![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/5/5e/Homology_vertebrates-en.svg/langta-640px-Homology_vertebrates-en.svg.png&w=640&q=50)
ஓர்மவியல் (உயிரியல்)
From Wikipedia, the free encyclopedia
உயிரியலில் பயன்படுகின்ற, ஓர்மவியல் அல்லது அமைப்பொப்பியல் (ஆங்கிலம்:homology) எனும் சொல்லாடலானது, வெவ்வேறு உயிர்வரிசைகளின் , கட்டமைப்புச் சோடி, மரபுக்கூறு என்பவற்றின் இடையே காணப்படும் பொது மூதாதைத்தன்மை ஆகும். முள்ளந்தண்டுளிகளின் முன்னுறுப்பு, வௌவாலின் இறக்கைகள், குரங்கினத்தின் கைகள், திமிங்கிலத்தின் முன்செட்டை, நாய் முதலான அங்கிகளின் முன்கால்கள் என்பவற்றுக்கிடையே உள்ள ஒருமை, ஓர்மவியலுக்கு வழக்கமான உதாரணமாகச் சொல்லப்படுகின்றது. இவை ஒரே பொது மூதாதையிடமிருந்து இவ்வங்கிகள் அனைத்தும் பெற்ற நாற்பாத (tetrapod ) அமைப்பிலிருந்து இயைபடைந்தவை. ஓர்மக் கட்டமைப்புகள் பொதுமூதாதையிடமிருந்து, வெவ்வேறு நோக்கங்களுக்காக திரிபடைந்து தோன்றியிருக்கவேண்டும் என்ற கருத்தை பரிணாம உயிரியல் முன்வைக்கிறது. இக்கொள்கையானது, முதன்முதலில் சார்ல்ஸ் டார்வினின் பரிணாமக் கோட்பாட்டில் 1859இல் முன்மொழியப்பட்டது. எனினும் அரிஸ்டாட்டில் முதலிய பல்வேறு அறிஞர்களால், இது முன்பே பரவலாக அவதானிக்கப்பட்டிருக்கிறது. ஓர்மவியலுக்கான ஆங்கிலப்பதமான ஹோமோலாஜி என்பது, ரிச்சர்ட் ஓவன் எனும் உடற்கூற்றியல் நிபுணரால், முதன்முதலாக 1843இல் முன்மொழியப்பட்டது.
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/5/5e/Homology_vertebrates-en.svg/320px-Homology_vertebrates-en.svg.png)
ஒரே மூலத்திலிருந்தும் ஒரேவிதத்திலும், முளையத்திலிருந்து விருத்தியாகின்ற உறுப்புகள், படிமுறையில் ஓர்மவியலை ஒத்துப்போகின்றன. ஒரே முளையத்திசுவிலிருந்து விருத்தியாகும் ஆண் மற்றும் பெண் இனப்பெருக்க உறுப்புகள் அமைப்பொத்தவை அல்லது ஓர்மையானவை. மனிதன் உள்ளிட்ட முலையூட்டிகளில், சூலகம் மற்றும் விந்தகம் என்பனவும் அமைப்பொத்தவையே. உயிரின் அடிப்படைக் கூறுகளாக செல்களில் காணப்படும் புரதம் அல்லது தாயனைத் தொடர்கள் இடையேயும் இந்த ஓர்மையை காண முடியும்.