தாய்நாடு அழைக்கிறது (சிலை)
தாய்நாடு அழைக்கிறது, அல்லது தாய் தாய்நாடு, தாய் தாய்நாடு அழைக்கிறது, அல்லது சுருக்கமாக தாய்நாடு, அல்லது மமாயேவ் சின்னம் என்பது ரஸ்யாவின் வோல்கோகிராட்டிலுள்ள மமாயேவ் குர்கனிலுள்ள ஒரு சிலையாகும். இது ஸ்டாலின்கிராட் போரின் நினைவாகக் கட்டப்பட்டது. இது யெவ்ஜெனி வுசெடிச் எனும் சிற்பியாலும், நிகோலாய் நிகிடின் எனும் கட்டுமானப் பொறியியலாளராலும் வடிவமைக்கப்பட்டது. 1967ல், உலகின் மிகப்பெரிய சிலையாக பிரகடனப்படுத்தப்பட்ட இதுவே மிகப்பெரிய சிலையாகப் பிரகடனப்படுத்தப்பட்ட இறுதிச் சமயச்சார்பற்ற சிலையாகும். இதற்குப்பிறகு மிகப்பெரிய சிலையாக பிரகடனப்படுத்தப்பட்டவை அனைத்தும் பௌத்த சமயம் சார்ந்த சிலைகளாகும். இதற்குப் பின்னரான உயரமான சிலைகளுடன் ஒப்பிடும் போது, தாய்நாடு அழைக்கிறது பொறியியல் ரீதியில், குறிப்பிடத்தக்களவு சிக்கல் தன்மை வாய்ந்தது. இதற்குக் காரணம், அதன் தோற்றமாகும். இதன் வலது கை ஒரு வாளை உயர்த்திப் பிடித்திருப்பதுடன், இதன் இடது கை அழைக்கும் பாவனையில் நீண்டிருக்கிறது. இதன் கட்டுமானத்துக்காக கம்பிவடத்துடனான முன்தகைப்புக் காங்கிறீற்றுக் கலவை பயன்படுத்தப்பட்டுள்ளது. இத் தொழில்நுட்பம் நிகிடினின் இன்னொரு கட்டமைப்பான மாஸ்கோவிலுள்ள ஒஸ்டாங்கினோ கோபுரத்திலும் பயன்படுத்தப்பட்டுள்ளது.