அசோக் குமார் (திரைப்படம்)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
அசோக் குமார் 1941-ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். இளங்கோவன் உரையாடல் எழுத, ராஜா சந்திரசேகர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். கே. தியாகராஜ பாகவதர், சித்தூர் வி. நாகையா, என். எஸ். கிருஷ்ணன், எம். ஜி. இராமச்சந்திரன், பி. கண்ணாம்பா, டி. வி. குமுதினி மற்றும் பலர் நடித்துள்ளனர். நியூடோன் ஸ்டுடியோவில் மதுரை முருகன் டாக்கி பிலிம் கம்பெனியால் இது தயாரிக்கப்பட்டது.[2]
Remove ads
கதை
கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.
போர்க்களம் சென்று வெற்றி வீரனாக வந்த தனது மகன் குணாளனை (தியாகராஜ பாகவதர்), தன் இளையாளான திசியரட்சதைக்கு (கண்ணாம்பா) அறிமுகப்படுத்தினார் அசோகர் (வி. நாகையா). அப்பால் அவனுக்கு விரைவாகவே யுவராஜ பட்டாபிசேகம் செய்யவும் நினைத்தார்.[1]
இந்த மகிழ்ச்சிச் செய்தியை தன் காதலி காஞ்சனமாலாவிடம் (டி. வி. குமுதினி) தெரிவித்தான் குணாளன். அதை ஒட்டுக்கேட்ட திசியரட்சதையின் தோழி பிரமீளா (டி. ஏ. மதுரம்) ஆத்திரங் கொண்டு பட்டாபிசேகம் நடக்காதவாறு செய்துவிடவேண்டுமென முயற்சித்தாள். ஆயினும் குணாளனின் பட்டாபிசேகம் நடக்காது நிற்கவில்லை. அந்த பட்டாபிசேகத்தின் போது, திசியரட்சதை குணாளன் நெற்றியில் திலகமிட்டாள். அவனது ஸ்பரிசம் பட்டதும் தன்னையுமறியாமல் அவன்மீது காதல் கொண்டாள். அன்றிரவு காஞ்சனமாலையும் குணாளனும் உல்லாசமாகப் பாடிக்கொண்டிருந்தனர். அவர்களது காதல் பாட்டு திசியரட்சதையின் காமத்தீயை நன்றாகக் கிளறிவிட்டுவிட்டது.[1]
மறுநாள் தன் தந்தையின் விருப்பப்படி குணாளன் திசியரட்சதையின் முன் பாடினான். அவன் பாடிக்கொண்டிருக்கும் போதே, அசோகர் மந்திரியின் அழைப்பிற்கிணங்க, வேலையாக வெளியே சென்றார். இதுதான் சமயம் என்று குணாளனைத் தன் இச்சைக்கு இசையத் தூண்டினாள் இளையராணி. குணாளன் மறுத்தான். இளையராணி வெகுண்டாள். அசோகர் வந்தார். குணாளன் மீது வீண் பழி சுமத்தினாள் திசியரட்சதை.[1]
குணாளன் நாடுகடத்தப்பட்டான். கர்ப்பவதியான காஞ்சனமாலாவையும் வெளியில் துரத்தினாள். குணாளனின் இரு கண்களையும் பிடுங்கச் செய்து வெளியில் துரத்தினாள். கண்ணற்ற குணாளனும், திக்கற்ற காஞ்சனமாலையும் ஒரு கிராமத்தில் சந்தித்து அங்கு கொஞ்ச நாள் தங்க, காஞ்சனமாலைக்கு ஒரு பெண் குழந்தை பிறக்கிறது. அங்கிருந்து குழந்தையுடன் ஊரூராக பிச்சை யெடுத்துப் போய்க் கொண்டிருக்க, திடீரென்று குழந்தை இறந்து விடுகின்றது.[1]
இதற்கிடையே மகனின் பிரிவாற்றாமையினால் மனம் நொந்து சுகவீனமடைந்து, அரச மருத்துவர் சொற்படி, சுவர்ணகிரியில் திசியரட்சதையுடன் வந்திருந்த அசோகர், பாட்டுப்பாடி பிச்சையெடுத்துத் திரிந்த குணாளனின் குரலைக் கேட்டு, அவர்களை வரவழைத்து உண்மை அறிந்தார். திசியரட்சதை நஞ்சருந்தி மாண்டாள்.[1]
புத்தபிக்கு உபகுப்தாச்சாரியாரின் (கே. மகாதேவய்யர்) உதவியால் பகவான் புத்தரின் சந்நிதானத்தில் குணாளனின் இழந்த கண்கள் இரண்டையும் பெற்று சுகமாக வாழ்கிறார்கள்.[1]
Remove ads
நடிகர்கள்
இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள்
இப்படத்தில் மொத்தம் 19 பாடல்கள் இடம்பெற்றிருந்தன.[1] பாபநாசம் சிவன் பாடல்களை இயற்றியிருந்தார். உனைக் கண்டு மயங்காத பேர்களுண்டோ, சத்வகுண போதன், பூமியில் மானிட ஜென்ம மடைந்துமோர் ஆகிய பாடல்கள் மிகப் பிரபலான பாடல்களாகும்.[2]
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads