விருகம்பாக்கம்
விருகம்பாக்கம் (Virugambakkam) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலிலுள்ள சென்னையின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு குடியிருப்புப் பகுதியாகும். இப்பகுதியில் சிறந்த பள்ளிகள், சந்தைகள், திரைப்படக் கலைஞர்களின் வீடுகள் உள்ளன. இங்கு சென்னையின் மிக பழமையான மற்றும் மிகப் பெரிய திரைப்பட படப்பிடிப்பு நிறுவனங்கள் உள்ளன. விருகம்பாக்கம் சென்னையின் முக்கியமான இடங்களில் ஒன்றாகும். விடுதலைக்குப் பின்னர் இப்பகுதி மிக வேகமாக வளர்ந்தது. இப்பகுதியின் வளர்ச்சி சென்னை நகரத்தின் விரிவாக்கத்திற்கு பெரிதும் கடமைப்பட்டிருக்கிறது. குடியிருப்பு காலனிகள் இங்கு ஏற்படுத்துவதற்கு முன்னர் நெல் வயல்கள், மாம்பழத் தோட்டங்கள் மற்றும் சவுக்கு மரங்களால் சூழப்பட்ட ஒரு கிராமமாக விருகம்பாக்கம் இருந்தது. விருகம்பாக்கம் முதன்முதலில் சாலிகிராமம் போன்ற கிராமங்களுடன் சேர்ந்து சென்னை நகர எல்லைக்குள் 1977-ஆம் ஆண்டில் சேர்க்கப்பட்டது.