மஞ்சள் ஆறு
சீனாவின் முக்கிய ஆறுகளில் ஒன்று From Wikipedia, the free encyclopedia
Remove ads
மஞ்சள் ஆறு (சீன மொழி: 黃河, ஹுவாங் ஹ) சீனாவின் 2-வது நீளமானதும் உலகின் 6-வது நீளமானதும் ஆகும். மேற்கு சீனாவின் சிங்ஹாய் (Qinghai) மாகாணத்திலுள்ள பாயன் ஹர் மலைத்தொடரில் தோன்றி 9 மாகாணங்கள் வழியாக 5,464 கி.மீ. (3,398 மைல்) தொலைவு ஓடி பொகாய் கடலில் கலக்கிறது[1][2]. மஞ்சள் ஆற்றுப் படுகை கிழமேற்காக 1900 கி.மீ. (1,180 மைல்) மற்றும் வடக்கு தெற்காக 1100 கி.மீ. (684 மைல்) வரை பரவியுள்ளது. இதன் படுகையின் மொத்தப்பரப்பு 742,443 சதுரகி.மீ. (290,520 சதுர மைல்) ஆகும்.

மஞ்சள் ஆறு சீன நாகரிகத்தின் தொட்டில் என அழைக்கப்படுகிறது. இங்கேயே வட சீன நாகரிகம் தோன்றியது. இவ்வாற்றுப்பகுதி பழங்காலத்தில் மற்ற பகுதிகளை விட மிகவும் செழிப்பாக வளம் மிகுந்து இருந்தது. ஆனால் அடிக்கடி இவ்வாற்றில் ஏற்படும் வெள்ளப்பெருக்கின் காரணமாக சீனாவின் துயரம் என்ற பெயர் இதற்கு ஏற்பட்டது[3].
பழங்கால சீன இலக்கியங்களில் மஞ்சள் ஆறானது ஹெ (He (河)) என்று குறிக்கப்படுகிறது. அதற்கு தற்போதையசீன மொழியில் ஆறு என்று பொருள். (பழங்காலத்தில் ஆறு என்பதை குறிக்க 川 மற்றும் 水 என்ற வடிவத்தை பயன்படுத்தினர்). மஞ்சள் ஆறு என்ற பதம் முதலில் மேற்கு ஹான் வம்சத்தில் (206 BC–AD 9)) உருவான ஹானின் புத்தகம் என்பதில் குறிக்கப்பட்டுள்ளது. மஞ்சள் ஆறு சில முறை சேற்று நீரோட்டம் என கவித்துவமாக குறிப்பிடப்படுவதுண்டு. 'மஞ்சள் ஆறு தெளிவாக ஒடும் போது' என்று சீனத்தில் சொலவடை நடக்க இயலாத செயல்கள் குறித்து சொல்லப்படுவதுண்டு.
இதன் திபெத்திய பெயர் மயில் ஆறு (玛曲) என்பதாகும்.
Remove ads
பெயர் காரணம்
இவ்வாற்று நீர் மஞ்சளாக இருப்பதால் இதற்கு இப்பெயர் ஏற்பட்டது. மஞ்சள் ஆற்றின் மேல் மற்றும் நடு பகுதியானது காற்றடு வண்டல் மேட்டு நிலப்பகுதியை கடந்து வருகிறது. இந்த காற்றடு வண்டலே மஞ்சள் நிறத்திற்கு காரணமாகும்.
மஞ்சள் ஆற்று பண்பாடு
சீன நாகரிகம் மஞ்சள் ஆற்றும் படுகையிலேயே தோன்றியதாக நம்பப்படுகிறது. இது 'தாய் ஆறு' எனவும் 'சீன நாகரிகத்தின் தொட்டில்' எனவும் சீனர்களால் குறிப்பிடப்படுகிறது. நெடிய சீன வரலாற்றில் மஞ்சள் ஆறு சீனாவின் வரம் மற்றும் சாபம் என முரண்பாடாக கருதப்பட்டுள்ளது. எனவே இதற்கு சீனாவின் பெருமை மற்றும் சீனாவின் துயரம் என முரண்பாடான பட்டப்பெயர்கள் உண்டு.

மஞ்சள் ஆற்றின் வரலாறு
இது அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்படும் ஆறாகும். கடந்த 3,000–4,000 ஆண்டுகளில் 1,593 முறை இவ்வாற்றில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக கருதப்படுகிறது. இவ்வாற்றில் வரும் அதிகளவிலான காற்றடு வண்டல் ஆற்றின் அடிப்பகுதியிலும் ஆற்றின் கால்வாய்களிலும் தொடர்ச்சியாக சேருகிறது. இந்த வண்டல் மெதுவாக இயற்கையான அணையை உருவாக்குகிறது. அணை என்று சொன்னாலும் அது ஆற்றின் போக்கை தடுக்கும் தடுப்பாகும். இதனால் அதிகளவில் ஆற்றில் நீர் வரத்து இருக்கும் போது அவற்றை இந்த அணை தடுப்பதால் நீரானது வெள்ளப்பெருக்கை உண்டாக்கி புதிய பாதையில் பயணித்து கடலை அடைகிறது. இந்த வெள்ளமானது கணிக்கமுடியாததால் விவசாயிகளுக்கு பெரும் சிரமத்தை கொடுக்கிறது.
பழங்காலம்

ஃகுன் (Qin) வம்சத்து (221 - 206 கிமு) காலத்தை சார்ந்த வரை படங்கள் மஞ்சள் ஆறு தற்போது செல்லும் பாதையிலிருந்து வடக்கே ஓடியதாக தெரிவிக்கின்றன[4] . அந்த வரைபடத்திலிருந்து லுயாங் மாகாணத்தை தாண்டியதும் இது சாங்சி( Shanxi )மற்றும் ஹெனான் (Henan) மாகாணங்களின் எல்லையிலும் பின்பு ஹெபெய் மற்றும் சாங்டங் (Shandong) மாகாணங்களின் எல்லையில் பாய்ந்து டியன்ஜிங் (Tianjin) அருகே பொகாய் குடாவில் (Bohai Bay) கலக்கிறது.
கிபி 11ம் நூற்றாண்டில் ஏற்பட்ட பெரும் வெள்ளமே ஜிங் வம்சம் (9 - 23 கிபி) வீழ்வதற்கு காரணமாகும். அப்போது ஆறு மீண்டும் தன் பாதையை வடக்கே டியன்ஜினிலிருந்து (Tianjin) தெற்கே சாங்டங் (Shandong) தீபகற்பத்துக்கு மாறியது.
இடைக்காலம்

1194ம் ஆண்டு இதன் பாதையில் பெரும் மாற்றம் ஏற்பட்டது[5]. கிட்டதட்ட 700 ஆண்டுகளுக்கு இது குஆய்(Huai)ஆற்றின் வடிகால் பகுதியை ஆக்கரமித்திருந்தது. மஞ்சள் ஆற்றின் சேறு மற்றும் சகதி குஆய்(Huai)ஆற்றின் கழிமுகத்தை தடுத்ததால் ஆயிரக்கணக்கானோர் வீடிலிழந்தனர். மஞ்சள் ஆற்றின் தற்போதையபாதை 1897லிருந்து இருக்கிறது.
கடந்த 700 ஆண்டுகளில் குஆய்(Huai)ஆற்றின் பாதைக்கும் இதன் மூல பாதைக்கும் பல முறை மாறி மாறி மஞ்சள் ஆற்றின் போக்கு இருந்துள்ளது. இதன் காரணமாக உருவான வண்டல் படிமங்கள் அதிகளவில் இருந்ததால் மஞ்சள் ஆறு தன் போக்கை வடக்கே மாற்றிக்கொண்டதும் குஆய்(Huai)ஆற்றினால் தன் மூல பாதையில் செல்லமுடியவில்லை. அதற்கு பதிலாக இதன் நீர் ஹோன்ச் (Hongze) ஏரியில் தேங்கி பின் தெற்கு நோக்கி ஓடி யாங்சே ஆற்றில் கலக்கிறது.
தற்காலம்

ஆற்றின் நிறம் மஞ்சளாக இருக்க காரணம் இது நன்கு தூளான சுண்ணாம்பு வண்டலை காற்றடு வண்டல் மேட்டு நிலத்தில் இருந்து தன் ஓட்டத்தில் கொணர்வதே ஆகும். நூற்றாண்டுகளாக படியும் வண்டல் மற்றும் கரையினால் ஆற்றில் வெள்ளம் ஏற்படுகிறது. உலகின் மோசமான வெள்ளப்பெருக்குகளை ஏற்படுத்தியது மஞ்சள் ஆறாகும். 1887 மற்றும் 1931ம் ஆண்டுகளில் ஏற்பட்ட வெள்ளத்தில் ஆறு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இறந்தனர்.
1938ம் ஆண்டு ஜூன் 9ம் தேதி இரண்டாம் சீன ஜப்பானிய போரின் போது சியங் கை செக் (Chiang Kai-Shek)தலைமையிலான சீன தேசிய துருப்புகள் ஆற்றின் கரைகளை உடைத்து பெரிய வெள்ளத்தை உருவாக்கினர்[6]. வெள்ளம் உருவாக்கியதின் நோக்கம் ஜப்பானிய துருப்புகளின் முன்னேற்றத்தை தடுப்பதாகும். இந்த வெள்ளத்தில் 54,000 சதர கி.மீ. பரப்பு மூழ்கியது மேலும் 500,000–900,000 வரையான உயிர்கள் பலியான[7][8]. ஜப்பானிய தரப்பில் பலியான துருப்புகளின் விபரம் தெரியவில்லை. இந்த வெள்ளம் ஜப்பானி துருப்புகள் ஜின்ஜோகு (Zhengzhou) நகரத்தை கைப்பற்றுவதை தடுத்தாலும் அவர்கள் அப்போதய சீனாவின் தலைநகரான வுஹேனை (Wuhan) கைப்பற்றுவதை தடுக்க முடியவில்லை[6].
Remove ads
தனிச் சிறப்புப் பண்பு
மஞ்சள் ஆறு 1.6 மில்லியன் டன் வண்டலை ஓர் ஆண்டுக்கு காற்றடு வண்டல் மேட்டுநிலத்திலிருந்து கொணர்கிறது.
1972ல் முதலில் உலர்ந்தது பின் அடிக்கடி கீழ்பகுதி ஆறு உலர்ந்தது குறிப்பாக ஜினான் (Jinan) முதல் கடலை அடையும் பகுதி உலர்ந்தது. 1997ம் ஆண்டில் 226 நாட்களுக்கு உலர்ந்து காணப்பட்டது. குறைந்த நீர் வரத்துக்கு காரணம் அதிகமான விவசாய பயன்பாட்டுக்கு நீர் எடுக்கப்படுவதே ஆகும். 1950ம் ஆண்டில் எடுக்கப்பட்டதை விட தற்போது ஐந்து மடங்கு நீர் அதிகமாக எடுக்கப்படுகிறது. 1999ம் ஆண்டு கணக்கின் படி இதன் நீரை ஆதாரமாக கொண்டு 140மில்லியன் மக்களும் 74,000 சதுர கி.மீ.(48,572 சதுர மைல்) நிலமும் பயன்பெறுகின்றன. ஜூலை முதல் அக்டோபர் வரையிலான மழைக்காலத்தில் இதில் நீர் வரத்து அதிகமாக இருக்கும். அக்காலத்தில் ஓர் ஆண்டில் செல்லும் அளவில் 60% அளவு நீர் வரத்து இருக்கும். மார்ச் மற்றும் ஜூன் மாதங்களிலேயே விவசாயத்திற்கு அதிக அளவிலான நீர் தேவைப்படும். வெள்ளக்கட்டுப்பாடு, மின்சார உற்பத்தி மற்றும் தேவையான காலத்தில் நீரை பயன்படுத்துதல் போன்ற காரணங்களுக்காக இதன் குறுக்கில் பல அணைகள் கட்டப்பட்டுள்ளன. அதிகளவில் சேரும் வண்டலின் காரணமாக இவற்றின் ஆயுள் காலம் மட்டுப்படுத்தப்பட்டதாகும். முன்மொழியப்பட்ட தெற்கு-வடக்கு நீர் மாற்றல் திட்டப்பணியின் படி யாங்சே ஆற்றின் நீரானது பல திட்டங்கள் மூலம் மஞ்சள் ஆற்றுக்கு திருப்பிவிட திட்டமாகியுள்ளது. மேற்கில் இரண்டு ஆறுகளும் அருகில் உள்ள பகுதி, ஹான் (Han)ஆற்றின் மேல் பகுதி , பெரும் கால்வாய் என மூன்று திட்டங்கள் இதில் உள்ளன.
மஞ்சள் ஆற்றின் மிக அதிகளவிலான வண்டல் குறைவான நீர் வரத்து உள்ள காலங்களில் ஆற்றின் அடியில் படிகிறது. இதன் காரணமாக ஆற்றின் உயரம் அதிகரிக்கிறது. மிக அதிக நீர்வரத்து உள்ள காலங்களில் வெள்ளம் உருவாகி அவை ஆற்றின் கரையை உடைத்து அருகிலுள்ள நிலங்களில் பாய்கிறது. மேலும் வெள்ளம் வடிந்த பின்பும் ஆற்றின் அடி உயர்ந்து இருப்பதால் ஆறானது பழைய பாதைக்கு திரும்பாமல் வேறு பாதையை தேர்ந்தெடுத்துக்கொள்கிறது. தற்காலத்தில் கரையின் பலத்தை மேம்படுத்தி வெள்ளத்தை கட்டுப்படுத்த முயற்சிகள் செய்யப்பட்டுள்ளன.
மஞ்சள் ஆற்றின் கழிமுக பரப்பு 8,000 சதுர கி.மீ(3,090 சதுர மைல்). எனினும் 1996ம் ஆண்டு முதல் ஆண்டு தோறும் இது குறைந்து வருவதாக கணக்கிடப்பட்டுள்ளது. இதற்கு மண் அரிப்பே முதன்மையான காரணமாக கூறப்பட்டுள்ளது.
Remove ads
மாசு

மஞ்சள் ஆறு மற்றும் அதன் துணை ஆறுகளின் 8,384 மைல் தொலைவை 2007ம் ஆண்டு மதிப்பீடு செய்து தரவுகள் சேகரிக்கப்பட்டதின் மூலம் இந்த ஆற்றின் மூன்றில் ஒரு பாகம் வேளாண்மை மற்றும் தொழில் துறையின் பயன்பாட்டுக்கு உகந்தது அல்ல என கணிக்கப்பட்டது. இதற்கு காரணம் ஆலைகளில் இருந்து வரும் கழிவுகளும் நகரங்களில் இருந்து வரும் கழிவுகளும் ஆகும்[9] .
புவியியல்
இந்த ஆற்றை மேல் பகுதி, இடைப்பகுதி, கீழ்ப்பகுதி என மூன்றாக பகுதிகளாக பிரித்துள்ளார்கள்.
மேல் பகுதி
மஞ்சள் ஆறு உற்பத்தியாகும் பாயன் ஹர் மலைப்பகுதியிலிருந்து உள் மங்கோலியாவின் ஹெக்கு (Hekou) பகுதியில் வடக்கு நோக்கி திரும்பும் பகுதி வரை உள்ள பகுதி ஆற்றின் மேல் பகுதி என குறிக்கப்படுகிறது. இந்தப்பகுதியின் மொத்த நீளம் 3,472 கி.மீ. (2,160 மைல், படுகையின் பரப்பு 386,000 சதுர கி.மீ. (149,035 சதுர மைல்) இது ஆற்றின் மொத்த படுகை பரப்பில் 51.3% ஆகும்.
இங்கு இது பாயன் ஹர் (Bayan Har 巴顏喀啦山脈 ) மற்றும் அம்னே மச்சின் (Amne Machin) மலைத்தொடர் வழியாக பல பசும் புல்வெளிகளையும் பள்ளத்தாக்குகளையும் தாண்டி வருகிறது. இங்கு இதன் நீர் எந்த கலங்களும் இல்லாமல் தூய்மையாக இருக்கும். பளிங்கு போன்ற நீர் இருப்பது இந்த பகுதி ஆற்றின் சிறப்பாகும். 4.7 மில்லியன் கன மீட்டர் உடைய பாப் ஏரி (Lake Bob -扎陵湖)மற்றும் 10.8 மில்லியன் கன மீட்டர் உடைய எல்லிங் ஏரி (Lake Eling -鄂陵湖)ஆகியவை இப்பகுதியில் அமைந்துள்ளன. உயரத்தில் அமைந்த இரு பெரிய நன்னீர் ஏரிகள் அவை.
பள்ளத்தாக்கு பகுதியானது குன்காய்யில்(Qinghai)உள்ள லாங்யாங் (Longyang)ஆழ்பள்ளத்தாக்கு முதல் கன்சுவில் (Gansu) உள்ள குன்டாங் (Qingtong) ஆழ் பள்ளத்தாக்கு வரை பரவியுள்ளது. இங்கு செங்குத்துப்பாறைகள் ஆற்றின் இரு புறமும் இருக்கும். இப்பகுதியில் ஆற்றின் ஆழம் குறைவாகவும் நீர் வரத்து அதிகமாகவும் இருப்பதால் இங்கு ஆற்றின் நீரோட்டம் வேகமாக இருக்கும். இப்பகுதியில் 20ஆழ்பள்ளத்தாக்குகள் உள்ளன. அவற்றில் லாங்யாங் (Longyang), ஜிஸ்சி (Jishi), லியுஜியா (Liujia), பாபன் (Bapan), குன்டாங் (Qingtong) ஆகியவை புகழ் வாய்ந்தவை. பல ஆழ்பள்ளத்தாக்குகள் உள்ள இப்பகுதி நீர்மின்சாரம் தயாரிக்க உகந்த பகுதியாகும்.
குன்டோங் (Qingtong) ஆழ்பள்ளத்தாக்கில் இருந்து வெளி வந்ததும் பரந்த வண்டல் சமவெளிகளான யின்சோன் (Yinchuan) மற்றும் ஹெடோ (Hetao) சமவெளிகளை அடைகிறது. இப்பரிவின் பெரும் பகுதி பாலைநிலங்கள், புல்வெளிகள் நிறைந்ததாகும். இங்கு சில துணை ஆறுகளே கலக்கின்றன. அப்பகுதியில் ஆற்றின் நீரோட்ட வேகம் குறைவாகும். ஹெடோ (Hetao) சமவெளியானது 900 கி.மீ. (560 மைல்) நீளமும் 30 - 50 கி.மீ. (20–30 மைல்) உடையது. வரலாற்று நோக்கில் இதுவே மஞ்சள் ஆற்றின் சிறப்பான பாசன சமவெளியாகும்.

இடைப்பகுதி

உள் மங்கோலிய மாகாணத்தின் ஹக்கு(Hekou) பகுதியிலிருந்து ஹெனான்(Henan) மாகாணத்தின் ஜிங்ஜோகு(Zhengzhou) வரை உள்ள ஆற்றுப்பகுதி இடைப்பகுதி எனப்படுகிறது. இப்பகுதி ஆற்றின் நீளம் 1,206 கி.மீ. (749 மைல்) இப்பகுதி படுகையின் பரப்பு 344,000 சதுர கி.மீ. (132,820 சதுர மைல்) இது மொத்த படுகையின் அளவில் 45.7% ஆகும். 30 பெரிய துணை ஆறுகள் இப்பகுதியில் மஞ்சள் ஆற்றுடன் கலக்கின்றன. ஆகையால் இங்கு மஞ்சள் ஆற்றின் நீர் ஓட்டம் 43.5% அதிகரிக்கிறது. ஆற்றில் சேரும் வண்டல்களில் 92% இடைப்பகுதியினாலே சேருகிறது.
இடைப்பகுதியில் பாயும் மஞ்சள் ஆறு காற்றடு வண்டல் சமவெளியை கடக்கும் போது குறிப்பிடத்தக்க அளவில் மண்அரிப்பு ஏற்படுகிறது. அதிகளவிலான சேறு மற்றும் மண் ஆற்றில் வெளியேற்றப்படுவதால் மஞ்சள் ஆறு உலகிலேயே அதிக அளவு வண்டல் சேரும் ஆறாக உள்ளது. அதிக அளவிலான வண்டல் வெளியேற்றம் 1993ம் ஆண்டில் 3.91 பில்லியன் டன் இருந்ததாக பதியப்பட்டுள்ளது. 1977ம் ஆண்டில் 920 கி.கி\கன மீட்டர் என்ற அளவில் அதிக செறிவுடைய\அடர்த்தியுடைய வண்டல் இவ்வாற்றில் கலந்ததாக பதியப்பட்டுள்ளது. வண்டல்கள் படிவதால் கீழ்ப்பகுதி ஆற்றின் மட்டம் உயர்கிறது. இதனால் இதற்கு "நிலத்திற்கு மேல் செல்லும் ஆறு" என்ற பெயர் உண்டு. பழங்கால சீன தலைநகரான கைபெங் (Kaifeng) நகரின் மட்டத்தை விட இது 10 மீட்டர் உயர்ந்து உள்ளது[10].
ஹக்குவிலிருந்து(Hekou) யுமென்கு (Yumenkou) வரையுள்ள ஆறு பல தொடர்ச்சியான பள்ளத்தாக்குகளை தாண்டி வருகிறது. இந்த பள்ளத்தாக்கு தொகுதிக்கு ஜின்சான் (Jinshan)பள்ளத்தாக்கு என்று பெயர். இதனால் இப்பிரிவு நீர் மின்சாரம் உற்பத்தி செய்ய உகந்த இடமாகும். புகழ் பெற்ற ஹக்கு(Hukou) அருவி இப்பள்ளத்தாக்கின் கீழ் பகுதியில் உள்ளது.
கீழ்ப்பகுதி
கீழ்ப்பகுதியின் தொலைவு ஜெங்ஜோ (Zhengzhou)விலிருந்து கடல் வரை 786 கி.மீ. (488 மைல்). இங்கு கரை உயர்த்தப்பட்ட மஞ்சள் ஆறு வடகிழக்காக வட சீன சமவெளி வழியாக பாய்ந்து பொகாய்(Bohai) கடலில் கலக்கிறது. இப்பகுதியின் படுகை பரப்பு 23,000 சதுர கி.மீ. (8,880 சதுர மைல்) ஆகும். இது மொத்த படுகையின் பரப்பில் 3%.
இடைப்பகுதியில் பெறப்படும் வண்டல் இப்பகுதியில் படிந்து ஆற்றின் மட்டத்தை உயர்த்துகிறது. இதனால் அதிக நீர் வரத்து உள்ள காலங்களில் இப்பகுதி வெள்ள அபாயத்திற்கு உட்படுகிறது.
Remove ads
மேற்கோள்கள்
வெளிஇணைப்பு
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads