வானத்தைப் போல
விக்ரமன் இயக்கத்தில் 2000 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
வானத்தைப்போல (Vaanathaippola) என்பது 2000 ஆம் ஆண்டில் தமிழ்-மொழியில் வெளியான குடும்பத் திரைப்படம் ஆகும். விக்ரமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயகாந்த், மீனா, பிரபுதேவா, லிவிங்ஸ்டன்,[1] கௌசல்யா, அஞ்சு அரவிந்த் மற்றும் பலர் நடித்துள்ளதுனர்.
ஆஸ்கார் பிலிம்ஸின் கீழ் வி. ரவிச்சந்திரன் தயாரித்துள்ள இந்த படத்திற்கு எஸ். ஏ. ராஜ்குமார்[2] இசையமைத்துள்ளார், ஆர்தர் ஆ. வில்சன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இது தனது மூன்று இளைய சகோதரர்கள் வாழ்க்கையில் வெற்றிபெற தியாகங்களைச் செய்யும் அக்கறையுள்ள சகோதரனின் கதையை படம் சொல்கிறது.
இந்த படம் 14 சனவரி 2000 ஆம் ஆண்டில் வெளியாகி,[3] நேர்மறையான விமர்சனங்ககளை பெற்று மற்றும் வசூல் ரீதியாக வெற்றியைப் பெற்றது, மேலும் சிறந்த பிரபலமான திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருதை வென்றது. அத்துடன் இரண்டு தமிழக அரசு திரைப்பட விருதுகளையும் வென்றது.
Remove ads
கதைச் சுருக்கம்
வெள்ளைச்சாமி தனது மூன்று தம்பிகளை மிகவும் நேசிக்கிறார். வெள்ளைச்சாமி காதலித்த பெண், திருமணத்திற்குப் பிறகு அவரது தம்பிகளை விடுதியில் சேர்க்கத் திட்டமிட்டிருப்பதை அறிந்ததும், திருமணத்தையே துறக்கிறார். தம்பிகள் பாட்டியுடன் வசிக்கின்றனர். வெள்ளைச்சாமி தம்பிகளை வளர்க்க கடினமாக உழைக்கிறார். அவர்களும் அவரது அன்பை திருப்பித் தருகின்றனர்.
மூத்த தம்பி முத்து ஒரு சிறிய உணவகத்தில் சமையல்காரராக பணிபுரிகிறார். முத்து கௌரியை காதலிப்பதை வெள்ளைச்சாமி அறிகிறார். திருமண வேண்டுகோளை முன்வைக்க நகரத்திற்குச் செல்கிறார். ஆனால் அவமதிக்கப்படுகிறார். சில சூழ்நிலைகள் முத்துவை நகரத்திற்கு அழைத்துச் செல்கின்றன. அங்கு கௌரியின் பெரிய பங்களாவில் சமையல்காரராக வேலை செய்கிறார். ஆரம்பத்தில் கௌரி அவரிடம் முரட்டுத்தனமாக நடந்துகொள்கிறாள். பின்னர் முத்து அவளுடைய குழந்தைப் பருவ நண்பர் என்பதை அறிகிறாள். அவள் முத்துவுடன் நெருக்கமாக இருந்ததை நினைவுகூர்கிறாள். அவரது பணிவான குணத்தைக் கண்டு அவரை காதலிக்கத் தொடங்குகிறாள். இருவரும் திருமணம் செய்துகொள்கின்றனர்.
கௌரி புதிய வீட்டில் நன்றாக பொருந்துகிறாள். செல்வந்த குடும்பத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், வீட்டு வேலைகளில் உதவுகிறாள். அவளிடம் எந்த முனைப்பும் இல்லை. இதை வெள்ளைச்சாமி, அவரது பாட்டி மற்றும் தம்பிகள் பாராட்டுகின்றனர். முத்துவின் இளைய சகோதரர் சண்முகம் காவல் ஆய்வாளராக பயிற்சி பெறுகிறார். வெள்ளைச்சாமியின் நண்பரின் மகள் சுமதியை திருமணம் செய்துகொள்கிறார்.
ஆரம்பத்தில் சுமதி வெள்ளைச்சாமியிடம் முரட்டுத்தனமாகவும் அவமதிப்பாகவும் நடந்துகொள்கிறாள். அவளது நடத்தையைப் பற்றி கணவர் எதிர்கொண்டபோது, அவள் மனம் உடைகிறாள். அவளைச் சுற்றியுள்ள மக்கள், அவளது தந்தை உட்பட, அவளை துரதிர்ஷ்டத்தை கொண்டுவருபவர் என்று நம்பியதாக கூறுகிறாள். அவள் முரட்டுத்தனமாக நடந்து கொண்டது தனது தாய் வீட்டு உறவினர்கள் தொல்லை செய்யாமல் இருக்கவே என்பது தெரிய வருகிறது. வெள்ளைச்சாமி அவளை தேற்றுகிறார்.
மூன்றாவது இளைய சகோதரர் செல்வகுமார் ஒரு மருத்துவர். செல்வத்திற்கு நந்தினி என்ற பெண் காதலி உள்ளாள். அவள் அதிகம் பேசக்கூடியவளும் உற்சாகமானவளுமாவாள். வெள்ளைச்சாமி அவளை ஏற்றுக்கொள்கிறார். ஆனால் அவள் வெள்ளைச்சாமியின் எதிரி தர்மலிங்கத்தின் மகள் என்பது தெரிய வருகிறது. தர்மலிங்கத்தின் சகோதரி, வெள்ளைச்சாமியின் முன்னாள் காதலி ஆவாள். அவளை திருமணம் செய்ய பல வருடங்களுக்கு முன் வெள்ளைச்சாமி மறுத்ததால் தர்மலிங்கம், நந்தினியை செல்வத்திற்கு திருமணம் செய்து கொடுக்க மறுக்கிறார்.
திருமணத்திற்குப் பிறகு கிராமத்தை விட்டு வெளியேறுவதாக வெள்ளைச்சாமி வாக்குறுதி அளித்த பிறகு, தர்மலிங்கம் சம்மதிக்கிறார். நந்தினியின் மாமன் சொத்திற்காக அவளை திருமணம் செய்ய விரும்பி நந்தினியை கடத்துகிறார். முத்து அவளை காப்பாற்றுகிறார். இறுதியில், வெள்ளைச்சாமி திரும்பி குடும்பம் மீண்டும் ஒன்றிணைகிறது.
Remove ads
நடிகர்கள்
- விஜயகாந்த் - வெள்ளைச்சாமி மற்றும் முத்து
- பிரபுதேவா - செல்வகுமார்
- மீனா - கௌரி, முத்துவின் மனைவி
- லிவிங்ஸ்டன் - சண்முகம்
- கௌசல்யா - நந்தினி, செல்வகுமாரின் காதலி
- அஞ்சு அரவிந்த் - சுமதி, சண்முகத்தின் மனைவி
- வினிதா - ராதா
- செந்தில்
- ரமேஷ் கண்ணா
- தேவன் - தர்மலிங்கம்
- ஆனந்தராஜ்
- எஸ். என். லட்சுமி
- கசான் கான்
- ராஜீவ்
- சபிதா ஆனந்த்
- ஆனந்த்
- பாலு ஆனந்த்
பாடல்கள்
இத்திரைப்படத்திற்கு எஸ். ஏ. ராஜ்குமார் இசையமைத்திருந்தார். இரா. ரவிசங்கர், பா. விஜய், விவேகா நா. முத்துக்குமார் ஆகியோர் எழுதிய பாடல்கள் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.[4]
தயாரிப்பு
இப்படத்திற்கு முதலில் இயக்குநர் வைத்த தலைப்பு "அண்ணன் தம்பி".[5] பிறகு விஜயகாந்த நடித்த சின்ன கவுண்டர் திரைப்படத்தில் "அந்த வானத்த போல" என்ற திரைப்படப் பாடலில் இருந்து இப்படத்தின் தலைப்பு "வானத்தைப் போல" என்று மாற்றி வைக்கப்பட்டுள்ளது.[6]
வரவேற்பு
இப்படம் திரையரங்குகளில் 250 நாட்கள் ஓடி அந்த ஆண்டின் மிகப்பெரிய வெற்றிப்படமாக விளங்கியது.[7][8]
மறு ஆக்கம்
இப்படம் தெலுங்கில் "மா அண்ணய்யா" என்றும், கன்னடத்தில் "எசமானா" என்றும் மறுஆக்கம் செய்யப்பட்டு ஆம்மொழிகளிலும் மிகப் பெரிய வெற்றிப்படமாக திகழ்ந்தது.[9][10]
விருதுகள்
- 2000 ஆண்டிற்கான சிறந்த திரைப்படத்துக்கான தமிழக அரசின் திரைப்பட விருது (முதற் பரிசு) பெற்றது.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads