தாண்டிக்குளம் தொடருந்து நிலையம்
தாண்டிக்குளம் தொடருந்து நிலையம் இலங்கையின் வடக்கே வவுனியா மாவட்டத்தில் தாண்டிக்குளம் நகரில் அமைந்துள்ள தொடருந்து நிலையம் ஆகும். இது இலங்கை அரசின் ரெயில்வே திணைக்களத்தின் நிருவாகத்தில் இயங்குகின்றது. வடக்குப் பாதையின் ஓர் அங்கமாக உள்ள இந்நிலையம் வடக்கையும் தலைநகர் கொழும்பையும் இணைக்கின்றது. பிரபலமான யாழ் தேவி சேவை இந்நிலையத்தினூடாக நடைபெறுகின்றது. ஈழப்போரின் போது இத்தொடருந்து நிலையம் ஏனைய வட மாகாணத் தொடருந்து நிலையங்களைப் போன்று சேதமடைந்து யூன் 1990 முதல் இயங்காமல் இருந்தது. 2009 இல் ஈழப்போர் முடிவடைந்ததை அடுத்து இந்நிலையம் புனரமைக்கப்பட்டு 2009 யூன் 6 முதல் மீண்டும் சேவையாற்றுகின்றது. அன்றில் இருந்து யாழ்தேவி சேவை கொழும்பில் இருந்து தாண்டிக்குளம் வரை சேவையாற்றி வந்தது. பின்னர் ஓமந்தை நிலையம் 2011 மே 27 இல் திறக்கப்பட்டதை அடுத்து ஓமந்தை வரை யாழ்தேவி சென்று வந்தது. 2013 செப்டம்பர் 14 முதல் கொழும்பில் இருந்து கிளிநொச்சி வரை தாண்டிக்குள ஊடாக யாழ்தேவி பயணிக்கின்றது.