2014 உலகக்கோப்பை காற்பந்து
From Wikipedia, the free encyclopedia
2014 உலகக்கோப்பை காற்பந்து (2014 FIFA World Cup) அல்லது 20 ஆவது ஃபீஃபா உலகக்கிண்ணக் கால்பந்து போட்டித்தொடரின் இறுதிப்போட்டிகள் பிரேசிலில் 2014 ஜூன் 12 முதல் ஜூலை 13 வரை நடைபெற்றன.
Copa do Mundo da FIFA பிரேசில் 2014 | |
---|---|
2014 பீஃபா உலகக் கிண்ண அதிகாரபூர்வச் சின்னம்: Juntos num só ritmo (All in one rhythm) (எல்லோரும் ஒரே தாளத்தில்) | |
சுற்றுப்போட்டி விவரங்கள் | |
இடம்பெறும் நாடு | பிரேசில் |
நாட்கள் | 12 சூன் – 13 சூலை |
அணிகள் | 32 (5 கூட்டமைப்புகளில் இருந்து) |
அரங்கு(கள்) | 12 (12 நகரங்களில்) |
இறுதி நிலைகள் | |
வாகையாளர் | செருமனி (4-ஆம் தடவை) |
இரண்டாம் இடம் | அர்கெந்தீனா |
மூன்றாம் இடம் | நெதர்லாந்து |
நான்காம் இடம் | பிரேசில் |
போட்டித் தரவுகள் | |
விளையாடிய ஆட்டங்கள் | 64 |
எடுக்கப்பட்ட கோல்கள் | 171 (2.67 /ஆட்டம்) |
பார்வையாளர்கள் | 34,29,873 (53,592/ஆட்டம்) |
அதிக கோல்கள் எடுத்தவர்(கள்) | ஜேம்சு ரொட்ரீகசு (6 கோல்கள்)[1] |
சிறந்த ஆட்டக்காரர் | லியோனல் மெசி[2] |
சிறந்த இளம் ஆட்டக்காரர் | பவுல் பொக்பா[3] |
சிறந்த கோல்காப்பாளர் | மானுவல் நொயார்[4] |
← 2010 2018 → | |
இரண்டாவது தடவையாக பிரேசிலில் இறுதிப் போட்டிகள் இடம்பெற்றன. முதற்தடவை 1950 உலகக்கோப்பை காற்பந்து போட்டிகள் இங்கு நடைபெற்றன. தென் அமெரிக்காவில் இடம்பெறும் இரண்டாவது உலகக்கோப்பை போட்டி இதுவாகும். முன்னதாக 1978 ஆம் ஆண்டில் அர்ஜென்டினாவில் இடம்பெற்றது. 2007 இல் பன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு இந்தப் போட்டிகளை ஏற்று நடத்தும் நாடாக பிரேசிலைத் தேர்ந்தெடுத்தது.
சூன் 2011இல் துவங்கிய 2014 உலகக்கோப்பை கால்பந்து தகுதிச் சுற்றுப் போட்டிகளில் பங்கேற்று 31 நாடுகள் இப்போட்டியில் நுழைந்தன. ஏற்று நடத்தும் நாடான பிரேசிலையும் சேர்த்து 32 அணிகள் மோதின. மொத்தம் 64 ஆட்டங்கள் பிரேசிலின் 12 நகரங்களில் நடைபெற்றன. இந்த 12 நகரங்களிலிலும் விளையாட்டரங்கங்கள் புதியதாகவோ புதுப்பிக்கப்பட்டதாகவோ கட்டமைக்கப்பட்டன. இம்முறையே முதன்முதலாகப் புதிய கோல்-கோடு தொழினுட்பம் பயன்படுத்தப்பட்டது.[5]
1930 இலிருந்து உலகக்கோப்பையை வென்ற உலக வாகையாளர்களான உருகுவை, பிரேசில், இத்தாலி, செருமனி, இங்கிலாந்து, அர்கெந்தீனா, பிரான்சு மற்றும் எசுப்பானியா ஆகியன 2014 போட்டிகளில் பங்கேற்றன. 2010 உலகக்கோப்பை வாகையாளரான எசுப்பானியா அணி, மற்றும் இங்கிலாந்து, இத்தாலி ஆகியன குழுநிலை ஆட்டங்களில் தோல்வியுற்று வெளியேறின. உருகுவாய் 16 அணிகளின் சுற்றிலும், பிரான்சு காலிறுதியிலும் தோல்வியுற்று வெளியேறின. பிரேசில் அணி அரையிறுதியில் தோல்வியடைந்ததை அடுத்து இறுதிப் போட்டியில் அர்கெந்தீனாவும், செருமனியும் போட்டியிட்டன. இதுவரை அமெரிக்கக் கண்டங்களில் இடம்பெற்ற ஏழு உலகக்கிண்ணப் போட்டிகளிலும் தென் அமெரிக்க அணிகளே வென்றுள்ளன.[6] இறுதியாட்டத்தில் செருமனி அர்கெந்தீனாவை கூடுதல் நேரத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் வென்று அமெரிக்கக் கண்டங்களில் உலகக்கோப்பையை வென்ற முதல் ஐரோப்பிய அணி என்ற பெருமையைப் பெற்றது.[7]