மொந்தானியக் கொள்கை

From Wikipedia, the free encyclopedia

Remove ads

மொந்தானியக் கொள்கை (Montanism) என்பது கி.பி. 2ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கிறித்தவ சமயத்தோடு தொடர்புடையதாய் எழுந்து, மொந்தானுஸ் (Montanus) என்பவரால் பரப்பப்பட்ட கோட்பாட்டைக் குறிக்கிறது[1]. தொடக்கத்தில் அது "புதிய இறைவாக்கு இயக்கம்" (New Propecy) என்றும் அறியப்பட்டது. சிறு ஆசியாவில் ஃப்ரீஜியா பகுதியில் தோன்றிய இந்த இயக்கம் உரோமைப் பேரரசின் பல இடங்களுக்கும் பரவியது. கிறித்தவ சமயம் சட்டப்பூர்வமாக ஏற்கப்படுவதற்கு முன்னரே தோன்றிவிட்ட இந்த இயக்கம் 6ஆம் நூற்றாண்டு வரை ஆங்காங்கே தழைத்தது.

மொந்தானியக் கொள்கை "தப்பறை" (heresy) என்று அழைக்கப்பட்டாலும் அது கிறித்தவத்தின் அடிப்படைகள் பலவற்றை மாற்றமுறாமல் ஏற்றது. அது ஓர் அருங்கொடை இயக்கம் போலத் தோன்றி, தூய ஆவியின் தூண்டுதலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தது.

Remove ads

வரலாறு

மொந்தானுஸ் இறைவாக்கு உரைக்கத் தொடங்கிய ஆண்டு கி.பி. 135 என்று சிலர் கருதுகின்றனர். வேறு சிலர் கி.பி. 177க்கு முன் அவர் இறைவாக்குப் பணியைத் தொடங்கவில்லை என்கின்றனர். கிறித்தவராக மாறுவதற்கு முன் மொந்தானுஸ் பண்டைய கிரேக்க சமயத்தில் ஒரு குருவாக இருந்திருக்கலாம். கடவுளின் ஆவி தம் வழியாகப் பேசியதாக மொந்தானுஸ் கூறினார்.

அவரோடு பிரிசில்லா (பிரிஸ்கா) என்றும் மாக்சிமில்லா என்றும் பெயர் கொண்ட இரு பெண்மணிகளும் தூய ஆவியின் தூண்டுதலால் இறைவாக்கு உரைத்ததாகக் கூறினர். மூவரும் ஆவியின் சக்தியால் உந்தப்பட்டு, செய்திகள் கூறினர்; இறைவேண்டல் செய்தனர். தம்மைப் பின்சென்றவர்களும் இறைவேண்டலிலும் தவம் செய்வதிலும் ஈடுபட்டால் தம்மைப் போல இறைவாக்கு வரம் பெறுவர் என்று மொந்தானுஸ் கூறினார்.

Remove ads

கிறித்தவம் கொடுத்த பதில்

மொந்தானியக் கொள்கை கிறித்தவத்தில் ஒரு பிளவை ஏற்படுத்தியது. மரபு வழிக் கொள்கையை ஏற்றவர்கள் மொந்தானுஸ் புதுக் கொள்கையைக் கொணர்கிறார் என்று கூறி அவரது கொள்கையை நிராகரித்தனர். ஆனால் கார்த்தேஜ் போன்ற இடங்களில் மொந்தானுசுக்கு ஆதரவு இருந்தது.

குறிப்பாக, தெர்த்தூல்லியன் என்னும் தொடக்க காலக் கிறித்தவ எழுத்தாளர் மொந்தானுஸ் கொள்கையை ஆதரித்தார்[2]. அவர் மொந்தானுசின் கொள்கையை முற்றிலும் தழுவினார் என்று கூற முடியாது. ஆனால் மொந்தானுஸ் ஓர் உண்மையான இறைவாக்கினர் என்றும், அவர் தவ முயற்சிகளில் ஈடுபட்டது பாரட்டத்தக்கது என்றும் தெர்த்தூல்லியன் கருதினார்.

Remove ads

மொந்தானியக் கொள்கையின் அம்சங்கள்

மொந்தானியக் கொள்கை பற்றிய தகவல்கள் பெரும்பாலும் அக்கொள்கையை எதிர்த்தவர்கள் வழியாகவே தெரிய வருவதால் அக்கொள்கையை ஏற்றவர்கள் எதை நம்பினார்கள் என்று துல்லியமாக வரையறுப்பது கடினம். மொந்தானியக் கொள்கை ஓர் இறைவாக்கு இயக்கமாக இருந்தது என்று தெரிகிறது. வெவ்வேறு இடங்களில் அது வெவ்வேறு கொள்கைகளைக் கொண்டிருந்ததாகவும் தெரிகிறது.

கிறித்தவ விவிலியத்தில் உள்ள யோவான் நற்செய்தியும் யோவானின் பிற படைப்புகளும் மொந்தானியக் கொள்கைக்கு அடிப்படையாக மொந்தானுசால் கொள்ளப்பட்டன. யோவான் நற்செய்தியில் இயேசு தம் சீடர்களை வழிநடத்த "துணையாளர்" (Paraclete) ஒருவரை அனுப்புவதாக வாக்களித்தார் (யோவான் 15:26-27). அவ்வாறு வாக்களிக்கப்பட்ட தூய ஆவியே தங்களை இறைவாக்கு உரைக்கத் தூண்டியதாக மொந்தானுசும் அவர்தன் உடனுழைப்பாளர்களும் கூறினார்கள். இறை ஆவியால் தூண்டப்பட்ட தங்களை அவ்வாறு தூண்டப்படாத பிறரிடமிருந்து மொந்தானியக் கொள்கையினர் வேறுபடுத்திப் பார்த்தனர். தாங்கள் "ஆன்மிக" மக்கள்; பிறர் "உடல்சார்" மக்கள் என்று அவர்கள் கருதினர்.

மொந்தானுசும் அவர்தம் துணையாளர்களும் இறைவாக்கு உரைத்தது கிறித்தவக் கொள்கையிலிருந்து பிறழ்ந்து சென்றது என்று செசாரியா யூசேபியஸ் கூறினார்[3]. திடீரென்று ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு மெய்ம்மறந்த நிலையில் பிதற்றுவதும் பொருளற்ற சொற்களை உரைப்பதுமாக மொந்தானுஸ் செயல்பட்டதாக யூசேபியஸ் கருதினார். அவர்கள் உண்மையிலேயே கடவுளின் ஆவியால் தூண்டப்படவில்லை, மாறாக, தீய ஆவியின் தாக்கத்தால்தான் பிதற்றினார்கள். என்வே, அவர்கள் போலி இறைவாக்கினர்கள் என்றார் யூசேபியஸ்.

ஏற்கெனவே கடவுள் வெளிப்படுத்திய உண்மைகளுக்கு அப்பால் மொந்தானுஸ் வழியாகக் கடவுள் உண்மைகளை அறிவித்ததாக அவர் கருதினார். தம்மைப் போல் இறைவாக்கு உரைப்போரும் பாவங்களை மன்னிக்கும் அதிகாரம் கொண்டுள்ளனர் என்று கூறினார். பெண்கள் குருக்களாகச் செயல்படலாம் என்று ஏற்றார். கடும் நோன்பு இருத்தல் தேவை என்றார். முதல் மனைவியோ கணவனோ இறந்துபோனால் மறுமணம் செய்யலாகாது என்றார்.

மொந்தானியர் தங்கள் முடிக்குச் சாயம் பூசினர்; இமைகளுக்கு மைதீட்டினர்; சூதாட்டத்தில் ஈடுபட்டனர்; வட்டிக்குக் கடன் கொடுத்தனர். இச்செயல்கள் மரபுத் திருச்சபைக்கு ஏற்புடையனவன்று.

நிசான் மாதத்தின் 14ஆம் நாள் இயேசுவின் உயிர்த்தெழுதல் விழா கொண்டாடும் பழக்கம் மொந்தானியரிடையே நிலவியது. எனவே அவர்களுக்குப் "பதினான்காம் நாள் வாதிகள்" (Quartodecimans) என்னும் பெயர் எழுந்தது. பெரும்பாலும் கிறித்தவ திருச்சபையில், குறிப்பாக உரோமையிலும் மேற்கு திருச்சபையிலும், இயேசுவின் உயிர்த்தெழுதல் விழா ஞாயிற்றுக் கிழமைதான் கொண்டாடப்பட்டது. நிசான் மாதத்தில் 14ஆம் நாளில் (அது ஞாயிறாக இருந்தால்), அதை அடுத்துவரும் ஞாயிறன்று அவ்விழாக் கொண்டாடப்படும்.

கீழைத் திருச்சபையில் நிசான் மாதம் 14ஆம் நாள் ஞாயிறாக இல்லாத ஆண்டுகளிலும் அந்த நாளிலேயே உயிர்த்தெழுதல் விழா கொண்டாடப்பட்டது. எனினும் கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் திருச்சபை முழுவதிலும் இப்பொருள் பற்றி ஒத்த கருத்து உருவாகி இருக்கவில்லை (காண்க: திருத்தந்தை அனிசேட்டஸ்.

Remove ads

ஆதாரங்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads