வலுவளவு ஓட்டு இலத்திரன் சோடிகளின் தள்ளுகைக் கொள்கை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
வலுவளவு ஓட்டு இலத்திரன் சோடிகளின் தள்ளுகைக் கொள்கை (Valence shell electron pair repulsion theory- VSEPR theory) என்பது இரசாயனவியலில் மூலக்கூறுகளின் வடிவத்தை- மூலக்கூறுகளில் அணுக்கள் இருக்கும் இடங்களை விபரிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு கொள்கை ஆகும். மூலக்கூறின் மத்திய அணுவைச் சூழவுள்ள இலத்திரன் சோடிகளின் எண்ணிக்கையைக் கொண்டு அம்மூலக்கூற்றின் வடிவம் இக்கொள்கையைப் பயன்படுத்தித் துணியப்படுகின்றது. இலத்திரன்கள் மறையேற்றமுள்ள துணிக்கைகளாகும். ஒரு இலத்திரன் ஒழுக்கில் ஆகக்கூடியதாக இரு இலத்திரன்கள் காணப்படலாம். இவ்விலத்திரன் ஒழுக்குகள் நிலைமின்னியல் தள்ளுகை விசை காரணமாக ஒன்றிலொன்று விலகிச் செல்லப் பார்க்கும். இவ்வாறு இவ்வொழுக்குகள் இயன்றளவுக்கு ஒன்றிலிருந்தொன்று அதிக தூரத்தில் இருக்கும் என இக்கொள்கை விபரிக்கின்றது. இவ்வாறு இடத்தை மாற்றிக்கொள்வதன் மூலம் மைய அணுவைச் சூழவுள்ள இலத்திரன் ஒழுக்குகள் நிலைமின்னியல் தள்ளுகை விசையைக் குறைத்து மூலக்கூற்றின் உறுதித்தன்மையை அதிகரிக்கின்றன. (மூலக்கூற்றின் சக்தி குறைவாயின் உறுதித்தன்மை/ நிலைப்புத்தன்மை அதிகமாகும்). அனேகமான மூலக்கூறுகளின் கட்டமைப்பை விளக்குவதில் VSEPR கொள்கையைப் பயன்படுத்த முடிவதுடன், மிகத்துல்லியமான விடையும் கிடைக்கப்பெறும். எனினும் சில மூலக்கூறுகள் VSEPR கொள்கை மூலம் ஊகிக்கப்படும் வடிவத்திலிருந்து முற்றிலும் வேறுபடுகின்றன. எனவே இது கொள்கையாகவே இருப்பதுடன் விதியாக அங்கீகரிக்கப்படவில்லை.
Remove ads
விளக்கம்

இலத்திரன் ஒழுக்குகளிடையே உள்ள நிலை மின்னியல் தள்ளுகை விசையை அடிப்படையாகக் கொண்டே இக்கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. கொள்கையைப் பயன்படுத்தி மூலக்கூற்றுக் கட்டமைப்பை ஊகிக்க முதலில் மூலக்கூற்றின் லூவிஸ் கட்டமைப்பை வரைந்து மத்திய அணுவைச் சூழவுள்ள மொத்த இலத்திரன் சோடிகளின் எண்ணிக்கையைத் (பிணைப்பிலத்திரன் சோடி+ தனியிலத்திரன் சோடி) கண்டறிய வேண்டும். உதாரணமாக இங்கு காட்டப்பட்டுள்ள நீரின் லூவிஸ் கட்டமைப்பில் மைய அணுவான ஆக்சிசனைச் சூழ இரண்டு பிணைப்பிலத்திரன் சோடிகளும், இரண்டு தனியிலத்திரன் சோடிகளும் உள்ளன. மொத்தமாக இருக்கும் 4 சோடி இலத்திரன்களும் ஒன்றை ஒன்று தள்ளுவதால் இவை நான்கும் இயலுமானளவு அதிக தூரத்தில்- நான்முகியின் உச்சிகளிலுள்ளதைப் போன்ற வடிவத்தைப் பெறுகின்றன. இந்நான்கு இலத்திரன் சோடிகளில் இரண்டு தனியிலத்திரன் சோடிகளென்பதால் மூலக்கூறு ஆங்கில எழுத்தான 'V' இன் வடிவத்தைப் பெறுகின்றது. எனவே VSEPR கொள்கையைப் பயன்படுத்தி நீர் மூலக்கூறு நேரிய வடிவத்துக்குப் பதிலாக தனியிலத்திரன்களின் தள்ளுகை விசை காரணமாக V வடிவத்தையே ஏற்கின்றது என ஊகிக்கலாம். பரிசோதனைகள் மூலம் இவ்வூகிப்பு கிட்டத்தட்ட சரியானது என நிரூபிக்கப்பட்டுள்ளது. VSEPR மூலம் ஆக்சிசன், ஐதரசன் அணுக்களுக்கிடையே உள்ள கோணம் 109.5° (கணித ரீதியில் கண்டறியப்பட்ட நான்முகியின் உச்சிக்கும் மையத்துக்கும் இடையிலான கோணம்) என ஊகிக்கப்பட்டுள்ளது. இப்பெறுமானம் பரிசோதனை ரீதியாகக் கண்டறியப்பட்ட 104.5°க்கு மிக அண்மியதாக உள்ளது. VSEPR கொள்கையில் ஒற்றைப் பிணைப்புக்கள் மாத்திரமல்லாமல் இரட்டை மற்றும் மும்மைப் பிணைப்புக்களும் ஒரு இலத்திரன் சோடியாகக் கருதியே மூலக்கூற்றுக் கட்டமைப்பு ஊகிக்கப்பட வேண்டும்.
Remove ads
AXE முறை
VSEPR கொள்கையைப் பயன்படுத்தி மூலக்கூற்று வடிவங்களை ஊகிக்கும் போது AXE முறை பயன்படும். இதன் போது மைய அணு A ஆங்கில எழுத்தாலும் பிணைப்பிலத்திரன் சோடிகள் X ஆங்கில எழுத்தாலும், தனியிலத்திரன் சோடிகள் E ஆங்கில எழுத்தாலும் கட்டமைப்பில் குறிக்கப்படுகின்றன. E மற்றும் X ஆங்கில எழுத்துக்களை ஒன்றிலிருந்தொன்று இயலுமானவரை தொலைவில் எழுதுவதன் மூலம் VSEPR முறை மூலம் ஊகிக்கப்படும் இலத்திரன் கட்டமைப்பைக் கண்டறியலாம்.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads