அசுடெக் பேரரசு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மெக்சிகா அசுடெக் பேரரசு (Aztec Empire) அல்லது மும்மடி கூட்டணி மூன்று நவ்வா நகர அரசுகளின் (ஆல்தெபெட்டில்) கூட்டணியாகும்; மெக்சிக்கோ-டெனோச்டீட்லான், டெக்ச்கோகோ, மற்றும் இட்லாகோபான் நகர அரசுகளின் கூட்டணியாகும். இந்த மூன்று நகர அரசுகளும் மெக்சிக்கோ பள்ளத்தாக்கிலும் அடுத்த பகுதிகளையும் 1428 முதல் ஆண்டு வந்தன. 1521இல் எர்னான் கோட்டெஸ் தலைமையிலான எசுப்பானிய வெற்றியாளர்களும் அவர்களது உள்ளூர் தோழமைகளும் தோற்கடிக்கும் வரை இவ்வாட்சி நிலைபெற்றிருந்தது.
அசுகபோட்சால்கோ நகர அரசுக்கும் அதன் முன்னாள் மாகாணங்களுக்கும் இடையே எழுந்த உள்நாட்டுப் போரில் வெற்றி பெற்ற கூட்டத்தால் இந்தக் கூட்டணி நிறுவப்பட்டது. [1]தன்னாட்சியுடைய மூன்று நகர அரசுகளின் கூட்டணியாக துவக்கத்தில் திட்டமிடப்பட்டபோதும் டெனோச்டீட்லான் முதன்மையான படைத்துறை கூட்டாளியாக விளங்கியது.[2] 1520இல் எசுப்பானியர்கள் வந்தடைந்தபோது, கூட்டணியின் நிலப்பகுதியை டெனோச்டீட்லான் தான் செயற்பாட்டளவில் ஆண்டு வந்தது; மற்றக் கூட்டாளிகள் துணைப்பொறுப்புகளையே வகித்தனர்.

இக்கூட்டணி உருவான பின்னர் கைப்பற்றும் வண்ணம் பல போர்களை நடத்தி தனது ஆட்பகுதிகளை விரிவாக்கியது. உச்சத்தில் இருந்தபோது பெரும்பாலான மத்திய மெக்சிக்கோவை ஆண்டு வந்தது; தொலைவில் இருந்த தற்கால குவாத்தமாலாவின் எல்லையிலிருந்த, இடையமெரிக்கப் பண்பாட்டுப் பகுதியான சோகோனோச்கோ மாகாணத்தையும் தன்னாட்சியில் கொண்டு வந்தது. இந்த ஆட்சியை வரலாற்றாசிரியர்கள் "தலைமையேற்பு" அல்லது "மறைமுக" ஆட்சியாக விவரிக்கின்றனர்.[3] கூட்டணிக்கு அரையாண்டுக்கொருமுறை திறை செலுத்தவும் அசுடெக் பேரரசுக்குத் தேவைப்பட்டபோது படைகளை அனுப்பவும் உடன்பட்டால், கைப்பற்றப்பட்ட நகரங்களின் ஆட்சியாளர்கள் அதிகாரத்துடன் செயல்பட அனுமதிக்கப்பட்டனர். இதற்கு மாற்றாக, கூட்டணி அரசு பாதுகாப்பையும் அரசியல் நிலைத்தன்மையையும் அளித்தது. இந்த அரசியலமைப்பு பரந்த நிலப்பகுதியில் பொருளியல் ஒத்துழைப்பிற்கு வழிவகுத்த அதேசமயம் குறிப்பிடத்தக்க உள்ளூர் தன்னாட்சியை வழங்கியது.
இந்தப் பேரரசின் சமயக் கொள்கை பல கடவுட் கொள்கையைத் தழுவியது. மெக்சிகா அசுடெக்கின் போர்க்கடவுள் உய்ட்சிலோபோச்ட்லியை முதன்மை கடவுளாக வழிபட்டனர். கைப்பற்றபட்ட நகர அரசுகளிலும் அவர்களது கடவுள்களை வணங்க சுதந்திரம் வழங்கப்பட்டது; அவர்களது கடவுள்களுடன் உய்ட்சிலோபோச்ட்லியும் சேர்க்கப்பட வற்புறுத்தப்பட்டனர்.
Remove ads
மேற்சான்றுகள்
நூற்கோவை
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads