ராஜா தேசிங்கு (1936 திரைப்படம்)

From Wikipedia, the free encyclopedia

Remove ads

ராஜா தேசிங்கு 1936 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ராஜா சந்திரசேகர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. கே. சுந்தரப்பர், வி. எஸ். மணி மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1] இப்படம் வரலாற்று வீரர் தேசிங்கு ராஜாவை பற்றியது. இதே கதையினை ஒட்டி 1960-ஆம் ஆண்டும் இதே தலைப்பில் "ராஜா தேசிங்கு" என்ற படம் வெளியாயிற்று.

விரைவான உண்மைகள் ராஜா தேசிங்கு, இயக்கம் ...

இத்திரைப்படத்தில் ருக்மிணி தேவி அருண்டேல் நடனம் ஆடியுள்ளார்.[2]

Remove ads

கதைச் சுருக்கம்

செஞ்சி இளவரசன் தேசிங்கு தன் நண்பன் மகமத்கானோடு ஒருநாள் வேட்டையாடிய பின் அரண்மனை திரும்புகிறான். அரண்மனையின் ஒருபுரத்தில் அழுகுரல் கேட்கிறது. தேசிங்கு ஆச்சரியத்தோடு அப்பக்கம் செல்ல, அங்கு தன் தாய், தன் தந்தையின் படத்திற்கு முன்நின்று வருத்தப்படுவதைக் கண்டு அதன் காரணத்தைக் கேட்கிறான். ரமாபாய் முதலில் சொல்ல மறுத்து, பின் வற்புறுத்தலின்மேல், தரணிசிங், பாதுஷாவின் குதிரையை அடக்கச் சென்று தோல்வியுற்று அதனல் 16-வருஷம் சிறைவாசம் செய்வதை வருத்தத்துடன் தெரிவிக்கிறாள். தேசிங்கு குதிரையை தான் அடக்கி தந்தையை மீட்டு வருவதாக உரைத்து தன் நண்பன் மகமத்கானோடு தில்லிக்கு புறப்படுகிறான். தில்லியில் பாதுஷாவிடம் உத்திரவு பெற்று தன் தந்தையின் ஆசீர்வாதத்தையும் அடைந்து, தேசிங்கு குதிரை ஏறுவதற்கு நாள் குறிப்பிடப்படுகின்றது. தரணிசிங்கும், மைந்தன் தேசிங்கும், தேவியைத் தரிசிக்க பவானி கோவிலுக்குச் செல்கின்றனர். தில்லி பாதுஷாவின் தளகர்த்தர் பீம்சிங்கின் புதல்வி பத்மினி, தன் தோழிகளோடு அதே ஆலயத்திற்கு வர, தேசிங்கும் பத்மினியும் சந்திக்கின்றனர். இருவருள்ளத்திலும் ஓர் உணர்ச்சி எழுகின்றது.

மறுநாள் தேசிங்கு பந்தயச்சாலையில் அக்குதிரையை அடக்க அதன்மீது தாவி ஏறுகிறான். பிறந்தது முதல் யாரையும் சுமந்தறியாத அக்குதிரை வெறிகொண்டு தேசிங்கை கீழே தள்ள முயன்று முடியாமல் ஆகாயத்தில் பறக்கிறது. அதைக் கண்டு தேசிங்கு தங்கள் குல தெய்வமான ரங்கனாதரை வேண்ட அவரின் அருளினால் குதிரையின் பலம் ஒடுங்க தேசிங்கு வெற்றி யடைகிறான். தில்லி பாதுஷா ஷா ஆலம் அவனைப்புகழ்ந்து 'ராஜா' என்ற பட்டமும் அளித்து போற்றுகிறான். அப்போது பீம்சிங் தன் புதல்வி பத்மினியை தேசிங்குக்கு மணம் செய்வதாகக் கூற, அனைவரும் சம்மதித்து திருமணம் நடந்தேறுகிறது.

வெற்றிக் கொடியுடன் தந்தை தரணிசிங்குடனும் மனைவி பத்மினியோடும் தேசிங்கு செஞ்சிக் கோட்டைக்கு வந்து சில காலம் சுகமே வாழ்கிறான். பின்னர் தரணிசிங் நோய்வாய்ப் பட்டு மரணமடைய அவர் மனைவி ரமாபாயும் உடன்கட்டை யேறுகிறார். பத்மினிக்கு 2-வருடகாலம பலன் சரியாக இல்லாததால் தேசிங்கு அவளைச் சந்திக்கக் கூடாதென்று சோதிடர்கள் கூறுகின்றனர். தேசிங்கும் பத்மினியும் அவசியமான சமயத்தில் நடுவில் திரையிட்டு பேசி வருகின்றனர்.

ஷா ஆலத்திற்கு பின் தில்லியை அரசு புரிந்துவரும் பரக்ஸியரின் பிரதிநிதியான ஆர்காட் நவாப் ஸைதுல்லாகான் செஞ்சியைக் கப்பம் கேட்க, வீரன் தேசிங்கு கொடுக்க மறுத்ததினால் இருவருக்கும் போர் ஆரம்பமாகிறது. வழுதாவூருக்கு தன் திருமணத்திற்காகச் சென்றிருந்த தன் நண்பனும் தளகர்த்தனுமான மகமத்கானுக்கு செய்தி அனுப்பிவிட்டு போரில் வெற்றியளிக்கும்படி தன் குல தெய்வமான ரங்கதரைத் தொழுகிறான். போரில் வெற்றி கிடைக்காதென்று தேசிங்குக்கு உணர்த்த கோவிலில், சில துர்ச்சகுனங்கள் நேருகின்றன. அவையாவையும் பொருட்படுத்தாது தேசத்தின் இலட்சியமே முக்கியமென போருக்கு புறப்படுகிறான். வழுதாவூரில் திருமணக் கோலத்துடனிருந்த மகமத்கான், தேசிங்கின் நிரூபம் கண்டு பெற்றோரும், உற்றாரும் எவ்வளவோ சொல்லியும் கேளாது, கலியாணத்தை விட்டு கடும்போரை விரும்பி வருகிறான். தேசிங்கு சேனைகளைச் சித்தம் செய்து, அந்தப்புரம் சென்று திறைமரைவிலிருந்து பத்மினியிடம் போர்க்களம் செல்ல விடை கேட்க, அவள் தன் பதியை நேரில் பார்க்க முடியாததற்கு வருந்தி கரங்களையாவது காட்டும்படி வேண்டுகிறாள். உடைவாளால் திரையைக் கிழித்து தேசிங்கு தன் கரத்தை நீட்ட, பத்மினி அவைகளை தன் கண்களில் ஒற்றிக் கொள்கிறாள். தேசிங்கு அவளுக்கு சமாதானம் கூறி போருக்குப் புறப்படுகிறான்.

யுத்தம் ஆரம்பமாகிறது. மகமத்கான், தேசிங்கிடம் முதற் சண்டையை தனக்கு தரவேண்டுமென்று வேண்ட, தேசிங்கு தானும் உடன்வருவதாகச் சொல்லியும் கேளாததால், அவ்வாறே போர்முனைக்குச் செல்ல அனுமதி யளிக்கிறான். போரில் மகமத்கான் நவாபின் சேனைகளை முறியடித்து வெற்றியுடன் திரும்பும் சமயம், பிணங்களோடு பிணமாய் மறைந்திருந்த நவாபின் சேனாதிபதி தாவுத்கான் பின்புறமிருந்து மகமத்கானை துப்பாக்கியினால் சுட்டுக் கொன்று விடுகிறான். இச்செய்தியை அறிந்த தேசிங்கு அடங்கா கோபம் கொண்டு போர்முனை சென்று எதிரியின் சேனைகளை சின்னா பின்னமாக்கி, தாவுத்கானையும் கொன்று பழிக்குப்பழி வாங்குகிறான். போரில் தேசிங்கு வெற்றி அடைகிறான். ஆனால் தேசிங்கிற்கு வாழ்க்கையில் வெறுப்பு உண்டாகிறது. தன் ஆருயிர் நண்பன் மகமத்கானை அடக்கம் செய்துள்ள இடத்திற்கு செல்கிறான். அவனுடைய நட்பையும், வீரத்தையும், தீரத்தையும், நினைந்து வருந்துகிறான். நாடு, நாயகி அனைத்தையும் வெறுத்து தன் நண்பனோடு தானும் உயிர் விடத் துணிகிறான். கடவுளைத் துதித்து தன் வெற்றிவாளை மேலே வீசி தன் மார்பில் தாங்கி மாள்கிறான். தேசிங்கின் தெய்வக் குதிரை பஞ்சகல்யாணி, செஞ்சி அரண்மனைக்குச் சென்று, பத்மினியிடம் அப்பரிதாபச் செய்தியை குறிப்பாகத் தெரிவிக்கிறது. விவரமுணர்ந்த பத்தினி பத்மினி, தன் நாதன் உயிர் விட்ட இடம் நாடி ஓடி வந்து, அவன்மீது விழுந்து தானும் ஆவி துறக்கிறாள்.

வீரத்யாக மணிகளை தேவர்கள் வாழ்த்துகிறார்கள்.

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads