வெ. இராதாகிருட்டிணன்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

வெங்கடராமன் இராதாகிருட்டிணன் (18 மே 1929 3 மார்ச்சு 2011) உலகளாவியப் புகழ்பெற்ற விண்வெளி அறிவியலாளர். இவர் சுவீடிய வேந்திய அறிவியல் மன்றத்தின் உறுப்பினராக இருந்தார். பெங்களூரில் உள்ள இராமன் ஆய்வுக் கழகத்தில் 1972 முதல் 1994 வரை இயக்குநராக இருந்து பின்னர் ஓய்வு பெற்றப் பேராசிரியராக இருந்தார்.

விரைவான உண்மைகள் வெங்கடராமன் இராதாக்கிருட்டிணன், பிறப்பு ...

பேராசிரியர் இராதாகிருட்டிணன், சென்னைக்கு அருகே உள்ள தண்டையார்ப் பேட்டையில் பிறந்து, சென்னையில் கல்வி பயின்று, பின்னர் மைசூர் பல்கலைக்கழகத்தில் இளநிலை அறிவியல் பட்டம் பெற்றார். இவர் பிரான்சுவா-தொமினீக்கு என்பாரைத் திருமணம் செய்துகொண்டார். பேராசிரியர் இராதாகிருட்டிணனின் தந்தையார் நோபல் பரிசு பெற்ற ச. வெ. இராமன். தந்தையாரின் புகழின் நிழலில் தான் இருக்கக்கூடாது என்பதைக் கடைசிவரை உறுதியாகப் பின்பற்றிய அறிஞர் இராதாகிருட்டிணன்.

இராதாகிருட்டிணன் அனைத்துலக வானியல் ஒன்றியத்தின் துணைத்தலைவராக 1988-1994 ஆம் ஆண்டுகளில் பொறுப்பேற்று இருந்தார். அதற்கு முன்னதாக 1981-1984 ஆம் ஆண்டுகளில் அனைத்துலக வானொலியலைகள் அறிவியல் ஒன்றியத்தின், குழு சே (Comission J, வானொலியலை வானியல்) என்பன் தலைவராக இருந்தார்.

இராதாகிருட்டிணன் உலகளாவிய பல அறிவியல் மன்றங்களிலும், கழகங்களிலும் பெரிதும் மதிக்கப்பட்டவர். நெதர்லாந்தின் வானொலியலை வானியல் (ரேடியோ வானியல்) நிறுவனத்தின் வெளிநாட்டு அறிவுரையாளராகப் பணியாற்றினார், ஆத்திரேலிய நாட்டகத் தொலைநோக்கி அமைப்பின் (Australia Telescope National Facility) நெறிப்படுத்தும் குழு, அமெரிக்காவின் கிரீன் பாங்க்கு வானொலியலை தொலைநோக்கி (Green Bank Radio Telescope), தேசிய வானொலியலை வானியல் வானாய்வக அறிவுரையாளர் குழு என்று பற்பல குழுக்களில் பங்காற்றி இருக்கின்றார்.

இவர் சுவீடிய வேந்திய அறிவியல் மன்றத்திலும், அமெரிக்க நாட்டு அறிவியல் மன்றத்திலும் (நேசனல் சயன்சு அக்காதெமியிலும்) வெளிநாட்டு உயரறிஞராகத் (Fellow) தேர்ந்தெடுக்கப்பட்டுருக்கின்றார்.

இராதாகிருட்டிணன், இந்தியாவுக்கு 1972 இல் திரும்பிய பின்னர் இராமன் ஆய்வுக் கழகத்தின் இயக்குநராகப் பொறுப்பேற்று 1994 ஆண்டுவரை நடத்தி மேன்மையுறச் செய்தார். 1996 ஆம் ஆண்டு ஆம்சிட்டர்டாம் பல்கலைக்கழகம் டாக்டர் ஆனரிசு காசா (Doctor Honoris Causa) என்னும் பெருமை முனைவர் பட்டம் தந்து சிறப்பித்தது

இவர் மிக இலேசான பறக்கும் கலங்களும், படகுகளும் கட்டுவதிலும் புகழ் ஈட்டி இருக்கின்றார்.

Remove ads

ஆய்வு

மின்னணுவியல் (எதிர்மின்னியியல்) வாங்கிகள் (Receivers) துறையில் ஆய்வுகள் தொடங்கி பின்னர் வானியலில் பயன் தரும் வானொலியலைகள் முனைமைப்படுத்துதல் (polarization, போலரைசேசன்) பற்றிய துறைகளில் ஆய்வைச் செலுத்தினார். இதன் பயனாக வான் ஆலன் பட்டையைப் (Van Allen Belt) போன்றே வியாழன் கோளை ஒட்டியுள்ள பட்டைகளில் இருந்து வெளிப்படும் வானொலியலைகளை உணர்ந்தறிதல், வியாழன் கோளின் கருப்பகுதியின் சுழற்சியை முதன் முதலில் அறிதல், முதலியவற்றைக் கண்டுபிடிக்க முடிந்தது. இவரே காந்தப் புலத்தில் பிரிவுறும் இசீமன் விளைவு (Zeeman effect) வழியாக ஐதரசன் அணுக்கள் வெளிவிடும் 21 செ.மீ அலைகளை முறையாக அலசினார்[1]. இதே போல வேலார் பல்சார் விண்மீனில் (Velar Pulsar) இருந்து வெளிப்படும் அலைகளின் முனைமைப்படுதல்களை அளவீடு செய்து நொதுமி விண்மீன்களின் (நியூட்ரான் விண்மீன்) காந்தமயப்படுத்தப்பட்ட சுழற்சிகளை அறிய உதவினார்.

Remove ads

அறிவியல் வெளியீடுகள்

பேராசிரியர் இராதாகிருட்டிணன் 80 உக்கும் மேலான ஆய்வுக்கட்டுரைகளை அறிவியல் இதழ்களிலும் அனைத்துலக ஆய்வரங்குகளிலும் வெளியிட்டுள்ளார்.[2]. இவர் சூப்பர்நோவாக்களைப் பற்றிய ஓர் ஆய்வரங்கின் கட்டுரைத்தொகுப்பு ஒன்றின் இணைத் தொகுப்பாசிரியராகவும் இருந்திருக்கின்றார். (“Supernovae : their Progenitors and Remnants” (1985).[3] இவர் விண்ணியற்பியல், வானியல் ஆய்விதழின் ஆசிரியர் குழுவின் தலைவராக இருந்தார் (Journal of Astrophysics and Astronomy).

Remove ads

உசாத்துணை

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads