போதிசத்துவர்

From Wikipedia, the free encyclopedia

போதிசத்துவர்
Remove ads

பௌத்த சித்தாந்தத்தில், போதிசத்துவர் (பாளி: போதிசத்தா; தாய்: போதிசத், โพธิสัตว์) என்ற சொல்லுக்குப் 'போதிநிலையில் வாழ்பவர்' என நேரடிப் பொருள் கொள்ளலாம். ஒவ்வொரு பௌத்த பிரிவும் போதிசத்துவர் என்பதை வெவ்வேறு விதமாக விளக்குகின்றன. கௌதம புத்தர் போதிநிலையை அடைவதற்கு முற்பட்ட காலத்தில், தன்னை போதுசத்துவர் என்றே அழைத்துக்கொண்டார்.

Thumb
ஆகாஷகர்ப போதிசத்துவரின் சிலை

மஹாயானத்தைப் பொறுத்த வரை போதிசத்துவர்கள் என அழைக்கப்படுபவர்கள், மற்றவர்களுடைய நலனுக்குக்காவும் அவர்கள் வீடுபேறு அடைய உதவுவதற்காகவும் தாம் 'புத்த' நிலை அடைவதையே தாமதப்படுத்துபவர்கள்.

மகாயானம் அனைவரையும் போதிசத்துவர்களாக ஆவதற்கும் போதிசத்துவ உறுதிமொழிகள் எடுப்பதற்கும் ஊக்கம் அளிக்கிறது. இந்த உறுதிமொழிகளால் மற்றவர்கள் போதி நிலையை அடையத் தங்களை அர்ப்பணிக்கின்றனர்.[1]

Remove ads

தேரவாத பௌத்தத்தில் போதிசத்துவர்கள்

போதிசத்தா என்ற பாளிச் சொல், சாக்கியமுனி புத்தர் தனது முற்பிறவியில் தன்னைச் சுட்டுவதற்கும், போதி ஞானம் கிடைப்பதற்கு முன்பிருந்த தம்மைச் சுட்டுவதற்கும் பயன்படுத்திய ஒரு சொல். புத்தர் போதசத்தாவாக இருந்த காலகட்டத்தில் அவர் தனக்கு ஞானம் கிடைக்கப் பாடுபட்டுக்கொண்டிருந்ததாக கூறுவர். எனவே அவர் தனது போதனைகளில் தனது முற்பிறவிக் கதைகளைக் கூறுகையில், "நான் ஒரு ஞானம் பெறாத போதிசத்தாவாக இருந்த காலத்தில்..." என தனது உரையைத் தொடங்குவார்.[2][3] எனவே தேரவாதத்தில் போதசத்துவர் என்றால் 'போதி நிலைபெற ஆயத்தமானவர்' என பொருள் கொள்ள வேண்டி இருக்கிறது. சாக்கியமுனி புத்தர் முற்பிறவியில் போதிசத்துவராக இருந்த விபரங்கள் ஜாதகக் கதைகளில் காணக் கிடைக்கின்றது.

மைத்ரேய புத்தரைப்(கௌதம புத்தருக்கு அடுத்து, பூமியில் அவதரிக்கப் போகின்ற புத்தர்) பொறுத்தவரையில், தேரவாதம் அவரைப் போதிசத்துவர் என்றழைக்காமல், அடுத்த ஞானம் பெறப்போகின்ற புத்தர் என்றே விளிக்கின்றது. அவர் கௌதம புத்தரின் போதனைகள் அனைத்தும் மறைந்தவுடன், இந்த பூமியில் அவதரித்து தர்மத்தை உபதேசிப்பார்.

Remove ads

மஹாயான பௌத்தத்தில் போதுசத்துவர்கள்

மஹாயானத்தைப் பொறுத்த வரையில், போதிசத்துவர் என்பது மற்றவர்களுடைய நன்மைக்காகப் புத்த நிலை அடைய விழைகின்றவர் என்று பொருள். மஹாயானத்தின்படி, இந்த உலகம் சம்சாரத்தில் சிக்கித் தவிக்கும் எண்ணற்ற உயிர்களைக் கொண்டது. எனவே, போதிசத்துவர்கள் என அழைக்கபடுபவர்கள் மற்ற உயிர்களைச் சம்சாரத்திலிருந்து விடுவிக்க உறுதிபூண்டவர்கள். இந்த மனநிலை தான் போதிசித்தம் என்று அழைக்கப்படுகிறது. போதிசத்துவர்கள் புத்தநிலையை அடைவதற்கும், மற்ற உயிர்களுக்கு உதவுவதற்கும் பல்வேறு உறுதிமொழிகளைப் பூணுகின்றனர். மேலும் இந்த போதிசத்துவம் உறுதிமொழிகளோடு பிரிக்க முடியாதது பரிணாமனம் (புண்ணிய தானம்) ஆகும்.

போதிசத்துவர்களைக் கீழ்க்கணடவாறு மூன்று விதங்களாகப் பிரிக்கலாம்

  1. உயிர்களுக்கு உதவ, அதிவிரைவில் புத்தநிலையை அடைய விழைபவர்கள்
  2. மற்ற உயிர்கள் புத்தநிலை அடைகையில் தானும் புத்தநிலை அடைய விழைபவர்கள்
  3. அனைத்து உயிர்களும் புத்தநிலை அடையும் வரையும் தனது புத்தநிலை அடைவதைத் தாமதப்படுத்துபவர்கள்

அவலோகிதேஷ்வரர் மூன்றாவது வகையை சார்ந்தவர்.

மஹாயான சித்தாந்ததில், 'போத்சத்துவ கருத்து' மற்ற பௌத்த பிரிவுகளின் கருத்துகளில் இருந்த மாறுபட்டது. ஓர் அருக நிலையை அடைந்தவர் சம்சார பந்தத்திலிருந்து விடுபட்டாலும் அவர் மற்ற உயிர்கள் விடுபட உதவ இயலாதவர், எனவே மஹாயானம் அருக நிலை அடந்தவரை ஒரு பூரண ஞானம் பெற்ற புத்தராகக் கருதவில்லை.

மஹாயான பாரம்பரியத்தில், ஒரு போதிசத்துவர் புத்தநிலையை அடைவதற்குப் 'பத்துப் பூமிகளை' கடக்க வேண்டியுள்ளது. ஒவ்வொரு பூமியும் ஒவ்வொரு நிலையைக் குறிக்கக்கூடியது. இந்த பத்து பூமிகளின் விவரங்கள் ஒவ்வொரு பிரிவிலும் சிறு மாற்றங்களுடன் காணப்படலாம்

பத்து போதிசத்துவ பூமிகள்

  1. பாரமுதிதம் (पारमुदित)
    • போதி நிலைக்கு அருகில் உள்ளவர்கள், தான் மற்றவர்களுக்காகச் செய்யப்போகும் நன்மை குறிந்துப் பேரானந்தம் அடைவர். இந்த பூமியில் போதிசத்துவர்கள் அனைத்து ஒழுக்கங்களையும் (பாரமிதம் पारमित) பின்பற்றுவர்கள். இந்த பூமியில் வலியுறுத்தப்படுவது தானம்.
  2. விமலம் (विमल)
    • இரண்டாவது பூமியை அடைந்தவுடன், போதிசத்துவர்கள் தீய ஒழுக்கத்திலிருந்து விடுபடுகின்றனர். எனவேதான் இந்த பூமி விமலம் (அப்பழுக்கற்ற) என்று அழைக்கப்படுகிறது. இங்கு வலியுறுத்தப்படுவது ஒழுக்கசீலம்.
  3. பிரபாகரி (प्रभाकरि)
    • மூன்றாவது பூமிக்கு 'பிரபாகரி (ஒளி உண்டாக்கக்கூடய)' என்று பெயர். ஏனெனில் இந்த பூமியை அடைந்த போதிசத்துவர்களிடமிருநது தர்மத்தின் ஒளி மற்றவர்களுக்காக வெளிப்படுகிறது. இங்கு வலியுறுத்தப்படுவது பொறுமை (க்ஷாந்தி क्षंति).
  4. அர்ச்சிஸ்மதி (अर्चिस्मति)
    • இந்த பூமியை அர்ச்சிஸ்மதி (தீப்பிழம்பான) என அழைபபர். ஏனெனில் இங்கு வீசக்கூடிய ஞானத்தீயின் கதிர்கள் அனைத்து உலக ஆசைகளையும் போதிநிலைக்கு எதிரானவற்றையும் எரித்துவிடுகிறது. இந்த பூமியில் வலியுறுத்தப்படுவது வீர்யம்.
  5. சுதுர்ஜய (सुदुर्जय)
    • இந்நிலையை எய்திய போதிசத்துவர் மற்ற உயிர்கள் ஞானம் கிடைப்பதற்குப் பிரதிபலன் எதிர்பார்க்காமல் கஷ்டப்படுகிறார். இங்கு வலியுறுத்தப்படுவது தியானம்.
  6. அபிமுகி (अभिमुखि)
    • "இங்கு போதிசத்துவர் முழுமையாக சம்சாரத்திலும் இல்லாமல் முழுமையாக நிர்வாணத்திலும் இல்லாமல் இவ்விரண்டிற்கும் இடைப்பட்ட நிலையில் இருப்பார். இந்த பூமியில் தான் போதி ஞானம் கிடைக்கத் துவங்குகிறது. இங்கு வலியுறுத்தப்படுவது பிரக்ஞை.
  7. தூரங்காமம் (दूरंगाम)
    • பௌத்தத்தின் இருயானங்களுக்கும்(மஹாயானம், ஹீனயானம்) அப்பாற்பட்டு நிற்கும் நிலை. இங்கு வலியுறுத்தப்படுவது உபயம்.
  8. அசலம் (अचल)
    • இங்கு ஒருவர் தீர்க்கமாக மாத்தியமக கொள்கையைப் பின்பற்றுவர். அதனால் தான் இது அசலம் (அசைக்க இயலாத) என்று அழைக்கப்படுகிறது. இங்கிருந்து, மறுபிறவி எடுக்கும் உலகத்தைத் தேர்வு செய்யும் நிலையை ஒருவர் அடைகிறார். இங்கு வலியுறுத்தப்படுவது ஆர்வம்.
  9. சாதுமதி (साधुमति)
    • இங்கு ஒருவர் அனைவருக்கும் தர்மத்தை வரையறை இல்லாமல் போதிப்பர். இங்கு வலியுறுத்தப்படுவது சக்தி.
  10. தர்மமேகம் (धर्ममेघ)
    • மழைமேகம் எவ்வாறு பாகுபாடின்றி அனைவருக்கு உதவுகின்றது, அதுபோல் இந்நிலையை அடந்த போதிசத்துவரும் அனைவருக்கும் பாகுபாடின்றி உதவுகிறார். இங்கு வலியுறுத்தப்படுவது ஆதி ஞானம்.
Thumb
சீன குவான்-யின் (சீன அவலோகிதேஷ்வரர்) மர வடிவம்; சான்சி (A.D. 907-1125)

மஹாயான பௌத்தத்தின் படி, இந்த பத்து பூமிகளை கடந்தவுடன் ஒரு போதிசத்துவர் புத்த நிலையை அடைகிறார். மஹாயானத்தில் பல போதிசத்துவர்கள் உள்ளனர். மிகவும் பிரபலாமனா போதிசத்துவர் கருணையின் உருவான ஸ்ரீ அவலோகிதேஷ்வர போதிசத்துவர். இவரையே சீனத்தில் குவான் - யின் என்ற பெண் வடிவில் வழிபடுகின்றனர். க்ஷீதிகர்ப போதிசத்துவர் ஜப்பானில் வணங்கப்படுகிறார். மேலும் ஆகாஷகர்ப போதிசத்துவர், வஜ்ரபானி, வஜ்ரசத்துவர், வசுதாரா முதலிய பல போதிசத்துவர்கள் மஹாயானத்தை பின்பற்றுவர்களால் வணங்கப்படுகின்றனர்.

போதிசத்துவரால் புனிதப்படுத்தப்பட்ட இடம் போதிமண்டலம் என அழைக்கப்படுகிறது

Remove ads

இவற்றையும் காண்க

Thumb
சீன போதிசத்துவர்

சான்றுகள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads