சிவன்
தமிழ்கடவுள் From Wikipedia, the free encyclopedia
Remove ads
சிவன் (Śiva) இந்து சமயத்தில் கூறப்பட்டுள்ள மும்மூர்த்திகளுள் ஒருவர். சைவசமயத்தின் முழுமுதற் கடவுளாகவும், பிறப்பும், இறப்பும் இல்லாத பரம்பொருளாதலால் பரமசிவன் என அழைக்கின்றனர். இவர் தனது ஒரு பகுதியிலிருந்து அன்னை பராசக்தியை உருவாக்கினாரெனவும், பின்னர் இருவரும் இணைந்து ஆனந்த தாண்டவமாடி அண்டசராசரங்களை உருவாக்கினார்களென்றும், தனது உடுக்கையிலிருந்து படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் எனும் ஐந்து பணிகளுக்கும் அடிப்படையான ஓம் என்ற பிரணவ மந்திரத்தை உருவாக்கினார் எனவும் கருதப்படுகிறது. பின்னர் அன்னை பராசக்தி படைப்பிற்காக பிரம்மதேவரையும், அதன்பிறகு காப்பதற்காக காக்கும் கடவுளான விட்டுணுவையும் உருவாக்கினார் என்றும் கருதப்படுகிறது. கடவுள்களில் ஊழிகாலத்தில் இவர் மட்டுமே நிலைத்திருப்பவராதலால் சதாசிவன் எனப்படுகிறார்.சிவனின் இடப்புறத்திலிருந்து விட்டுணுவும், வலப்புறத்திலிருந்து பிரம்மரும் உருவானார்கள் என்று திருமாலின் அவதாரங்களில் ஒருவரான வேதவியாசர் கூறுகின்றார்.[1][2] பிரம்மன் தன்னால் படைக்கப்பெற்ற உயிர்களை அழிக்க ஈசனிடம் வேண்டிநிற்க பிரம்மரின் மகனாக மும்மூர்த்திகளில் அழிக்கும் கடவுளான உருத்திரன் உதித்தார் என்று வாயு புராணம் கூறுகின்றது.[3]
Remove ads
சொற்பிறப்பும் பிற பெயர்களும்
சிவன் என்றால், தமிழில் "சிவந்தவன்" என்று பொருள். வடமொழியில் சிவம் என்ற சொல்லுக்கு முழுமையானது, மங்கலகரமானது என்று பல பொருள் உண்டு. முது முதல்வன், ஈர்ஞ்சடை அந்தணன், காரியுண்டிக் கடவுள், ஆலமார் கடவுள் என அனேகம் சிவப்பெயர்கள் சங்கநூல்களில் உள்ளன.[4] எக்கணமும் யோகநிலையில் ஆழ்ந்திருப்பதால் யோகி என்றும், அட்டமா சித்திகளில் வல்லவர் என்பதல் சித்தன் என்றும், சுடுகாட்டில் மனம் பேதலித்துப் பேய்களுடன் ஆடுபவராகச் சித்தரிக்கப்படுவதால், பித்தன் எனவும் குணங்களின் அடிப்படையில் அழைக்கப்படுகிறார்.
Remove ads
தொன்மங்கள்
ஆதிசக்தி
சைவ மரபில், சிவம் சக்தி ஆகிய இரண்டும், ஒருபெருமுழுமையின், ஒன்றிலொன்று இன்றியமையாதா இரு அம்சங்கள். அவற்றைப் பரசிவம், ஆதிசக்தி என நோக்கும் சைவர்கள், அந்த இரு பேராற்றல்களின் திருவிளையாடல்களாகவே புராணக்கதைகளை நோக்குகின்றனர். தக்கனின் தவத்தால் அவனுக்கு மகளாகப் பிறக்கும், ஆதிசக்தி, "சதிதேவி" என்று அறியப்படுகிறாள். தக்கனின் அனுமதியின்றி சதி சிவனை மணந்ததால் வெகுண்ட தக்கன், அவர்களுக்கு அழைப்பு விடுக்காமல் யாகம் செய்கின்றான். அங்கு அழைப்பின்றி வந்த சதிதேவியிடம், தக்கன் ஈசனை இழித்துப்பேசுவதால், சதி வேள்வித்தீயில் வீழ்ந்து மறைய, ஆங்காரமுற்ற ஈசனின் திருமுடியிலிருந்து வீரபத்திரர் தோன்றி, யாகத்தை அழிக்கிறார். சதியின் உடல் யாககுண்டத்தில் கிடந்ததாகவும், அதை ஆற்றாமையுடன் ஈசன் தூக்கிச் சென்றபோது, அவற்றை திருமால் ஆழியால் சிதைக்க, அவை வீழ்ந்த இடங்களே சக்தி பீடங்களானதாகவும், இக்கதை செல்கின்றது. பின், பர்வதராசன் மைனாவதியின் தவத்துக்கிரங்கி, சக்தி மீண்டும் பார்வதியாக அவதரிக்கிறாள். கடுந்தவமிருந்து ஈசனைக் கணவனாக அடையும் உமையவள், பின் பல அசுரர்களை அழித்து, தேவர் துயர் தீர்த்தும், பிள்ளையார், முருகன் ஆகியோரைப் படைத்தும், ஈசன் தேவியாக வீற்றிருக்கிறாள்.
கங்கை
பகிரதனின் முன்னோர்கள் சாபம் பெற்று சாம்பலாக இருந்தார்கள். அவர்களுக்கு முக்தி கிடைக்க பார்வதியின் மூத்தவளான கங்கை, பூமியில் நதியாகப் பாய்ந்தால் மட்டுமே இயலும் என்பதை அறிந்த பகிரதன் கங்கையை நோக்கித் தவமிருந்தார். தேவலோகத்திலிருந்து பூமிக்கு வரும் பொழுது எழும் பிரவாகத்தினை கட்டுப்படுத்த சிவபெருமானால் மட்டுமே இயலும் என்று கங்கை கூறியதால், பகிரதன் சிவபெருமானை நோக்கித் தவமியற்றியதால் கங்கையை சடாமுடியில் தாங்கிப் பூமி தாங்கும் அளவில் மட்டும் வெளிவிட்டதனால் சிவபெருமான் கங்காதரன் என்று பெயர்பெற்றார். சிவபெருமானது ஐந்து குமாரர்கள் பைரவர், கணபதி, முருகன், வீரபத்திரர், ஐயனார் ஆவர்.[5] பாற்கடலைக் கடைந்தபோது, திருமால் மோகினி அவதாரம் எடுத்துச் சிவபெருமானுடன் கூடிப் பெற்ற ஐயனாரே இன்று, ஐயப்பன் என்று அறியப்படுகிறார்.

பிள்ளையார் - முருகன்
கயிலையில் பார்வதி தேவி மானசீகமாக ஒரு குழந்தையைத் தோற்றுவித்தாகவும், சிவபெருமானை அறியாத அக்குழந்தை அவருடன் சண்டையிட்டு தலையிழந்தாகவும், பார்வதி தேவியின் வேண்டுகோளை ஏற்று யானைமுகம் பொருத்தி அம்மகனை மீள்வித்தாகவும் இந்து சமய நூல்கள் தெரிவிக்கின்றன. சூரன் என்ற அரக்கனை அழிக்கச் சிவபெருமான் தனது ஆறுமுகங்களிலுள்ள நெற்றிக் கண்களிலிருந்து நெருப்புபொறியை உருவாக்கியதாகவும், அந்த ஆறு நெருப்பு பொறிகளையும் வாயு பகவான் சரவணப்பொய்கை எனும் ஆற்றில் விட்டதாகவும். அந்த நெருப்பு பொறிகள் ஆறு குழந்தைகளாக மாறி, அவற்றைக் கார்த்திகைப் பெண்டீர் வளர்த்து வந்ததாகவும் இந்து சமய நூல்கள் தெரிவிக்கின்றன. ஆறு குழந்தைகளையும் அன்னையாகிய பார்வதி அரவணைத்த பொழுது ஆறு முகங்களைக் கொண்ட முருகனாக அக்குழந்தை மாறியது.
ஏனையவை
தருகா வனத்து முனிவர்களின் ஆணவத்தினை அழிக்கச் சிவபெருமான் திகம்பர மூர்த்தியாகச் சென்றார். அவருடைய அழகில் முனிவர்களின் மனைவிகள் மயங்க, கோபம் கொண்ட முனிவர்கள் தங்களுடைய யாகவலிமையால் புலியை உருவாக்கி அனுப்பினர், சிவபெருமான் அதன் தோலை உரித்து உடுத்திக் கொண்டார். அடுத்து யானையை அனுப்ப, அதன் தோலினை ஈசன் போர்த்தார். மழுவினை எய்தனர், அதனைத் தன்னுடைய ஆயுதங்களில் ஒன்றாகச் சிவபெருமான் இணைத்துக் கொண்டார். அவை எதுவும் தனக்கு ஒன்றும் செய்யாது வாளாநிற்க, அவர் தாருகாவனத்து இருடிகளைத் தோற்கடித்ததாக, அக்கதை சொல்கின்றது. தட்சனின் சாபத்திலிருந்து சந்திரனைக் காக்க, அவனைத் தலையில் சூடிக்கொண்டதும், காசிபர் கத்ரு தம்பதிகளின் குழந்தைகளான பாம்புகள், மாற்றந்தாய் மகனான கருடனிடமிருந்து தங்களை காத்துக்கொள்ள சிவபெருமானை சரணடைந்த போது, அவற்றை அவர் ஆபரணங்களாகத் தரித்துக் கொண்டதும், பாற்கடலைக்கடையும் பொழுது வாசுகி பாம்பு கக்கிய ஆலகாலத்தினை உண்டு அதன் மூலம் நீலகண்டர் ஆனதும், அவர் பெருங் கருணைக்குச் சான்றுகளாகும்.
Remove ads
வரலாறு

சிந்து சமவெளி நாகரிகம் நிலவிய மொகஞ்சதாரோவில் கண்டெடுக்கப்பெற்ற தியானத்திலுள்ள பசுபதி முத்திரையே சிவவழிபாட்டின் மூலம் என்று சொல்லப்படுகின்றது.[6][7] மூன்று தலையினையுடைய தியானத்தில் இருப்பவரைச் சுற்றி மிருகங்கள் இருப்பதாக அமைந்த இந்த முத்திரை பசுபதி முத்திரை என்று அழைக்கப்பெறுகிறது.
இந்து மதத்தில் ருத்ரன், சிவன் இருவருமே ஒரே கடவுளாகக் கருதப்பெறுகிறார்கள். இந்து மதத்தின் பழமையான ரிக் வேதத்தில் ருத்ரன் கடவுளாகக் கூறப்பெறுகிறார். இவர் வில் அம்பினை ஆயுதமாக உடைய வில்லாளனாகச் சித்தரிக்கப்பெறுகிறார். மேலும் பிரம்மாவிலிருந்து தோன்றியவராகவும், புயல்களின் கடவுளான மருத்துக்களின் தந்தையாகவும் அறியப்பெறுகிறார். அக்னி தேவன், வாயு தேவன், இந்திரன், பிரசாபதி போன்ற வேதக்கடவுள்களே, பிற்காலத்தில் சிவனாக வளர்ந்ததாகச் சொல்லப்படுகின்றது.
சைவசித்தாந்தம்

சிவனை சிவம் என்றும், சிவப்பரம்பொருள் என்றும் சைவர்கள் அழைக்கின்றார்கள். சிவன் முப்பத்தாறு தத்துவங்களையும் கடந்து நின்று ஐந்தொழில்களையும் செய்து, ஆன்மாக்களின் மூன்று மலங்களை (ஆணவம்,கன்மம்,மாயையும்) போக்கி வீடுபேறு அருளுகிறார். தன்வயத்தனாதல், தூய உடம்பினனாதல், இயற்கைய உணர்வினனாதல், முற்றுமுணர்தல், இயல்பாகவே கட்டுகளின் (பாசங்களின்) நீங்குதல், பேரருளுடைமை, முடிவிலாற்றலுடைமை, வரம்பி லின்பமுடைமை என எட்டுவகை குணங்களையும் சிவன் கொண்டுள்ளார்.[8] என்றும் உள்ளவர்; எங்கும் நிறைந்தவர்; எல்லாம் அறிபவர்; எல்லாம் வல்லவர்; தூயவர்; அழிவிலா இன்பம் உடையவர்; பிறர்க்கு ஆட்படாதவர் என்றெல்லாம் சித்தாந்தம் சிவனை வரையறுக்கின்றது.
நடராச உருவத்தில் அவர் ஐந்தொழில் ஆற்றுவது, குறியீட்டு ரீதியில் பின்வருமாறு விளக்கப்படுவதுண்டு:[9]:
- ஒரு வலக்கையிலுள்ள உடுக்கை படைக்கும் ஆற்றலைக் குறிக்கும் (கீழிருக்கும் தாமரையும் பிறப்பிற்கு வழிவகுக்குமென கூறுவர்)
- ஒரு இடக்கையிலுள்ள நெருப்பு அழிக்கும் ஆற்றலைக் குறிக்கும்
- இன்னொரு வலக்கையின் உட்புறத்தை காட்டுவது அருளும் ஆற்றலைக் குறிக்கும்
- இன்னொரு இடக்கை துதிக்கை போல் உட்புறத்தினை மறைத்தவாறு இருப்பது மறைக்கும் ஆற்றலைக் குறிக்கும்
- தூக்கிய பாதமும் ஆணவத்தை மிதித்தாடும் இன்னொரு பாதமும் மனமாயை உட்பட தீய சக்திகளிலிருந்து காக்கும் ஆற்றலைக் குறிக்கும்.

Remove ads
சிவ வடிவங்கள்
சிவபெருமான் அருவம், அருவுருவம், உருவம் என மூன்று வடிவங்களில் உள்ளார். அருவத்திருமேனி சத்தர் என்றும், அருவுருவத்திருமேனி பரம்பொருள் என்றும், உருவத்திருமேனி பிரவிருத்தர் என்றும் அழைக்கப்படுகிறது.[10] அருவுருவமாக இலிங்கமும், மகேசுவரமூர்த்தங்கள் மற்றும் சிவஉருவத்திருமேனிகள் ஆகியவை உருவத்திருமேனியாகவும் சைவர்களால் வழிபடப்படுகின்றன.
தடத்தநிலையில் ஈசன் கொள்ளும், அறுபத்து நான்கு வடிவங்கள் ஆகமங்களில் விளக்கப்பட்டுள்ளன. அவற்றில் சிறப்பான இருபத்து ஐந்து சிவமூர்த்தங்கள் மகேசுவர மூர்த்தங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
லிங்கம்

லிங்கம் எனும் சொல் சிவனின் அருவுருவ நிலையைக் குறிப்பதாகும். 'லிம்' என்பது உயிர்களின் தோற்றத்தைக் குறிக்கும், 'கம்' என்பது அவற்றின் ஒடுக்கத்தைக் குறிக்கும் சொல்லாகும். உயிர்கள் தோன்றவும், ஒடுங்கவும் உரிய இடமாக சிவன் உள்ளதால், இப்பெயர் ஆகும்.
Remove ads
சிவ விரதங்கள்
சிவபெருமானுக்காகச் சைவர்கள் எட்டு வகையான விரதங்களை இருந்து வழிபாடு செய்கின்றார்கள். இவ்விரதங்கள் மூலம் சிவனின் பரிபூரண அருளினை பெற இயலும் என்று சைவர்கள் நம்புகின்றார்கள்.
சைவத் திருமுறைகள்
பன்னிரு திருமுறைகள் என்று கூறப்படும் சைவத் திருமுறைகள், பல சிவபக்தர்களால் (நாயன்மார்கள்) இயற்றப்பட்ட பாடல்களின் தொகுப்பாகும்.[11]
- முதல் திருமுறை (சம்பந்தர் அருளியது)
- இரண்டாம் திருமுறை (சம்பந்தர் அருளியது)
- மூன்றாம் திருமுறை (சம்பந்தர் அருளியது)
- நான்காம் திருமுறை (அப்பர் அருளியது)
- ஐந்தாம் திருமுறை (அப்பர் அருளியது)
- ஆறாம் திருமுறை (அப்பர் அருளியது)
- ஏழாம் திருமுறை (சுந்தரர் அருளியது)
- எட்டாம் திருமுறை (திருவாசகம், மாணிக்கவாசகர் அருளியது)
- ஒன்பதாம் திருமுறை (ஒன்பதின்மர் அருளியது)
- பத்தாம் திருமுறை (திருமூலர் அருளிய திருமந்திரம்)
- பதினொன்றாம் திருமுறை (சிவனடியார் இருபத்தேழ்வர் அருளியது)
- பன்னிரண்டாம் திருமுறை (சேக்கிழார் அருளிய பெரியபுராணம்)
Remove ads
சிவ புராணம்

ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் வாழ்ந்த மாணிக்கவாசகரால் இயற்றப்பட்ட திருவாசகம் என்னும் சைவத் தமிழ் நூல் ஆகும். 95 அடிகளைக் கொண்டு இன்னிசைக் கலிவெண்பாப் பாடல் வடிவில் அமைந்துள்ள இது சைவர்களின் முதன்மைக் கடவுளான சிவபெருமானின் தோற்றத்தையும், இயல்புகளையும் விவரித்துப் போற்றுகிறது. அத்துடன், உயிர்கள் இறைவனை அடைவதற்கான வழிமுறைகளையும், சைவசித்தாந்தத் தத்துவ நோக்கில் எடுத்துக்கூறுகின்றது.
Remove ads
புகழ் பெற்ற சிவத்தலங்கள்
சிவபெருமானை மூலவராகக் கொண்டு உலகம் முழுவதும் கோயில்கள் இருக்கின்றன. குறிப்பாகக் கம்போடியா, நேபாளம், இலங்கை, இந்தியா எனப் பல நாடுகளைக் கூறலாம். இவற்றினை விடவும் பாரத கண்டம் என்றும் அழைக்கப்படுகின்ற இந்தியாவில் அநேக சிவாலயங்கள் உள்ளன. அவை எண்ணிக்கை அடிப்படையில் பஞ்சபூதத் தலங்கள், பஞ்ச கேதார தலங்கள், பஞ்ச தாண்டவ தலங்கள், பஞ்ச குரோச தலங்கள், ஆறு ஆதார தலங்கள், சப்த விடங்க தலங்கள், சப்த கரை சிவ தலங்கள், சப்த கைலாய தலங்கள், அட்டவீரட்டானத் தலங்கள், நவலிங்கபுரம், நவ கைலாயங்கள், எனவும், சைவ அடியார்களால் பாடல் பெற்றதைக் கொண்டு தேவாரத் திருத்தலங்கள், திருவாசகத் திருத்தலங்கள், தேவார வைப்புத் தலங்கள், திருச்சிற்றம்பலக் கோவையார் திருத்தலங்கள், திருவிசைப்பாத் திருத்தலங்கள் எனவும், வன விசேச தலங்கள், முக்தி தரவல்ல சிவத்தலங்கள், சோதிர்லிங்க தலங்கள் எனவும் வகைப்படுத்தப்படுகின்றன.
இவற்றில் தேவாரம் பாடல் பெற்ற தலமானது காவிரி தென்கரைத் தலங்கள், காவிரி வடகரைத் தலங்கள், பாண்டிய நாட்டு தலங்கள், கொங்கு நாட்டுத் தலங்கள், நடுநாட்டுத் தலங்கள், தொண்டை நாட்டு தலங்கள் எனவும் வகைப்படுத்தப்பட்டுள்ளது.
Remove ads
மேலும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads