யசுர் வேதம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

யசுர் வேதம் (சமக்கிருதம் यजुर्वेदः yajurveda, yajus "வேள்வி" + veda "அறிவு" என்பவற்றின் சேர்க்கையில் உருவானது.) இந்துக்களினால் புனிதமாகக் கருதப்படும் நான்கு வேதங்களுள் ஒன்று. இவ்வேதம், பொது வழிபாடு, கிரியைகள், வேள்விகள் என்பவை பற்றியும் அவற்றை நிகழ்த்தும் முறைகள் பற்றியும் எடுத்துக் கூறுகின்றது. இது பொ.ஊ.மு. 1500 க்கும், 500 க்கும் இடையில் எழுத்து வடிவில் உருவாகியிருக்கலாம் எனக் கருதப்படுகின்றது.

Remove ads

பிரிவுகள்

யசுர் வேதம் இரண்டு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவை சுக்கில யசுர்வேதம், கிருஷ்ண யசுர்வேதம் எனப்படுகின்றன. இரண்டு பகுதிகளுமே கிரியைகளுக்கு வேண்டிய சுலோகங்களைத் தம்முள் கொண்டுள்ளன. கிருஷ்ண யசுர்வேதம், மேலதிகமாக உரைநடை விளக்கங்களையும், விரிவான அறிவுறுத்தல்களையும் தன்னுள் அடக்கியுள்ளது.

கிருஷ்ண யசுர்வேதம்

கிருஷ்ண யசுர்வேதத்துக்கு நான்கு உட்பிரிவுகள் (சாகைகள்) உள்ளன. அவை:

  • தைத்திரீய சம்ஹிதை
  • மைத்திராயனீ சம்ஹிதை
  • சரக-கதா சம்ஹிதை
  • கபிஸ்தல-கதா சம்ஹிதை

என்பனவாகும். இவற்றுள் பிரபலமானது தைத்திரீய சம்ஹிதை ஆகும். இது ஏழு காண்டங்களாகப் (பிரிவுகள்) பிரிக்கப்பட்டுள்ளது.[1]

மேற்படி உட்பிரிவுகள் ஒவ்வொன்றும், அவற்றுடன் இணைந்த ஒரு பிராமணத்தையும் (வேதவிளக்கம்) கொண்டுள்ளன. சில உட்பிரிவுகள், அவற்றுடன் இணைந்த சிரௌதசூத்திரங்கள், கிருஹ்யசூத்திரங்கள், ஆரண்யகங்கள், உபநிடதங்கள், பிரதிசாக்கியங்கள் என அழைக்கப்படும் துணை நூல்களையும் கொண்டு விளங்குகின்றன.

சுக்கில யசுர்வேதம்

சுக்கில யசுர்வேதம் முனிவர் ஸ்ரீ யோகீசுவர யாக்கியவல்கியரால் தோற்றுவிக்கப்பட்டது எனவும் இதை யாக்கியவல்கியர் சூரிய பகவானிடமிருந்து, அவர் சுற்றி வரும் வேகத்திலேயே சென்று நேரடியாகப் பெற்றார் எனவும் கூறப்படுகிறது. சுக்கில யசுர்வேதம் பதினைந்து சாகைகள் (உட்பிரிவு) கொண்டது எனவும்[2] தற்போது இரண்டு உட்பிரிவுகள் மட்டுமே உள்ளன எனவும் நம்பப்படுகிறது. அவை:

  • வஜசனேயி மாத்தியந்தினியம்
  • வஜசனேயி கான்வம்

என்பனவாகும். முன்னையது வட இந்தியாவிலும் குசராத்திலும் நாசிக்குக்கு வடக்கேயுள்ள மகாராட்டிரத்திலும் பிரபலமானது. பின்பற்றும் மக்கள்தொகையின் அடிப்படையில், இந்தியாவில் மிகப்பெரிய வேத மரபுகளுள் ஒன்றாகும். கான்வ சாகை (கான்வ உட்பிரிவு)நாசிக்குக்கு தெற்கேயுள்ள மகாராட்டிரம், ஒரிசா, தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா ,கேரளா ஆகிய மாநிலங்களில் பின்பற்றப்படுகின்றது. ஜகத்குரு என அழைக்கப்படும் ஆதி சங்கரர் கான்வ சாகையைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகின்றது. தமிழ்நாட்டிலுள்ள இந்தியாவின் மிகப்பெரிய இந்துக்கோயிலான ஸ்ரீரங்கம், ரங்கநாதசுவாமி கோயில் கிரியைகளும் இம்மரபின்படியே நடைபெறுவதாகக் கூறப்படுகின்றது.

மிகவும் சிறப்புப் பெற்ற உபநிடதங்களான ஈசாவாஸ்யம், பிருஹதாரணியம் ஆகியவை சுக்கில யசுர்வேதத்துக்கு உரியவை. பிருஹதாரணியமே எல்லா உபநிடதங்களிலும் பெரியது என்பதுடன் மிகவும் செம்மையானதும் அதுவே என்று கூறப்படுகின்றது.

பிராமணம்

மாத்தியந்தினியம், கான்வம் இரண்டு உட்பிரிவுகளிலுமே சதபத பிராமணம் என்ற வேத யாகத்தொகுப்பு உள்ளது.

Remove ads

வெளியிணைப்புகள்

உசாத்துணைகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads