சிறீநகர் வானூர்தி நிலையம்
சேக் உல்-ஆலம் பன்னாட்டு வானூர்தி நிலையம் அல்லது பரவலாக சிறீநகர் பன்னாட்டு வானூர்தி நிலையம் சம்மு காசுமீரின் வேனிற்கால தலைநகரமான சிறீநகருக்கு சேவை வழங்கும் பன்னாட்டு வானூர்தி நிலையம் ஆகும். இந்திய வான்படைக்குச் சொந்தமான இந்த நிலையத்திலிருந்து இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம் பொதுப்பயன்பாட்டிற்கான தனிவளாகத்தை பராமரித்து வருகின்றது. 2005இல் இது பன்னாட்டு வானூர்தி நிலையமாக அறிவிக்கப்பட்டாலும் ஏப்ரல் 2018 வரை பட்டியலிடப்பட்ட பன்னாட்டு பறப்புகள் எதுவும் இங்கிறங்கவில்லை; ஹஜ் பறப்புகள் சில இயக்கப்பட்டுள்ளன. உள்நாட்டுப் பறப்புகளுக்கும் பன்னாட்டுப் பறப்புகளுக்கும் ஒருங்கிணைந்த முனையம் உள்ளது. ஓடுபாதை அசுபால்ட்டால் ஆனது. சிறீநகரிலிருந்து வடக்கே 12 கிலோமீட்டர்கள் (7.5 mi) தொலைவிலுள்ள வானூர்தி நிலையத்திலிருந்து நகரத்திற்குச் செல்ல பேருந்து, வாடகையுந்து வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.