வில்லியம் ஆர்வி

From Wikipedia, the free encyclopedia

வில்லியம் ஆர்வி
Remove ads

வில்லியம் ஆர்வி (William Harvey; வில்லியம் ஹார்வி, ஏப்ரல் 1, 1578 - சூன் 3 1657) என்பவர் ஆங்கிலேய மருத்துவ ஆராய்ச்சியாளர். உடற்கூற்றியல், உடலியங்கியல் ஆகிய துறைகளில் பெரும் பங்களிப்பை வழங்கியவர். குருதி இதயத்திலிருந்து தொடங்கி மனித மூளை உட்பட உடலின் பல பகுதிகளுக்கும் சென்று திரும்பவும் தொடங்கிய இடமான இதயத்திற்கே வந்து சேருகிறது என்ற குருதிச் ஓட்டம் பற்றிய புதிய தகவலை தம் ஆராய்ச்சியின் மூலம் முதன் முதலாக வெளியிட்டார்.[1][2] இந்தக் கண்டுபிடிப்பு மருத்துவத்துறையில் மேலும் பல முன்னேற்றங்கள் ஏற்பட உதவியாக இருந்தது என்று மருத்துவ உலகில் கருதப்படுகிறது.

விரைவான உண்மைகள் வில்லியம் ஹார்விWilliam Harvey, பிறப்பு ...

இங்கிலாந்தில் 1578 ஆம் ஆண்டில் பிறந்தார். இவர் தமது பதினைந்தாம் வயதில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பயின்ற பின்பு இத்தாலியிலுள்ள பாதுவா பல்கலைக்கழகத்திற்குச் சென்று பயின்றார். அதே பல்கலைக்கழகத்திலேயே பேராசிரியராகவும் ஆனார். வில்லியம் ஹார்வி முதலாம் சார்லஸ் மன்னரின் அபிமானத்துக்குரிய மருத்துவராக பணியாற்றினார்.

Remove ads

பிறப்பும் படிப்பும்

ஆர்வி இங்கிலாந்தில் கென்டில் உள்ள போக்ச்டன் என்னும் ஊரில் பிறந்தார். தமது 15 ஆம் அகவையில் 1593 இல் கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து கலையையும் மருத்துவத்தையும் பயின்றார். 1597 இல் இளங்கலைப் பட்டம் பெற்று வெளியேறினார்.[3] பின்னர் அவர் பிரான்சு, ஜெர்மனி ஆகிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டு இத்தாலி வந்தடைந்தார். அங்கு 1599 இல் பாதுவா பல்கலைக்கழகத்தில் மருத்துவம் பயின்றார். 1602 ஆம் ஆண்டில் மருத்துவப் பட்டம் பெற்றார். உடற் கூறுப் பேராசிரியர் பெப்ரிசியஸ் என்பவர் மிகவும் புகழ் பெற்ற மருத்துவ அறிஞர்.அவரிடம் வில்லியம் ஆர்வி படித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 1602 இல் பட்டம் பெற்ற பிறகு இங்கிலாந்துக்குத் திரும்பினார். கேம்பிரிச்சுப் பல்கலைக் கழகத்தில் சேர்ந்து மற்றொரு மருத்துவப் பட்டமும் பெற்றார்.

Remove ads

திருமணம்

1604 ஆம் ஆண்டில் எலிசபெத் பிரவுன் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்குக் குழந்தைகள் இல்லை.

தொழிலும் ஆராய்ச்சியும்

1607 இல் வில்லியம் ஆர்வி இலண்டனில் உள்ள ராயல் மருத்துவர் கல்லூரியில் சேர்ந்தார். மருத்துவர் தொழிலைச் செய்துகொண்டே தமக்குப் பிடித்தமான குருதி ஓட்டம் பற்றிய ஆராய்ச்சியைத் தொடர்ந்தார். 1616 இல் தாம் செய்து வந்த குருதி ஓட்டம் பற்றியும் இதயம் தமனிகள் சிரைகள் முதலியவற்றின் செயல்பாடுகள் குறித்து விளக்க மாகவும் விரிவாகவும் மருத்துவ மாணவர்களிடம் கூறி வந்தார். இதயம் சுவாசக்கோசங்களின் உதவியுடன் குருதியை ஏற்றுக்கொண்டு மறுபடியும் வெளியே அனுப்புகிறது என்றும் இரத்த ஓட்டம் என்பது தடைபெறாமல் நடைபெறும் ஒரு சுழற்சி என்றும் இதைத் இதயத் துடிப்பு மூலம் உணரலாம் என்றும் கூறினார். இந்தக் கருத்துகளைக் கேட்டுக் கேலி செய்து சக மருத்துவர்கள் நகைத்தனர். ஆனால் தளர்ச்சி அடையாமல் தமது ஆராய்ச்சியைத் தொடர்ந்தார்.

1628 இல் 'இதயம் இரத்தம் -இவற்றின் இயக்கம்' என்னும் ஓர் ஆராய்ச்சி நூலை எழுதி வெளியிட்டார். இதற்குப் பிறகு ஆர்வியின் ஆய்வுகளை உண்மையென மற்ற மருத்துவர்கள் ஒப்புக்கொண்டனர். இதயம் என்பது ஒரு பம்பு போல வேலை செய்து குருதியைத் தமனிகள் மூலம் உடலெங்கும் உந்தித் தள்ளி அனுப்புகிறது. இந்தக் குருதி தமனிகளிலிருந்து சிரைக்கு மாறி மீண்டும் இதயத்துக்கு வருகிறது. குருதிக் குழல்களில் உள்ள குருதி பின்னோக்கிச் செல்லாமல் இருக்க வால்வுகள் உதவுகின்றன.அதாவது குருதி ஓட்டம் எப்போதும் இதயத்தை நோக்கியே இயங்குகிறது என்று சான்றுகளுடன் ஆர்வி விளக்கினார். தம் கருத்துகளைத் தக்கச் சான்றுகளுடன் மெய்ப்பிக்க, இறந்த விலங்குகளின் உடல்களையும் மனித உடல்களையும் வெட்டிச் சோதனை செய்தார். 1651 ஆம் ஆண்டில் 'விலங்குகளின் தலைமுறைகள்' என்னும் தலைப்பில் மற்றொரு நூலை எழுதி வெளியிட்டார். இந்நூல் இக்கால 'கரு' ஆராய்ச்சிக்கு அடிப்படையாக உள்ளது. சிறந்த மருத்துவராகப் பலராலும் பாராட்டப்பட்டவர் வில்லியம் ஆர்வீ ஆவார். அவர் முதலாம் ஜேம்ஸ், முதலாம் சார்லஸ் ஆகிய ஆங்கில மன்னர்களுக்கு மருத்துவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதயம் ஒவ்வொரு முறையும் துடிக்கும்போது இரண்டு அவுன்ஸ் ரத்தம் வெளியேற்றப்படுவதையும் நிமிடத்திற்கு எழுபத்திரண்டு முறை துடிப்பதையும் ஒரு நாளைக்கு ஆயிரத்து ஐநூறு காலன் ரத்தம் அதன் வழியாக செல்வதையும் வில்லியம் ஹார்வி கண்டறிந்தார். இதயத்திலிருந்து ரத்தம் தமனிகளின் மூலமாக வெளிச்சென்று சிரைகளின் மூலமாய் அது மீண்டும் இதயத்தை அடைகிறது என்பதையும் வில்லியம் ஹார்வி கண்டறிந்து உலகிற்குச் சொன்னார்.

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads