உறையூர் வெக்காளியம்மன் கோயில்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
உறையூர் வெக்காளியம்மன் கோயில், தமிழ்நாட்டில் திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருச்சிராப்பள்ளியின் மேற்குப் பகுதியில் உறையூரில் உள்ள அம்மன் கோயிலாகும்.
Remove ads
அமைவிடம்
திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து 6 கி.மீ. தொலைவிலும், சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து 2 கி.மீ. தொலைவிலும் இக்கோயில் உள்ளது.[1]
உறையூர் பெருமை
உறையூருக்கு வாகபுரி, கோழியூர், முக்கீசுவரம் என்ற பெயர்கள் உண்டு. உறையூர் சூரவாதித்த சோழன் உருவாக்கிய ஊர் என்பர்.[2] உறந்தை, வேதபுரம், வாரணம், முக்கீசபுரம், தேவிபுரம், உரகபுரம் என்றும் வழங்கப்பட்டது. முன்பு இவ்வூர் முற்கால சோழர்களின் தலைநகரமாக இருந்தது.[3]
தல வரலாறு
உறையூரை பராந்தகன் ஆட்சி செய்த காலத்தில் சாரமா முனிவர் நந்தவனம் அமைத்து பல மலர்ச் செடிகளை வளர்த்தார். மன்னன், அவருடைய அனுமதியின்றி பூக்களைப் பறித்து தன் மனைவியான புவனமாதேவிக்குச் சூடவே, அவர் அதனைப் பற்றிக் கேட்டார். ஆனால் மன்னர் அதைப் பொருட்படுத்தாததால், அவர் தாயுமான சுவாமிகளிடம் முறையிட்டார். தாயுமான சுவாமிகள் மேற்கு முகமாகத் திரும்பிப் பார்க்க நெருப்பு மழைப் பொழிந்தது. ஊரிலிருந்த அனைவரும் தப்பியோடினர். உறையூரை மண் மூட, மக்கள் தங்களைக் காத்துக்கொள்ள வெக்காளியம்மனிடம் தஞ்சம் புகுந்தனர். தாயுமானவ சுவாமியின் சினத்தைத் தணிக்க முழு நிலவாக மாறினாள். அன்னையின் பார்வையில் இறைவன் அமைதிகொள்ள நெருப்பு மழை நின்றது. அதே சமயத்தில் நெருப்பு மழை தாங்காமல் கர்ப்பிணியாக இருந்த புவனமாதேவி காவிரியாற்றில் குதித்தாள். ஓர் அந்தணர் அவளைக் காப்பாற்றினார். அவளுக்குக் கரிகால் பெருவளத்தான் என்னும் மகன் பிறந்தான். அம்மன் கருணையால் அவள் உயிர் பிழைத்ததால் அவள் வெக்காளியம்மன் பக்தை ஆனார். உறையூரைக் காத்த அன்னையை இன்றும் மக்கள் வணங்கிவருகின்றனர்.[2] மண் மழை பொழிந்து நகரம் அழிந்ததாகவும் கூறப்படுகிறது.[3]
மூலவர் சன்னதி
உறையூரின் வடக்கே காவல் தெய்வமாக வெட்டவெளியில் வானமே கூரையாக, மேகங்களே திருவாசியாக, மழையே அபிஷேகமாக, நட்சத்திரங்களே மலர்களாகக் கொண்டு இருக்கிறாள்.உடுக்கை, பாசம், சூலம் ஏந்திய நிலையில் இருக்கிறாள்.[3] மேற்கூரை இல்லாத அம்மன் கோயில்களில் அம்மன் இடது காலை மடித்து அமர்ந்திருப்பார். இங்கு அம்மன் வலது காலை மடித்து, இடது கால் பாதத்தை அசுரன்மீது வைத்துள்ளார்.[2] இக்கோயிலுக்குத் தலமரமோ, தீர்த்தமோ இல்லை. இக்கோயிலில் விசுவநாதர் விசாலாட்சியம்மன், காத்தவராயன், பெரியண்ணன், மதுரைவீரன், பொங்கு சனீசுவரர், நவக்கிரகம் ஆகியோரின் சன்னதிகள் உள்ளன.[1]
Remove ads
விழாக்கள்
இங்கு மகா சர்வசண்டி ஹோமம் நடைபெறுகிறது. சித்திரை ஐந்து நாட்கள் விழா, பங்குனியில் பூச்சொரிதல் விழா, வைகாசி கடைசி வெள்ளியில் மாம்பழ அபிஷேகம், புரட்டாசியில் நவராத்திரி, தை வெள்ளி, ஆடி வெள்ளி மற்றும் செவ்வாய் வெள்ளிக்கிழமைகள் சிறப்பு நாட்களாகும்.[2] இக்கோயில் காலை 6.00 மணி முதல் 11.00 மணி வரையிலும், மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலும் வழிபாட்டிற்குத் திறந்திருக்கும்.[4]
கண்ணகி தொடர்பு
மதுரையை எரித்த கண்ணகியின் சாபம் தீர்க்க நெடுங்கிள்ளியின் மகனான பெருநற்கிள்ளி எடுப்பித்த பத்தினிக் கோட்டமே இப்போது வெக்காளி கோயிலாக உள்ளது என்றும் கூறப்படுகிறது. இதனால் வெக்காளி கண்ணகியே என்றும் கூறப்படுகிறது. இதனால் தேவி வீர ஆசனத்தில் தீ சுவாலையுடன் நாகமும் கொண்ட கிரீடமும் சிவந்த அதரங்களும் கொண்டு விளங்குகிறாள்.[3]
தங்க ரதம்
வெக்காளியம்மனுக்கு, புதியதாக ஒரு தங்க ரதம் செய்யப்பட்டு,அதன் வெள்ளோட்டம் பிப்ரவரி 18, 2010இல் நடைபெற்றது.[5]
மேற்கோள்கள்
இவற்றையும் பார்க்கவும்
படத்தொகுப்பு
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads