மார்ட்டின் லூதர் கிங்

காந்தியவாதி From Wikipedia, the free encyclopedia

மார்ட்டின் லூதர் கிங்
Remove ads

மார்டின் லூதர் கிங், இளையவர் (Martin Luther King, Jr.; ஜனவரி 15, 1929 - ஏப்ரல் 4, 1968)[1] ஐக்கிய அமெரிக்காவில் சமூக உரிமைக்காக போராடிய மாபெரும் ஆபிரிக்க-அமெரிக்கத் தலைவராவார். அமெரிக்க குருமார்களில் ஒருவர்; ஆர்வலர், மற்றும் ஆபிரிக்க அமெரிக்க மனித உரிமை இயக்கத்தில் தலைவராக இருந்தார். அவர் காந்தியவழியில் சிறந்த வன்முறையற்ற அறப்போராட்டத்தைப் பயன்படுத்தியவர். மார்ட்டின் லூதர் கிங் அமெரிக்க முற்போக்கு வரலாற்றில் ஒரு தேசிய சின்னமாகக் கருதப்படுகிறார்.[2] பாப்திசுதப் போதகராக இருந்த கிங் தனது இளமைக்காலத்திலேயே சமூக உரிமைவாதியாக இனங்காணப்பட்டார். 1955 இல் மாண்ட்கோமரி பேருந்து புறக்கணிப்புப் போராட்டத்திற்குத் தலைமை தாங்கினார். 1955 இல் தெற்குக் கிழக்காசியத் தலைவர்கள் மாநாடு நிகழவும் உதவினார். அம்மாநாட்டின் முதல் தலைவராகவும் ஆனார். இவ்வமைப்பு கிங் தலைமையில் ஜார்ஜியாவில் அல்பேனி எனுமிடத்தில் 1957 இல் நிறப்பாகுபாட்டிற்கு எதிராக நடத்திய போராட்டம் தோல்வியடைந்தது. 1962 இல் அலபாமாவில் நடந்த வன்முறையற்ற வழியில் இவர் நடத்திய அறப்போராட்டம் பலரது கவனத்தை ஈர்த்ததுடன் தேசிய அளவில் புகழ்பெற்றது. கிங் 1963 இல் 'வேலையும் சுதந்திரமும் வேண்டி வாஷிங்டனுக்கு பேரணி' என்ற மிகப் பெரிய பேரணிக்கு ஏற்பாடு செய்தார். பெருமளவில் மக்கள் திரண்டனர். இங்குதான் அவர் தனது புகழ்பெற்ற 'எனக்கொரு கனவு' என்ற புகழ்பெற்ற சொற்பொழிவினை ஆற்றினார். அமெரிக்க வரலாற்றில் இது ஒரு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. இதன் பிறகு அமெரிக்க உளவுதுறை (FBI)இவரைக் கண்காணித்து அரசுக்கு தகவல்களை அனுப்பத் தொடங்கியது. மேலும் தற்கொலை செய்து கொள்ளுமாறு ஒரு அநாமதேய மிரட்டல் கடிதமும் விடுத்தது. அடுத்த ஆண்டு அதாவது அக்டோபர் 14, 1964 ஆம் ஆண்டில் வன்முறையற்ற வகையில் நிறவெறிக்கெதிராக பாடுபட்டதற்காக மார்ட்டின் லூதர் கிங்குக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இவர் 1968 ஏப்ரல் 4 ஆம் நாள் டென்னசி மாநிலத்தில் மெம்ஃபிஸ் நகரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

விரைவான உண்மைகள் மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர், பிறந்தது: ...
Remove ads

இளமை

Thumb
King's high school alma mater was named after African-American scholar Booker T. Washington

மார்ட்டின் லூதர் கிங் 1929, ஜனவரி 15 ஆம் நாள் அமெரிக்காவில் அட்லாண்டா நகரில் பிறந்தார். இவருடைய தந்தை மார்ட்டின் லூதர் தாயார் அல்பெர்டா ஆவார்.[3] இவருடைய சட்டப்படியான பிறப்புப் பெயர் மைக்கேல் கிங் என்பதாகும்.[4] இவருடைய தந்தையின் பெயரும் மைக்கேல் கிங் என்பதே ஆகும். ஆனால் 1934 செருமனியில் பெர்லின் நகரில் ஐந்தாம் பாப்திச உலக மாநாடுக்குச் சென்றிருந்த கிங்கின் தந்தை இருவருடைய பெயரையும் ஜெர்மனியில் அப்போது புகழ்பெற்றிருந்த சீர்திருத்தவாதி மார்ட்டின் லூதர் என்பவருடைய பெயரை இருவருடையதாகவும் மாற்றிக் கொண்டார்.[5]

மார்ட்டின் லுதர் கிங் இளையவருக்கு சகோதரிகள் இருவரும் ஒரு சகோதரனும் இருந்தனர். கிறித்துவக் கோவில்களில் பாடல்களைப் பாடிக்கொண்டிருந்த கிங் ' கோன் வித் அ விண்ட் என்ற திரைப்படத்திலும் பாடியுள்ளார்.[6]

Remove ads

கல்வி

தொடக்கத்தில் மார்ட்டின் லூதர் கிங் கிறித்துவம் குறித்து ஐயம் கொண்டார்.[7] தனது பதின்மூன்றாம் வயதில் அவருக்குக் கிறித்துவத்தின் கொள்கைகள் பலவற்றில் ஐயம் ஏற்பட்டது. எனவே அதனை ஏற்க மறுத்தார். பின்னர் விவிலியத்தை ஆய்ந்து அதில் கூறப்பட்டுள்ள கருத்துகளின் ஆழமான உண்மைகளிலிருந்து ஒருவரும் தப்பமுடியாது என்ற முடிவுக்கு வந்தார்.[7] அதன்பிறகு ஒரு தீவிர பாப்திச பாதிரியாரானார். அட்லாண்டாவில் புக்கர் டி. வாஷிங்டன் உயர்நிலைப்பள்ளியில் தனது தொடக்கக் கல்வியைப் பயின்றார். கல்வியில் மீத்திறன் மிக்க கிங் ஒன்பது மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலாமல் அடுத்த வகுப்புக்கு முன்னேற்றப்பட்டு மோர்ஹவுஸ் கல்லூரியில் சேர்த்துக்கொள்ளப்பட்டார்.[8] 1948 இல் அக்கல்லூரியில் தனது சமூகவியல் இளங்கலைப் பட்டம் பெற்று 1951 இல் பென்சில்வேனியாவில் சமயக் கல்விக்கான பட்டத்தையும் பெற்றார்.[9][10]

மார்ட்டின் லூதர் கிங் கொரெட்டா ஸ்காட் கிங் என்ற பெண்ணை ஜூன் 18, 1953 இல் மணந்துகொண்டார்.[11] இவ்விணையருக்கு யோலண்டா கிங், மார்ட்டின் லூதர்கிங் III, டெக்ஸ்டெர் ஸ்காட் கிங் மற்றும் பெர்னிஸ் கிங் என்ற நான்கு குழந்தைகள் பிறந்தனர்.[12] பின்னாளில் கொரெட்டா ஸ்காட் கிங், 2004 ஆம் ஆண்டிற்கான காந்தி அமைதி பரிசு பெற்றார்.

Thumb
மார்டின் லூதர் கிங் மனைவி மற்றும் குழந்தையுடன்

கிங் தனது 25 ஆம் வயதில் அலபாமாவில் உள்ள ஓர் கிறித்துவ மடத்தில் பாதிரியாராகத் தனது பணியைத் தொடங்கினார்.[13] அதன் பிறகு 1955 ஜூன் 5 ஆம் தேதி பாஸ்டன் பல்கலைக் கழகத்தில் இணைந்து சமயக் கல்வியில் முனைவர் பட்டம் பெற்றார். முனைவர் பட்ட ஆய்வுக்காக கிங் சமர்ப்பித்த ஆய்வேட்டின் பகுதிகள் களவாடப்பட்டது என்று 1991 அக்டோபரில் விசாரணைக்குட்படுத்தி முடிவு செய்யப்பட்டது. ஆனால் கிங்கின் ஆய்வேடு ஒரு சிறந்த பங்களிப்பு எனக் கூறி அவருக்கு அளித்த பட்டத்தைத் திரும்பப் பெற பல்கலைக் கழகம் மறுத்துவிட்டது.[14]

Remove ads

கொள்கைகள்

மதம்

ஒரு கிறிஸ்தவ ஊழியராக, இவருக்கென ஒரு தனிச் செல்வாக்கு இருந்தது. கிங் எப்போதும் தேவாலயத்தில் நடைபெறும் மதக்கூட்டங்கள் மற்றும் உரைகளில் கிறிதுவர்களுக்கான நற்செய்திகளைச் சொல்வார். ஆனால் பொதுக் கூட்டங்களில் கிறித்துவத்தின் பொன்விதியான ' உன் அண்டை அயலாரையும் உன்னைப் போல் நேசி' என்ற கொள்கையின் அடிப்படையிலேயே அவர் ஆற்றும் சொற்பொழிவுகள் அமைந்தன. அனைவருக்கும் அன்பு காட்டு; பகைவனையும் நேசி; அவர்களுக்காக வேண்டுதல் செய்; அவர்களையும் ஆசிர்வதி; என்பனவற்றையும் போதிப்பதாக இருந்தது. இயேசுவின் மலைச் சொற்பொழிவில் இயேசு ஆற்றிய 'ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தையும் காட்டு' என்ற கொள்கை அடிப்படையிலும் 'உங்களுடைய வாளை அதற்குரிய உரையில் திரும்ப வையுங்கள்'என்பதன் அடிப்படையிலும் இவருடைய வன்முறையற்ற அறக்கருத்துகள் இருந்தன. (Matthew 26:52).[15]

அறப்போராட்டம்

Thumb
வாஷிங்டன் டி.சியில் கிங் சிவில் உரிமை மார்ச்சில் இருந்த காட்சி

காந்தியடிகளின் அறப்போராட்ட வழியில் ஈர்க்கப்பட்ட மார்ட்டின் லூதர் கிங் அறவழியில் போராடுவதைப் பற்றி அறிந்துகொள்ள நீண்டகாலமாக நினைத்திருந்தார். 1959-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அமெரிக்க சேவை நண்பர்கள் குழு என்ற குழுவினருடன் இந்தியாவுக்கு வந்தார்.[16][17] இந்த இந்தியப் பயணம் மார்ட்டின் லூதரை மிகவும் ஆழமாகப் பாதித்தது. வன்முறையற்ற எதிர்ப்பின் மூலம் அமெரிக்கக் குடியுரிமைகளின் நலனுக்கான தனது போராட்டத்தை அர்ப்பணிக்க வேண்டும் என்ற புரிதல் இங்கு ஏற்பட்டது. இந்தியாவில் இருந்தபோது தனது கடைசி மாலைப் பொழுதில் ஒரு வானொலி உரையின் போது இந்தியா வந்து நேரில் பார்த்த பிறகு முன்னெப்போதையும் விட வன்முறையற்ற எதிர்ப்பு என்பதை நான் நன்கு அறிந்துகொண்டேன். அறப்போராட்டம் என்பது ஒடுக்கப்பட்ட மக்களுக்குக் கிடைத்துள்ள ஒரு வலிமையான ஆயுதமாகும். நீதி மற்றும் கண்ணியமான போராட்டத்திற்குப் பொருள்தரக் கூடியதாகும். எனக் குறிப்பிட்டுள்ளார். காந்தியின் சில தார்மீக அடிப்படையிலான இக்கொள்கைகள் மார்ட்டின் லூதர் கிங்கின் சில கொள்கைகளில் தாக்கத்தை ஏற்படுத்தின எனலாம்.[18],

காந்தியும் கூட கிறித்துவ எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய் எழுதிய கடவுளின் அரசாங்கம் உங்களுடன் இருக்கிறது(The Kingdom of God Is Within You) என்ற நூலில் கூறப்பட்ட வன்முறையற்ற எதிர்ப்பு என்ற கருத்துக்களால் ஈர்க்கப்பட்டார். இதையொட்டியே மார்ட்டின் லூதர் கிங்கும் டால்ஸ்டாயின் நூல்களை வாசித்தார். கிங் 1959 இல் டால்ஸ்டாயின் 'போரும் அமைதியும்' என்ற நூலை மார்ட்டின் கிங் மேற்கோள் காட்டியுள்ளார்.[19] டால்ஸ்டாய், காந்தி, மார்ட்டின் லூதர் கிங் ஆகிய மூவருமே இயேசுவின் வன்முறையற்ற எதிர்ப்பு என்ற ஆயுதத்தைக் கைக்கொண்டனர்.

ஆப்பிரிக்க அமெரிக்க மனித உரிமை ஆர்வலரான பேயர்டு ரஸ்டின் என்பவர் மார்ட்டின் லூதர் கிங்குக்கு ஆலோசகராக இருந்தார். அவர் படித்த காந்தியின் போதனைகள்[20] மற்றும் இயேசுவின் போதனைகளான அறப்போராட்டம் என்ற வன்முறையற்ற கொள்கைகளில் தன்னை முழுதுமாக அர்ப்பணித்துக் கொள்ள கிங்குக்கு ஆலோசனைகள் வழங்கினார்.[21] மார்ட்டினின் செயல்பாடுகளில் அவர் கிங்குக்கு ஒரு முக்கிய ஆலோசகராகவும் அறிவுரையாளராகவும் பணியாற்றினார்.[22] 1963 இல் வாசிங்டன் பேரணியில் ரஸ்டின் முக்கிய அமைப்பாளராகவும் இருந்தார்.[23] ஆனால் ரஸ்டினுடைய வெளிப்படையான ஓரினச் சேர்க்கை விவகாரங்கள், ஜனநாயக சோசலிசத்தை ஆதரித்தல், அமெரிக்கக் கம்யூனிட் கட்சியுடனான உறவுகள் ஆகியவற்றால், சில வெள்ளையர்களும் ஆப்பிரிக்க-அமெரிக்கத் தலைவர்களும் கிங்கிடம் ரஸ்டினை தன்னை விட்டு விலக்கி வைக்குமாறு வேண்டுகோள் விடுத்தனர்.[24] கிங் இதனைச் செய்வதாக ஏற்றுக்கொண்டார்.[25]

மார்ட்டின் கிங்கின் அறப்போராட்டாத்தில் தான் மாணவனாக இருந்த போது படித்த தோரியாவ் என்பவரின் அநீதிகளுக்கெதிராக போராடும் 'சட்ட மறுப்பு' என்ற கொள்கைகளும் பெருந்தாக்கத்தை ஏற்படுத்தின.[26] மேலும் புரோட்ஸ்டண்ட் தத்துவவாதிகளான ரீன்ஹோல்ட்,பால் டில்லிக் ஆகியோரின் கருத்துகள்[27] மற்றும் வால்ட்டர் ராசென்புஷ் என்பவருடைய 'கிறித்துவமும் சமூக நெருக்கடியும்' என்ற நூலும் கிங்கின் கொள்கைகளில் தாக்கத்தை ஏற்படுத்தின எனலாம்.

மார்ட்டின் லூதர் கிங் தானாக வகுத்துக் கொண்ட அறவழிப் போராட்டக் கொள்கைகளில் காந்தியின் கொள்கைகளை விட நீல்பர் மற்றும் டில்லிக் ஆகியோரின் கருத்துகள் அதிக செல்வாக்கு செலுத்தின.[28] மேலும் இவருடைய பின்னாட்களில் பயன்படுத்திய 'கிறித்துவ சகோதரத்துவம்' என்ற கொள்கை பால் ராம்சே என்பவருடைய தாக்கத்தால் ஏற்பட்டதாகும்.[29]

Remove ads

படுகொலை

மார்ட்டின் லூதர் கிங்கினுடைய போராட்டத்தின் பலனாக 1965-ஆம் ஆண்டு கருப்பினத்தவர்களுக்கு ஓட்டுரிமை அளித்தது அமெரிக்க அரசாங்கம். அதனைத் தொடர்ந்து கருப்பினத்தவர்களும், வெள்ளையினத்தவர்களும் சமம் என்பதைப் பிரகடணப்படுத்தும் மனித உரிமைச் சட்டத்தை அமெரிக்கா நிறைவேற்றியது. கருப்பினத்தவர்களுக்குச் சம உரிமை பெற்றுத்தரும் இயக்கத்தில் கருப்பினத்தவர்கள் மட்டுமே இடம்பெற்றால் பலன் இருக்காது என்று நம்பிய மார்ர்டின் லூதர் கிங் மற்ற இனத்தவரையும் தனது இயக்கத்தில் சேர்த்துக்கொண்டார். அனைவருடைய மனங்களும் மாறினால்தான் சம உரிமைக்கு வாய்ப்பு உண்டு என்று அவர் நம்பினார். இது குறித்து இன ஒதுக்கல் ஆதரவாளர்கள் ஆத்திரம் அடைந்தனர்.

டென்னசியில் 1968-ஆம் ஆண்டு ஏப்ரம் 4-ஆம் நாள் மாலை சொற்பொழிவிற்காக ஒரு விடுதியில் தங்கியிருந்தபொழுது ஒரு வெள்ளையினத் தீவிரவாதி லூதர் கிங்கை துப்பாக்கியால் சுட்டான்.[30] அந்த இடத்திலேயே அவர் உயிர் பிரிந்தது அப்போது அவருக்கு வயது 39. மார்ட்டின் லூதர் கிங்கின் மறைவிற்கு உலகமே கண்ணீர் அஞ்சலி செலுத்தியது.[31][32] அவரை கருப்பு காந்தி என்றும் அழைத்தது. மார்ட்டின் லூதர் கிங் நினைவாக அமெரிக்காவில் ஜனவரி மாதத்தின் மூன்றாவது திங்கட்கிழமை 'மார்ட்டின் லூதர் கிங் தினம்' என்று அனுசரிக்கப்பட்டு[33] அன்று அமெரிக்கா முழுவதும் விடுமுறை நாளாகக் கடைபிடிக்கப்படுகிறது.[34]

Remove ads

மேற்கோள்கள்

துணை நூல்கள்

மேலதிக வாசிப்புக்கு

வெளியிணைப்புகள்

இவற்றையும் பார்க்க

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads