அகரமுதலி அல்லது அகராதி (ஒலிப்பு) (Dictionary) என்பது ஒரு மொழியில் உள்ள சொற்களை அகர வரிசைப்படி தொகுத்து, அவற்றுக்கான பொருளைத் தரும் நூல்.[1] சில சமயங்களில் அச்சொற்கள் தொடர்பான வேறுபல விவரங்களையும் இது உள்ளடக்கி இருக்கும். அகராதி என்ற சொல் அகரம், ஆதி என்ற இரண்டு சொற்களின் சேர்க்கையாலானது (அகரம் + ஆதி = அகராதி).[2] இந்த நூலிலே சொற்கள் அகர வரிசையில் அமைக்கப்பட்டிருக்கும். ஒரே சொல்லில் தொடங்கும் சொற்கள், அவற்றில் இரண்டாவது எழுத்தைக் கொண்டு அகர வரிசைப்படுத்தப்படும். இவ்வாறே சொல்லின் இறுதி எழுத்து வரை அகரவரிசை பின்பற்றப்படும்.

Thumb
சிறிய ஆங்கில-தமிழ் அகரமுதலி

வகைகள்

ஒரு மொழியிலுள்ள சொற்கள் அனைத்தையும் அகர முதலிய எழுத்து வரிசையில் அமையும்படி ஒரு சேரத் தொகுத்து, அவற்றின் பொருள்களை, அம்மொழியாலேனும், பிறமொழியாலேனும் விளக்கும் நூல் அகராதி எனப்படும். அகராதி என்னும் சொல்லின் 'ஆதி' என்னும் சொல் வடமொழி என்பதால், மொழிஞாயிறு பாவாணர் அகரமுதலி என்று அழைத்தார். சொல்லின் பெருளைத் தவிர, அதன் தோற்றம், ஆட்சி, அது வந்துள்ள நூல், இடம் முதலியவற்றையும் பெரிய அகராதிகளில் காணலாம். இவ்வாறு பொதுப்பட அமைந்துள்ள சொல்லகராதியேயன்றி, ஏதேனும் ஒரு பொருட்கு அல்லது, ஒரு தொழிற்குரிய சொற்கள், சொற்களின் தோற்றம், ஒரு நாட்டின் பல பகுதிகளிலும் வழங்கும் மொழிபேதங்கள் (Dialects) இவற்றைப் பற்றித் தனித்தனி அகராதிகள் தோன்றுதலும் உண்டு. அன்றியும், ஏதேனும் ஒரு நூலில் வந்துள்ள முக்கியமான சொற்களைத் தேர்ந்தெடுத்து, அவற்றை அகராதி முறையில் அமைத்து, அவை வந்துள்ள இடங்களையும் சுட்டி, அந்நூலின் பிற்சேர்க்கையாகவேனும் தனிப்படவேனும் வெளியிடுதலும் உண்டு. இவ்வகை முறையில் அமைந்துள்ளதற்கு அருஞ்சொல் அகராதி என்று பெயர்.

இங்ஙனமன்றி, ஒரு நூலிலுள்ள முக்கிய சொற்களை அல்லது பொருட்கூறுகளைத் தொகுத்து அவற்றை அகர வரிசைப்படுத்தி, அவற்றின் கீழ், அவை பயின்றுள்ள தொடர்களையும் இடங்களையும் தருவது பிறிதொருவகை அகராதி. இதனை ஆங்கிலத்தில் கங்கார்டன்ஸ் (Concordance) என்பர். சொற்களைப் பற்றியது சொற்கோவை-அகராதி (Verbal concordance) எனவும், பொருட் கூறுகளைப் பற்றியது பொருட் கோவை-அகராதி (Real concordance) எனவும் கூறத்தகும். திருக்குறள் முதலிய தலைசிறந்த நூல்களுக்கு இவ்வகை அகராதிகள் இயற்றல் பெரும் பயன் அளிக்க வல்லது. மேற்குறித்த அகராதி வகைகளேயன்றி, கலை முதலிய அறிவுத் துறைகள் பற்றிய சொற்களை முறைப்படுத்தி அருஞ்சொற்களை விளக்குவதும் ஒருவகை அகராதியாகும். இதனை அறிவுத்துறை அருஞ்சொல் விளக்க அகராதி (Glossary) என்னலாம்.

நிகண்டும், உரியியலும்

இந்நிகண்டுகள் கடின பதங்களுக்கு மாத்திரம் பொருள் கூறின. வெளிப்படு சொல்லே கிளத்தல் வேண்டா என்பது தொல்காப்பியம். அன்றியும் ஆன்றோராட்சியில் வந்த செஞ்சொற்களை நிரலேகொடுத்து, அவற்றை விளக்குதலும் நிகண்டுகளின் நோக்கமாய் அமைந்தது. வழக்கெனப்படுவது உயர்ந்தோர் மேற்றே என்று தொல்காப்பியம் கூறுவது இதனை வலியுறுத்தும். சொற்களை ஆராய்ந்து தேர்ந்தெடுத்து, அவை வழங்கு முறை இவ்வாறு என்பதைத் துணிதலும் இந்நிகண்டுகளின் பிறிதொரு நோக்கம்.

நிகண்டுகளின் வழிவழியே வந்ததுதான் அகரமுதலி. இப்பெயர் முதன்முதலிற் காணப்படுவது, கி. பி. 1594-ல் இயற்றி முடித்த அகராதி நிகண்டு என்ற நூலின் பெயரிலேயாகும். இதன் ஆசிரியர் சிதம்பர ரேவண சித்தர் என்னும் வீரசைவப் புலவர். இவர் இட்ட பெயரே, இப்பொழுது 'டிக்ஷனரி' (Dictionary) என்று ஆங்கிலத்திற் கூறும் நூலுக்குரிய தமிழ்ப் பெயராய் அமைந்துவிட்டது.

அகராதிகள் தோன்றுவதற்குமுன் இருந்த நிகண்டுகள் மனப்பாடஞ் செய்வதற்கு என்று ஏற்பட்டன. முற்காலத்தில் அச்சுப்பொறி இல்லாததால் மனப்பாடமே வேண்டப்படுவதாயிற்று. சுமார் கி. பி. 10 ஆம் நூற்றாண்டிலிருந்து நிகண்டுகளின் வரலாறு நமக்குத் தெளிவாயுள்ளது. தமிழில் முதன்முதல் தோன்றிய நிகண்டு திவாகரம் என்பதாகும். இவ்வகை நிகண்டுகளில் முக்கியமானவற்றிலுள்ள சொற்களை யெல்லாம் திரட்டிச் சதுரகராதி தந்துள்ளது. ஆங்கிலத்தில் டாக்டர் ஜான்சன் தமது அகராதியை 1755-ல் வெளியிட்டனர். இதற்குச் சுமார் 25 ஆண்டுகட்கு முன்பாகவே சதுரகராதி தோன்றியதாகும். வரலாற்றைக் காணும் போது, பல குறைகள் தெரியவரும். பொதுவாக அகரமுதலி வேலை, மேலும் மேலும் நடைபெற்றுக்கொண்டே செல்லவேண்டியது என்பதை மறக்கலாகாது.

மொழியின் வளர்ச்சி, நமது வாழ்க்கையின் வளர்ச்சியைப் பொறுத்தது. இம்மொழி வளர்ச்சிக்குச் சொல்லின் வளர்ச்சி, ஒரு சிறந்த அறிகுறியாயுள்ளது. நமது வாழ்க்கை வளமுறுவதானால், சொற்கள் பெருகிக் கொண்டுதான் செல்லும். அகரமுதலி வேலைக்கு எல்லையே இல்லை. குறைபாடுகளைத் திருத்துவதும் சொற்களின் பிறப்பு வரலாற்றை மொழிநூல் முறையில் உணர்த்தி, காலம் கணிப்பதுபோல் விவரங்கள் தருவதும், சொல்லின் வடிவங்களையும் பொருள்களையும் காலக்கிரமத்தில், வரலாற்று முறையில் நிறுவி, இன்ன சொல் இன்ன காலத்தில் இன்ன வடிவம் பெற்றது, இன்ன சொல் இன்ன காலத்தில் இன்ன பொருள் பெற்றது என்பன முதலிய விவரங்களை நூல்களின் ஆதாரங்கொண்டு தெளித்து உணர்த்துவதும், புதுச்சொற்களைச் சேர்ப்பதும் கலைக் குறியீட்டு மொழி அகராதிகளையும், கொடுந்தமிழ், திசைச் சொல் பற்றிய அகராதிகளையும் சொற்பிறப்பு அகரமுதலிகளையும் இயற்றுவதும் தமிழ் மொழி வளர்ச்சிக்கு இன்றியமையாத பெருஞ்செயல்களாகும். சுருங்கச் சொல்லின், ஆங்கிலத்திலுள்ள நூதன ஆங்கிலப் பேரகராதி (New English Dictionary) யின் முறைகளை முற்றும் தழுவி, ஒரு தமிழ்ப் பேரகராதி இயற்றுதல் தமிழ் அறிஞர்களது கடமைகளில் ஒன்றாகும்.

மேற்கோள்கள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.