குவாத்தமாலா

From Wikipedia, the free encyclopedia

குவாத்தமாலா
Remove ads

குவாத்தமாலா (Guatemala, /ˌɡwɑːtəˈmɑːlə/ (கேட்க)), அதிகாரபூர்வமாக குவாத்தமாலா குடியரசு (எசுப்பானியம்: República de Guatemala), நடு அமெரிக்காவில் உள்ள ஒரு நாடாகும். இதன் எல்லைகளாக வடக்கிலும் மேற்கிலும் மெக்சிக்கோவும், வடகிழக்கே பெலீசு மற்றும் கரிபியக் கடலும், கிழக்கில் ஒந்துராசும், தென்கிழக்கில் எல் சால்வடோரும், தெற்கில் அமைதிப் பெருங்கடலும் அமைந்துள்ளன. ஏறத்தாழ 17.6 மில்லியன்,[5][6] மக்கள்தொகை மதிப்பீட்டைக் கொண்டுள்ள இந்த நாடு நடு அமெரிக்காவிலேயே மிகுந்த மக்கள்தொகை கொண்ட நாடாக விளங்குகின்றது. குவாத்தமாலா ஒரு சார்பாண்மை மக்களாட்சி அமைப்பைக் கொண்டது. இதன் தலைநகரமாகவும் மிகப்பெரும் நகரமாகவும் நுயேவா குவாத்தமாலா டெ லா அசுன்சியான் எனப்படும் குவாத்தமாலா நகரம் விளங்குகின்றது.

விரைவான உண்மைகள் குவாத்தமாலா குடியரசுRepública de Guatemala, தலைநகரம்மற்றும் பெரிய நகரம் ...

தற்போதைய குவாத்தமாலாவின் ஆட்பரப்பு இடையமெரிக்கப் பண்பாட்டுப் பகுதியில் பரவியிருந்த முந்தைய மாயா நாகரிகத்தின் மையப்பகுதியாக இருந்தது; இந்நாட்டின் பெரும்பகுதியும் 16ஆம் நூற்றாண்டில் எசுப்பானியர்களால் கையகப்படுத்தப்பட்டது. புதிய எசுப்பானியா என அமைக்கப்பட்ட அரசு சார்பாளுமையின் அங்கமாயிருந்தது. 1821இல் நடு அமெரிக்க கூட்டரசு அமைக்கப்பட்டபோது அதன் அங்கமாக விடுதலை பெற்றது; இந்த கூட்டரசு 1841இல் கலைக்கப்பட்டது.

19ஆம் நூற்றாண்டின் நடு, பிற்பகுதிகளில் குவாத்தமாலா தொடர்ந்த நிலையின்மையையும் உள்நாட்டுப் போர்களையும் எதிர்கொண்டது. இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் அமெரிக்க ஐக்கிய நாடு அரசும் ஐக்கிய பழ நிறுவனமும் ஆதரவளித்த வல்லாண்மையாளர்களால் ஆளப்பட்டது. 1944இல் கொடுங்கோலன் ஜார்ஜ் உபிக்கோவை மக்களாட்சியை ஆதரித்த இராணுவம் கவிழ்த்தது. தொடர்ந்து பத்தாண்டுகளுக்கு குவாத்தமாலா புரட்சி வெடித்தது. இந்த புரட்சிகளால் பல சமூக பொருளாதார சீர்திருத்தங்கள் ஏற்பட்டன. 1954இல் அமெரிக்க ஐக்கிய நாட்டின் ஆதரவு பெற்ற படைக்குழு ஆட்சியை கைப்பற்றியது. [7]

1960 முதல் 1996 வரை, குவாத்தமாலாவில் அமெரிக்க அரசு ஆதரவுடைய அரசுக்கும் இடதுசாரி அரசியல் போராளிகளுக்கும் இடையே உள்நாட்டுப் போர்கள் நடந்துவந்தன. இக்காலகட்டத்தில் மாயா நாகரிகத்தினரின் இனவழிப்பையும் இராணுவ ஆட்சி நடத்தியது.[8][9][10] ஐக்கிய நாடுகள் அவை உருவாக்கிய அமைதி உடன்பாட்டிற்குப் பிறகு, குவாத்தமாலா பொருளியல் முன்னேற்றத்தையும் தொடர்ந்த மக்களாட்சித் தேர்தல்களையும் சந்தித்தது. இருப்பினும் தொடர்ந்து மிகுந்த ஏழ்மை வீதம், குற்றங்கள், போதைமருந்து வணிகம், நிலையின்மையை எதிர்கொண்டு வருகின்றது. 2014 நிலவரப்படி குவாத்தமாலா மனித மேம்பாட்டுச் சுட்டெண்ணில் 33 இலத்தீன் அமெரிக்க, கரீபிய நாடுகளில் 31ஆம் இடத்தில் உள்ளது.[11]

1996 இலிருந்து இந்நாடு ஏறத்தாழ நிலையான பொருளாதாரத்தைக் கொண்டிருந்தாலும், குவாத்தமாலாவின் அண்மைக்கால உள்நாட்டுக் குழப்பங்களும் இராணுவப் புரட்சிகளும் நாட்டின் வளர்ச்சி வீதம் குறைந்து வந்திருக்கிறது. குவாத்தமாலாவின் பெரும்பகுதி இன்னும் வளர்ச்சி அடையாமலே உள்ளன.[12]

Remove ads

வரலாறு

குவாத்தமாலாவில் மாந்தக் குடியிருப்பு கி.மு 12,000க்கு முந்தையதாக கருதப்படுகிறது. நாட்டின் பல பகுதிகளிலும் கிடைத்த தொல்லியல் அம்புமுனைகள் இதற்கு சான்றாக உள்ளன.[13] இங்கு முதன்முதலாக வாழ்ந்தவர்கள் வேட்டையாடி சேகரித்து வாழ்ந்தமைக்கான தொல்லியல்சார் சான்றுகள் கிடைக்கின்றன. பெட்டென் வடிநிலத்திலும் பசிபிக் கடலோரத்திலும் கிடைக்கும் மகரந்த கூறுகள் கி.மு 3500க்கு முன்பே இங்கு மக்காச்சோளம் வேளாண்மை செய்யப்பட்டமைக்கு சான்று பகிர்கின்றன.[14]

இடையமெரிக்கப் பண்பாட்டுப் பகுதியின் முன்-கொலம்பிய வரலாற்றை செவ்வியல் முந்தையக் காலம் (2999 BC - 250 AD), செவ்வியல் காலம் (250 - 900 AD), மற்றும் செவ்வியல் பிந்தையக் காலம் (900 to 1500 AD) என மூன்று பிரிவுகளாக தொல்லியலாளர்கள் பிரிக்கின்றனர்.[15]

Thumb
இட்டிகால் எனப்படும் மாயா நகரம்

இடையமெரிக்கப் பண்பாட்டுப் பகுதியின் செவ்வியல் காலம் மாயா நாகரிகத்தின் உச்சக்காலமாக விளங்குகின்றது; இந்தக் காலத்திய தொல்லியல் களங்கள் குவாத்தமாலா முழுமையும் பரவியுள்ளன. இக்காலத்தில் நகரங்கள் உருவாக்கப்பட்டன; மற்ற இடையமெரிக்க பண்பாடுகளுடன் தொடர்புகள் ஏற்பட்டன.[16]

ஏறத்தாழ 900 பொ.ஊ வரை தொடர்ந்திருந்த இந்த செவ்வியல் மாயா நாகரிகம் பின்னர் அழிவடையத் தொடங்கியது.[17] வறட்சிசார் பஞ்சங்களால் பல நகரங்கள் கைவிடப்பட்டன.[17]

செவ்வியல் பிந்தையக்காலத்தில் பல வட்டார இராச்சியங்கள் உருவாயின. இவற்றிலிருந்த நகரங்கள் மாயா நாகரிகப் பண்புகளை பாதுக்காத்தன. மற்ற பண்பாடுகளுடன் மாயா நாகரிகம் கொண்டிருந்த இடைவினைகளால் இந்த பண்பாடுகளிலும் மாயா பண்புக்கூறுகள் இணைந்திருந்தன. மாயாத் தாக்கம் ஒண்டுராசு, குவாத்தமாலா, வடக்கு எல் சால்வடோர் மற்றும் மெக்சிக்கோவின் நடுப்பகுதிவரை காணக் கிடைக்கிறது. மாயா கலைகளில் வெளிப் பண்பாட்டுத் தாக்கங்கள் இருந்தபோதும் இவை வணிக, பண்பாட்டு பரிமாற்றங்களால் நிகழ்ந்தவை; எந்த வெளிப் பண்பாடும் கையகப்படுத்தி ஏற்பட்டவையல்ல.

குடியேற்றக் காலம்

1519இல் எசுப்பானியர்கள் குவாத்தமாலாவில் குடியேறத் துவங்கினர். 1519 முதல் 1821இல் எசுப்பானியாவிடமிருந்து விடுதலை பெறும் வரையான காலம் குடியேற்றக் காலம் என வகைப்படுத்தப்படுகின்றது.

அசுடெக் பேரரசைக் கைப்பற்றிய எர்னான் கோட்டெஸ், குவாத்தமாலாவைக் கைப்பற்ற படைத்தலைவர்கள் கான்சாலோ டெ அல்வராடோ மற்றும் அவரது உடன்பிறப்பு பெத்ரோ டெ அல்வராடோவிற்கு அனுமதி அளித்தார். அல்வராடோ முதலில் காக்சிகெல் இராச்சியத்துடன் இணைந்து அவர்களது பரம்பரை எதிரிகளான கிஷ் இராச்சியத்தை வெல்ல உதவினார். பின்னர் காக்சிகல் இராச்சியத்திற்கு எதிராகத் திரும்பி அனைத்துப் பகுதிகளையும் எசுப்பானியர் ஆளுகைக்கு கீழ் கொணர்ந்தார்.[18]

இந்தக் குடியேற்றக் காலத்தில் குவாத்தமாலா புதிய எசுப்பானியாவின் (மெக்சிக்கோ) அங்கமாக குவாத்தமாலா கேப்டன்சி ஜெனரல் (Captaincy General of Guatemala) என அழைக்கப்பட்டது. [19] முதல் தலைநகரமாக காக்சிகெல் இராச்சியத்தின் இல்சிம்ச்செ நகரத்தின் அருகே வில்லா டெ சான்டியேகோ டெ குவாத்தமாலா அமைந்தது. பின்னதாக வியேயா நகரத்திற்கு மாற்றப்பட்டது.

செப்டம்பர் 1541இல் புதிய தலைநகரம் நிலநடுக்கதாலும் கடும் வெள்ளத்தாலும் அழிபட்டது. எனவே 6 km (4 mi) தொலைவிலிருந்த ஆன்டிகுவா தலைநகரமாக்கப்பட்டது. இது தற்போது ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால் உலகப் பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நகரமும்1773 - 1774 காலகட்டத்தில் ஏற்பட்ட தொடர்ந்த நிலநடுக்கங்களால் அழிந்தது. தொடர்ந்து எர்மிட்டா பள்ளத்தாக்கில் தற்போது அமைந்துள்ள இடத்தில் சனவரி 2, 1776இல் புதிய தலைநகரம் அமைக்கப்பட்டது.

Remove ads

புவியியல்

Thumb
குவாத்தமாலாவின் நிலப்படம்.
Thumb
குவாத்தமாலாவில் நிலவும் கோப்பன் வானிலை வகைகள்
Thumb
கெட்சல்டெனங்கோ பீடபூமி.

குவாத்தமாலா பெரும்பாலும் மலைப்பாங்கான நாடு. ஆங்காங்கே பாலைநிலமும் மணல் குன்றுகளும் அமைந்துள்ளன. தெற்குப்பகுதி கடற்கரையுடனும் வடக்கே பரவலான பேட்டன் தாழ்நிலமும் உள்ளன. மேற்கிலிருந்து கிழக்கான இரண்டு மலைத்தொடர்கள் நாட்டை மூன்று பிரிவுகளாக பிரிக்கின்றன. அனைத்து முதன்மையான நகரங்களும் மைய பீடபூமி பகுதியிலும் தெற்கு கடலோரப் பகுதிகளிலும் அமைந்துள்ளன. வடக்கிலுள்ள பேட்டன் தாழ்நிலங்களில் மக்கள் குடியேற்றம் குறைவாக உள்ளது. இந்த மூன்று பிரிவுகளுமே வானிலை, உயரம், நிலப்பரப்பு ஆகியவற்றில் வேறுபட்டதாக உள்ளன. பீடபூமி குளிர்ந்து உலர்ந்த வானிலையைக் கொண்டுள்ளது; தாழ்பகுதிகள் வெப்பம் மிகுந்தும் ஈரப்பசையுடனும் உள்ளன. 4,220 மீட்டர்கள் (13,850 அடிகள்) உயரத்துடன் இந்நாட்டின் தாஜுமுல்கோ எரிமலை மைய அமெரிக்க நாடுகளிலேயே மீயுயர் சிகரமாக உள்ளது.

அமைதிப்பெருங்கடலில் வீழும் ஆறுகள் சிறியதாகவும் ஆழம் குறைந்தவையாகவும் உள்ளன; கரிபியக் கடல் மற்றும் மெக்சிகோ வளைகுடாவில் வீழும் ஆறுகள் நீண்டதாகவும் ஆழமுள்ளவையாகவும் உள்ளன. பொலோச்சிக், டுல்சு ஆறுகள் இசபெல் ஏரியில் கலக்கின்றன; மோடாகுவா ஆறு பெலீசுடனான எல்லையிலும், உசுமசிந்தா ஆறு மெக்சிக்கோவுடனான எல்லையிலும் அமைந்துள்ளன.

இயற்கைப் பேரழிவுகள்

Thumb
A town along the பான் அமெரிக்க நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஓர் ஊரில் காணப்படும் எரிமலைவாய்.

கரீபியக் கடலுக்கும் அமைதிப் பெருங்கடலுக்கும் இடையே அமைந்துள்ளதால் குவாத்தமாலா பல சூறாவளிகளை எதிர்கொள்கிறது. 2005 அக்டோபரில் ஏற்பட்ட இசுடான் சூறாவளியில் 1500க்கும் கூடுதலானவர்கள் உயிரிழந்தனர். இச்சேதம் காற்றால் ஏற்பட்டதை விட சூறாவளியைத் தொடர்ந்த பெரும் மழைவெள்ளத்தாலும் சேற்றுசருக்கல்களாலும் ஏற்பட்டது. மே 2010இல் ஏற்பட்ட அகதா புயலில் 200க்கும் கூடுதலானோர் உயிரிழந்தனர்.

குவாத்தமாலாவின் பீடபூமி கரீபிய, வட அமெரிக்க தட்டுப் புவிப்பொறைகளின் இடையேயான எல்லையில் அமைந்துள்ளது. மொடாகுவா உரசுமுனை எனப்படும் இந்நிலப்பிழை நாட்டின் வரலாற்றில் பல நிலநடுக்கங்களுக்கு காரணமாக அமைந்துள்ளது. கூடுதலாக அமைதிப் பெருங்கடலின் இடையமெரிக்க அகழி எனப்படும் முதன்மை பெருங்கடல் கீழமிழ்தல் குவாத்தமாலாவின் கடலோரத்திற்கு அருகே அமைந்துள்ளது. குவாத்தமாலாவில் 37 எரிமலைகள் உள்ளன; இவற்றில், பசாயா, [சான்ட்டியாகுடோ, புயூகோ, டகானா என்பன உயிர்ப்புடனுள்ளன.

இயற்கைப் பேரழிவுகள் இந்த நாட்டின் வரலாற்றில் முக்கிய இடம் பெற்றுள்ளன. நாட்டின் தலைநகரம் 1541இல் எரிமலைக் குழம்பு போக்காலும் 1773 நிலநடுக்கத்தாலும் மாற்றப்பட்டுள்ளது.

பல்லுயிரியம்

குவாத்தமாலாவில் 14 சூழல் மண்டலங்களும் 5 சூழலிய அமைப்புகளும் உள்ளன. இந்நாட்டில் 5 ஏரிகள், 61 கடற்கரை காயல்கள், 100 ஆறுகள், நான்கு சதுப்பு நிலங்கள் உள்ளிட்ட 252 நீர்நிலைகள் பட்டியலிடப்பட்டுள்ளன.[20] இட்டிக்கால் தேசியப் பூங்கா முதல் யுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம் ஆகும். குவாத்தமாலாவில் 1246 மாவினங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றில், 6.7% தனிப்பட்டவையாகவும் 8.1% அச்சுறுத்தலுக்கு உட்பட்டவையாகவும் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்நாட்டில் குறைந்தது 8,682 வகையான கலன்றாவரங்கள் கண்டறியப்பட்டுள்ளன; இவற்றில் 13.5% தனிப்படவை.

2,112,940 எக்டேர் பரப்பளவுள்ள மாயா உயிர்க்கோள காப்பகம் [21] மைய அமெரிக்காவில், நிக்கராகுவாவின் போசவாசை அடுத்து, இரண்டாவது பெரிய வனப்பகுதியாக உள்ளது.

Remove ads

பொருளியல்நிலை

Thumb
குவாத்தமாலாவின் வெளிநாட்டு ஏற்றுமதியின் சார்பாற்றம் வீதத் தெரிவாண்மை.
Thumb
கெட்சல்டெனங்கோவிலுள்ள வயல்கள்.
Thumb
வட்டார நகரமான சுனிலில் ஓர் சந்தை.
Thumb
குவாத்தமாலாவின் வாழைப்பழங்களை ஏற்றுமதிக்காக ஏற்றிச் செல்லும் கப்பல்.

குவாத்தமாலா இடையமெரிக்காவில் மிகப்பெரும் பொருளியல் நிலையைக் கொண்டுள்ளது; (கொள்வனவு ஆற்றல் சமநிலைப்படுத்தப்பட்ட ) தனிநபர் உள்நாட்டு ஒட்டுமொத்த‌ உற்பத்தி US$5,200 ஆகும். இருப்பினும், பொருளியல் ஏற்றத்தாழ்வு மிகுந்து மக்கள்தொகையில் பாதிபேர் தேசிய வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளனர். 400,000 (3.2%) பேர் வேலையின்றி உள்ளனர். 2009இல் சிஐஏயின் உலகத் தரவு நூல் 54.0% மக்கள்தொகை வறுமையில் உழல்வதாகக் குறிப்பிடுகின்றது.[22][23]

ஐக்கிய அமெரிக்கா மற்றும் பிற நடு அமெரிக்கா நாடுகளிலிருந்து தேவை குறைந்தமையாலும் உலகளாவிய பொருளியல் நிலைத் தேக்கத்தால் வெளியாட்டு முதலீடு பாதிக்கப்பட்டதாலும் குவாத்தமாலாவின் பொருளியல்நிலை 2009ஆம் ஆண்டு நெருக்கடிக்கு உள்ளானது. 2010ஆம் ஆண்டில் இதிலிருந்து மீண்டு 3% வளர்ச்சியடைந்தது.[24]

ஐக்கிய அமெரிக்காவில் வாழும் குவாத்தமாலியர்கள் அனுப்பும் பணமே தற்போது நாட்டின் முதன்மை வெளியாட்டு மூலதனமாக உள்ளது.[22]

குவாத்தமாலாவின் முதன்மை ஏற்றுமதிப் பொருட்களாக பழங்கள், காய்கனிகள், பூக்கள், கைவினைப் பொருட்கள், துணி முதலியன உள்ளன. அண்மைக்காலத்தில் உயிரி எரிபொருள்களுக்கான வளரும் தேவையைக் கருத்தில் கொண்டு உயிரி எரிபொருளுக்கான மூலவளங்களை வேளாண்மை செய்வதையும் ஏற்றுமதியையும் அரசு முன்னிறுத்தி வருகிறது. முக்கியமாக இந்நோக்கத்தில் கரும்பு, செம்பனை எண்ணெய் பயிரிடுதல் அதிகரித்துள்ளது. இதனால் முதன்மை உணவுப் பொருளான மக்காச்சோளத்தின் விலை உயர்ந்துள்ளதாக விமரிசனம் எழுந்துள்ளது. ஐக்கிய அமெரிக்க நாட்டு சோளம் மலிவாக உள்ளதால் குவாத்தமாலா தனது உணவுத் தேவையில் 40% அங்கிருந்து இறக்குமதி செய்கிறது.[25] போதைப் பொருட்களின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தவும் பிற சமூகநீதித் திட்டங்களை நிறைவேற்றவும் அரசு அபினி, மரியுவானா பயிரிடுவதை சட்டபூர்வமாக்கி வரிவருமானம் பெற திட்டமிட்டுள்ளது.[26]

மொத்த உள்நாட்டு உற்பத்தி (கொள்வனவு ஆற்றல் சமநிலை) 2010இல் US$70.15 பில்லியனாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் சேவைத்துறையின் பங்கு 63% ஆக முதன்மை வகிக்கிறது. அடுத்து தொழில்துறை 23.8%உம் வேளாண்மை 13.2% ஆகவும் உள்ளன.

தங்கம், வெள்ளி, துத்தநாகம், கோபால்டு, நிக்கல் உலோகங்கள் அவற்றின் தாதுக்களிலிருந்து பிரித்தெடுக்கப்படுகின்றன.[27] காபி, சர்க்கரை, துணிமணிகள், பச்சைக் காய்கனிகள், வாழைப்பழங்கள் நாட்டின் முதன்மை வேளாண் ஏற்றுமதிப் பொருட்களாக உள்ளன.

பத்தாண்டுகளாக நடந்த உள்நாட்டுப் போர்களை அடுத்து ஏற்பட்ட அமைதிப் பேச்சுவார்த்தைகளின்படி 1996 முதல் அன்னிய முதலீட்டிற்கான தடைகள் விலகின. குவாத்தமாலாவின் வெளிச்செல1வணி வருமானத்தில் சுற்றுலா முக்கியப் பங்கு எடுக்கத் தொடங்கியது.

Remove ads

படத்தொகுப்பு

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads