அரிவாட்டாய நாயனார்

சைவ சமய 63 நாயன்மார்களில், 'வேளாளர்' குலத்தைச் சேர்ந்த நாயன்மார். From Wikipedia, the free encyclopedia

Remove ads

“எஞ்சாத வாட்டாயன் அடியார்க்கும் அடியேன்” – திருத்தொண்டத் தொகை அரிவாட்டாய நாயனார் என்பவர் சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் ஆவார்[3].

விரைவான உண்மைகள் அரிவாட்டாய நாயனார், பெயர்: ...


சோழர்களது காவிரி நாட்டிலே கணமங்கலம் எனும் ஓர் ஊர் உள்ளது. அது நீர்வளம், நிலவளம் முதலியவற்றாற் சிறந்து விளங்குவது. அவ்வூரிலே வாழ்ந்த வேளாளரின் தலைவராகத் தாயனார் எனும் செல்வந்தர் இருந்தார். அவர் சிவபாதம் மறவாத சீருடையாளர். மனையறம் பூண்டு வாழ்ந்த அவர் சிவபெருமானுக்கு ஏற்றன என்று செந்நெல் அரிசியும், செங்கீரையும், மாவடுவும் நாள்தோறும் கொண்டு வந்து திருவமுது செய்விப்பார்.

இத்திருத்தொண்டினை அவர் வறுமை வந்த காலத்தும் விடாது செய்துவருவார் என உலகுக்குக் காட்டி, அது கொண்டு உலகை உய்விக்கும் பொருட்டு, இறைவர் அவரது வழிவழி வந்த செல்வத்தைச் சென்றவழி தெரியாது மாற்றினார். அதனால் அவரது செல்வம் யானை உண்ட விளாங்கனி போல உள்ளீடற்று மறைந்தது. அப்போதும் நாயனார் உமையொருபாகருக்குத் தாம் முன்செய்து வந்த திருப்பணிகள் முட்டாது செய்து வருவாராயினர். கூலிக்கு நெல்லறுத்து வாழ்பவராய்க் கூலியாகக் கிடைத்த செந்நெல்லைக் கொண்டு இறைவருக்குத் திருவமுது ஆக்கினார். கார்நெல் [4] அரிந்து கார்நெற்கூலிகொண்டு [5] தாம் உண்டு வந்தார். இந்நிலையினையும் மாற்ற இறைவர் திருவுளம் பற்றவே வயல்களில் எல்லாம் நல்ல நீண்ட செந்நெல்லேயாகி விளைந்தன. அவற்றை அறுத்த நெற்கூலியினைக் கொண்டு “இது அடியேன் செய்த புண்ணியமே ஆகும்” என்று சிந்தை மகிழ்ந்து, அக்கூலியெல்லாம் திருவமுதுக்கே ஆக்கினார். தம் வீட்டுக் கொல்லையில் வளர்த்த கீரை வகைகளைக் கொய்து மனைவியார் சமைத்துத்தர அதனை உணவாகக் கொண்டார். வீட்டுத்தோட்டத்தில் உள்ள கீரை வகைகள் தீரவே அருந்ததி அனைய மனைவியார் தண்ணீரை வார்க்க அதனை அன்பாளர் அமுது செய்து முன்போலப் பணிசெய்து வந்தனர்.

ஒருநாள் தொண்டனார் இறைவர்க்கு ஊட்ட அவரது அன்புபோன்ற தூய செந்நெல்லரிசியும், பசிய மாவடுவும், மென்கீரையும் கூடையிற் சுமந்து செல்ல, மனைவியார் அவர் பின்பு மட்கலத்தில் ஆனைந்து [6]ஏந்திச் சென்றனர். இவ்வாறு செல்லும் பொழுது திருமேனி வாடியதனால் கால் தளர்ந்து தப்பித் தாயனார் வீழ்ந்தார். மட்கலம் மூடும் கையினால் காதல் மனைவியார் அணைத்தும், கூடையிற் கொண்டவை எல்லாம் கமரிற் (நிலத்திற்) சிந்தின, அது கண்டு தாயனார், “இனி அங்கு ஏன் போதல் வேண்டும்?” என வருந்தினார். “அளவில்லாத தீமையுடையேன், இறைவன் அமுது செய்யும்பேறு பெற்றிலேன்” என்று உறுபிறப்பினை அரிவார் போன்று அரிவாள் கொண்டு உள்ளந்தண்டு அறும்படி கழுத்தினை அரியத் தொடங்கினார்.

அப்பொழுது கமரின்றும் அம்பலத்தாடும் ஐயரது வீசிய கையும், மாவடு [7]அருந்தும் “விடேல் விடேல்” என்று ஓசையும் உடனே ஒருங்கு எழுந்தன. இறைவரது திருக்கை அன்பரது கழுத்தரியும் திண்ணிய கையினைப் பிடித்துக் கொள்ளவே, அவரும் அச்செயல் தவிர்த்தனர். அரிந்த ஊறும் நீங்கியது.

அன்பனார் அஞ்சலி கூப்பி நின்று “அடியேனது அறிவில்லாமையைக் கண்டு என் அடிமை வேண்டிக் கமரின் வந்து இங்கு அமுது செய்தருளும் பரனே போற்றி” என்று பலவாறு துதித்து வணங்கினார். இறைவர் இடப வாகனராய்த் தோன்றி ‘நீ புரிந்த செய்கை நன்று! உன் மனைவியுடனே கூட நம் உலகில் என்றும் வாழ்வாயாக!” என்று அருளிச் செய்து, அவர் உடனே அடிசேர, திரு அம்பலத்தில் எழுந்தருளினார். தாயனவர் தம் கழுத்தை அரிவாள் பூட்டி அறுத்த காரணத்தால் அரிவாட்டாய நாயனார் (அறிவாள்+தாய = அரிவாட்டாய ) எனும் திருநாமத்தைப் பெற்றார்.

Remove ads

அடிக்குறிப்புகள்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads