பேரிசாத்தனார்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

பேரிசாத்தனார் சங்ககாலப் புலவர்.

பெயர் விளக்கம்

பேரிசாத்தான் = பெருமைக்குரிய சாத்தான் (ஒப்புநோக்குக: பேர்யாறு < பேரியாறு < பெரியாறு)
பேரிச்சாத்தான் = பேரி என்னும் ஊரில் வாழ்ந்த சாத்தான்.

இவரது பாடல்கள் 20

அகநானூறு 38, 214, 242, 268, 305,
குறுந்தொகை 81, 159, 278, 314, 366
நற்றிணை 25, 37, 67, 104, 199, 299, 323, 378,
புறநானூறு 125, 198,

இவரால் பாடப்பட்டோர்

சேரமான் மாந்தரஞ்சேரல் இரும்பொறை,
சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி,
பாண்டியன் இலவந்திகைப்பள்ளித் துஞ்சிய நன்மாறன்,
மலையன்

புறத்திணைப் பாடல்கள்

  1. சேரமான் மாந்தரஞ்சேரல் இரும்பொறையும், சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியும் போரிட்டுக்கொண்டபோது மலையன் சோழர்பக்கம் இருந்து போரிட்டான். இதனால் சோழன் வென்றான். அப்போது சோழன் உன்னைப் புகழ்ந்தான். மலையன் இல்லாவிட்டால் வென்றிருக்கலாம் என்று தோற்ற பொறையனும் உன்னைப் புகழ்கிறான். நீயோ வயலை உழுத எருது வைக்கோலைத் தின்பது போல வெற்றிக்குக் கைம்மாறாக எதுவும் பெற்றுக்கொள்ளவில்லை. (புறநானூறு 125)
  2. பாண்டியன் இலவந்திகைப்பள்ளித் துஞ்சிய நன்மாறனிடம் இப்புலவர் சென்று பரிசில் வேண்டினார். இவன் ஆலமர் கடவுள் அன்ன செல்வம் படைத்தவனாம். தண்டமிழ் வரைப்பகம் இவனுக்குத் திறை தந்ததாம். இவனது மனைவி கடவுள் சான்ற கற்பினை உடையவளாம். புலவர் இவன் நிழலில் வாழாவிட்டாலும் அவன் நிழலில் பழகி அவனுக்கு அடியுறையாக வாழ விரும்புகிறாராம். மாறன் மக்களும் மாறனைப்போல் வாழவேண்டுமாம். கடல்நீரைப் போலவும், கடற்கரை மணலைப் போலவும், வானத்து மழைத்துளி போலவும் மாறனும் அவனது மனைவி மக்களும் புகழ் பெருகி வாழவேண்டும் என்பது புலவர் கூறும் வாழ்த்து. புறநானூறு: 198
Remove ads

அகத்திணைப் பாடல்கள்

மறந்திசின் யானே

அவன் என்னைத் தேடி வருவானோ? வந்தால், செயலை மரத்து ஊசலில் என்னை ஆட்டிவிட்டானே அந்த இடமும், சுனையில் நீராடினோமே அந்த இடமும், தினைப்புனம் காத்தோமே அந்த இடமும் வெறிச்சோடிக் கிடக்குமே. அங்கு நாம் இல்லாமை கண்டு அந்த இடத்திலே நின்றுவிடுவானோ? அந்த இடத்துக்குப் பக்கத்தில்தான் நம் ஊர் என்று அன்றே அவனிடம் சொல்லாமல் விட்டுவிட்டோமே. - இவ்வாறு தோழியிடம் சொல்லித் தலைவி கலங்குகிறாள். அகநாநூறு 38

தெள்ளிசை

வேந்தன் புகழை விரும்பிப் பாசறையில் தூங்காமல் இருக்கிறான். போர் என் தலைமேல் விழுந்துகிடக்கிறது. மாரிக்காலமும் வந்து மழையும் பொழிகிறது. மாலையில் கோவலர் தம் யாழில் செவ்வழிப்பண் பாடிக்கொண்டு இல்லம் திரும்புவர். இந்தத் தெள்ளிசையைக் கேட்கும்போது அவள் என்ன பாடு படுவாளோ? - பாசறையில் இருக்கும் தலைவன் இப்படி நினைக்கிறான். அகநாநூறு 214

பல் பிரம்பால் இருக்கினர்

வேங்கை மலர் மணி போல் கொட்டிக்கிடக்கும் நாடன் அவன். அவன் நம்மோடு இருந்துகொண்டு தினைப்புனத்தில் கிளி ஓட்டினான். அவனை எண்ணித் நீ வாடியிருக்கிறாள். தாய் இதனை உணராமல் வேலனை அழைத்து வெறியாட வைக்கிறாள். ஆட்டுக்குட்டியை வேறு அறுக்கின்றனர். வேலன் உன்னைப் பிரம்பால் இருக்குகிறான். (=அடிக்கிறான்). நீ என்ன செய்வாய்? - சிறைப்புறத்தில் இருக்கும் தலைவனுக்குக் கேட்குமாறு தோழி தலைவியிடம் இப்படிச் சொல்கிறாள். அகநாநூறு 242

காமம் கலந்த காதல்

யானையைப் புலி தாக்கிய வழியில் வீசும் புலவு நாற்றத்தை கேங்கை மலர் உதிர்ந்து நறுமணம் கமழச்செய்யும் நாடன் அவன். அவனோடு உனக்குக் காமம் கலந்த காதல் வேண்டுமென்று உன்னைக் கூட்டுவித்தேன். நாணும் நட்பும் கொண்டோர்த் தேரின் என்னலது இல்லை. என்றாலும் இப்போது பழியெல்லாம் என்மேலதாகிவிட்டது. பரவாயில்லை. நீ தந்தை காப்பை நீக்கிவிட்டு அவனோடு சென்றுவிடு. - தோழி தலைவியிடம் இப்படிச் சொல்கிறாள். அகநாநூறு 268

உள்ளே கனலும் உள்ளம்

பனிக்காலத்தில் பல்படை மெத்தையில் ஒருவரை ஒருவர் குடிப்பது போன்ற காதலோடு, ஒரு உடம்புக்குள் மற்றொரு உடம்பு புகுந்துகொண்டது போன்று தழுவிக்கொண்டு உயிரே ஒன்றுபட்டுக் கிடக்கும் மக்கள் ஒருபுறம். அருள் இல்லாத அவர் பொருளுக்காகப் பிரிந்து செல்ல நான் தனியனாய்த் துன்புறுகிறேனே இது ஒருபுறம். இதனை எண்ணிப் பார்க்காமல் ஏதோ பேசும் மக்களை எண்ணும்போது என் நெஞ்சம் ஊதும் உலைக்குருகிலிருந்து அனல் வருவது போல் பெருமூச்சு விடுகிறது. என் செய்வேன் என்று தலைவி தோழியிடம் சொல்லி வருந்துகிறாள். அகநாநூறு 305

புதுநலம் இழந்த புலம்பு

நான் சொன்னேன் என்பதற்காக இவள் ஞாழல் புதருக்குப் பக்கத்தில் தன் புதுநலத்தை உன்னிடம் கொடுத்துவிட்டு புலம்பிக்கொண்டிருக்கிறாள். மறந்துவிடாதே. அதோ பார் எம் ஊர். தாழை மரங்களுக்கிடையே பனைமட்டைக் குடிசைகள். - தோழி தலைவனுக்குச் சொல்கிறாள். குறுந்தொகை 81

கவலை மாக்கட்டு இவ் அழுங்கல் ஊர்

கொம்மை வரிமுலை ஆகத்தைத் தாங்கமாட்டாத சிறிய நுசும்பு. தழையணி அல்குல். இவற்றை உடைய இவள் யாங்கு ஆகுவள்? என்று கவலை கொள்ளும் மக்களைக் கொண்டது இந்த ஊர். - தலைவனுக்குக் கேட்கும்படி தோழி சொல்கிறாள். குறுந்தொகை 159

பாவையும் உள்ளாள்

இவள் மாந்தளிர் போன்ற உள்ளங்காலை உடையவள். அத்துடன் இவள் பாவை செய்யும்போது அவரும் உடனிருந்து பாவை செய்து விளையாடினார். இப்போது பாலை வழியில் செல்கிறார். செல்லும்போது கடுவன் உலுக்கும் கனிகளை அதன் குரங்குக் குட்டிகள் உண்ணுவதைப் பார்க்கும்போதாவது இவளைப் பற்றி நினைப்பாரா? - தலைவி தோழியிடம் சொல்கிறாள். குறுந்தொகை 278

இன்னுறல் இளமுலை

அவர் தன் மார்பால் அமுக்கியபோது துன்புற்ற என் இளமுலையில் இன்பந்தான் தெரிந்தது. இப்போது அவர் பிரிந்து சென்றுவிட்டார். பெயல் வாழ்பு கொண்ட வானம் மின்னுகிறது. அவர் இன்னும் வரவில்லையே! - பொறுத்துக்கொள்ளுமாறு வற்புறுத்தும் தோழியிடம் தலைவி சொல்கிறாள். குறுந்தொகை 314

பால் வரைந்து அமைதல்

  • கூடல் உறவு
நீலமலர் போன்ற இவள் கண் கலங்குவது எதனால் என்று செவிலி கேட்கிறாள். அதற்குத் தோழி சொல்கிறாள்.
பால் இவளையும் அவரையும் சேர்த்துவைத்துவிட்டது. அவரது சால்பினை அளந்து சொல்வதற்கு நான் யார்? குறுந்தொகை 366

பொன் உரை கல்

தும்பி பொன் உரைத்த கல்லைப்போல முதுகில் கோடுகளைக் கொண்டிருக்கும். அது பிடவம் பூவிலுள்ள தேனை உண்ண அதனைச் சுற்றிச் சுற்றி வருவது போல அவர் நீ கிளி ஓட்டும்போதெல்லாம் உன்னிடம் இருந்துகொண்டு கிளி ஓட்டுகிறார். இது உனக்குத் தெரியவில்லையா? அவரை ஏற்றுக்கொள். - இப்படிச் சொல்லித் தோழி தலைவியைக் குறை நயப்பிக்கிறாள். நற்றிணை 25

என்பரம் ஆகுவது அன்று

  • என்பரம் = என்பாரம்
உன்னைப் பிரிந்திருக்கும்போது கார்காலம் வந்தால், கலையைப் பிரிந்த பிணைமான் போல இவள் கண் கலங்கும். அப்போது அதனை எனது பாரமாகச் சுமந்துகொள்வது ஆகக்கூடிய செயல் அன்று. எனவே இவளையும் கூட்டிச்செல்க! - பிரிவு உணர்த்திய தலைவனுக்குத் தோழி இதனைச் சொல்கிறாள். நற்றிணை 37

தங்கின் எவனோ தெய்ய

  • இறால் - பகலில் மேயும் கடல்மீன்
  • சுறா - இரவில் மேயும் கடலமீன்
மண்டிலம் மால்வரை மறையத் துறை வெறிச்சோடிக் கிடக்கிறது. இறால் உண்ட நாரை புன்னை மரத்தில் இருப்புக் கொண்டுவிட்டது. சுறா மீன்கள் மேயத் தொடங்கிவிட்டன. என் தந்தையும் அண்ணனும் கடல் வேட்டைக்குச் சென்றுவிட்டனர். அதனால் முழவைப்போல் கடல் முழங்கும் எம் படப்பையில் தங்கிச் சென்றால் என்ன! - பகலிலே வந்து அவளைப் பெறாமல் நீங்கும் அவனுக்குத் தோழி சொல்கிறாள். நற்றிணை 67

தொண்டகச் சிறுபறை

யானையும் புலியும் போராடுவதைப் பார்த்துக் குறவர் சிறுவர் தன் விளையாட்டுச் சிறுபறையை முழக்கி மகிழ்வர். அது அவர் வரும் வழி. இந்த வழியிலுள்ள இன்னல்களை எண்ணிப் பார்க்காமல் இங்குத் தினைப்புனம் காக்கும் நான் அவரது மார்பை நயந்துகொண்டிருக்கிறேன். அது ஆறு பார்த்து உற்ற அச்சக் கிளவி. நற்றிணை 104

திமில் சுடர்

இரவில் சுறாமீன் தூண்டிலைக் கௌவும்போதெல்லாம் மீன்பிடிப் படகாகிய திமிலில் உள்ள சுடர்விளக்கு காற்றில் ஆடி வானத்து மீன் போல இமைக்கும். அவன் இப்படிப்பட்ட துறைவன். எப்போது இப்படிப்பட்ட துறைவன்? என் மெய் அவனை முயங்காதபோது. இப்போது மெய்வருத்தம் செய்யும் துறைவன். நற்றிணை 199

வில்லெறி பஞ்சி

வில்லால் அடித்த பஞ்சு போல் கடலலை நுரைகளைக் கொண்டுவந்து சேர்க்கும் நளிகடல் சேர்ப்பனைக் காண்பதற்கு முன் சிறுகுடி மக்கள் புலம்பலில் நம் பெயர் இல்லை. இப்போது கோடை வெயிலைத் தாங்கமாட்டாமல், தாழைமடல்கள், ஒடிந்த யானைக் கொம்புகள் போல உதிர்ந்து, மகளிர் விளையாடிய வண்டல் விளையாட்டுக் கோடுகளைத் தூர்க்கும் இடத்திற்குச் செல்லும் மக்கள் வாயில் என் பெயரே அடிபடுகிறது. - காத்திருக்கும் தலைவனுக்குக் கேட்குமாறு தோழி தலைவியிடம் சொல்கிறாள். நற்றிணை 299

மாய நட்பு

தோழி சொல்கிறாள். மடவரல் ஆயத்துக்கும் எனக்கும் தெரியாமல் ஓங்கி உயர்ந்த பனைமரங்களுக்கு இடையே மாய நட்பு கொண்டு இவள் தன் மாமைநிற நலத்தை இழந்து நிற்கிறாள். இவள் தந்தை வாழும் சிறுகுடிப் பாக்கமானது புன்னைப் பூக்கள் புலியின் வரிக்கோடுகள் போல உதிர்ந்து கிடக்கும் அதோ! அந்த இடத்தில்தான் இருக்கிறது. அங்கு வண்டுகளின் இன்னிசை அதிகம். அங்கு வந்தால் உன் தேர்மணி ஒலி கேட்காது. (இரவில் வரலாம்) நற்றிணை 323

நாடாது இயன்ற நட்பு

அப்போது அவன் என்னைப் பரிவுதரத் தொட்டுப் பணிவோடு பேசினான். அதனால் அவன் நட்பு ஆராய்ந்து பார்க்காமல் அமைந்துவிட்டது. அவனை நினைப்பதால் பாய்ந்து கிடக்கும் பசலையைப் பக்கத்து வீட்டுக்காரர்கள் பாடுகின்றனர். இதுதான் நிலைமை. - காத்திருக்கும் தலைவனுக்குக் கேட்குமாறு தோழி இப்படிச் சொல்கிறாள். நற்றிணை 378
Remove ads
Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads