நமிநந்தியடிகள் நாயனார்

சைவ சமய 63 நாயன்மார்களில், 'அந்தணர்' குலத்தைச் சேர்ந்த நாயன்மார். From Wikipedia, the free encyclopedia

Remove ads

“அருநம்பி நமிநந்தி அடியார்க்கும் அடியேன்” திருத்தொண்டத் தொகை

விரைவான உண்மைகள் நமிநந்தியடிகள் நாயனார், பெயர்: ...
Remove ads

நமிநந்தியடிகள் நாயனார் என்பவர் சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் ஆவார்[2]. இவர் சோழ நாட்டு ஏமப் பேரூரிலே அந்தணர் குலத்தில் தோன்றியவர்[3]. அவர் இரவும் பகலும் பிரியாது சிவபெருமானைப் பூசித்து மகிழும் ஒழுக்கமுடையவர். நாள்தோறும் திருவாரூர்க்குப் சென்று புற்றிடங்கொண்ட பெருமானைப் போற்றி வருவார். ஒரு நாள் திருவாரூர்த் திருக்கோயிலை வழிபடச் சென்றார். வழிபட்ட மகிழ்ச்சியில் எழுந்த அன்பினாலே கோயில் தொண்டுகள் பலவும் செய்து கொண்டிருந்தார். அங்கு விளக்கேற்றி வழிபட வேண்டும் என்ற விருப்பம் அவருள்ளத்தெழுந்தது. அப்பொழுது மாலைக்காலம் ஆனமையால் தம்மூருக்குச் சென்று எண்ணெய் கொணர எண்ணாது, திருவாரூரிலேயே ஒரு வீட்டிற்குச் சென்று விளக்கிற்கு எண்ணெய் வேண்டினார். அவர் சென்ற வீடு சமணர் வீடு. அங்குள்ள சமணர்கள் நமிநந்தியடிகளை நோக்கி, ‘கையிலே ஒளி விட்டு விளங்கும் தீயினை ஏந்திய உங்கள் இறைவனுக்கு விளக்கு தேவையற்றது. நெய் இங்கு இல்லை. விளக்கெரிப்பீராயின் நீரை அள்ளி எரிப்பீராக’ என்றனர். அது கேட்டுப் பொறாத நமிநந்தியடிகள் அரனேயன்றிப் பெருமான் திருமுன் சென்று வீழ்ந்து வணங்கினார். அப்பொழுது ‘நமிநந்தியே! உனது கவலை ஒழிக. இதன் அயலேயுள்ள குளத்தில் நீரை முகந்து வந்து வார்த்து விளக்கேற்றுக’ என்றதொரு அருள்மொழி ஆகாயத்தில் தோன்றியது. அதுகேட்டு மகிழ்ந்த நமிநந்தியடிகள், இறைவனருளே இதுவாம் என்றெண்ணிக் குளத்தின் நடுவே சென்று நாதர் நாமமாகிய திருவைந்தெழுத்தோதி நீரை அள்ளிக்கொண்டு கரையேறிக் கோயிலையடைந்தார். உலகத்தார் அதிசயிக்கும் வண்ணம் அகலில் திரியிட்டு நீர் வார்த்து விளக்கேற்றினார். அந்த விளக்கு சுடர்விட்டொளிர்வது கண்டு கோயில் முழுவதும் திருவிளக்கேற்றினார். திருவிளக்குகள் பல விடியுமளவும் எரிதற்கு நீரால் நிறைத்தார்.

இவ்வாறு ஆரூர் அரனெறியப்பார்ர்கு நாளும் இரவில் நீரால் திருவிளக்கிட்டுத் தம்முடைய ஊராகிய ஏமப் பேறூருக்குச் சென்று சிவபூசை முடித்து திருவமுது செய்து துயில் கொள்ளும் வழக்கமுடையவராய் இருந்தார். அப்பொழுது நமிநந்தியடிகள் நாயனார் சமணர்கள் கலக்கம் விளைவித்து அவ்வூரைவிட்டு அகன்றார். திருவாரூர் திருநீற்றின் பெருமை பெற்று விளங்கியது. சோழ மன்னன் ஆரூப்பெருமானிக்கு அறக்கொடைகள் பல அளித்து அவற்றை சைவ ஆகம விதிப்படி நடத்த நமிநந்தி அடிகளையே தலைவராக நியமித்தான். நமிநந்தியடிகள் நாள் பூசைகளுடன் பங்குனியுத்தரப் பெருவிழாவை சிறபுறச் செய்வதற்கு உறுதுணையாக விளங்கினார். திருவாரூர்ப்பெருமான் பங்குனி உத்தரப் பெருவிழா நாட்களில் ஒரு நாள் மணலி என்ற ஊருக்குத் திருவுலா எழுந்தருளினார். எல்லாக் குலத்து மக்களும் இறைவன் உடன் தரிசித்துச் சென்றனர். நமிநந்தியடிகளும் அவர்கள் எல்லாருடனும் உடன் சென்று திருவோலக்கம் கண்டு மகிழ்ந்தார். இறைவர் திரும்பித் திருக்கோயிலுக்குச் செல்ல மாலைப்பொழுதாயிற்று. நமிநந்தியடிகள் நள்ளிருளில் தமது ஊரையடைந்து வீட்டினுள்ளே புகாமல் புறத் திண்ணையிலே படுத்துத் துயின்றார். அப்பொழுது அவர் மனைவியார் வந்து அவரைத் ‘துயிலுணர்த்தி வீட்டினுள்ளே எழுந்தருளிச் சிவார்சனையையும் தீவளர்த்தலையும் முடித்துக்கொண்டு பள்ளிகொள்ளலாம்’ என்றார். அதுகேட்ட நமிநந்தியடிகள், ‘இன்றைய தினம் ஆரூர்ப்பெருமான் திருமணலிக்கு எழுந்தருளியபோது யானும் உடன் சேவித்து சென்றேன். அக்கூட்டத்தில் எல்லாச் சாதியரும் கலந்திருதமையால் தீட்டுண்டாயிற்று. ஆதலால் நீராடிய பின்னரே மனைக்குள் வருதல் வேண்டும். குளித்தற்கு தண்ணீர் கொண்டுவா’ என்று சொல்ல மனைவியாரும் விரைந்து சென்றார். அதற்கிடையில் நமிநந்தியடிகளுக்கு சிறிது உறக்கம் வந்தது. அப்பொழுது வீதிவிடங்கற் பெருமான் கனவில் தோன்றி, ‘அன்பனே! திருவாரூரிலே பிறந்தார் எல்லோரும் நம்முடைய கணங்கள். அதை நீ காண்பாய்’ என்று சொல்லி மறைந்தருளினார். உறக்கம் நீங்கி விழிந்தெழுந்த நமிநந்தியடிகள், தாம் அடியார்களிடையே சாதிவேறுபாடு நினைந்தது தவறென்றுணர்ந்து எழுந்தபடியே வீட்டினுள்ளே சென்று சிவபூசையைன் முடித்து மனைவியாருக்கு நிகழ்ந்ததைச் சொன்னார். பொழுது விடிந்தபின் திருவாரூருக்குச் சென்றார். அப்பொழுது திருவாரூர்ப் பிறந்தார்கள் எல்லாரும் சிவசாரூபம் பெற்றவர்களாகத் தோன்றக் கண்டார். ‘அடியேன் செய்த பிழை பொறுத்தருள வேண்டும்’ என்று ஆரூர்ப்பெருமானை இறைஞ்சிப் போற்றினார். நமிநந்தியடிகள் பின்பு திருவாரூரிலியே குடிபுகுந்து தம்முடைய திருத்தொண்டுகளைச் செய்துகொண்டுருந்தார். இவ்வாறு சிவனடியார்களுக்கு வேண்டுவன எல்லாம் நியதியாக நெடுங்காலம் செய்திருந்தது திருநாவுக்கரசரால் ‘தொண்டர்களுக்கு ஆணி’ எனச் சிறப்பிக்கப் பெறு பேற்றுத் திருவாரூர்ப் பெருமான் திருவடி நிழலையடைந்தார்.

Remove ads

மேற்கோள்கள்

Loading content...

உசாத்துணைகள்

Loading content...
Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads