யாமம் (புதினம்)

From Wikipedia, the free encyclopedia

யாமம் (புதினம்)
Remove ads

யாமம், எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய நான்காவது தமிழ் நாவல். இந்நாவல் பதினெட்டாம் நூற்றாண்டில் இருந்த சென்னை நகரத்தை பின்புலமாக கொண்டு அமைந்துள்ளது . இந்தக் காலகட்டத்தில் இங்கே வாழ்ந்த ஒரு முஸ்லீம் வணிகர், யாமம் என்ற பெயரில் ஒரு வாசனை திரவியத்தை உருவாக்கி விற்பனைசெய்கிறார். இது பல்வேறு மனிதர்களின் வாழ்க்கையை எப்படி பாதிக்கிறது என்பதே இந்நாவல். இந்நாவலில் யாமம் என்பது காமம் என்ற அடிப்படை இச்சையின் குறியீடு. ஒவ்வொரு கதாபாத்திரத்தின் வாழ்க்கையிலும் யாமம் ஒவ்வொரு வகையில் பாதிப்புச் செலுத்துகிறது

விரைவான உண்மைகள் நூலாசிரியர், நாடு ...
Remove ads

கதைச் சுருக்கம்

அத்தர் என்ற அற்புதப் பொருளைப்பற்றிய ஒரு புனைகதை இந்த நாவல். அத்தர் தயாரிக்கும் கலையை ஒரு சூ·பி ஞானியிடமிருந்து வரமாகப் பெற்ற இஸ்லாமியக் குடும்பம் ஒன்றின் கதையாக இது ஆரம்பமாகிறது. அந்த அத்தரின் பெயர் யாமம். மதராஸ் பட்டினம் அமீர் சாகிப் தெருவில் அத்தர் வணிகம் செய்துவந்த அப்துல் கரீமின் கனவில் அல் அசர் முஸாபர் என்ற ·பக்கீர் சொன்ன ஆரூடத்திலிருந்து தொடங்குகிறது இந்நாவல். இரவை ஒரு சுகந்தமென உருவாக்கும் கலை அவன் குடும்பத்திற்கு சித்தியாகிறது. அந்த சுகந்தத்தால் ஆட்கொள்ளப்படும் பலவகை மனிதர்களைப் பற்றிய தனிக்கதைச்சரடுகள் பின்னி உருவாகின்றது நாவல்.

செல்வத்தில் கொழிக்கிறார் அத்தர் வணிகரான கரீம். அவர் பாரம்பரியமாக தயாரிக்கும் ‘யாமம்’ என்ற நறுமணத் தைலத்தை உயர்குடியினரும் பிறரும் விரும்பி வாங்கிப் பூசிக் கொள்கிறார்கள். உடலில் பூக்கள் மலர்வதுபோல காமத்தை அரும்பச் செய்யும் அத்தராகிய யாமத்தை அவர் மனைவியருக்கு அறிமுகம் செய்கிறார். புதுப்பெண் ஒருத்தியை மணந்து கொள்கிறார் கரீம். ஆனால் மெல்ல அவரது வாழ்க்கை சிதைகிறது. ‘எப்படியோ’ அவருக்குக் குதிரைச் சூதாட்ட மோகம் பற்றிக் கொள்கிறது. சொத்துக்கள் அழிய அவர் நாடோடியாக மறைய அரசிகளாக வாழ்ந்த அவரது மனைவியர் தெருவில் மீன் விற்கும் நிலைக்கு ஆளாகிறார்கள்

இந்நாவலின் இன்னொரு கதை பத்ரகிரியுடையது. அவன் மனைவி விசாலா. குரூரமான தந்தையால் புறக்கணிக்கப்பட்டு அணுவணுவாகச் செத்த அன்னையின் நினைவோடு சித்தியுடன் சென்று வாழ்ந்த இளமைப்பருவம் கொண்டவன் அவன். அப்போது அவனது தம்பிக்கு நான்குமாதம். தம்பிக்கும் பத்ரகிரிக்குமான உறவு நுட்பமான சிக்கலுடன் சொல்லப்பட்டிருக்கிறது. கைக்குழந்தையாக அவனை பத்ரகிரியின் மடியில் சித்தி போடும்போது அழும் குழந்தையை இறக்கிவிட்டுவிட்டு வெளியே சென்றவன் பத்ரகிரி. ஆனால் மெல்லத் தம்பிக்குத் தந்தையின் இடத்தில் அவன் வந்து சேர்கிறான்.

சிறுவயதிலேயே நட்சத்திரங்களை காணும் மோகம் கொண்டிருந்த பத்ரகிரி லாம்டனின் முதல் நிலஅளவைக் குழுவில் பணியாற்றுகிறான். பத்ரகிரியின் தம்பி திருச்சிற்றம்பலம் படிப்பாளி. அவன் தன் இளம் மனைவி தையல்நாயகியை விட்டுவிட்டு லண்டனுக்குப் படிக்கச் செல்கிறான். தையல்நாயகி கணவனின் நல்ல தோழியாக இருந்தும்கூட ‘எப்படியோ’ பத்ரகிரிக்கும் அவளுக்கும் உறவு உருவாகிறது. திரும்பிவரும் திருச்சிற்றம்பலம் காண்பது காம உறவுகளால் சிதைந்துப்போன குடும்பத்தையும் உடைந்த மனிதர்களையும் மட்டுமே. வழக்குகள் மூலம் மொத்த சொத்துக்களையும் இழந்து பஞ்சையாக ஆகும் கிருஷ்ணப்ப கரையாளர் தன் விருப்பத்திற்குரிய முதிய தாசி எலிசபெத்துடன் தன் கடைசிச் சொத்தான மலை ஏறிச் செல்கிறார். காட்டில் எலிசபெத்தின் நோய் மறைகிறது. காமத்தில் தொடங்கி ஒவ்வொன்றும் ‘எப்படியோ’ புதிதாக தளிர்விட்டு விடுகிறது.

சதாசிவப்பண்டாரத்தை இட்டுச்செல்லும் நீலகண்டம் என்ற நாய் போல மனிதர்களை அறியாத திசைகளுக்கு அவர்களுடைய உள்ளுணர்வுகள் இட்டுச்செல்கின்றன. அர்த்தமில்லாத ஒரு ஆட்டக்களத்தில் புதிரான அகக் காரணங்களுக்காக அலையும் காய்கள் போல இருக்கின்றனர் இம்மனிதர்கள். காமம் போலவே கசப்புக்கும் விளக்கம் இல்லை. அனைத்தையும் பணயம் வைத்து பத்ரகிரியுடன் கூடும் தையல்நாயகிக்கு விரைவிலேயே அவன் மீது கடும் துவேஷம் உருவாகிவிடுகிறது. ஆம், ‘எப்படியோ’தான்.

இவ்வாறு பலதிக்குகளில் விரியும் கதைகளில் மர்மமாக நிகழும் ‘எப்படியோ’க்களில் எல்லாமே அந்த நறுமணம் ஒரு நுண்ணிய பங்கை வகிக்கிறது என்பதே இந்நாவலின் மையச் சரடாகும். அதாவது தன் சுய இயல்புகளால் வழிநடத்தப்படாத மனிதர்களின் கதை இது. ஒவ்வொருவரும் இயல்பாக அவர்கள் எதைச் செய்வார்களோ அதற்கு நேர் மாறான ஒன்றை மிக ஆழத்திலிருந்து எழும் ஒன்றின் மூலம் தூண்டப்பட்டு செய்கிறார்கள். மனிதர்களை அலைக்கழிக்கும் , ஆட்கொள்ளும், வழிநடத்தும், வெறுக்கவும் விரும்பவும் வைக்கும் அறிய முடியாமையைப்பற்றிய நாவல் ‘யாமம்’.

ஒரே வரியில் இந்நாவலை விளக்கவேண்டுமென்றால் தங்கள் ஆளுமையின் இரவுகளால் அலைக்கழிக்கபப்ட்ட ஆளுமைகளின் கதை இது.

Remove ads

சிறப்பு

யாமம் என்றால் இரவு. ‘பிரபஞ்சம் என்ற பசுவின் அகிடில் இருந்து சொட்டும் துளிகளே இரவுகள்’ என்பது ஒரு சூ·பி அறிஞரின் வாக்கு. பகல் எளியது நேரடியானது. இரவு எட்டமுடியாத ஆழம் கொண்டது. ஒவ்வொரு உயிரும் தன்னை புதிதாகக் கண்டடையச் செய்யும் வெளி அது. பகல் நமது அறிந்த தளங்களின் பின்னல். இரவு நாம் அறியாத நம் ஆழங்களின் பெருவலை.இந்நாவலின் முகப்பில் பலவகையான சொற்களின் வழியாக இரவை ஒரு கவியுருவகமாக ஆக்க நாவலாசிரியர் முனைகிறார். அந்த மைய உருவகத்தின் சரடில் இந்நாவல் கோக்கப்பட்டுள்ளது. இரவை நாம் ஒரு பெரும்படிமமாக வளர்த்துக் கொண்டோமென்றால் இந்நாவல் அதன் உட்குறிப்புத்தளத்துக்கு நம்மை எளிதில் எடுத்துச் செல்லும். அவ்விரவில் தூங்கும் மிருகங்களைத் துயிலுணர்த்தும் அழைப்பாக இருக்கிறது ‘யாமம்’

மிக விரிவான தகவல் சார்ந்த ஆராய்ச்சிக்குப்பின் எழுதப்பட்ட ஆக்கம் இது. நுண்ணிய சித்தரிப்புகள் ஒரு நவீன வரலாற்று நாவலுக்குரிய தகுதியை இதற்கு அளிக்கின்றன. ஒன்றுடன் ஒன்று நேரடித் தொடர்பில்லாது ஒன்றை ஒன்று தீர்மானித்தபடி பின்னிச் செல்லும் வாழ்க்கையின் வலையைக் காட்டுவது ஆசிரியரின் நோக்கம். நானூறு வருடங்களுக்கு முன்பு லண்டன் கூடிய வணிகர்கள் சிலர் குறுமிளகு வணிகத்தின் பொருட்டு ஒரு வணிக நிறுவனத்தை உருவாக்க திட்டமிடும் இடத்தில் நாவல் தொடங்குகிறது. அவர்கள் ஷாஜஹான் அரசவைக்கு வருகிறார்கள். விதை ஊன்றப்படுகிறது. அது முளைத்தெழும்போது சர்.ஃபிரான்ஸிஸ் டே கடலருகே இருந்த அரை சதுப்புநிலம் விலைக்கு வாங்கப்பட்டு கோட்டை கட்டப்படுகிறது. அதைச்சூழ்ந்து மதராஸ் பட்டினம் என்ற கடற்பாக்கம் படிப்படியாக உருவாகி வருகிறது.

அதைத்தான் நாவல் மனித அகத்தின் இரவு என்கிறது.”யாவரின் சுகதுக்கங்களும் அறிந்த இரவு ஒரு ரகசிய நதியைப்போல முடிவற்று எல்லா பக்கங்களிலும் ஓடிக்கொண்டே இருந்தது .அதன் சுகந்தம் எப்போதும்போல உலகமெங்கும் நிரம்பியிருந்தது” என முடிகிறது இந்நாவல்.

Remove ads

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads