பிரான்சிய மொழி
பிரான்சில் பேசப்படும் மொழி / From Wikipedia, the free encyclopedia
பிரான்சிய மொழி (le français [lœ fʁ̥ɒ̃sɛ] (கேட்கⓘ) அல்லது la langue française [la lɑ̃ɡ fʁɑ̃sɛz]) ஓர் உரோமானிய மொழியாகும். இம் மொழி பிரான்சு, சுவிட்சர்லாந்தின் உரோமண்டிப் பகுதி, பெல்சியத்தின் வல்லோனியா மற்றும் பிரசெல்சுப் பகுதி, மொனாகோ, கனடாவின் கியூபெக்கு மற்றும் நியூ பிரான்சுவிக்கு (அக்காடியா பகுதி) மாகாணங்கள் மற்றும் ஐக்கிய அமெரிக்க மாநிலமான மெய்ன், இலூசியானாவின் அக்காடியானா பகுதி ஆகியவற்றில் முதன்மை மொழியாகப் பேசப்படுகிறது. மேலும் உலகெங்குமுள்ள பல்வேறு சமூகத்தினரும் இம் மொழியைப் பேசுகின்றனர். இதை விட பிரான்சை இரண்டாம் மொழியாகப் பேசுவோர் உலகெங்கிலும் உள்ளனர்.[4] இவர்களில் பெரும்பாலானோர் பிரான்சிய மொழி பேசும் ஆபிரிக்கப் பகுதிகளில் உள்ளனர்.[5] ஆபிரிக்காவில், காபொன் (80%),[5] மொரீசியசு (78%), அல்ஜீரியா (75%), செனகல் மற்றும் ஐவரி கோஸ்ட் (70%) ஆகிய நாடுகளில் பிரான்சிய மொழி பேசுவோர் பெரும்பான்மையாக உள்ளனர். பிரான்சிய மொழியைத் தாய்மொழியாகப் பேசுவோர் 110 மில்லியன் எனவும்,[4] இரண்டாம் மொழியாகப் பேசுவோர் 190 மில்லியன் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.[6]
பிரான்சிய மொழி | |
---|---|
பிரெஞ்சு | |
français | |
உச்சரிப்பு | [fʁɑ̃sɛ] |
நாடு(கள்) | பிரான்ஸ், தற்போது உலகம் முழுவதும் |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 76.8 மில்லியன் (date missing) 321 மில்லியன் மொத்தம் (தாய்மொழி கூடுதலாக 2வது மொழியாக; 2022)[1][2] |
இந்திய-ஐரோப்பிய மொழிகள்
| |
ஆரம்ப வடிவம் | பண்டைய இலத்தீன்
|
இலத்தீன் (பிரான்சிய அரிச்சுவடி) பிரான்சிய பிரெய்லி | |
கையெழுத்து வடிவம் | கையெழுத்திட்டது பிரெஞ்சு (français signé) |
அலுவலக நிலை | |
அரச அலுவல் மொழி | 29 நாடுகள்
நிர்வாக மற்றும் கலாசாரப் பயன்பாடு 10 சார்பு மற்றும் துணை மண்டலங்கள்
அரசுகளுக்கிடையேயான அமைப்புகள் |
Regulated by | பிரான்சிய அகாதமி (பிரான்சு) பிரெஞ்சு மொழிக்கான கியுபெக் வாரியம் (கியூபெக்) |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-1 | fr |
ISO 639-2 | fre (B) fra (T) |
ISO 639-3 | fra |
மொழிக் குறிப்பு | stan1290[3] |
Linguasphere | 51-AAA-i |
பிரான்சியம் முதன்மை மொழியாகப் பேசப்படும் பகுதிகள்
பிரான்சியம் உத்தியோகபூர்வ மொழியாக உள்ள பகுதிகள்
இரண்டாம் மொழியாக உள்ள பகுதிகள்
சிறுபான்மை மொழியாக உள்ள பகுதிகள் | |
இக் கட்டுரை அனைத்துலக பலுக்கல் அரிச்சுவடியின் ஒலியியல் குறியீடுகளைக் கொண்டுள்ளது. முறையான அனைத்துலக பலுக்கல் அரிச்சுவடி உதவியற்று இருந்தால், நீங்கள் பெட்டி போன்ற குறியீடுகளை ஒருங்குறிக்குப் பதிலாகக் காண நேரிடலாம். |
இத்தாலிய மொழி, போர்த்துக்கேய மொழி, எசுப்பானிய மொழி, ரோமானிய மொழி, லொம்பார்ட் மொழி, காட்டலான் மொழி, சிசிலிய மொழி, மற்றும் சார்டினிய மொழி போன்றே பிரான்சிய மொழியும் பேச்சுவழக்கு இலத்தீன் மொழியிலிருந்தே உருவானது. வடக்குப் பிரான்சிலும், பெல்ஜியத்திலும் பண்டைக்காலத்திலிருந்து பேசப்பட்டு வரும் பல மொழிகளுடன் பிரான்சிய மொழி தொடர்புபட்டுள்ளது. எனினும் இம்மொழிகளில் பல பிரான்சிய மொழியின் தாக்கத்தால் வழக்கொழிந்து போயுள்ளன. ரோமானிய கோல் பிரதேசத்தில் பேசப்பட்ட செல்டிக் மொழிகள் மற்றும் ரோமானியருக்குப் பின் பிரான்சை ஆக்கிரமித்த பிராங்கிய ஆக்கிரமிப்பாளர்களின் ஜெர்மானிக் பிராங்கிய மொழி ஆகியன் பிரான்சிய மொழியில் செல்வாக்குச் செலுத்தியுள்ளன. இன்று, பிரான்சின் குடியேற்றவாத ஆட்சியின் காரணமாக பல்வேறு பிரான்சிய மொழியின் அடிப்படையிலான கிரியோல் மொழிகள் உருவாகியுள்ளன. இவற்றுள், எயிட்டிய மொழி குறிப்பிடத்தக்கது.
பிரான்சிய மொழி 29 நாடுகளில் உத்தியோகபூர்வ மொழியாக உள்ளது. இவற்றில் பெரும்பான்மையான நாடுகள் இணைந்து லா பிரான்கோபோனீ எனும் அமைப்பைத் தோற்றுவித்துள்ளன. மேலும் இது ஐக்கிய நாடுகளின் பல்வேறு நிறுவனங்கள் மற்றும் பல்வேறு சர்வதேச அமைப்புக்கள் ஆகியவற்றில் உத்தியோகபூர்வ மொழியாக உள்ளது. பிரான்சின் வெளிநாட்டு மற்றும் ஐரோப்பிய உறவுகள் அமைச்சின் தகவலின் படி, ஐரோப்பாவில் 77 மில்லியன் மக்கள் பிரான்சியத்தைத் தாய்மொழியாகக் கொண்டுள்ளனர். பிரான்சுக்கு வெளியே பிரான்சிய மொழி பேசும் மக்கள் அதிகளவில் கனடா (மக்கள் தொகையில் 25%த்தினர், பெரும்பாலானோர் கியூபெக்கில் வசிக்கின்றனர்), பெல்ஜியம் (மக்கள்தொகையில் 45%த்தினர்), சுவிட்சர்லாந்து (மக்கள்தொகையில் 20%த்தினர்) மற்றும் லக்சம்பேர்க் ஆகிய நாடுகளில் உள்ளனர். 2013ல், அமைச்சு மேற்கொண்ட ஆய்வுகளின்படி, ஐரோப்பாவில் இரண்டாவது பெரும்பான்மை மொழியாக பிரான்சியம் உள்ளது. முதலிடத்தில் ஜெர்மானிய மொழியும் மூன்றாமிடத்தில் ஆங்கில மொழியும் உள்ளன.[7] ஐரோப்பாவில் பிரான்சியத்தைத் தாய்மொழியாகக் கொண்டிராத, 20%மான மக்கள் பிரான்சிய மொழி பேசக்கூடியவர்களாக உள்ளனர்.[தெளிவுபடுத்துக] இது கிட்டத்தட்ட 145.6 மில்லியனாகும்.[8] 17ம் நூற்றாண்டுக்கும், 20ம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில், பிரான்சு மற்றும் பெல்ஜியம் (அவ்வேளையில் இது பிரான்சிய மொழி பேசுவோரால் ஆளப்பட்டது). ஆகியவற்றின் குடியேற்றவாத ஆட்சியின் காரணமாக, அமெரிக்காக்கள், ஆபிரிக்கா, பொலினேசியா, லிவான்ட், தென்கிழக்காசியா மற்றும் கரீபியன் பிரதேசங்களில் பிரான்சிய மொழி அறிமுகமானது.
லாவல் பல்கலைக்கழகம் மற்றும் பிரான்சிய மொழி பேசும் பல்கலைக்கழக ஒன்றியம் ஆகியன நடத்திய சனத்தொகை எதிர்வுகூறல் ஆய்வின்படி, 2025ல் 500 மில்லியன் மக்கள் பிரான்சிய மொழி பேசுவர் எனவும், 2050ல் இது 650 மில்லியன் அல்லது உலக சனத்தொகையின் 7%மாக உயரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.[9][10]