வெள்ளைக்குடி நாகனார்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
வெள்ளைக்குடி நாகனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். சங்கநூல் தொகுப்பில் இவரது பாடல்கள் 3 இடம்பெற்றுள்ளன. அவை: நற்றிணை 158, 196, புறநானூறு 35[1] ஆகியவை.
பாடல் சொல்லும் செய்தி

புறம் 35
'அரசெனப்படுவது நினதே' என்றும், 'நாடெனப்படுவது நினதே' என்றும் புலவர் அரசனைப் பாராட்டுகிறார். அரசனது வெண்கொற்றக் குடை வெயிலை மறைத்து அவனுக்கு நிழல் தருவதற்காக அன்று. குடிமக்களின் இன்னல்களைப் போக்கி அவர்களுக்கு நிழல் தருவதற்காகவே என்று அறிவுரை கூறுகிறார். அரசனின் பொருபடையானது அவனது நாட்டுமக்களின் உழுபடையாகிய ஊன்றுகோலில்தான் நிற்கிறது என்கிறார். அரசன் அவனது சுற்றத்தார் சொல்கிறபடி நடவாமல் உழுதொழில் செய்பவர்களின் பாரத்தைத் தாங்கிக்கொள்ள வேண்டும் என்கிறார்.
கடன் தள்ளுபடி
புலவர் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனை நேரில் கண்டு இந்தப் பாடலைப் பாடினார். அரசன் அவர் தனக்கு வயல் வாங்க அரசிடம் வாங்கியிருந்த கடனைத் தள்ளுபடி செய்தான்.
- 'பழஞ்செய் கடன் வீடு கொண்டது'
நற்றிணை 158
தலைவன் தலைவிக்காக வெளியில் காத்திருக்கிறான். அவன் வந்த வழியிலுள்ள இடர்களைத் தோழியும் தலைவியும் பேசிக்கொள்கின்றனர்.
வழியில் கிடக்கும் கற்கள் காலைக் கொல்லும். இருள் கண்ணைக் கொல்லும். புலி யானையைத் தாக்கி அதன் குருதியைக் குடித்துவிட்டுத் தன் கடைவாயை வேங்கை மரத்தில் துடைத்துக்கொள்ளும். மலைநாடன் இப்படிப்பட்ட வழியில்தான் வருகிறான். (இடர்பட்டு வராமல் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பது கருத்து)
நற்றிணை 196

தலைவனைப் பிரிந்திருக்கும் காலத்தில் தலைவி நிலவோடு பேசுகிறாள்.
மதியமே! உன்னிடம் இருக்கும் 'மால்பு' (=களங்கம்) உனக்குத் தெரியவில்லை. அது தெரியாமல் நீ முழுமையாக நிறைந்து தோன்றுகிறாய். பாலை மொண்டு வைத்தாற்போல ஒளி வீசுகிறாய். அவர் இல்லாதபோது என் நல்லழகும் தோள் வனப்பும் தேய்ந்துகொண்டே செல்வது போல நீயும் தேய்கிறாய். உலகிலுள்ள எல்லா இடங்களையும் நீ பார்க்கிறாய். உனக்குச் சால்பும் செம்மையும் இருக்கிறது. அவர் இருக்கும் இடம் உனக்குத் தெரியலாமல்லவா? தெரிந்த செய்தியை மறைக்கலாமா? சொல்லிவிடு, என்கிறாள் தலைவி.
Remove ads
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads