2010 உலகக்கோப்பை காற்பந்து
From Wikipedia, the free encyclopedia
2010 உலகக்கோப்பை கால்பந்து (2010 FIFA World Cup) அல்லது 19வது ஃபீஃபா உலகக்கிண்ணக் கால்பந்து போட்டித்தொடரின் இறுதிப்போட்டிகள் தென்னாப்பிரிக்காவில் 2010 ஜூன் 11 முதல் ஜூலை 11 வரை நடைபெற்றன. முதற் தடவையாக ஆப்பிரிக்க நாடொன்றில் இறுதிச் சுற்று நடைபெறுவது இதுவே முதற்தடவையாகும்.
தென்னாப்பிரிக்கா 2010 | |
---|---|
2010 ஃபீஃபா உலகக் கிண்ண அதிகாரபூர்வச் சின்னம் | |
சுற்றுப்போட்டி விவரங்கள் | |
இடம்பெறும் நாடு | தென்னாப்பிரிக்கா |
நாட்கள் | 11 சூன் – 11 சூலை |
அணிகள் | 32 (6 கூட்டமைப்புகளில் இருந்து) |
அரங்கு(கள்) | 10 (9 நகரங்களில்) |
இறுதி நிலைகள் | |
வாகையாளர் | எசுப்பானியா (1-ஆம் தடவை) |
இரண்டாம் இடம் | நெதர்லாந்து |
மூன்றாம் இடம் | செருமனி |
நான்காம் இடம் | உருகுவை |
போட்டித் தரவுகள் | |
விளையாடிய ஆட்டங்கள் | 62 |
எடுக்கப்பட்ட கோல்கள் | 139 (2.24 /ஆட்டம்) |
பார்வையாளர்கள் | 30,58,112 (49,324/ஆட்டம்) |
அதிக கோல்கள் எடுத்தவர்(கள்) | தொமஸ் முல்லர் டேவிட் வில்லா உவெசுலி சினைச்டர் டீகோ பொர்லான் (5 கோல்கள்) |
சிறந்த ஆட்டக்காரர் | டீகோ பொர்லான் |
← 2006 2014 → | |
உலகக்கோப்பையின் இறுதிச் சுற்றைத் தேர்ந்தெடுக்க மே 2004 இல் இடம்பெற்ற வாக்கெடுப்பில் மொரோக்கோ, மற்றும் எகிப்து ஆகிய நாடுகளை தென்னாப்பிரிக்கா வென்று உலக்கோப்பையை நடத்தும் தகுதி பெற்றது. நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் உலகக்கோப்பை போட்டிகள் 1930 ஆம் ஆண்டில் முதன் முதலில் உருகுவே நாட்டில் இடம்பெற்றது. கடைசியாக ஜெர்மனியில் நடைபெற்ற 2006 உலகக்கோப்பை கால்பந்து இறுதிச் சுற்றில் இத்தாலி வெற்றி பெற்றது. 2014 ஆம் ஆண்டு போட்டிகள் பிரேசிலில் இடம்பெறவுள்ளன.
தகுதிச் சுற்றில் போட்டியிட்ட 204 அணிகளிலிருந்து 32 அணிகள் இறுதிப் போட்டிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டன. உலகக்கோப்பை உதைபந்தாட்டப் போட்டியை நடத்துவதனால் தென் ஆப்பிரிக்கா நேரடியாக விளையாடும் தகுதியைப் பெற்றது.
இறுதிச் சுற்றுப் போட்டிகள் ஜூன் 11 இல் ஆரம்பமாயின. 32 அணிகளும் 8 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு அணியும் தமது பிரிவு அணிகளை எதிர்த்து மூன்று போட்டிகளில் பங்குபற்றின. ஒவ்வொரு பிரிவிலும் ஆகக்கூடுதல் புள்ளிகளைப் பெற்ற இரண்டு அணிகள் அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றன. போட்டியை நடத்தும் நாட்டு அணி இரண்டாவது சுற்றுக்கு தேர்வாகாதது இதுவே முதல் முறையாகும்[1][2].
முதல் சுற்று முடிவில் 16 அணிகள் 8 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டன. knock-out முறையில் ஜூன் 26 இல் அடுத்த சுற்றுப் போட்டிகள் ஆரம்பமாயின. இச்சுற்றில் வென்ற 8 அணிகள் அதற்கடுத்த காலிறுதிக்கு தகுதிபெற்றன.
ஜூலை 11 இல் இடம்பெற்ற இறுதிப் போட்டியில் விளையாட நெதர்லாந்து, ஸ்பெயின் ஆகிய அணிகள் தகுதி பெற்றன. இவ்விரண்டு அணிகளும் முன்னொருபோதும் உலகக்கோப்பையை வென்றதில்லை. அத்துடன், ஐரோப்பாவுக்கு வெளியே இடம்பெறும் ஒரு உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இரண்டு ஐரோப்பிய அணிகள் மோதியதும் இதுவே முதன் முறையாகும்.
இறுதிப்போட்டியில் ஸ்பெயின் அணி 1-0 கோல் கணக்கில் நெதர்லாந்து வென்றது. 90 நிமிட ஆட்ட முடிவில் எந்த அணியும் கோல் போடாததால் கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டது. அதில் ஸ்பெயின் அணி 1 கோல் போட்டு வெற்றி பெற்றது. இதுவே ஸ்பெயின் அணி கைப்பற்றிய முதலாவது உலகக்கோப்பையாகும்[3]. மூன்றாவது இடத்துக்கு நடந்த போட்டியில் ஜெர்மனி அணி உருகுவே அணியை 3-2 என்ற கணக்கில் வென்று மூன்றாவது இடத்தைப் பெற்றது. தென்னாப்பிரிக்கா, மற்றும் இத்தாலி, பிரான்ஸ் ஆகியன முதற்சுற்றிலேயே தோற்று வெளியேறின. அர்ஜெண்டினா, பிரேசில், மற்றும் ஜெர்மனி ஆகியன நாக்-அவுட் நிலைகளில் வெளியேறின.