அமெரிக்க இயற்கை வரலாற்று அருங்காட்சியகம்

நியூயார்க் நகரத்திலுள்ள ஒரு அருங்காட்சியகம் From Wikipedia, the free encyclopedia

அமெரிக்க இயற்கை வரலாற்று அருங்காட்சியகம்
Remove ads

அமெரிக்க இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் (American Museum of Natural History) என்பது உலகிலுள்ள அனைத்து இயற்கை அறிவியல் காட்சிச் சாலைகளுள் மிகப்பெரியதாகக் கருதப் படுகிறது. மனித சமுதாயத்திற்குப் பெருமளவு பயன்பட்டுவரும் இந்த அருங்காட்சியகத்தில் பல தலைசிறந்த அறிவியல் அறிஞர்களும், திறமை மிகுந்த ஆய்வாளர்களும்.. பணி செய்கின்றனர். நியூயார்க் நகரத்திலுள்ள மையப் பூங்காவின் மேற்குப் பகுதியில், இதன் தலைமையகம் அமைந்திருக்கிறது. நியூயார்க்கிலுள்ள ஹண்டிங்டன் (Huntington), புளோரிடாவிலுள்ள பிளாசிட் ஏரிப்பகுதி (Lake Placid), அரிசோனாவின் போர்ட்டல் (Portal), பகாமாத் (Bahamas) தீவுகளைச் சேர்ந்த பிமினித்தீவு (Bimini island) போன்ற இடங்களில் இதன் துணை நிலையங்கள் உள்ளன. ஹேடன் வான் காட்சியகம் (Hayden planetarium), நியூயார்க் தலைமையகத்தில் சிறப்பான பகுதியாகச் செயல்பட்டு வருகிறது. அமெரிக்க இயற்கை வரலாற்று அருங்காட்சியகம், ஓர் அறக்கட்டளையின் கீழ் இயங்கி வருகிறது. இதன் இயக்குநர் இந்த அறக்கட்டளையினரால் நியமிக்கப்படுகிறார். இங்கு நுாற்றுக்கு மேற்பட்ட ஆசிரியர்கள், ஆய்வாளர்கள் உள்ளிட்ட அறுநூறுக்கு மேற்பட்ட அலுவலர்கள் பணியாற்றுகின்றனர். இதனை நல்ல முறையில் நடத்துவதற்குத் தேவையான நிதி, நியூயார்க் பெருநகர மன்றம் அளிக்கும் நல்கை, தனியார் அறக்கட்டளைகள், உறுப்பினர் கட்டணம் போன்றவற்றிலிருந்து கிடைக்கிறது. அருங்காட்சியகத்திற்குள் செல்ல நுழைவுக்கட்டணம் ஏதுமில்லை. ஆனால் வான்காட்சியகத்தினுள் செல்லக் கட்டணம் உண்டு. ஒவ்வோர் ஆண்டும் மூன்று மில்லியன் மக்கள் அருங்காட்சியகத்தையும், வான்காட்சியகத்தையும் கண்டு களிக்கின்றனர். இந்த அருங்காட்சியத்தைத் தொடங்கவேண்டுமென, முதன்முதலில் ஹார்வார்டு பல்கலைக் கழகத்தில் (Harvard University) பேராசிரியராகப் பணியாற்றிய லுாயிஸ் அகாசிஸின் (Louis Agassiz) மாணவர், ஆல்பர்ட் எஸ். பிக்மோர் (Albert S. Bickmore) கூறினார்.

விரைவான உண்மைகள் நிறுவப்பட்டது, அமைவிடம் ...
Remove ads

அமைவு வரலாறு

நியூயார்க் நகரில் மையப் பூங்காவின் ஆணையர்கள் 1869 ஆம் ஆண்டு சனவரித்திங்கள் முதல்நாள் இக்காட்சியகம் தொடங்குவதற்கான ஒப்புதலும், இடமும் அளித்தனர். அருங்காட்சியகத்தின் அமைப்பு முறையும் விதிமுறைகளும் 1869, மே, ஐந்தாம் நாள் நிறைவேற்றப்பட்டன. பின்னர் ஏற்பட்ட இடப்பற்றாக்குறை காரணமாக 1877, திசம்பர், 22-ஆம் நாள் தற்போதுள்ள இடத்திற்கு அருங்காட்சியகம் மாற்றப்பட்டது. புதிய வளாகத்திலுள்ள கட்டிடங்களின் அடிப்பரப்பு 23 ஏக்கர்களாகும். டி.ஜி. எலியட் (D. G. Elliot) அவர்கள் திரட்டிய . 2,500 பதப்படுத்தப்பட்ட பறவைகளும், ஜெர்மானிய இளவரசரான மாக்சிமிலியனுக்குச் (Prince Maximilian) சொந்தமான பதப்படுத்தப்பட்ட 4,000 பறவைகள், 600 பாலூட்டிகள், 2,000 மீன்கள், ஊர்வன ஆகியவையும், முதன் முதலில் வாங்கப்பட்ட சில உயிரியல் காட்சிப் பொருள்களாகும். பேராசிரியர் ஜேம்ஸ் ஹாலுக்குச் (Professor Jaines Hall) சொந்தமான, நியூயார்க் மாநிலத்தில் எடுக்கப்பட்ட, புகழ் பெற்ற புதைபடிவங்களும் ஆரம்ப காலத்திலேயே வாங்கிக் காட்சிக்கு வைக்கப்பட்ட காட்சிப் பொருள்களாகும். மார்கன் நினைவு மண்டபத்தினின்று (Morgan Memorial Hall) பெற்று இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள கனிம மாதிரிகளும் இரத்தினக்கற்களும் மிகச்சிறந்தவை; விலை மதிப்பு மிகுந்தவை. இங்குள்ள மாணிக்கம் உலகிலுள்ள சிறந்த சிவப்பு இரத்தினக்கற்களுள் ஒன்றாகும். உலகிலேயே மிகப்பெரியதாகக் கருதப்படும் இந்திய நீலக்கல்லும் இங்குதான் உள்ளது. இங்குள்ள 66 அடி உயரமுள்ள. ஜூராசிக் காலத்தைச் சேர்ந்த பெரும்பல்லியின் சட்டகம் இங்கு வருவோர் கவனத்தை எளிதாக ஈர்க்கிறது. அருங்காட்சியகத்தில் தொடக்ககாலப் பாலூட்டிகள் கூடம், மானிடவியல் கூடம், மனித வாழ்வியல் கூடம், முதுகெலும்பற்றவற்றின் கூடம், நீர்வாழ் உயிரிகள் கூடம் போன்ற பல பகுதிகள் உள்ளன. ஒவ்வொரு வகை காட்சிப் பொருளும், தனித் தனிப் பிரிவாகத் தனிக் கூடங்களில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

சார்லஸ் ஹேடன் (Charles Hayden) என்னும் அமெரிக்க வங்கி அதிபரின் பொருளுதவியுடன் 1935, ஆகத்து 3ஆம் நாள், ஹேடன் வான் காட்சியகம் தொடங்கப்பட்டது. இவ்வான் காட்சியகத்தில் உள்ள மையக்கூடத்தின் குவிந்த கூரையில் வானத்தில் உள்ள விண்மீன்கள், கோள்கள், சூரியன், சந்திரன் ஆகியவற்றைத் தெளிவாகவும் எளிதாகவும் இயல்பாகவும் காணுமாறு காட்சிக்கு வைத்துள்ளனர். அங்கு வைக்கப்பட்டுள்ள காட்சிப் பொருள்களிலிருந்து பேரண்டத்தின் அமைப்பு, கோள்களின் மேற்பரப்பு அமைப்பு ஆகியவற்றை எளிதாகத் தெரிந்து கொள்ளலாம். பல கோள்களைத் தெளிவாக ஒளிப்படம் எடுத்துத் தேவையான குறிப்புகளுடன் காட்சிக்கு வைத்துள்ளனர்.

Remove ads

பயன்பாடு

கல்லூரி, பள்ளி மாணவர்கள், அறிவியல் ஆர்வமுள்ளவர்கள் போன்ற பலரும் இங்கு நடைபெறும் ஆய்வுப் பணிகளையும் கல்விப் பணிகளையும் பயன்படுத்திக் கொள்கின்றனர். அமெரிக்காவின் பல பகுதிகளிலிருந்தும், உலகின் பல பகுதிகளிலிருந்தும் அறிஞர்கள் இக்காட்சியகத்துடன் தொடர்பு கொண்டு இங்கு செயல்படும் ஆய்வுகளின் பயனைப் பெறுகின்றனர். மானிடவியல் (Anthropology), முதுகெலும்பிகளின் தொல்விலங்கியல், ஊர்வனவியல் (Herpetology), பாலூட்டியியல் (Mammology), பறவையியல் (Ornithology), விலங்கு நடத்தையியல் போன்ற பல துறைகளுடன் தொடர்புடைய ஆய்வுகள் இங்கு நடைபெற்று வருகின்றன.

Remove ads

மேற்கோள்கள்

துணை நூல்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads