விக்கிரமாதித்தன் கதைகளின் கட்டமைப்பு

From Wikipedia, the free encyclopedia

Remove ads

அறிமுகம்

வேதாளக் கதைகள் இருபத்துநான்கும் இரண்டாவது பதுமையாகிய மதனாபிஷேகப் பதுமை சொன்னவை ஆகும். இதில் பதுமைகள் சொல்லும் கதைகள் விக்கிரமாதித்யனின் அறிவு ஆற்றல் பராக்கிரமங்களைப் பறைசாற்றும் விதமாக உள்ளன. ஒவ்வொரு பதுமையும் ஒற்றைக்கதையாகச் சொல்லவில்லை. ஒரு கதை ஆரம்பித்து கதைக்குள் கதைக்குள் கதைக்குள் கதை என்கிற பாணியில் சொல்வதால் மொத்தப் புத்தகத்தில் பல நூறு கதைகள் உள்ளன. விக்கிரமாதித்தன் கதைகள் இரண்டு பகுதிகளைக் கொண்டுள்ளன.

முதல் பகுதி

முதல் பகுதி போஜராஜன் என்பவனுக்கு ஒரு காட்டில் கனகமணி சிம்மாசனம் கிடைப்பதை விவரிக்கிறது. அந்த சிம்மாசனத்தில் 32 படிகள் இருக்கின்றன. அந்த சிம்மாசனத்தின் மீது ஏறி அமர்ந்து ஆட்சி செய்ய விரும்பும் போஜராஜன் அதன் மீது ஏறப் போகும் போது அந்தப் படிகளில் இருக்கும் பதுமைகள் கைகொட்டிச் சிரிக்கின்றன. "இந்த சிம்மாசனம் வீரமும் அறிவும் பராக்கிரமும் ஒருங்கே அமையப் பெற்றிருந்த விக்கிரமாதித்ய மகாராஜா அமர்ந்திருந்தது. இதில் ஏறி அமர உனக்குத் தகுதி இருக்கிறதா என்று பார்த்துக் கொள்" என்று கேலி பேசுகின்றன. அந்தப் பதுமைகளில் முதல் பதுமை விக்கிரமாதித்ய ராஜா பற்றியும் அவனுடைய மதியூக மந்திரி பட்டி பற்றியும் இந்த சிம்மாசனம் இந்திரனிடமிருந்து அவனுக்குக் கிடைத்த கதையையும் சொல்கிறது.

இரண்டாம் பகுதி

முதல் தொகுதியின் தொடர்ச்சியாக ஆரம்பித்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பதுமையாகச் சொல்கின்ற கதைகளின் தொகுப்பாக இருக்கிறது இரண்டாம் பகுதி.

Remove ads

கதைகள்

போஜராஜன் முதல்நாள் முதல் படியில் ஏறும் போது அந்தப் பதுமை சிரித்து சொல்கின்ற கதையுடன் அந்த நாள் முடிந்து போவதால் அவன் கீழே இறங்கி விடுகிறான். இப்படியே ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு படி கூடுதலாக மட்டுமே அவனால் ஏற முடிகிறது. முப்பத்திரண்டாம் நாள் கடைசிப் பதுமை விக்கிரமாதித்யனின் மரணம் நிகழ்ந்த விதத்தைச் சொல்லிய கையோடு, போஜ ராஜனிடம், தான் உள்பட அத்தனை பதுமைகளும் பார்வதி தேவியின் தோழியரே என்றும் போஜராஜனால் சாபவிமோசனம் அடையக் காத்திருந்தவர்கள் என்றும் சொல்லி உச்சக்கட்டப் புதிர் போடுகிறது.

அந்த புதிர் கதை

தோழியர் முப்பத்திரண்டு பேர் பார்வதி தேவியுடன் பேசிக் கொண்டிருந்த ஒரு சமயத்தில் சிவபெருமான் அங்கே வந்து விட்டாராம். அவர் ஆசை மிகுந்த கண்களுடன் முப்பத்திரண்டு பேரையும் பார்த்ததால் பார்வதி கோபம் கொண்டு தோழியரைச் சபித்தாராம். "என் கணவர் வருவது தெரிந்தும் அசையாமல் இருந்த நீங்கள் பதுமைகளாக மாறி இந்திரனின் சிம்மாசனத்தில் இருக்கக் கடவது" என்றாளாம் தேவி. சாபவிமோசனம் கேட்டு அவர்கள் அழுதபோது தேவி சொன்னாளாம்: "அந்த சிம்மாசனம் இந்திரனிடமிருந்து விக்கிரமாதித்யன் கைக்குச் செல்லும். அவன் இரண்டாயிரம் வருடம் ஆட்சி செய்த பிறகு மண்ணில் மூழ்கிக் கிடக்கும். பின்னொருநாளில் போஜராஜன் அதனைத் தோண்டி எடுத்து அதன் மீது அமரப் போவான். அவனுக்கு விக்கிரமாதித்யனின் அருமை பெருமைகளை நீங்கள் சொல்லி முடித்த பிறகு சாபவிமோசனம் அடைவீர்கள்" அதன்படி எங்களுக்கு விமோசனம் தாருங்கள் என்று வேண்டி நின்றனவாம் பதுமைகள். போஜராஜன் சிம்மாசனத்தின் படிகளில் இருந்து கீழே இறங்கி நவரத்தினங்கள் பதிக்கப்பட்ட சிவபெருமானின் தங்கச் சிலையை வரவழைத்து சிம்மாசனத்தில் அமர்த்தினான். அதற்கு பூஜை வகையறாக்கள் செய்ய, பதுமைப் பெண்கள் அவனை ஆசீர்வதிக்க, சிம்மாசனம் மெல்ல உயர்ந்து பறந்து வான்வெளியில் மறைந்தது என்று முடிகிறது விக்கிரமாதித்தன் கதை.

Remove ads

தத்துவங்கள்

புத்தகத்தின் எந்தப் பக்கத்தைப் புரட்டினாலும் கொட்டிக் கிடக்கின்றன தத்துவ வரிகள். உதாரணத்திற்குச் சில,

  • தன்னுடைய நல்ல குணங்களையும் மற்றவர்கள் செய்யும் தவறுகளையும் நல்லவன் ஒருபோதும் சொல்ல மாட்டான்.
  • பெண்கள் சுயலாபத்துக்காக சிரிக்கவும் அழவும் செய்வார்கள்.தங்களிடம் நம்பிகை வைக்கும்படி அவர்கள் கெஞ்சுவார்கள். ஆனால் அவர்கள் ஒருபோதும் எவர் மீதும் நம்பிக்கை வைக்க மாட்டார்கள்.
  • வயது, செல்வம், வீட்டுச் சுவரில் உள்ள பிளவு, சக்தி, மருந்து, பெண்களுடன் சகவாசம், கொடை, கௌரவம், இழிவு ஆகிய ஒன்பதையும் ஒருபோதும் வெளியிடக் கூடாது
  • ஆசையில்லாதவன் அதிகாரியாக இருக்க மாட்டான்; கபடமற்றவன் முகஸ்துதியைச் செய்ய மாட்டான்.
  • குழந்தைகள், வீட்டிலே வசிக்கும் பெண்கள், வியாதியஸ்தர்கள், விருந்தாளிகள், வேலைக்காரர்கள் ஆகியோர் உணவருந்திய பிறகான மீதியைத் தான் இல்லறம் நடத்தும் தம்பதியர் உண்ண வேண்டும்.
  • சாப்பாட்டிற்குப் பிறகு சிறிது நேரம் உட்கார்ந்து இளைப்பாறுபவன் தொந்தி வயிற்றை அடைகிறான். சாப்பாட்டிற்குப் பிறகு தூங்குபவன் சுகத்தை அடைகிறான். சிறிது நேரம் நடப்பவனோ நீண்ட ஆயுளை அடைகிறான். ஓடுகிறவனை மரணம் ஓடிச் சென்று ஆட்கொள்கிறது.
  • அதிகாரப்பதவி வகிப்பவன் தன் சந்ததியின் மீது கருத்துச் செலுத்தக் கூடாது.

தொடர்புடைய ஆலயம்

திருச்சியில் மகாகாளிகுடி ஊரில் இருக்கும் உஜ்ஜைனி மகாகாளி அம்மன் ஆலயம் விக்கிரமாதித்தன் கதைகளுடன் தொடர்புடைய ஆலயமாக விளங்குகிறது.

அந்தப் பின்னணி

காளி தேவியின் பக்தனான விக்கிரமாதித்தன் வடநாட்டில் உள்ள உஜ்ஜைனியை ஆண்டு வந்தான். ஆறுமாதம் நாடு, ஆறு மாதம் காடு என்று அவன் ஆண்டுவந்த அவன், காடாறு மாத சமயத்தில் ஒவ்வொரு முறையும் வெவ்வேறு இடங்களுக்குச் செல்வான். ஒரு முறை தெற்கே வந்தான்.கையோடு தான் கொண்டு வந்த காளி தேவியைக் காவிரிக்கரையில் வைத்துப் பூஜித்து வந்தான். அந்தக் காளி தான் திருச்சியில் மகாகாளிகுடி ஊரில் குடியிருக்கும் உஜ்ஜைனி மகாகாளி அம்மன்.

தன்னை தினமும் பூஜித்த விக்கிரமாதித்தனிடம் காளி ஒருமுறை, "இங்கிருந்து இரண்டுகல் தொலைவில் ஒரு சிவாலயம் உள்ளது. அந்த சிவன் கோவிலில் உள்ள முருங்கை மரத்தில் ஒரு வேதாளம் தொங்கிக் கொண்டிருக்கிறது. அதை நீ கீழே இறக்கினால் அது உனக்கு முப்பத்திரண்டு கதைகளையும் உன் வாழ்வுக்கு வர இருக்கும் யோக ரகசியங்களையும் சொல்லும். அதன்படி நடந்து நீ உன்னத பதவியைப் பெறு" என்று கூறி மறைந்தாள்.

காளிதேவியின் கட்டளைப்படி அங்கு சென்ற விக்கிரமாதித்தன் வேதாளம் கூறிய முப்பத்திரண்டு கதைகளுக்கும் விடை கூறி அதற்கு சாப விமோசனம் அளித்தான்.

சிவாலயத்தின் பின்னணி

பழங்காலத்தில் அந்தக் கோவிலின் அர்ச்சகர், சிவனுக்கும் பார்வதிக்கும் பொங்கல் நைவேத்தியம் செய்து விட்டு மறதியாக அதைக் கோயிலின் உள்ளேயே வைத்துப் பூட்டி விட்டு வீட்டுக்குப் போய் விட்டார். வீட்டில் அர்ச்சகரின் மனைவி, 'பொங்கல் எங்கே?' என்று கேட்டபிறகு தான் ஞாபகம் வந்தவராக மீண்டும் கோவிலுக்குப் போயிருக்கிறார். பூட்டியிருந்த கர்ப்பக்கிரகத்தின் உள்ளே இருந்து பேச்சுக் குரல் வர, சாவித்துவாரம் வழியே உள்ளே பார்த்திருக்கிறார்.

உள்ளே சிவபெருமான் பார்வதி தேவிக்கு முப்பத்திரண்டு கதைகள் சொல்லிக் கொண்டிருந்திருக்கிறார். அர்ச்சகர் ஒட்டுக் கேட்பது தெரிந்ததும் சிவபெருமான் கோபம் கொண்டு அர்ச்சகரை வேதாளமாக்கி முருங்கை மரத்தில் தொங்கும் படி சபித்து விட்டார்.

விமோசனம் கேட்டுக் கதறிய அர்ச்சகரிடம் "நீ வேதாளமாகத் தொங்கும் போது ஒருவன் உன்னைக் கீழே இறக்குவான். அவனிடம் நீ கேட்ட எல்லாக் கதைகளையும் சொல்லி விடை கேள். அனைத்துக் கதைகளுக்கும் விடை சொல்பவன் தான் விக்கிரமாதித்தன். அவனிடம் அடிமையாக இருந்தபிறகு என்னை வந்தடைவாயாக" என்று சொல்லி மறைந்தார் சிவபெருமான்.

ஆலயத்தின் அமைப்பு

விக்கிரமாதித்தன் கட்டியதாகக் கூறப்படும், 2000 ஆண்டு பழமையான மகாகாளிகுடி கோவிலில் மூன்று நிலைகளில் அருள் பாலிக்கிறாள் காளி. கருவறையில் ஆனந்த சௌபாக்ய சுந்தரியாகவும், உற்சவ அம்மன் விரிசடைக் காளியாகவும் (கரங்களில் ஜுவாலை, சூலம், கபாலம் என்று அசுரனைக் காலால் மிதிக்கும் கோலத்துடன்) காட்சி தருகிறாள்.விக்கிரமாதித்தன் எடுத்து வந்ததாகச் சொல்லப்படும் காளி எட்டுக்கரங்களில் பல்வேறு ஆயுதங்கள் தாங்கி அசுரனை மிதித்தபடிக் காட்சியளிக்கிறாள்.

இந்துக் கோயில்களுக்கான புராதன அமைப்புடன் இருக்கும் கோயில். சுற்றுப் பிரகாரத்தில், வேதாளம், சாஸ்தா, மதுரை வீரன் சந்நிதிகளும் அமைந்துள்ளன.

கோயிலின் கிழக்கே இரண்டுகல் தொலைவில் உள்ள சிவாலயம் சிதிலமடைந்துள்ளது.

Remove ads
Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads