம் எங்கிருக்கிறது என்று யாருக்குமே தெரியவில்லை.
பலமுறை முயன்று, கடற்கரையில் மீனவர்களின் ஒரு சில குடிசைகளுடன், மணற் பரப்பும், மணல் மேடுகளும், கள்ளியுடன் காரைச் சூரைச் செடிகளும், செறிந்த புதர்களும், சவுக்குத் தோப்புகளும், புனங்காடுகளும் சூழ்ந்திருந்த பட்டணம் என்று அழைக்கப்பட்ட பகுதியே, பண்டைய புகார் நகரம் இருந்த இடம் என்பதைக் கண்டு பிடித்தார்.
அங்கிருந்த மீனவர்களின் துணையோடு, கட்டுமரத்தில் ஏறி, கடலில் பயணித்தார். கடல் ஆழமின்றி இருந்ததைக் கண்டார். கடலில் மூழ்கி, மூச்சை அடக்கிக் கொண்டு, கடலுள் பயணிக்கும் பயிற்சி பெற்றிருந்த முழுக்காளிகள் சிலரை, கடலினுள் மூழ்கச் செய்து, கடலடி ஆய்வு செய்தார்.
கடலில் மூழ்கிய மீனவர்கள் பழமையான செங்கற் பகுதிகள், சுண்ணாம்புக் காரைகள், பாசி படிந்த பானை ஓடுகள் என பலவற்றை எடுத்து வந்து தந்தனர்.
இவ்வாராய்ச்சியின் பயனாக, கடற்கோளினால் அழிந்து கடலடியில் மறைந்து நிற்கும், நிலப் பரப்பே காவிரிப் பூம்பட்டிணம், கண்ணகி பிறந்த இடம் என்பதை உறுதி செய்தார்.[1]
Remove ads
1945 ஆம் ஆண்டில் பூம்புகாரில் ஆய்வினைத் தொடங்கி, கால் நடையாகவே ஆராய்ந்தவாறு, நடந்த மதுரை வரை செல்வதற்கே, பன்னிரெண்டு ஆண்டுகள் தேவைப்பட்டன.
திருப்பரங்குன்றம் செல்லும் சாலையில், பழங்காலத்தில், இடுகாடாக இருந்த கோவலன் திடல் என்ற பகுதியினையும், செல்லத்தம்மன் கோயிலில் இருந்த, கண்ணகி சிலையினையும் கண்டு பிடித்தார்.
பிறகு மதுரையில் கோவலனை இழந்த கண்ணகி, சேரநாடு நோக்கிச் சென்ற வழியில், இளங்கோ அடிகள் தந்த குறிப்புகளின் உதவியுடன் நடக்கத் தொடங்கினார்.
வையை ஆறானது, சிலப்பதிகாரத்தில் குறிப்பிட்டுள்ள, பாதை வழியாகவே, தடம் மாறாமல் இன்றும் பயணிப்பதைக் கண்டு கொண்டார்.
சிலப்பதிகார வழிகளின் படி, மதுரையில இருந்து, வையை ஆற்றின் தென் கரையை பின் பற்றி நடந்தார். சுமார் 40 மைலகளுக்கும் மேல் பயணித்த, சுருளி மலைத் தொடரை அடைந்தார்.
மேல் சுருளி மலையை அடைந்து ஆராயத் தொடங்கினார். சுருளி மலைதான் நெடுவேள் குன்றம் என்பதை உறுதிசெய்தார். சித்தன் இருப்பு என்ற பெயருடன் விளங்கிய மலை, ஆவினன் குடியாகி, பின்னர் பொதினி மலையாக மாறி, தொடர்ந்து அதுவும் திரிந்து பழநி மலை என்று ஆனது போலவே, நெடுவேள் குன்றம் என்னு ம்பெயர், மலையில் இருந்து சுருண்டு விழும், அருவியின் பெயரால் சுருளிமலையாக மாறியிருக்க வேண்டும் என்பதை உணர்ந்தார்.
சுருளி மலை த்தொடராலும், பழநி மலைத் தொடராலும் இணைந்து முப்புறமும் சுவர் வைத்தாற்போல் சூழப்பட்ட பகுதியில், வர்ஷ நாடு எனப்படும், கம்பம் பள்ளத்தாக்கின் காட்டுப் பிரதேசம் பரந்து விரிந்து கிடக்கிறது.
வர்ஷ நாட்டின் மலை அடிவாரப் பகுதிகளை ஆராய்ந்த பேராசிரியர் சி.கோவிந்தராசனார், கீழக் கூடலூருக்குத் தேற்கே உள்ள கோயிலில் கல் வெட்டு ஒன்றினைக் கண்டுபிடித்தார்.
கி.பி.14 ஆம் நூற்றாண்டினைச் சேர்ந்த கல்வெட்டு அது. மங்கல தேவி அம்மன் பூசைக்கு, சேர மன்னன் ஒருவன், தானமாக வழங்கிய நிலங்களைப் பற்றிய செய்தி, அக்கல்வெட்டில் பொறிக்கப் பட்டிருந்தது.
கண்ணகிக்கு அடைக்கலம் தந்த பொழுது, அவளுக்கு உரிய சிறப்புப் பெயரில் ஒன்றான, மங்கல மடந்தை என்னும் பெயரை, கவுந்தி அடிகள், இடையர் குல மகளான மாதரியிடம் கூறும் காட்சி, இவருக்கு நினைவிற்கு வந்தது.
1963 ஆம் ஆண்டு நவம்பர் 17 ஆம் நாள், மங்கல தேவி மலையின் மேற்பரப்பிற்குச் சென்றார். கோரைப் புற்காடு எட்டடி உயரத்தற்கு வளர்ந்து மண்டிக் கிடந்தது.
200 அடி பக்கமுள்ளதாகவும், ஓரளவு சதுரமாக உள்ளதுமாகிய கோட்டத்தைக் கண்டார். கருங்கற்கள் அடுக்கிய நிலையில், யானைகள் உள்ளே வராத வகையில் மதிற்சுவர் அமைந்திருந்தது. உட்பகுதி முழுவதும் புதர் மண்டிக் கிடந்தது.
செடி கொடிகளால் சூழப்பட்டு சிதைந்த நிலையில் நிற்கும் கற்படைக் கோயில்கள் நான்கு ஆங்காங்கே இருந்தன. இரண்டு கோயில்கள் சிறியதாகவும், அழகுடனும் காட்சியளித்தன. இக்கோயிலின் உட்பகுதி வேரும், விழுதும், தழை மடிசல்களும், மழை நீரும் நிறைந்து, இடிபாடுகளுடன் இடிந்து கிடந்தது.
கோட்டத்தின் கிழக்குப் பகுதியில் ஓர் அழகானப் படிக்கட்டு. அதற்கு முன்னர் அரைகுறையாகக் கட்டப்பட்டு குத்துக் கற்களுடன் நிற்கும் வாயில், கோட்டத்திற்கு வெளியே சிறு சுனை.
சுனையினைச் சூழ்ந்து, அடர்ந்த இருண்டு நிற்கும் காட்டு வேங்கை மரங்கள். மிகப் பழமையோடு கூடியதும், பலி பீடத்துடன் உள்ளதுமாகிய மூன்றாவது கோயிலின் அருகினில் சென்றார்.
உள்ளே சுமார் இரண்டடி உயர அளவில், ஒரே கல்லில், இரண்டு கைகளுடன், இடது காலை பீடத்தில் மடக்கி, வலத காலை ஊன்றிய நிலையில், ஒரு பெண்ணின் சிலை. அப்பெண்ணின் தலையில் கிரீடம் இல்லை. விரிந்த கூந்தல். இடதுபுற மார்பு சிறிதாக இருந்தது.
பல நூற்றாண்டுகளாக, இச்சிலை வழிபாட்டிற்கு உரியதாக இருந்துள்ளது என்பதனை, சிலையில் இருந்த வழவழப்பான தேய்வு புலப்படுத்தியது.
இவ்வாறாக பதினேழு ஆண்டு கால அயரா உழைப்பிற்குப் பின், தேடலுக்குப் பின், பேராசிரியர் சி.கோவிந்தராசனார், கண்ணகி சிலையினையும், கண்ணகி கோயிலையும் கண்டு பிடித்தார்.[2]
Remove ads
கோவை நன்னெறிக் கழகத்தின் சார்பில், 21.3.1965 அன்று சிலம்புச் செல்வர் மா.பொ.சிவஞானம் அவர்கள் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், பேராசிரியர் சி.கோவிந்தராசனார் அவர்கள், முதல் முதலில் கண்ணகி சிலையினைக் கண்டு பிடித்தது பற்றிய செய்தியை உலகிற்குத் தெரியப் படுத்தினார்.
இரண்டாவது உலகத் தமிழ் மாநாட்டின் போது, தனது கண்டுபிடிப்பு பற்றி, சிறிய ஆங்கில நூல் ஒன்றினையும் வெளியிட்டார்.[3]
அன்றைய தமிழக முதல்வர் அவர்கள், இளங்கோவடிகள் சிலைத்திறப்பு விழாவின்போது, பேராசிரியர் சி.கோவிந்தராசனாரின் கண்டுபிடிப்பு பற்றி, தமிழ் உலகிற்கு அதிகாரப் பூர்வமாக அறிவித்தார்.[4]
Remove ads
பேராசிரியர் சி.கோவிந்தராசனார் அவர்களின் பணியினைப் போற்றும் வகையில், குடியரசுத் தலைவர் அவர்கள், 2013 ஆம் ஆண்டு தொல்காப்பியர் விருதினை வழங்கிச் சிறப்பித்தார்.[5]
பேராசிரியர் சி.கோவிந்தராசனார் அவர்கள், தனது 94ஆம் வயதில், 21.2.2015 அன்று இயற்கை எய்தினார்.
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads