கிறித்தோபர் கொலம்பசு
இத்தாலிய நாடுகாண் பயணி, வணிகர் மற்றும் காலனித்துவவாதி / From Wikipedia, the free encyclopedia
கிறித்தோபர் கொலம்பசு (Christopher Columbus) (1451–1506) இத்தாலிய நாடுகாண் பயணியும் வணிகரும் காலனித்துவவாதியும் ஆவார். இவர் 1492-இல் அட்லாண்டிக் கடலைக் கடந்து அமெரிக்காவை (எசுப்பானியா நாட்டுக் கொடியுடன்) வந்தடைந்த முதல் ஐரோப்பியர் ஆவார். அவர் இத்தாலியின் செனோவா என்ற குடியரசைச் சேர்ந்தவர் என்று கருதப்படுகிறது.[1][2][3][4]
கிறித்தோபர் கொலம்பசு Christopher Columbus | |
---|---|
கொலம்பசின் இறந்தபின்னரான உருவப் படம் (வரைந்தவர்: ரிடொல்ல்ஃபோ கேர்லாண்டையோ | |
பிறப்பு | ஆகத்து-அக்டோபர் 1451 ஜெனோவா, இத்தாலி |
இறப்பு | (1506-05-20)மே 20, 1506 வல்லடோலிட், எசுப்பானியா |
கல்லறை | செவீயா பெருங்கோவில் |
தேசியம் | ஜெனோவியர்(சர்ச்சைக்குரியது) |
மற்ற பெயர்கள் | கிறித்தோபரோ கொலம்பசு கிறித்தோபல் கொலோன் |
பட்டம் | பெருங்கடல் ஆட்மிரல் |
சமயம் | ரோமன் கத்தோலிக்கம் |
வாழ்க்கைத் துணை | பிலிப்பா மோனிஸ் |
பிள்ளைகள் | டியேகோ பெர்னாண்டோ |
உறவினர்கள் | பார்த்தலோமியோ (உடன்பிறந்தவர்) டியேகோ (உடன்பிறந்தவர்) |
கையொப்பம் |
எசுப்பானியப் பேரரசின் கத்தோலிக்க பேரரசர்களின் ஆட்சியில் கொலம்பசு நான்கு கடற்பயணங்களை அத்திலாந்திக்கு பெருங்கடலைக் கடந்து மேற்கொண்டுள்ளார். இந்தக் கடற்பயணங்களும் லா எசுப்பானியோலா தீவில் இவர் நிரந்தரக் குடியேற்றம் அமைக்க மேற்கொண்ட முயற்சிகளும் புதிய உலகம் என அழைக்கப்பட்ட அமெரிக்காக்களில் எசுப்பானிய குடியேற்றத்தைத் துவக்கின.
புதிய வணிக வழிகளைக் கண்டறிந்து குடியேற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்ற மேற்கத்திய பேரரசுவாத போக்கு மற்றும் ஐரோப்பிய இராச்சியங்களிடையேயான பொருளியல்நிலை போட்டியில் கிழக்கத்திய இந்தியாவை எட்ட கொலம்பசு மேற்கில் பயணித்து உலகைச் சுற்றி இந்தியாவை அடைய முன்மொழிந்தார். இதற்கு எசுப்பானிய அரசரின் ஆதரவைப் பெற்ற கொலம்பசு 1492இல் மேற்கில் பயணித்து புதிய உலகத்தை கண்டறிந்தார். பகாமாசு தீவுக்கூட்டங்களில் தாம் பின்னர் சான் சால்வதோர் எனப் பெயரிட்ட தீவில் வந்திறங்கினார். மேலும் மேற்கொண்ட மூன்று கடற்பயணங்களில் கொலம்பசு பெரிய மற்றும் சிறிய அண்டிலிசு தீவுகளையும் வெனிசுவேலா, நடு அமெரிக்காவின் கரிபியக் கடலோரப் பகுதிகளையும் கண்டறிந்து அவற்றை எசுப்பானியப் பேரரசுக்கு உரியதாக உரிமை கோரினார்.
கொலம்பசு அமெரிக்காவை அடைந்த முதல் ஐரோப்பியரல்லர்; 11வது நூற்றாண்டிலேயே லீப் எரிக்சன் தலைமையேற்ற நோர்சு குழு வட அமெரிக்காவில் இறங்கியுள்ளது.[5]) இருப்பினும் இவரது கடற்பயணங்களே அமெரிக்காக்களுடனான ஐரோப்பாவின் முதல் நிரந்தர தொடர்பை ஏற்படுத்தியது; இவற்றை அடுத்தே பல நூற்றாண்டுகளுக்கு ஐரோப்பியர்களின் நாடுகாணுதல், கைப்பற்றுதல், குடியேற்றவாதம் தொடர்ந்தன. எனவே இவரது கண்டறிதல் தற்கால மேற்கத்திய உலகின் வரலாற்றில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நிகழ்வாக அமைந்தது.[1]
இதுவரை ஐரோப்பியர்கள் கண்டறியாத புதிய கண்டத்தை வந்தடைந்துள்ளோம் என்பதை ஏற்றுக்கொள்ளாத கொலம்பசு இங்கு வாழ்ந்திருந்த மக்களை இன்டியோசு ("இந்தியர்களுக்கான" எசுப்பானியச் சொல்) என்றே அழைத்தார்.[6][7][8] அமெரிக்காவில் குடியேற்றப்பகுதிகளுக்கு நிர்வாக அதிகாரிகளை நியமித்தது தொடர்பான எசுப்பானிய பேரரசருடனான பிணக்கு காரணமாக 1500இல் லா எசுப்பானியோலாவின் ஆளுநர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். பின்னால் நீண்ட வழக்காடலுக்குப் பின்னர் கொலம்பசும் அவரது வாரிசுகளும் கோரிய உரிமைகள் அவர்களுக்கு வழங்கப்பட்டன.