வடுக மகாராசா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சிறீ வடுக மகாராசா அல்லது சங் ரது செய தேவதா என்றும், பொதுவாக சிலிவாங்ஙி என்றும் அறியப்படுபவன், மேற்கு சாவகத்திலிருந்த சுண்டா அரசை, 1482 முதல் 1521 வரை ஆண்ட மன்னன் ஆவான். இவன் காலத்திலேயே, சுண்டா அரசு பெரும்புகழ் வாய்க்கப்பெற்றது.

பெயர்

வடுக மகாராசா
"சிறி வடுக மகாராசா ரது கயி டி பகவான் பயயாரன் சிறி சங் ரது தேவதா" என்ற வடுகராசனின் முழுப்பெயர், "தேவரும் போற்றும் பகவான் பயயாரன் மகாராச மன்னன்" எனப் பொருள்கொள்ளக் கூடியது. சிலர் இவனைக் குறிக்கும் சரியான பெயர் "பாதுகா மகாராசா" என்பதே என்றும், சாமானியர்கள் மன்னன் பெயர்சொல்லி அழைக்கும் வழக்கம் இருந்ததில்லை என்பதால், அவன் காலணிகளை (பாதுகை) வைத்தே மரியாதையுடன் அழைக்கப்பட்டான் என்பர். இவர்கள், இவனது உண்மையான பெயர் என்று "சங் ரது செய தேவதா" எனும் பெயரைச் சுட்டிக்காட்டுகின்றனர்.
சிலிவாங்ஙி
பெரும்பாலும் வடுகராசன், சிலிவாங்ஙி என்ற பெயரிலேயே அறியப்படுகின்றான். இது "வாங்ஙியின் வழித்தோன்றல்" எனப் பொருளுறும் சுண்டா மொழிச் சொல்லாகும். "கிடுங் சுண்டா", "சரிதா பரகியங்ஙான்" எனும் நூல்கள், மயாபாகித்தில் புபாத் படுகொலையில் மரித்த "பிரபு மகாராச லிங்காபுவன" மன்னனே வாங்ஙி என அடையாளம் காட்டுகின்றன. நாட்டின் தன்மானத்தை விட்டுக்கொடுக்காது, மயாபாகித்தில் மரித்த இலிங்கபுவனன் "வாங்ஙி" (மணங்கமழ்நன்) என்று சுண்டா மக்களால் போற்றப்பட்டதுடன், அவனது வழித்தோன்றல்களும் "சிலிவாங்ஙி" என்ற சிறப்புப்பெயரால் குறிப்பிடப்பட்டனர்.
Remove ads
வரலாறு
பதுதுலிசுக் கல்வெட்டில், "சிறி வடுக மகாராசா ரது கயி டி பகவான் பயயாரன் சிறி சங் ரது தேவதா" என்ற பெயரில், அவனது ஆட்சிக்குறிப்பைக் காணமுடிகின்றது. வடுக மகாராசா மறைந்தபின், அவனது நினைவேந்தலின் போது, அவனை அடுத்து ஆண்ட அவன் மகன் சூரவிசேசனால், இக்கல்வெட்டு 1553இல் அமைக்கப்பட்டது.[1] ராகியாங் நிசுகலனின் மகன் என்றும், ராகியாங் நிசுகால வாஸ்து காஞ்சனாவின் பேரன் என்றும் சுட்டப்படும், வடுகன், சுண்டனிய மக்களின் தலைசிறந்த வீரனாகச் சித்தரிக்கப்படுவதுடன், "பந்நுன் சுண்டா" முதலான வாய்மொழிக் கதைகளிலும், பல சுண்டா நாட்டுப்புறக் கதைகளிலும் வீரதீரக் கதை புரியும் நாயகனாக வலம் வருகின்றான்.
ஒரு கதையின் படி, பிரபு அங்காளரங்கனின் மகனான ரது செயதேவதா, கலு அரசின் இளவரசன். இளவயதில் நிகரற்ற பேரழகனாக விளங்கிய அவன் "ராடென் பாமனா ராசா" (காதற்கணை தொடுப்போன்) என்றே செல்லமாக அழைக்கப்பட்டான். வில், வாள், நடனம், இசை முதலிய ஆயகலைகளிலெல்லாம், வடுகராசன் சிறந்துவிளங்கியதை மரபுரைகள் சொல்கின்றன.
அங்காளரங்கனைக் கொன்று, வஞ்சகமாக நாட்டைப் பிடித்துக் கொண்ட கலகக்காரன் ஒருவன், இளவரசன் செயதேவதாவிற்கும் நஞ்சூட்டி, மாந்திரீகம் மூலம் அவனைப் புத்தி பேதலிக்கச் செய்தான். பிரக்ஞையிழந்தவனாய் ஊரூராய்ச் சுற்றி வாடிய செயதேவதா, சிண்டாங்காசி நகரின் தலைவர் மகள், நியாய் அம்பேற்காசியின் அன்புக்குப் பாத்திரமாகி, மெல்ல மெல்லக் குணமடைகின்றான். பின் அவளையே மணந்துகொள்ளும் செயதேவதா, அவ்வூர் மக்களின் துணையைப் பெற்று, தனக்குரிய மணிமகுடத்தை மீண்டும் வென்றுகொள்கின்றான்.
Remove ads
ஆட்சி
சுண்டா மற்றும் கலு அரசுகள் இணைந்த பெருநிலப்பரப்புக்கு, சிலிவாங்ஙி மன்னனாகின்றான். "கவாலி கலு"விலிருந்த தலைநகரையும், "பகவான் பயயாரன்" நகருக்கு மாற்றிக் கொள்கின்றான். விவசாயம், காடுகளின் பராமரிப்பு, சுவர் மற்றும் அகழி பராமரிப்பு, அரங்குகள், அணைகள் கட்டியமை முதலான இவனது பல பொதுச்சேவைகள், பதுதுலிசுக் கல்வெட்டிலும், பல கிராமிய இலக்கியங்களிலும் புகழப்படுகின்றன. இவனால் அமைக்கப்பட்ட "சங்யாங் தளகா ரேனா மகாவிசயா" எனும் நீரேரி, நீர்ப்பாசனத்துக்கும், அவனது தலைநகரின் பேரழகுக்கும் காரணகர்த்தாவாக இலங்கிவந்தது. தன் அரண்மனைக்கு "புந்தா பீம சிறி நாராயண சூராதிபதி மதுரா" எனப் பெயர் சூட்டியிருந்த மன்னன், தன் ஆட்சிக்காலத்தில் நீதிதவறா ஆட்சி புரிந்து வந்தான்.
குடும்பம்
அம்பேற்காசி தவிர, "முவாரா யாதி" (இன்றைய சிரேபொன்) நகரின் துறைமுகத் தலைவர் "கீ கெடெங் தபா"வின் மகளான நியாய் சுபாங்கி லராங்கி, கலு வம்சத்து இளவரசி நியாய் சந்திரிங்கி மாணிக்கமயாங்கி, சீன இசுலாமிய செல்வந்த வணிகரான "கீ டம்பு அவாங்கின்" மகள் நியாய் அசிபுத்தி முதலான பல தேவியரைக் கொண்டிருந்தான் சிலிவாங்ஙி.
அரசி அம்பேற்காசிக்குக் குழந்தை பிறக்கவில்லை. நியாய் சந்திரிங்ஙி மாணிக்கமயாங்ஙியின் மகனான "பிரபு சூரவிசேச ஜயபெருங்கோசன்" அல்லது, ரது சங்யாங்" என்பவனே முடிக்குரிய இளவரசன் ஆனான். சிலிவாங்ஙியின் அரசியரில் ஒருத்தியான நியாய் சுபாங்கி லராங்ஙி இசுலாமியப் பெண்மணியாகவே விளங்கியதுடன், இளவரசன் வலங்சுங்சங், இளவரசி ராரா சந்தாங்கி, இளவரசன் கியான் சந்தாங்கன் ஆகியோரைப் பெற்றெடுத்தாள். வலங்சுங்சங், "சக்கரபுவனன்" என்ற பெயரில், பின்னாளில் சிரேபொன் சுல்தானகத்தை நிறுவினான். இளவரசி ராரா சந்தாங்கி, எகிப்திய முசுலிம் இளாவரசரொருவனை மணந்துகொண்டதுடன், 'சயாரிஃபா முடெய்ம்" என்று தன் பெயரையும் மாற்றிக்கொண்டாள். கியான் சந்தாங்கன், மேற்கு சாவகத்தின் புகழ்பெற்ற உலமாக்களில் ஒருவனாக பின்னாளில் வளர்ந்தான். அரச வமிசத்தவர் இசுலாமைத் தழுவிக்கொண்டமை, சுண்டா அரசும், மெல்ல மெல்லத் தன் பாரம்பரிய இந்து மரபை விடுத்து, இசுலாமிய மரபுக்கு வரவேற்பளித்ததற்குச் சான்றாகின்றது.
Remove ads
சிலிவாங்ஙியின் செவிவழிக் கதைகள்

சுண்டா நாட்டுப்புறக் கதைகளில் வருகின்ற சிலிவாங்ஙி, வடுக மகாராசனின் பௌராணிக உருவகமே எனக் கருதப்படுகின்றான். அவன் இசுலாமைத் தழுவ மறுத்ததும், இசுலாமியப் படையெடுப்புகளை எதிர்க்கத் தயங்கியதும் அக்கதைகளில் சொல்லப்படுகின்றது சிரேபொன் சுல்தானகத்தை ஆண்ட சக்கரபுவனன் அவனது சொந்தக்குருதி என்பதும் இதற்கோர் காரணமாகலாம். தன் மக்களில், மரபுகளைக் கைவிட மறுத்தோரை மட்டும் அழைத்துக்கொண்டு, சலாக் மலைச்சாரலுக்கு மன்னன் இடம்பெயர்ந்ததாகவும், அங்கு அவன், சுண்டனியரின் புனித மிருகமான தொன்மப்புலியாக மாறி மறைந்ததாகவும் அவை மேலும் கூறுகின்றன. போகோரில் உள்ள பாலி இந்து ஆலயமான "பராக்கியங்ஙன் அகுங் யகத்கர்த்தா"வில் அவனுக்கோர் சன்னதி அமைத்து, பாலி மக்கள் வழிபட்டு வருகின்றார்கள்.
Remove ads
மேலும் பார்க்க
- சுண்டா அரசு
அடிக்குறிப்புகள்
உசாத்துணைகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads