அட்டிகை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
அட்டிகை அல்லது அட்டியல் எனப்படுவது, கழுத்தில் அணியப்படும் ஒரு வகை அணிகலன் ஆகும். பெரும்பாலும் அட்டியல்கள் உலோகத்தினால் உருவாக்கப்படுகின்றன. சில நூல்களைப் பயன்படுத்திப் பின்னப்படுகின்றன. அட்டிகைகளில் பெரும்பாலும் பயன்படும் பொருட்களுள், பல்வேறு நிறங்கள் கொண்ட கற்கள், மரம், அலங்காரக் கண்ணாடி, இறகுகள், கடல்வாழ் விலங்கின ஓடுகள், பவளம், முத்து போன்றவை அடங்குகின்றன. அட்டிகையின் நடுப் பகுதியில் காணப்படும் தொங்கும் அமைப்பு பதக்கம் எனப்படும். அழகுக்காகவும், சமூகத் தகுதியைக் காட்டுவதற்கும் ஆண்களும் பெண்களும் அட்டிகைகளை அணிவதுண்டு. எனினும், தமிழரும் உள்ளிட்ட பெரும்பாலான தற்காலச் சமூகங்களில் அட்டிகை பெண்களுக்கு உரியதாகவே கொள்ளப்படுகிறது. ஆண்கள் கழுத்தில் நீளமான சங்கிலிகளை அணிவதுண்டு.
|
|
Remove ads
வரலாறு
எழுத்தின் கண்டுபிடிப்புக்கு முற்பட்ட தொன்மை நாகரிகக் காலத்திலிருந்தே அட்டிகை அணிகலன்களின் ஒரு பகுதியாக இருந்துவந்துள்ளது. 40,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட கற்காலத்திலேயே அட்டிகைகள் தோன்றிவிட்டதாகக் கருதப்படுகிறது. மிகப் பழைய அட்டிகைகள் இலகுவாகக் கிடைக்கத்தக்க இயற்கைப் பொருட்களால் ஆனவை. நூல்கள் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்னர் நீடித்து உழைக்கக்கூடிய கொடிகளும், வேட்டையில் கிடைத்த விலங்கு நார்களும் ஓடுகள், எலும்புகள், பற்கள், நிறத் தோல்கள், பறவை இறகுகள், பவளம், செதுக்கிய மரத்துண்டுகள், தாவரங்களின் விதைகள், கற்கள், இன்னும் பல்வேறு அழகு தரக்கூடிய பொருட்கள் போன்றவற்றைக் கோர்த்தோ, கட்டியோ அட்டிகைகள் செய்வதற்குப் பயன்பட்டன. புதிய கற்காலத்தில் இசுப்பொண்டிலசு, கிளைசிமெரிசு, சரோனியா ஆகிய மூன்று இனங்களின் ஓடுகள் விலங்கு ஓட்டு அட்டிகைகள் செய்வதற்குப் பயன்பட்டன.[1]
துணி வேலைப்பாடு, உலோக வேலை ஆகியவற்றின் அறிமுகமும், மேம்பாடுகளும் மனிதருக்குக் கிடைக்கக்கூடியதாக இருந்த நகை வடிவமைப்புக்களின் விரிவாக்கத்துக்கு உதவின. நூலின் கண்டுபிடிப்பு, சிறியனவும், நீடித்து உழைக்கக்கூடியனவும், நுணுக்கமான வேலைப்பாடுகளோடு கூடியனவுமான அட்டிகைகள் உருவாக வழிசமைத்தது. வெங்கலக் காலத்தில் மனிதர் உலோகங்களை உருக்கி வேலை செய்யக் கற்றுக்கொண்ட பின்னர், வெண்கலம், செப்பு, வெள்ளி, பொன், போன்ற உலோகங்களை உருக்கி கவர்ச்சியான அட்டிகைகளை உருவாக்க முடிந்தது. இரத்தினக் கற்களைப் பட்டை தீட்டும் நுட்பம், அலங்காரக் கண்ணாடி தயாரிப்பு நுட்பம் என்பன அறிமுகமான பின்னர் மினுக்கம் தரும் பல்வேறு வகையான பட்டை தீட்டிய கற்களையும், பல நிறங்களில் அமைந்த அலங்காரக் கண்ணாடிகளையும் அட்டியல்களில் பயன்படுத்த முடிந்தது.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads


