முதலாம் இன்னசெண்ட் (திருத்தந்தை)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
திருத்தந்தை முதலாம் இன்னசெண்ட் (Pope Saint Innocent I) கத்தோலிக்க திருச்சபையில் உரோமை ஆயராகவும் திருத்தந்தையாகவும் திசம்பர் 22, 401 முதல் மார்ச் 12, 407 வரை ஆட்சிசெய்தார். இவர் கத்தோலிக்க திருச்சபையின் 40ஆம் திருத்தந்தை ஆவார்[1].
Remove ads
வரலாற்றுக் குறிப்புகள்
திருத்தந்தை முதலாம் இன்னசெண்ட் திருச்சபையின் தலைமைப் பதவியை ஏற்பதற்கு முன் திருத்தந்தையாக இருந்தவர் முதலாம் அனஸ்தாசியுஸ் ஆவார். அனஸ்தாசியுஸ் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்படுமுன் அவருக்குப் பிறந்த மகனே இன்னசெண்ட். இவ்வாறு, முதன்முறையாக, தந்தையைத் தொடர்ந்து அவருடைய மகன் திருத்தந்தை பதவி ஏற்ற நிகழ்ச்சி நடந்தது.
திருத்தந்தை தம் அதிகாரத்தை நிலைநாட்டுதல்
முதலாம் இன்னசெண்ட் பதவி ஏற்ற நாட்களில் வடக்கிலிருந்து ஐரோப்பிய செர்மானிய இனக் குழுக்கள் பல மேற்கு உரோமைப் பேரரசின்மீது படையெடுத்து வந்தன. அப்பின்னணியில் இன்னசெண்ட் தம்முடைய அதிகாரத்தை அதிகமாக வலியுறுத்தினார்.
தமக்கு முன்னால் திருத்தந்தை சிரீசியஸ் (384-399) செய்தது போலவே, இன்னசெண்டும் அதிகாரத் தோரணையோடு ஆணை ஏடுகள் பிறப்பித்தார். திருச்சபை முழுவதும் (குறிப்பாக மேலைத் திருச்சபை) பின்பற்றுவதற்காக அவர் வழிமுறைகள் அளித்தார். குறிப்பாக,
- உரோமையில் நிலவிய வழக்கப்படியே நற்கருணை மன்றாட்டின் அமைப்பு இருக்க வேண்டும்;
- ஒப்புரவு அருட்சாதனம், நோயில் பூசுதல், உறுதிப்பூசுதல் பற்றிய வழிமுறைகள்;
- திருவிவிலியத்தைச் சேராதவை என்று சில நூல்களை ஒதுக்கியது.
இவ்வாறு வழிமுறைகள் அளித்ததோடு, இன்னசெண்ட் திருச்சபை முழுவதும் "முக்கிய காரியங்களைப் பொறுத்தமட்டில்" உரோமையைக் கலந்து ஆலோசித்தபின்னரே செயல்பட வேண்டும் என்று அறிக்கையிட்டார்.
Remove ads
கீழைத் திருச்சபை மீது அதிகாரம் செலுத்தல்
- காண்ஸ்டாண்டிநோபுள் மறைமுதுவராக இருந்தவர் கிறிசோஸ்தோம் யோவான். அவரை எதிர்த்தவர்கள் அவரைப் பதவியிறக்கம் செய்து நாடுகடத்தினர் (கி.பி. 404). அப்போது திருத்தந்தை இன்னசெண்ட் கிறிசோஸ்தோமுக்கு ஆதரவாக ஒரு மடல் அனுப்பினார். கிறிசோஸ்தோமின் இடத்தைப் பிடித்துக்கொண்டவரை ஏற்க மறுத்ததோடு, கட்சி சார்பற்ற ஒரு சங்கம் கூட்டவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். மேலும், கீழை உரோமைப் பேரரசனுக்கு எதிர்ப்புத் தெரிவித்தார்.
- திருத்தந்தையின் தூதர்களுக்கு உரிய மரியாதை அளிக்கப்படவில்லை. கிறிசோஸ்தோமும் நாடுகடத்தப்பட்ட நிலையில் இறந்தார். இதனால் வெறுப்புற்ற இன்னசெண்ட், கிறிசோஸ்தோமை எதிர்த்த ஆயர்களைச் சபைநீக்கம் செய்தார். இன்னசெண்ட இறந்ததற்குப் பின்னரே கீழைத் திருச்சபைக்கும் மேலைத் திருச்சபைக்கும் இடையே நல்லுறவு மீண்டும் ஏற்படுத்தப்பட்டது.
- எருசலேமில் புனித ஜெரோமின் துறவு இல்லம் குண்டர்களால் தாக்கப்பட்டது என்ற செய்தி திருத்தந்தைக்கு 416இல் தெரியவந்தது. உடனேயே இன்னசெண்ட் ஜெரோமுக்குக் கடிதம் எழுதி, வன்செயலில் ஈடுபட்டவர்களுக்கு எதிராகத் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். மேலும் எருசலேம் ஆயரின் ஆளுகையில் அந்தத் தாக்குதல் நடந்ததால் அந்த ஆயரை இன்னசெண்ட் கடிந்துகொண்டார்.
வட ஆப்பிரிக்க திருச்சபையில் இன்னசெண்டின் அதிகாரம்
திருத்தந்தை இன்னசெண்ட் வட ஆப்பிரிக்காவில் தோன்றி விரிவடைந்த பெலாஜிய தப்பறைக் கொள்கையைக் கண்டித்தார். அக்கொள்கைப்படி, மனிதர்கள் கடவுளின் உதவி இன்றியே தமது சொந்த முயற்சியால் மீட்பு அடைய முடியும். இத்தப்பறைக் கொள்கை கார்த்தேஜ் மற்றும் மிலேவிஸ் என்னும் இரு சங்கங்களால் ஏற்கனவே கண்டனம் செய்யப்பட்டிருந்தது.
ஐந்து ஆப்பிரிக்க ஆயர்கள் இன்னசெண்டை அணுகி, அவரும் பெலாஜிய தப்பறையைக் கண்டனம் செய்யக் கேட்டார்கள். அந்த ஆயர்களுள் புனித அகுஸ்தீனும் ஒருவர். இன்னசெண்ட அந்த ஆயர்களுக்கு எழுதிய பதிலில், அவர்கள் பெலாஜியுஸ் பற்றிய சர்ச்சை குறித்து அவரை அணுகியதற்கு அவர்களைப் பாராட்டுகிறார்.
Remove ads
திருச்சபையின் தலைமை
முதலாம் இன்னசெண்ட், திருச்சபை முழுவதற்கும் காணக்கூடிய தலைவராக இருப்பவர் உரோமை ஆயரே என்னும் கருத்தை மிகவும் வலியுறுத்தினார். உரோமை ஆயர்தான் ஆயர்கள் அனைவருக்கும் தலைவர் என்று அவர் தெளிவாகக் கூறினார். இதற்கு முன் உரோமை ஆயர்கள் தங்கள் அதிகாரத்தை இவ்வளவு ஊக்கத்தோடு எடுத்துரைக்கவில்லை.
உரோமை முற்றுகையிடப்படல்
முதலாம் இன்னசெண்டின் ஆட்சியின் நடுக்காலத்தில் விசிகோத்து இனத் தலைவன் அலாரிக் உரோமையை முற்றுகையிட்டார். இதனால் நகர் முழுவதும் பட்டினியால் வாடிற்று. ஓர் அமைதி ஒப்பந்தத்திற்கு ஏற்பாடு செய்வதற்காக இன்னசெண்ட் 410இல் ரவேன்னா நகரில் பேரரசன் ஹோனோரியசைப் பார்க்கச் சென்றார். ஒப்பந்தம் ஏற்படவில்லை. அப்போது, அலாரிக் 410 ஆகத்து 24ஆம் நாள் உரோமையைத் தாக்கிச் சூறையாடினார்.
இதன் காரணமாக, இன்னசெண்ட் 412இல் தான் உரோமை திரும்பினார்.
Remove ads
இறப்பும் திருவிழாவும்
திருத்தந்தை முதலாம் இன்னசெண்ட் 417, மார்ச் 12ஆம் நாள் இறந்தார். அவரது உடல் உரோமையில் துறைமுகச் சாலைக் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது.
முதலாம் இன்னசெண்டின் திருவிழா சூலை 28ஆம் நாள் கொண்டாடப்படுகிறது.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
External links
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads