Map Graph

திருச்செங்குன்றூர்

108 வைணவத் திருத்தலங்களில் ஒன்று

திருச்செங்குன்றூர் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். நம்மாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் திருச்சிற்றாற்று மகாவிஷ்ணு கோயில் எனவும் அழைக்கப்படுகிறது. கேரள மாநிலம் ஆலப்புழை மாவட்டத்தில் அமைந்துள்ள இத்தலம் மகாபாரதத்தில் பஞ்ச பாண்டவர்களுள் தருமரால் கட்டப்பட்ட தலம் எனக் கருதப்படுகிறது. மகாபாரதப் போரில் துரோணாச்சாரியாரைக் கொல்வதற்காகத் தருமன் பொய் சொன்னதை எண்ணி, மனம் வருந்தி போர்முடிந்த பிறகு இத்தலத்தில் வந்து மன அமைதிக்காக தவமிருந்ததாகவும், அப்போது சிதலமடைந்திருந்த இத்தலத்தை தருமன் புதுப்பித்ததால் இத்தலத்தையும் இங்குள்ள எம்பெருமானையும் தர்மனே நிர்மாணம் செய்தாரெனவும் கருதப்படுகிறது. இக்கோயிலின் இறைவன் மேற்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் இமையவரப்பன் என்ற பெயருடன் காட்சி தருகிறார். தருமன் இங்கு வருவதற்குப் பல்லாண்டு முன்பே இத்தலம் சிறப்புற்றிருந்தது எனலாம். இமையவர்கள் (தேவர்கள்) இங்கே குழுமியிருந்து திருமாலைக் குறித்து தவம் புரிந்தனர் என்றும் அவர்களுக்கு திருமால் இவ்விடத்து காட்சி தந்ததால் “இமையவரப்பன்” என்ற பெயர் இறைவனுக்கு உண்டாயிற்றென்றும் செவிவழிச் செய்திகளாகவே அறியமுடிகிறது. இறைவி:செங்கமலவல்லி. தீர்த்தம்: சிற்றாறு. விமானம்: ஜெகஜோதி விமானம் என்ற அமைப்பினைச் சேர்ந்தது. நம்மாழ்வாரால் மட்டும் 10 பாசுரங்களில் பாடல்பெற்றுள்ளது.

Read article