அரங்கு

From Wikipedia, the free encyclopedia

அரங்கு
Remove ads

அரங்கு (Theatre) (கிரேக்கம்:θέατρον (தியேட்ரோன்)[1] என்பது காட்சிப்படுத்தல் தளம் அல்லது காணும் இடம் என்பதாகும். இது நிகழ்த்து கலைகளின் ஒரு பகுதி ஆகும். கலைகளை இற்றை செய்து வைப்பதற்கான ஓர் இடமாக அரங்கத்தைக் கொள்ளலாம்.

Thumb
அரங்கு
Thumb
கிரேக்க தொல் அரங்கு - எபிடாரஸ்

அரங்கு எனப்படுவது கலைக்குழுவால் நிகழ்த்துக்கலைகளை காட்சிப்படுத்துவதற்கான தளம். இத்தளம் ரசிப்பவர்களின் உள்ளத்திடை பொதுவாக இரு கூறுகளைக் கொண்டுள்ளது. முதலாவது பார்வையாளர்களுக்கு உண்மையிலேயே தங்கள் முன் நிகழும் காட்சியாகவும், இரண்டாவது கலைஞர்கள் எடுத்தாளும் கதை, வரலாறு, நிகழ்வு சார்ந்த கற்பனையான நிகழ்ச்சியைக் காட்டும் கற்பனைத்தளமாகவும் திகழ்கிறது.

அரங்கேற்றக் கலைகளைகளின் காட்சிகள் பார்வையாளர்களுடன் நேர்காணல்கள், சைகைகள், உரைநடை, வசனம், திரைக்கதை, பாடல்கள், இசை மற்றும் நடனம் மூலம் தொடர்புகொள்வதாக அமைந்திருக்கும். பார்வையாளர்களின் அனுபவத்தை இன்னும் சிறப்பாக்க அவ்விடத்தின் கலை, ஒலி, ஒளி அரங்க வடிவமைப்பு போன்றவை மெருகேற்றப்படுகிறது.

கதை கூற விழையும் மனிதனுடைய இயல்பு காரணமாக மிகப் பழங்காலத்திலேயே அரங்கு உருவாகிவிட்டது எனலாம். தொடக்க காலத்தில் இருந்தே அரங்கு சமய சடங்கு, சமூகக்கூடம், அரசவை என பல வடிவங்களை எடுத்து வந்திருக்கிறது. இதற்காக, பேச்சு, நடிப்பு, இசை, நடனம் போன்றவற்றையும், நிகழ்த்து கலைகள், காட்சிக் கலைகள் போன்றவற்றிலிருந்து பல கூறுகளையும் பெற்று ஒரே கலை வடிவமாக ஆக்கியது.

நாடகம் சார்ந்த அனைத்தையும் ஒரே இடத்தில் இணைத்து தற்போதைய நிகழ்வாக நிகழ்த்திக்காட்டுவதற்கு பயன்படும் ஒருங்கு பெற்ற மேடை அரங்கு எனலாம். அரங்கத்தில் நடைபெறும் நாடகத்தின் நடிப்பு, அரங்க அமைப்பு உள்ளிட்ட கலைகளைப் பற்றி அறிய உதவும் இயல் அரங்கியல் எனப்படுகிறது.[2]

Remove ads

அரங்கு - வரையறை

  • ஹோனிக்மென் கூற்றுப்படி, "கலை என்பது ஓர் உணர்வினை அல்லது பெறுமானத்தினை வெளிப்படுத்துவதிலும், தொடர்வுறுத்துதலிலும் மனிதத்திறன் வெளிப்படும் முறைமை" ஆகும்.
  • மேலும் பர்னாட் பெக்கர்மான் என்பவர், அரங்கு என்பது, "வெளியிலும் காலத்திலும் தம்மைத் தனிப்படுத்திக் கொள்ளும் ஒருவர் அல்லது பலர் தம்மை இன்னொருவருக்கு அல்லது பிறருக்குக் காட்சிப்படுத்தும் போது நிகழ்வது", என வரைவிலக்கணம் கூறியுள்ளார்.[3].
  • அரங்கு என்பதை நாடகம் என்பதாகவே பொதுவில் நோக்குவது உண்டு ஆனால், இவ்விரண்டிற்குமிடையே வேறுபாடுகள் உள்ளன. நாடகம் என்பது நிகழ்த்திக் காட்டப்படும் ஒரு விடயம் எனில், அரங்கு என்பது அது தொடர்பான முழுவதையும் ஓரிடத்தில் இணைத்துக் காட்டுவது ஆகும்.
  • யார் காட்டுகிறார்கள் (நடிகர்கள், கலைஞர்கள்), எவ்விடத்திலே காட்டப்படுகின்றது (மேடை, அரங்கம்), எவ்வாறு காட்டப்படுகின்றது (இசை, நடனம், நாடகம்) , யார்முன்னே காட்டப்படுகின்றது (பார்வையாளார்கள், ரசிகர்கள்), எந்தச் சூழலில் காட்டப்படுகின்றது போன்ற எல்லாவற்றையும் அரங்கு உள்ளடக்குகிறது [4].
Remove ads

வரலாறு

எகிப்திய அரங்கு

  • தற்போது நாம் அறிந்தபடி பதிவு செய்யப்பட்டுள்ள மிகப் பழைய அரங்கியல் நிகழ்வுகள், கிமு 2000 ஆண்டுகளில் பண்டைய எகிப்தில் இடம்பெற்றுள்ளன. ஒசிரிசு (Osiris) என்னும் கடவுளின் வரலாற்றுக்கதை இந்த நாகரிகக் காலத்தின் பண்பாட்டு விழாக்கள் பலவற்றிலும் நிகழ்த்தப்பட்டு வந்தது. இது சமய சடங்கிற்கும், அரங்குக்கும் இடையிலான மிக நீண்டகாலத் தொடர்பின் தொடக்கத்தையும் குறித்து நிற்கிறது.
  • எகிப்தியர்களின் நம்பிக்கையான இறப்பிற்குப்பிறகான வாழ்க்கைப் பற்றிய தத்துவங்கள் நாடகமாக நடித்துக் காட்டப்பட்டன. நாடகம்பற்றிய நிகழ்வுகள் அவர்தம் பிரமிடு அரண்மனைகளில் குறிப்புகளாகவும், சில குறியீட்டு முறைகளாகவும் குறித்து வைத்துப் பின்பற்றினர். மேலும் புதிய ஃபறொ மன்னனின் முடிசூட்டு விழா நாடகங்கள், இஜிஸ் எனும் கடவுளைப் பற்றிய மருத்துவ நாடகங்கள், ஒசிரிசு மன்னனின் உயிர்த்தெழும் நாடகங்கள், உள்ளிட்ட நாடகங்களின் குறியீடுகள் மம்மி கல்லறைகளிலும் பிரமிடுகளிலும் பொறிக்கப்பட்டன. மேற்கூறியவற்றால் எகிப்தியர்கள் பண்பாட்டுச் சடங்கில் நாடகத்தைப் புகுத்தியதில் முதன்மையானவர்களாகக் கருதப்படுகின்றனர்.

கிரேக்க அரங்கு

Thumb
பனோரமா - எபிடாரஸ்
  • டயோஸ்னஸ் தெய்வத்திற்கு செய்யும் சமய சடங்காகவே அக்காலத்தில் நாடகங்கள் நடத்திக்காட்டப்பட்டன. அறிஞர் அரிஸ்டாட்டிலின் குறிப்புகளின் படி நாடகங்கள் டயோஸ்தனஸ் என்ற தெய்வத்திற்கு பாடப்பட்ட டித்தரம்ஸ் பாடல்களிலிருந்தே கிரேக்க நாடகங்கள் வளர்ச்சி பெற்றதாகக் கருதப்படுகிறது.
  • வருடத்தில் ஒருமுறை, ஆறு நாட்கள் நடத்தப்படுகின்ற டயோஸ்தினஸ் தெய்வத்தின் வழிபாட்டின் போது, அதன் உருவச்சிலை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு பின்னர் 'தியோட்ரான்' எனப்படும் இடத்தில் மக்கள் குழுமி டித்ரம்ஸ் பாடல்களைப்பாடி நாடகப்போட்டிகளை நடத்துவர். இவ்விடமே அரங்கம் எனும் முறைக்கு வித்திட்டதாகக் கொள்ளப்படுகிறது.
  • கிரேக்க நாடகங்கள் துன்பவியல் (ட்ரேஜெடி), கேலிக்கை, இன்பவியல் (அ) மகிழ்நெறி நாடகங்களாக நடத்தப்பட்டன.
  • பண்டைய கிரேக்கர்கள், அரங்கை ஒரு கலை வடிவமாக முறைப்படுத்தினர். இதன் பல வடிவங்களான துன்பியல் அரங்கு, நகைச்சுவை அரங்கு முதலியவற்றுக்கு இறுக்கமான வரைவிலக்கணங்களையும் ஏற்படுத்தினர். பண்டைய எகிப்திய அரங்குகளைப் போலவே கிரேக்க அரங்குகளிலும் தொன்மங்களில் இருந்தே கதைமாந்தர்களும், கருப்பொருளும் பயன்படுத்தப்பட்டன. கிரேக்கர்களே, நாடகத்திறனாய்வு, நடிப்புத்தொழில், அரங்கக் கட்டிடக்கலை போன்றவற்றையும் உலகுக்கு அறிமுகப்படுத்தினர்.
  • அஸ்கிலஸ் (கி.மு 525-456), ஈரிபிடிஸ் (கி.மு.484 - 406), சோபோகிளிஸ் (கி.மு 496-406), அரிஸ்டோபன்ஸ் (கி.மு.448 - 380), மென்டொர் (கி.மு. 420 - 360) போன்றோர் கிரேக்க நாடக்கலையைப் பல்வேறு காலகட்டங்களில் முறைப்படுத்திய ஐவர் ஆவார்.
  • ஆஸ்கார் ஜி. ப்ராக்கெட்டின் கூற்றுப்படி பெரும்பாலான கிரேக்க நாடகங்கள் திறந்த வெளியிலேயே நிகழ்த்தப்பட்டதாக அறியப்படுகிறது.[5] சான்றாக மரணிக்கும் காட்சிகள், சடலத்தை மீண்டும் மேடைக்கு எடுத்துவருதல் போன்ற காட்சிகள் திரைச்சீலை எதுவும் பயன்படுத்தாமல் நிகழ்த்திக்காட்டப்பட்டன.
  • கி.மு.4ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த எபிடாரஸ் அரங்கம் பண்டைய ஏதன்ஸிய அரங்கங்களுக்கு சான்றாகும்.

உரோமானிய அரங்கு

Thumb
உரோம அரங்கு
  • உரோமர்கள் முதன்முதலில் தங்கள் அரங்குகளை கல்லாலும், மரத்தினாலும் கட்டினார்கள். அவ்வரங்குகள் சுமார் 80,000 பார்வையாளர்களுடன் அலங்காரத்துடன் கூடிய மூன்று மாடிகளைக் கொண்டிருந்தன.
  • கல்லாலான அரங்குகள் உரோம வெளிப்புற திரையரங்குகளின் மாதிரியாக இருந்தன. உரோமானியர்களின் அரங்குகள் கிரேக்க அரங்குகளை விடவும் குறைந்தது ஒரு மீட்டர் அளவு அதிகம் உயரம் கொண்டதாகவும், அதிக வேலைப்பாடுகளுடன் தெளிவாகவும் இருந்தன.
  • முதல் மூன்று நூற்றாண்டுகளில் எண்ணற்ற உரோமானிய அரங்குகள் மிகுந்த செல்வாக்கு உடையனவாக விளங்கின. பின்னாளில் உரோம பேரரசின் வீழ்ச்சிக்குப்பிறகு சிதைவுண்ட அரங்குகள் கற்சுரங்கங்களாகவும், கோட்டைகளாகவும் பயன்படுத்தப்பட்டன.
Remove ads

அரங்கின் மூலங்கள்

அரங்குகளில் நிகழ்த்தப்படும் கலைகளின் மூலங்கள் அதன் ஒருங்கமைவால் அறியப்படுகின்றன. ஆற்றுகை, ஆற்றுபவர், அதன் ஆற்றுகைத் தளம் என மூவகை படும்.

நிகழ்த்தம் (அ) ஆற்றுகை

காட்சியின் மூலக்கருப்பொருள் அசைவுகளின் மூலமோ, ஒலி, ஒளி அமைப்பு மூலமோ, அல்லது சிறப்பு ஒப்புமைப் பொருட்களின் மூலமோ ஆற்றுகை / நிகழ்த்திக்காட்டுதல் மூலம் பார்வையாளர்களுக்கு கொண்டு சேர்க்கப்படுகிறது.

கலை இயக்குநர் (அ) நெறியாளர்

கலை இயக்குநர் என்பவர் நடிகர்களையும், கதையினையும் மற்றும் நிகழ்ச்சியைச் சார்ந்த ஒப்புமைக் காட்சிகளையும் பார்வையாளரின் மனநிலையிலிருந்து ரசிக்கும்படியாக ஒருங்கமைப்பவர் ஆவார்.

நடிகர் (அ) நிகழ்த்துவோர்

நாடகத்தின் தலையாய அம்சமான ஆற்றுகைக்கு இதயத்துடிப்பாக விளங்குவபன் நடிகன் ஆவான்.[6] இங்கு தனி ஒரு மனிதனாகவோ (நடிகன்), குழுவாகவோ (பலதரப்பட்ட கதாபாத்திர நடிகர் குழு) நிகழ்த்துக்கலை ஆற்றப்படலாம்.

பார்வையாளர்கள்

  • நிகழ்த்திக்காட்டப்படும் நிகழ்கலையை பார்த்து அதன் நிறை, குறைகளை ஆய்பவர்கள், அனுபவம் செய்பவர்கள் பார்வையாளர்களாவர். மேலும் ஒன்றி அதனால் ஈர்க்கப்படுபவர்கள் ரசிகர்கள் எனப்படுவர்.
  • பார்வையாளர்கள் அரங்கத்தில் மேடையின் எதிரே அமர்ந்தோ, நின்றபடியோ பாா்த்து ரசிக்கும்படியாக இருக்கைகள், நிலைகள், அமர்விடங்கள் அமையப்பெற்றிருக்கும்.
  • அரங்குகளில் மாடங்கள், வரிசைகள், உள் மற்றும் வெளி வாயில்கள், இருக்கைகள், குடைகள், கூரைகள், தளங்கள் என அடுக்குகளில் பிரிக்கப்பட்டிருக்கும்.

மோதுகை

இருவேறு கருத்துக்களைக் கொண்ட மனிதப் போராட்டங்களுக்கான மோதுகை அரங்கத்தில் நிகழ்த்திக்காட்டப்படுகிறது. இது மனித எண்ணங்களின் அல்லது உணர்ச்சிகளின் கொந்தளிப்பாகக் கொள்ளப்படுகிறது.

களம் (அ) தளம்

நிகழ்த்திக்காட்டுவதற்கான, மக்களிடையே காட்சிப்படுத்துவதற்கான ஒரு தளம், இயற்கையில் கண் முன்னே காட்சியளிக்கக் கூடிய நிகழ்வின் ஒப்புமைக் களம் அரங்கம் ஆகும். அரங்குகள் ஒலி, ஒளி அமைப்புடன், காட்சி ஒப்புமை திரைச்சீலைகள், நிகழ்வின் மாதிரிப் பொருட்கள், வாசனைப் பொருட்கள், புகைகள் என பல்வேறுபட்ட அலங்கார அமசங்களைக் கொண்டிருக்கும்.

அரங்க வடிவம்

அரங்கத்தின் வடிவங்களின் அடிப்படையில் பின்வருமாறு வகைப்படுத்தப்படுகிறது,[6]

  • வட்ட அரங்கு
  • திறந்தவெளி அரங்கு
  • படச்சட்ட அரங்கு (புறசீனிய அரங்கு)
  • முக்கோண அரங்கு
  • சதுர அரங்கு
  • செவ்வக அரங்கு

அரங்க காட்சியமைப்பு & வெளிப்பாடு

  • காட்சியின் சூழலை உருவாக்குதல்
  • காட்சியைப் பற்றிய மனநிலையை உருவாக்குதல்
  • வரலாறு, நிகழ்வு, காவியம் பற்றிய ஒப்புமைத் தோற்றத்தை உருவாக்குதல்
  • காண்போரின் மனத்தில் கருத்துக்களை பதிவித்தல்
  • காட்சி பற்றிய ரசிக்கும் படியான சிந்தனையைத் தூண்டுதல்
Remove ads

அரங்கேற்றங்கள்

இசை

  • ஒலி அமைப்புடனும், இசை வாத்தியங்களுடனும் இசைக்கப்படும் பாடல் அரங்கேறும் மேடை, இசை அரங்கேற்றமேடை ஆகும். இங்கு பிரதானமாக விளங்குவது இசை ஒலி அமைப்பும் ஒலிப்பெருக்கிகளும் வாத்தியங்களும் மற்றும் இசை விற்பன்னர்களும் ஆவா். இம்மேடைகள் ஒருங்காக ரசிகர் கூட்டத்தின் நடுவிலோ அல்லது முனைப்பாகவோ அமைந்திருக்கும்.
  • கச்சேரி எனப்படும் இசை அரங்கேற்றம் அரங்க மேடைகளில் நிகழ்த்திக்காட்டப்படுகின்றன.

நடனம்

  • ஒலி, ஒளி அமைப்புடன் திறம்பெற்ற நடனக்கலைஞர்களைக் கொண்டு அங்க அசைவுகளுடன் மேடையில் நிகழ்த்திக் காட்டப்படும். இன்றளவும் பெரும்பாலாக "அரங்கேற்றம்" எனும் பதம் நடனத்தைக் குறிக்கிறது.
  • நடனத்திற்கு தகுந்தாற்போல் பாடல் (அ) இசை அரங்கில் ஒலிக்கப்படும். சிறப்பான ஒளி அமைப்பு மற்றும் திரை அலங்காரங்களுடன் நடனம் அரங்கேற்றப்படுகிறது.
  • பண்டைய கூத்து நடன அரங்கேற்றங்கள் பெரும்பாலும் கோயிலிலோ, தெருக்களிலோ நிகழ்த்தப்பட்டன.
  • நடன அரங்கானாது இசைப்பவர்கள், மேடை, பார்வையாளர்கள், உடைமாற்றுமிடம், ஏறுவாயில், இறங்கு வாயில், ஒப்பனை, திரைச்சீலை என பல்வேறு கூறுகளை உள்ளடக்கியதாகும்.

நாடகம்

Thumb
காசிராம் கோட்வால், மராத்தி நாடகம்

இயலும் இசையும் சேர்ந்த கதைக்களங்களில் ஒருங்கிணைக்கப்பட்ட உரைநடையுடன் நாடகமாக படைக்கப்படுகிறது. நாடகம் மக்களுக்கு எளிதில் புரிந்து கொள்ளவும், கருத்துக்களை பதியவும் ஏதுவாக அமைந்தன. புராதன மனிதனின் சமய சடங்குகளே பிறகு நாடகமாக மாற்றம் பெற்றதாக கருதப்படுகிறது.

நாடகமும் அதைச்சார்ந்த அரங்கமைப்பும் ஒன்றுடன் ஒன்று தொடர்புபெற்றே நன்கு வளர்ச்சி பெற்றன. நாடகம் பற்றிய கோட்பாடுகளும், அதன் அமைப்பு முறைகளும் ஒவ்வொரு நாட்டிற்கும் அதன் கலாச்சாரத்திற்கும் சார்புடையதாகவே இருந்தன. நாடகங்கள் திறாஜெடி எனப்படும் துன்பியல், அதனைக் கேலிச்செய்யும் நகைச்சுவை நாடகங்கள், இன்பியல் நாடகங்கள் என பலவகைகளில் உள்ளன.

அரங்கத்தின் மாற்றுகள்

  • கூத்து - தெருவில் நிகழ்த்தப்பட்ட நிகழ்த்துக்கலை. இருப்பினும் கூத்துக்காரர், கூத்துத்திரை, இசைப்பவர்கள், பின்பாட்டுக்காரர், மக்கள் அமருமிடம் என அரங்கத்தின் அமைப்பை பெற்றிருந்தன.
  • மேடைகள் - பட்டி மன்றங்கள், அரசியல் மேடைகள், விவாத மேடைகள், பேச்சரங்கங்கள் எனவும் தற்கால அரங்க மேடைகள் வகைப்படுத்தப்படுகின்றன.

நவீன அரங்குகள்

மாறிவரும் காலச் சூழலுக்கேற்ப அரங்குகள் பல்வேறு மாற்றங்களைப் பெற்றுள்ளன. ஆடல், பாடல், நாடகம் போன்றவற்றை காட்சிப்படுத்திய அரங்குகள் மின்னணுத் தொழில்நுட்பம், கணினி போன்றவற்றால் இன்று மிகப்பெரிய மாறுதலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

  • திரையரங்குகள் - நாடக சகாப்தங்கள் முடிந்து திரைச்சீலைகளில் ஒளிக்கற்றையால் சிறப்பு ஒலி அமைப்புடன் கோப்புகள் ஒளிபரப்பப்படுகின்றன. இவை வெள்ளித்திரை திரையரங்குகளாகும்.
  • விளையாட்டரங்குகள் - பல்வேறு வகையான விளையாட்டுப் போட்டிகள் அரங்கங்களுக்குள்ளேயே நடத்தப்பட்டு பார்வையாளர்களுக்கு உடனுக்குடன் காட்சிப்படுத்தப் படுகின்றன.
Thumb
நவீன அரங்கு
Remove ads

உலக நாடக அரங்க நாள்

உலக நாடக அரங்க நாள் (World Theater Day) 1961ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் மார்ச் 27 ஆம் நாளன்று பன்னாட்டு அரங்க நிறுவனத்தினால் கொண்டாடப்பட்டு வருகின்றது.[7][8]

குறிப்புகள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads