மாதவிடாய் நிறுத்தம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

மாதவிடாய் நிறுத்தம் என்பது ஒரு பெண்ணுக்குத் தொடர்ச்சியாக 12 மாதங்களுக்கும் அதன்பின்னரும் மாதவிடாய் வராமல் முற்றிலும் நிற்பது ஆகும்.[1] மாதவிடாய் நிறுத்தம் ஒரு பெண்ணின் இனப்பெருக்க சுழற்சியை நிறுத்துகிறது. உடலில் உற்பத்தியாகும் பல்வேறு இயக்குநீர்கள் ஏற்ற இறக்கங்களுக்கு உள்ளாகின்றன. பொதுவாக 45-55 வயதுகளுக்கு இடையே மாதவிடாய் நிறுத்தம் ஏற்படுகின்றது.

ஏன் நிற்கிறது

மாதவிடாய் நிறுத்தம் பற்றி படிவளர்ச்சி நோக்கில் ஒரு விளக்கம் உண்டு. ஒரு பெண் வயதேறும் போது அவளின் இறப்புக்கான சாத்தியக்கூறுகள் அதிகரிக்கின்றன. அதனால் அவள் முதுமையில் குழந்தை பெறுவதை விட அவள் இளமையில் பெற்ற பிள்ளைகளுக்கும், பேரப்பிள்ளைகளுக்கும் கூடிய கவனம் தந்தால் அவர்களது நீண்ட வாழ்வுக்கு வளம் சேர்க்க முடியும். இதனால் குழந்தை பிறப்பதைத் தடுத்து மாதவிடாய் நிற்கிறது.[2] உயிரியல் நோக்கிலான இன்னொரு விளக்கம் கீழே.

Remove ads

உடல் அறிகுறிகள்

ஒரு பெண்ணுக்கு ஒரு குறிப்பிட்ட தொகை கருமுட்டைகள் தான் இருக்கும். பாலுறவினால் கருக்கட்டல் நிகழாது ஒரு பெண் கருவுறா விட்டால் ஒவ்வொரு மாதமும் ஒரு முட்டை விடுபட்டு மாதவிடாய் நிகழ்கிறது. பெண் வயதேறும் போது அந்த முட்டைகளின் எண்ணிக்கை குறைந்து வந்து 45-55 வயதுக்குள் அவை தீர்ந்து போகும். இதுவே மாதவிடாய் நிறுத்தம் ஆகும். இதனால் பெண் உடலில் உற்பத்தி ஆகும் ஈத்திரோசன் போன்ற இயக்குநீர்கள் குறைகின்றன. இது உடலை பல்வேறு மாற்றங்களுக்கு உட்படுத்துகிறது. யோனி உலர்தலும் நலிவடைதலும், திடீர் உடற்சூடு, இரவில் திடீரென வியர்த்தல், புணர்புழை எரிச்சல், சிறுநீர் கழித்தல் இடைவெளி மாற்றம், தலையிடி, தோலில் தலைமயிரில் மாற்றங்கள், உடல் பருமனாகல் என பலதரப்பட்ட வேண்டா மாற்றங்களும் நிகழலாம்.[3]

Remove ads

உளவியல் விளைவுகள்

ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் நிறுத்தம் பல்வேறு உளவியல் மாற்றங்களை கொண்டுவரும். இந்த விளைவுகள் வெவ்வேறு சமூக பண்பாட்டு சூழலில் வேறுபடக்கூடும். மாதவிடாய் நிறுத்தத்தால் ஒரு பெண் தாய்மை ஆகும் சாத்தியக்கூற்றை இழக்கிறாள். இது சில சமூகங்களில் பெரிய இழப்பாக கருதப்படுகிறது. வேறு சமூகங்களில் பெண்ணின் முதிர்ச்சியும் அனுபவமும் மதிக்கப்படுகிறது, அவளது பெறுமதி கூடுகிறது.

உடலில் ஏற்படும் விளைவுகள் உளவியல் பாதிப்பையும் தருகிறன. தவிப்பு (Anxiety), மன அழுத்தம், சோம்பல் போன்ற உளவியல் தாக்கங்கள் ஏற்படுகின்றன.

சமூக விளைவுகள்

மாதவிடாய், மாதவிடாய் நிறுத்தம் போன்ற இயல்பாயான விடயங்கள் தமிழ்ச் சமூகத்திலும், இதர சமூகங்களிலும் பேசப்படா இயலாகவே இருந்துள்ளன. பூப்பு அடையும் நிகழ்வு கொண்டாடப்பட்டாலும், அது சார்ந்த உயிரியல் விளக்கம் குறைவாக இருக்கிறது. மாதவிடாய் பெண் தூய்மை அற்றவள் என்று கருதி பெண்கள் ஒதுக்கப்பட்டனர். குறிப்பாக இந்து, பெளத்த, சமண சமயங்களில் பெண்கள் இவ்வாறு ஒதுக்கப்பட்டனர். அந்த வகையில் மாதவிடாய் நிறுத்தம் பெண்களுக்கு ஒருவகை விடுதலை.

சுகாதார ஏற்பாடுகள்

மாதவிடாய் நிறுத்தம் ஏற்படும்போதும், அதற்கு சிலகாலம் முன்பும், சில காலம் பின்பும் பெண்கள் அனுபவிக்கும் உடல் உளவியல் விளைவுகளை இயன்றவரை குறைக்க அல்லது சமாளிக்க உதவுவது சுகாதாரத்துறையின் கடமையாகும்.

Remove ads

மாதவிடாய் நிறுத்தமும் பாலியலும்

மாதவிடாய் நிறுத்தம் அடைந்த பெண் பாலியலுணர்வை, பாலியல் வேட்கையை முற்றிலும் இழப்பதில்லை. பெண்கள் தொடர்ந்து பாலியலில் ஈடுபாடு கொள்கின்றனர். பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இயக்குநீர் மாற்று சிகிச்சை போன்ற மாற்றுக்கள் உண்டு.

மாதவிடாய் நிறுத்தமும் பண்பாடும்

மேலே குறிப்பிட்டது போன்று சமூக பண்பாட்டு சூழ்நிலைகள் மாதவிடாயின் உடலியல் உளவியல் அறிகுறிகளைப் பெரிதும் பாதிக்கின்றன. எடுத்துக்காட்டாக மேற்குநாட்டு பெண்கள் மேல் உடம்பில் திடீரெனத் தோன்றும் எரிச்சல் (Hot flashes) பற்றி முறையீடு செய்கின்றனர். யப்பானியப் பெண்களோ இவ்வகை எரிச்சலைப் பற்றி அவ்வளவு முறையீடு செய்வதில்லை. மாற்றாக தோள் விறைப்பு பற்றி முறையீடு செய்கின்றனர். நைஜீரியப் பெண்கள் மூட்டு நோ பற்றி முறையீடு செய்கிறார்கள். மொழி, கல்வி, பொருளாதாரம் போன்றவற்றை கட்டுப்படுத்தி மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளும் முக்கிய உடலியல் உளவியல் வேறுபாடுகளைச் சுட்டுகின்றன.[4] சமூக பண்பாட்டு காரணிகள் சிக்கலான முறைகளில் உடல், உள நலத்தைப் பாதிப்பதை இது காட்டுவதாக சில ஆய்வாளர்கள் சுட்டுகின்றனர். உணவு, மதுபான பாவனை, புகைத்தல் அல்லது புகை பிடித்தல் பழக்கம், பாலியல் நடத்தைகள், மரபியல் போன்ற காரணிகளால் சமூக பண்பாட்டு சூழ்நிலைகள் வேறுபடுகின்றன.

Remove ads

மேற்கோள்கள்

உசாத்துணைகள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads