மந்துகை

மங்கோலியர்களின் கதுன் From Wikipedia, the free encyclopedia

மந்துகை
Remove ads

மந்துகை கதுன் (அண். 1449-1510) என்பவர் வடக்கு யுவான் அரசமரபின் ஒரு கதுன் (இராணி) ஆவார். இவரது இரண்டாவது கணவர் பத்முங் தயன் கானுடன் இணைந்து போரிட்டுக் கொண்டிருந்த மங்கோலியர்களை மீண்டும் ஒன்றிணைக்க இவர் உதவி புரிந்தார்.

விரைவான உண்மைகள் மந்துகை கதுன், பிறப்பு ...
Remove ads

ஆரம்ப வாழ்க்கை

மந்துகை சோரோஸ்பை துமூர் என்ற சிங்சாங்கின் (பெரும் ஆலோசகர்) ஒரே மகள் ஆவார். இவர் கிழக்கு மங்கோலியாவின் ஒங்குட் மங்கோலிய இனத்தைச் சேர்ந்தவர் ஆவார். இவரது குடும்பத்தினர் மேற்குடி மக்களாக இருந்தனர். 1464ஆம் ஆண்டு தனது 16ஆம் வயதில் மந்துகை மன்டூல் கானைத் திருமணம் செய்து கொண்டார்.[1] மன்டூல் கான் 1473 - 1479இல் வடக்கு யுவானை ஆட்சி செய்தார். கானின் குழந்தையற்ற முதல் மனைவி உங்கென் கபர் தூவைத் தாண்டி மந்துகைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.[2] பெரும்பாலான நூல்கள் மன்டூல் கானுக்குக் குழந்தைகள் இல்லை என்று குறிப்பிடுகின்றன. எனினும், இரண்டு பெயர்கள் சில நேரங்களில் மந்துகையின் மகள்கள் என்று குறிப்பிடுகின்றன.[3] அவர்களின் வயதுகளை அடிப்படையாகப் பார்க்கும் போது அவர்கள் உண்மையில் மன்டூல் கானின் உறவினர்களாக இருந்திருக்க வாய்ப்பு இருந்துள்ளது. மகள்களாக இருந்திருக்க வாய்ப்பில்லை. அவர்கள் ஒரு வேளை மந்துகையால் வளர்க்கப்பட்டிருக்கலாம்.[3]

1478 அல்லது 1479இல் மன்டூல் கான் தெளிவற்ற சூழ்நிலைகளின் கீழ் இறந்தார்.[4] அவருக்கென்று ஒரு தெளிவான வாரிசு கிடையாது. கானாக மாறுவதற்குப் பல மங்கோலிய இளவரசர்கள் சண்டையிட்டுக் கொண்டனர். அவரின் முதல் மனைவியான உங்கென் கபர் தூ மறைந்துவிட்டார். அவரது விதி என்ன ஆனது என்று தெரியவில்லை.[4]

செங்கிஸ் கானின் ஒரு நேரடி வழித்தோன்றலும், போர்சிசின் குடும்பத்தைச் சேர்ந்தவருமான பயன் மோங்கே சோனோனின் மகனான ஏழு வயது அனாதையான பதுமுங்கை மறைந்து வாழ்ந்து வந்த இடத்தில் இருந்து மந்துகை அழைத்து வந்து தத்தெடுத்துக் கொண்டார். பயன் மோங்கே சோனோன் எஸ்மெல் (இஸ்மாயில்) என்பவரால் கொல்லப்பட்டிருந்தார். செங்கிஸ் கானின் கடைசி எஞ்சியிருந்த வழித்தோன்றலான பதுமுங்கைக்குத் தயன் கான் என்ற பட்டத்தை மந்துகை அளித்தார். ஒரு சக்தி வாய்ந்த உயர்குடியினரான உனுபோல்ட் என்பவரின் திருமணக் கோரிக்கையையும் மந்துகை நிராகரித்தார். எனினும், செங்கிஸ் கானின் தம்பி கசரின் ஒரு வழித்தோன்றலான உனுபோல்ட் மந்துகை மற்றும் குழந்தை கானுக்குத் தொடர்ந்து விசுவாசமாக இருந்தார்.

Remove ads

வடக்கு யுவானின் கதுன்

மங்கோலியர்களுக்குத் தலைமை தாங்கிய மந்துகை ஒயிரட்களுடன் போர் நடத்தி அவர்களைத் தோற்கடித்தார்.[5] ஒயிரட்களுக்கு எதிரான இவரது பிரம்மிக்கத்தக்க வெற்றியானது போர்சிசின்களின் முற்காலப் பெரும் மதிப்பை மீண்டும் கொண்டு வந்தது. ஒரு நூற்றாண்டுக்கும் மேலான காலத்தில் முதன் முதலாக மங்கோலியாவை இவர் இணைத்தார்.[6]

பதுமுங்கிற்கு 19 வயதான போது அவரை மந்துகை திருமணம் செய்து கொண்டார். மங்கோலியர் மீதான கட்டுப்பாட்டைத் தக்க வைத்துக் கொண்டார். ஒயிரட்கள் மீண்டும் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். கிழக்கு மங்கோலியர்கள் மீது திடீர்த் தாக்குதல் நடத்தினர். ஒயிரட்களுக்கு எதிராக மந்துகை ஒரு பெரிய இராணுவத்தை வழி நடத்திச் சென்றார். பல மிங் அரசமரபின் தாக்குதல்களை மந்துகை தோற்கடித்தார். வடக்கு யுவானைப் பாதுகாத்தார். மிங் இராணுவ வீரர்களுக்கு எதிராக இவர் தலைக்கவசங்களை அணிந்து வாள் வீசிச் சண்டையிட்டார். அந்நேரத்தில் இவர் கர்ப்பிணியாக இருந்தார். எனினும், தொடர்ந்து சண்டையிட்டார். ஒரு நீண்ட யுத்தத்தின்போது இரட்டை மகன்களைப் பெற்றெடுத்தார். மேற்கு மங்கோலியர்கள் மீண்டும் ஒரு முறை பணிய வைக்கப்பட்டனர்.

1480 முதல் மிங் நிலப்பரப்பு மீதான தங்களது அழுத்தத்தைத் தயன் கானும், மந்துகையும் அதிகப்படுத்தினர். ஏனெனில், மிங் அரசமரபினர் தங்களது எல்லை வணிகத்தை மூடி, ஒரு வடக்கு யுவான் தூதுவரைக் கொன்றிருந்தனர். மந்துகையை கட்டுக்குள் வைத்திருப்பதற்காக மிங் அரசமரபினர் சீனப் பெருஞ்சுவரை வேகமாக விரிவாக்கினர். மந்துகை ஓர்டோஸ் நகரை மீண்டும் ஆக்கிரமித்தார். மிங் அரசமரபைக் கண்காணிப்பதற்காக மங்கோலிய வீரர்களை அங்கு நிலை நிறுத்தினார். ஓர்டோஸ் நகரத்தில் உள்ள செங்கிஸ் கானின் கல்லறையில் தயன் கானை மீண்டும் அரியணையில் மந்துகை அமர்த்தினார். எனினும், ஒரு மிங் தாக்குதலின் காரணமாக இவர்கள் பின்வாங்கும் நிலை ஏற்பட்டது. 1501இல் மந்துகை கெர்லென் ஆற்றுக்குச் சென்றார். எனினும் இவரது கணவர் தொடர்ந்து மிங் அரசமரபுக்கு எதிராகத் திடீர்த் தாக்குதல்களை நடத்தினார்.

மந்துகை 1510இல் இறந்தார். மிகுந்த நம்பகத்தன்மை உடைய நூல்களின் படி, மந்துகை இயற்கை மரணம் அடைந்தார். சில கதைகளின் படி, மங்கோலியர்களுடன் இணைந்தவராக நடித்த ஒரு மிங் அரசமரபின் நபரால் இவர் கொல்லப்பட்டார் அல்லது இவரது கணவரின் துணைவியரில் ஒருவரால் கொல்லப்பட்டார். அனுபவ அறிவுடைய இராணி மந்துகை எனும் திரைப்படம் இவர் எஸ்மெல் (இஸ்மாயில்) எனப்படும் ஒரு மங்கோலியத் தளபதியால் கொல்லப்பட்டார் என்று குறிப்பிடுகிறது. இந்த எஸ்மெல் ஒரு மிங் ஓற்றர் ஆவார். எஸ்மெல் மங்கோலியர்களுக்குத் துரோகம் செய்தார். மங்கோலியர்களைத் தாக்கி அவர்களைக் வெல்வதற்கு மிங் இராணுவத்துடன் இணைந்து செயல்பட்டார்.

எனினும், இத்தகைய கதைகளில் எவையும் நம்பகத்தன்மை உடைய ஆதாரங்களைக் கொண்டிருக்கவில்லை. செங்கிஸ் கான் மற்றும் பிற பெரிய கான்களைப் போலவே இவருடைய சமாதியும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை எனத் தெரிகிறது.

Remove ads

மரபு

செங்கிஸ் கானின் ஒரு வழித் தோன்றலாகத் தயன் கானைத் தொடர்ந்து அதிகாரத்தில் மந்துகை வைத்திருந்தார். ஒயிரட்களைத் தோற்கடித்தார். இந்த இரண்டு சாதனைகளும் இவரது வாழ்வு குறித்த புராணக் கதைகள் உருவாகக் காரணமாயின.

இவர் ஏழு மகன்கள் மற்றும் மூன்று மகள்களை விட்டுச் சென்றார். மங்கோலியர்களின் அனைத்துப் பிந்தைய கான்களும், உயர்குடியினரும் இவரது வழித்தோன்றல்கள் தான். இதில் அல்டன் கான் மற்றும் லிக்டன் கான் ஆகியோரும் அடங்குவர்.

மேற்கோள்கள்

உசாத்துணை

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads