ஆர்மோனியம்

விசைப்பலகை வகையைச் சேர்ந்த ஓர் இசைக்கருவி From Wikipedia, the free encyclopedia

ஆர்மோனியம்
Remove ads

ஆர்மோனியம் (Harmonium) என்பது விசைப்பலகை வகையைச் சேர்ந்த ஓர் இசைக்கருவி ஆகும். துருத்தி போல் அமைந்த அமைப்பைக் கைகளால் அல்லது கால்களால் இயக்கும்போது, கருவியின் உள்ளே அமைந்த உலோக நாக்குகளின் மேலாகக் காற்றுச் செல்வதனால் ஒலி உருவாகிறது. இவ்வாறு ஒலி உருவாக்கும் கருவிகளில் சிலவற்றில் துருத்தியின் இயக்கம் காற்றை உலோக நாக்குகளின் மீது செலுத்தி அவற்றை அதிரவைத்து ஒலி எழுப்புகின்றன. இவை அழுத்தி துருத்திவகை எனப்படுகின்றன. வேறு சிலவற்றில் துருத்தியை இயக்கும்போது வெளியிலிருந்து உறிஞ்சப்படும் காற்று உலோக நாக்குகளைத் தடவிச் செல்லும்போது ஒலி எழுகின்றது. இவை உறிஞ்சு துருத்திவகை என்று அழைக்கப்படுகின்றன. ஐரோப்பிய நாடுகளில் மேற்சொன்ன இரு வகைக் கருவிகளையுமே ஆர்மோனியம் என்கின்றனர். வட அமெரிக்காவில் அமுக்கவகைக் கருவியே ஆர்மோனியம் எனப்படுகிறது. இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் பயன்படும் ஆர்மோனியங்கள் பொதுவாகக் கைகளால் இயக்கப்படுபவை. அமுக்க வகையைச் சார்ந்தவை.

Thumb
காலால் அழுத்தி இசைக்க கூடிய அமைப்பில் உள்ள மேல்நாட்டு ஆர்மோனியம்
Remove ads

வரலாறு

Thumb
தெற்காசியப் பாணியிலான இடத்துக்கிடம் எடுத்துச் செல்லக்கூடிய ஆர்மோனியம்

பிரெஞ்சு நாட்டவரான அலெக்சாண்டர் தெபைன் என்பவர் 1840 ஆம் ஆண்டில், முதன் முதலாக இதனை உருவாக்கினார், எனினும், இது போன்ற வேறு இசைக்கருவிகள் வேறு பலராலும் இதே காலத்தில் உருவாக்கப்பட்டன.[1] 19 ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியிலும், 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் மேலை நாடுகளில் இதன் பயன்பாடு உச்ச நிலையில் இருந்தது. இது, பெரிய தேவாலயங்களில் பயன்படுத்தப்பட்ட குழாய் ஆர்கன்களை விட அளவில் சிறியனவாகவும், மலிவாகவும் இருந்ததனால், அக்காலத்தில், சிறிய தேவாலயங்களிலும் சிற்றாலயங்களிலும் இதனை விரும்பிப் பயன்படுத்தினர். எடுத்துச் செல்வதற்கு இலகுவாக இருந்த இக்கருவி அக்கால ஐரோப்பிய வல்லரசுகளின் குடியேற்ற நாடுகளுக்கும் பரவியது.

மேலை நாடுகளில் இக்கருவி புகழ் பெற்றிருந்த 1900 ஆண்டுக் காலப் பகுதியில், பல்வேறு பாணிகளில் ஆர்மோனியங்கள் உருவாக்கப்பட்டன. எளிமையான அலங்காரங்கள் அற்ற பெட்டிகளுடன் கூடிய ஆர்மோனியங்கள் முதல் பெரிய அளவிலான, அழகூட்டல்களுடன் கூடியவையுமான பெட்டிகளைக் கொண்ட ஆர்மோனியங்கள் வரை உருவாகின. விலை கூடிய ஆர்மோனியங்கள் குழாய் ஆர்கன்களைப் போல் தோன்றுமாறு செய்யப்பட்டன. இதற்காக குழாய் ஆர்கன்களில் உள்ளது போன்ற ஆனால் போலியான குழாய்கள் ஆர்மோனியத்துடன் பொருத்தப்பட்டன. சில வகை ஆர்மோனியங்கள் இரண்டு விசைப்பலகைகளுடன் அமைக்கப்பட்டதுடன், காலால் இயக்கும் விசைப்பலகைகளைக் கொண்ட ஆர்மோனியங்களும் உருவாக்கப்பட்டன. இவ்வாறான ஆர்மோனியங்களின் துருத்திகளை இயக்குவதற்கு ஒரு உதவியாளர் தேவை. சில பிற்கால ஆர்மோனியங்களில் இதற்காக மின் இயக்கிகள் பயன்பட்டன.

Thumb
1930 ஆம் ஆண்டில் ஆலந்தில் தயாரிக்கப்பட்ட ஒர் ஆர்மோனியம்

1930 களில் மின்னணு ஆர்கன்களின் அறிமுகத்துடன் மேலை நாடுகளில் ஆர்மோனியத்துக்கான வரவேற்புக் குறையத் தொடங்கியது. அம்மன்ட் ஆர்கன் (Hammond organ) எனப்படும் மின் ஆர்கன், குழாய் ஆர்கன்களின் ஒலிப் பண்பைக் கொடுக்கக்கூடியதாக இருந்ததுடன், விலை, அளவு ஆகியவற்றில் ஆர்மோனியத்துடன் ஒப்பிடக் கூடியனவாகவும் இருந்தன. பெருமளவில் ஆர்மோனியத்தைத் தயாரித்து வந்த கடைசி மேல் நாட்டு நிறுவனமான எசுட்டே கம்பனி தனது உற்பத்தியை 1950-களின் நடுப்பகுதியில் நிறுத்திக் கொண்டது. தற்காலத்தில் மேலை நாடுகளிலுள்ள ஆர்மோனியங்கள் பெரும்பாலும் ஆர்வலர்களிடமே உள்ளன. எனினும், இந்தியா போன்ற தெற்காசிய நாடுகளில் ஆர்மோனியம் இன்னும் ஓரளவு பயன்பாட்டில் உள்ளது.

மேலை நாட்டு அமைப்பை அடிப்படையாகக் கொண்டிருந்தாலும், தெற்காசிய ஆர்மோனியங்கள் அப்பகுதிகளின் தேவைகளுக்கு ஏற்ப பல மாற்றங்களைப் பெற்றன. தெற்காசிய இசைகளில் ஒன்றுக்கு மேற்பட்ட சுரங்களை ஒரே நேரத்தில் வாசிக்க வேண்டிய தேவை இல்லாததனால் விசைப்பலகைகளை இயக்க இரண்டு கைகளையும் பயன்படுத்த வேண்டிய தேவை இல்லை. அத்துடன் தெற்காசிய இசைக் கலைஞர்கள் நிலத்தில் இருந்தே நிகழ்ச்சிகளை நடத்துவதால், மேலை நாட்டு ஆர்மோனியங்களில் இருந்ததுபோல் கால்கள் போன்ற கீழ் அமைப்புகள் எதுவும் தேவையாக இருக்கவில்லை. துருத்தியும், மறு கையால் இயக்குவதற்கு வசதியாகக் கருவியின் பின்புறத்தில் அமைக்கப்பட்டது.

Remove ads

அமைப்பு

ஆர்மோனியத்தில், பல உறுப்புகள் உள்ளன. அவற்றின் மீது காற்று உரசிச் செல்லும்போது ஒலி எழுப்பும் உலோக நாக்குகள், காற்றைச் செலுத்தும் அமைப்பு, சுருதிக் கட்டைகள், விசைப்பலகை என்பன இவற்றுள் முக்கியமானவை. ஆர்மோனியத்தில் துருத்தியை இயக்கும்போது காற்று நேரடியாக உலோக நாக்குகளின் மீது செலுத்தப்படுவதில்லை. வெளித் துருத்தி உள்ளே இருக்கும் உட் துருத்திக்குக் காற்றைச் செலுத்த அங்கிருந்து காற்று உலோக நாக்குகள் மீது ஒரே சீராகச் செலுத்தப்படுவதனால் தொடர்ச்சியான ஒலி உண்டாகின்றது. 19 மற்றும் 20 ஆம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த சில வகை ஆர்மோனியங்களில் வெளித்துருத்தியில் இருந்து நேரடியாகவே நாக்குகள் மீது காற்றைச் செலுத்துவதற்கான வசதிகளும் இருந்தன. இதனால், அனுபவம் மிக்க கலைஞர்கள் காற்றின் ஓட்டத்தைத் தாமே கட்டுப்படுத்தி வேண்டிய விதத்தில் இசையை உருவாக்கக் கூடியதாக இருந்தது.

Remove ads

இந்தியாவில் ஆர்மோனியம்

Thumb
இந்திய ஆர்மோனியம் வாசிக்கும் ஒரு கலைஞர்.

19 ஆம் நூற்றாண்டில் கிறித்தவ மத அமைப்புக்களைச் சேர்ந்தவர்கள், பிரான்சில் உருவாக்கப்பட்ட, கையால் இயக்கிக் காற்றுச் செலுத்தக்கூடிய ஆர்மோனியங்களை இந்தியாவுக்குக் கொண்டுவந்தனர். இலகுவாக இடத்துக்கிடம் எடுத்துச் செல்லத் தக்கதாகவும், நம்பத் தகுந்ததாகவும், கற்றுக்கொள்வதற்கு இலகுவாகவும் இருந்ததனால் விரைவிலேயே இது மக்களால் விரும்பப்படுகின்ற ஒரு இசைக்கருவி ஆனது. இந்தியாவின் பல விதமான இசைகள் தொடர்பில், இன்றுவரை ஆர்மோனியம் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இது மேல்நாட்டிலிருந்து இந்தியாவுக்கு அறிமுகமானாலும், இந்திய இசையின் தனித்துவமான தேவைகளுக்கேற்ப பலவிதமான மாற்றங்களை இந்திய ஆர்மோனியம் பெற்றுள்ளது.

ஆர்மோனியத்திற்கான எதிர்ப்பு

19 ஆம் நூற்றாண்டில் கர்நாடக இசை, பார்சி, மராட்டிய இசைகள் போன்ற பல்வேறு இந்திய இசை நிகழ்ச்சிகளில் ஆர்மோனியம் முக்கியமான இடத்தைப் பெற்றிருந்தது. 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஏற்பட்ட தேசிய எழுச்சியினால் ஆர்மோனியமும் ஒரு வெளிநாட்டுப் பொருளாகப் பார்க்கப்பட்டு, அதற்கு எதிர்ப்பு உருவானது. அத்தோடு பல்வேறு நுட்பக் காரணங்களும் ஆர்மோனியத்துக்கு எதிராக அமைந்தன. கர்நாடக, இந்துத்தானி இசைகளுக்கு இன்றியமையாத கமகங்களை ஆர்மோனியத்தில் வாசிப்பது கடினம். இதில் 12 சுரத்தானங்களே இருப்பதால் 16 சுரத்தானங்களைக் கொண்ட இந்திய இசையை வாசிப்பதில் சிக்கல்கள் உள்ளன. கன ராகங்கள் எனப்படும் சங்கராபரணம், பைரவி, கல்யாணி போன்ற இராகங்களை ஆர்மோனியத்தில் வாசிக்க முடியாது. அத்துடன் இது எழுப்பும் ஒலியும் அதிகம்.

இவ்வாறான பல காரணங்களால், அகில இந்திய வானொலி தனது நிகழ்ச்சிகளில் ஆர்மோனியத்துக்குத் தடை விதித்தது. இத்தடை அப்போதைய இந்தியப் பிரதமர் சவகர்லால் நேருவின் ஆணைக்கு இணங்கவே விதிக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.[2]. கர்நாடக இசை நுட்பங்களை அறிந்தவரான சுப்பிரமணிய பாரதியாரும் ஆர்மோனியத்தை எதிர்த்துக் கட்டுரை எழுதியுள்ளார்.[3].

Remove ads

குறிப்புகள்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads