அவதானக் குறை மிகையியக்கம் குறைபாடு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
அவதானக் குறை மிகையியக்கம் குறைபாடு அல்லது கவனக் குறைவால் மிகை செயல்பாடு கோளாறு சுருக்கமாக ஏடிஎச்டி (ADHD; attention deficit hyperactivity disorder) என்பது அவதானக்குறைவு, அளவுக்கு மீறிய இயக்கம் ஆகிய இரு பரந்த அறிகுறிகளைக் கொண்ட சிறு வயதில் ஏற்படும் ஒரு உளவியல் நோய் ஆகும். [1]ஒரு குறிப்பிட்ட செயற்பாட்டில் முழுமையான கவனத்தைக் குவிக்க முடியாமல் பராக்குப் பார்ப்பது போன்ற சூழ்நிலை மற்றும் வயதுக்கு மீறிய இயக்கம், உத்வேகம் (அளவுக்கு மீறிய துறுதுறுப்பு) என்பன இக்குறைபாட்டில் தோன்றுபவை. ஆரம்ப காலத்திலேயே சிறுவரின் மிகையான இயக்கத்தைக் கண்காணிப்பதன் மூலம் இக்குறைபாடு ஏற்படலாம் என்பதை அறிய முடிகின்றது. இக்குறைபாடு உள்ளது என்று அறுதியிட, ஏழு வயதுக்கு முன்னர் இக்குறைபாட்டின் பதினெட்டு அறிகுறிகளில் குறைந்த பட்சம் பன்னிரண்டாவது ஆறு மாத காலத்துக்கு தோன்றியிருக்கவேண்டும்.[2][3] இதில் ஆறு அறிகுறிகள் அவதானக்குறைவு சம்பந்தப்பட்டதாகவும், ஏனைய ஆறு அறிகுறிகள் மிகை இயக்கம் சம்பந்தப்பட்டதாகவும் அமைதல் தேவை என்று உளவியல் நோய்களுக்கான அறுதியிடல் மற்றும் புள்ளிவிவரக் கையேட்டின் நான்காவது உரைதிருத்தப் பதிப்பு (DSM-IV-TR) குறிப்பிடுகின்றது.[4] பாடசாலை செல்லும் சிறார்களின் பெறுபேறுகள் கவனமின்மையால் குறைகின்றது.
சிறுவர் உளநோய்களில் மிகவும் பொதுவானதாகவும் அடிக்கடி அறுதியிடுவதாகவும் இந்தக் குறைபாடு விளங்கினாலும் இதற்குரிய முழுமையான காரணங்கள் அறியப்படவில்லை. இக்குறைபாடுடைய சிறார்களைக் கட்டுப்படுத்துவது கடினமான செயலாக இருக்கும். வீட்டின் ஒரு அறையில் இருந்து மற்றொன்றுக்கு அடிக்கடி ஓட்டமாகச் செல்லுவது, மேசையில் இருக்கும் பொருட்களை இழுத்து வீழ்த்துவது, வீட்டிற்கு வந்திருக்கும் விருந்தாளிகளின் பையைத் திறந்து பார்ப்பது, வீட்டுக்கு வெளியே யாரும் பார்க்காத சமயத்தில் ஓடிச்செல்வது, வீதியைக் கடக்கும் போது இருபுறமும் பார்க்காமல் செல்வது, விளையாட்டுப் பொருட்களைத் தொலைப்பது அல்லது உடைப்பது, தாமதமாகத் துயிலுக்குச் சென்று முன்னதாகவே துயிலில் இருந்து எழும்புவது போன்ற செயல்கள் நான்கு வயதுக்கும் ஆறு வயதுக்கும் இடைப்பட்ட குறைபாடு உள்ளவர்களின் செயற்பாடாக இருக்கின்றது.
இக்குறைபாடு வயது போகப்போகச் சீர்நிலைக்குத் திரும்புமாயினும் சிலருக்கு முதிர்பருவத்திலும் நிலைத்துநிற்க வாய்ப்புண்டு. சிறுவயதில் அவதானக் குறை மிகையியக்கம் குறைபாடு உள்ளதென அறுதியிடப்பட்ட மாந்தரில் ஏறக்குறைய 30–50% உடையோருக்கு குறைபாட்டின் அறிகுறிகள் தொடர்ந்தும் முதிர்பருவத்தில் காணப்படுவது அவதானிக்கப்பட்டது.[5]
அவதானக் குறை மிகையியக்கம் குறைபாடு மற்றும் அதனது நோய் அறுதியிடலும் சிகிச்சையும் 1970களில் இருந்து ஒரு முரண்பாடாகவே இருந்து வருகின்றது. [6] மருத்துவர்கள், ஆசிரியர்கள், கொள்கை வகுப்பவர், பெற்றோர், ஊடகங்கள் என்பன முரண்பாடுகளில் பங்கெடுத்துக்கொண்டுள்ளன. அவதானக் குறை மிகையியக்கம் குறைபாடு உருவாகுவதற்கான காரணிகள் மற்றும் அதன் சிகிச்சைக்கு வழங்கப்படும் உளத்தூண்டல் மருந்துகள் இம்முரண்பாடுகளின் தலைப்பாக இருக்கின்றன.[7][8] பெரும்பான்மையான நலவாழ்விய சிகிச்சையாளர்கள் அவதானக் குறை மிகையியக்கத்தை ஒரு குறைபாடாக ஏற்றுக்கொண்டாலும் அதனை அறுதியிடலிலும் அதற்குச் சிகிச்சையளிப்பதிலும் அறிவியல் சமூகத்தில் விவாதங்கள் தொடர்ந்தவண்ணமே உள்ளன.[9][10][11]
Remove ads
நோய் அறிகுறிகள்
அவதானக்குறைவும் மிகை இயக்கமும் உத்வேகமும் இக்குறைபாட்டின் முதன்மையான அறிகுறிகள். பொதுவாகவே சிறுவயதினர் துடினம் உடையவர்களாகவும் சொல்வதைக் கேட்காத போக்குக் கொண்டவர்களாகவும் இருப்பது வழமை. ஆனால் இக்குறைபாட்டில் இந்தத் தன்மை மிதமிஞ்சி இருக்கும். இக்குறைபாடு உள்ளது என்று கண்டறிவதற்கு இக்குறைபாட்டில் தோன்றக்கூடிய பதினெட்டு அறிகுறிகளில் குறைந்த பட்சம் பன்னிரண்டாவது ஆறு மாத காலத்துக்கு தோன்றியிருக்கவேண்டும். அத்துடன் இவை சிறுவர்களின் ஏழு வயதுக்கு முன்னர் ஏற்பட்டு இருக்கவேண்டும். [4]
மூன்று வகைகள் இக்குறைபாட்டில் உள்ளன. அவையாவன:
- மிகவும் அவதானக்குறைவு
- மிகை இயக்கமும் உத்வேகமும்
- மேற்குறிப்பிட்ட இரண்டும் சேர்ந்தவை
அவதானக்குறைவால் ஏற்படக்கூடிய அறிகுறிகள்:[12]
- ஒரு செயலுக்குரிய விளக்கத்தை விவரமாகக் கேட்காமை,
- வீட்டு அல்லது பாடசாலைப் பணிகளில் அல்லது வேறு பணிகளில் கவனயீனமாக இருத்தல்
- ஒரு குறிப்பிட்ட செயலில் கவனத்தைக் குவிக்க இயலாமை
- நேரடியாக உரையாடுகையில் சொல்வதைச் செவிமடுக்காமல் இருப்பது
- கொடுக்கப்பட்ட பணியை ஒழுங்கான முறையில் செயற்படுத்த இயலாமை
- மூளைக்கு வேலையைக் கொடுக்கும் பணிகளில் ஈடுபட விருப்பமின்மை, இதனால் பாடசாலைக்குரிய வீட்டுவேலைகளில் ஈடுபடாமல் இருப்பது
- குறிப்பிட்ட பணிகளைச் செய்து முடிக்கத் தேவையான உபகரணங்களை அல்லது தேவையான வேறு பொருட்களை அடிக்கடி தொலைப்பது (பென்சில், பாடநூல்கள், பயிற்சி நூல்கள், விளையாட்டுப் பொருட்கள்)
- எளிதில் புறக்காரணிகளால் ஈர்க்கப்படுவது
- நாளாந்த வேலைகளை மறப்பது
மிகை இயக்கத்தால் ஏற்படும் அறிகுறிகள்:[12]
- உடலை முன்பின்னாகவோ அல்லது பக்கவாட்டிலோ எந்த நேரமும் பதட்டத்துடன் அசைத்துக் கொண்டிருத்தல், இருக்கையில் இருக்கும் போது இருப்புக்கொள்ளாது உடலை நெளித்தல், கைகளை அல்லது கைவிரல்களை அல்லது கால்களை அசைத்துக் கொண்டிருத்தல். எடுத்துக்காட்டாக, மேசையில் கைவிரல்களைத் தட்டிக்கொண்டு இருத்தல், பென்சிலால் தட்டிக்கொண்டு இருத்தல்
- வகுப்பறையில் அல்லது எங்கேனும் தொடர்ச்சியாக அமர்ந்திருக்க வேண்டிய சந்தர்ப்பங்களில் (உணவறை, பாடசாலை வீட்டுவேலை செய்யும்போது) இருக்கையைவிட்டு எழுந்து நீங்குதல்
- அடிக்கடி ஓடிச்செல்வது அல்லது எங்கேனும் ஏறுவது, எடுத்துக்காட்டாக இருக்கையின் மேலே ஏறி நிற்பது
- ஓய்வு நேர செயற்பாடுகளில் ஈடுபடுவதில் விருப்பமின்மை அல்லது அத்தகைய சந்தர்ப்பங்களில் அமைதியைக் கடைப்பிடிக்காமை
- தொடர்ச்சியாக அளவுக்கதிகமாக உரையாடலில் ஈடுபடுவது
- இயந்திரம் ஒன்றால் இயக்கப்படுவதைப்போல எப்போதும் இயக்கத்திலேயே இருப்பது
உத்வேகத்தால் ஏற்படும் அறிகுறிகள்: [12]
- ஒரு வினா கேட்கப்படும் முன்னரேயே விடையைச் சடுதியாகக் கூற முற்படுவது
- ஏதாவது சந்தர்ப்பங்களின் (விளையாட்டு, வரிசையில் நிற்றல்) போது தனது முறை வரும்வரை காத்திருக்க இயலாமை
- உரையாடல் போன்ற அடுத்தவரின் செயற்பாட்டில் அடிக்கடி குறுக்கிடுவது
அவதானக் குறை மிகையியக்கம் குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்கள் அடுத்தவருடன் நெருங்கிப்பழகுவது, உரையாடுவது, நண்பர்களை ஏற்படுத்திக்கொள்வது போன்ற சமூகத்திறன்களைக் கொண்டிருப்பதில் பின்தங்கி இருப்பார்கள். 10–15% குறைபாடற்ற சிறார்கள், பதின்மவயதினருடன் ஒப்பிடுகையில் ஏறக்குறைய அவதானக் குறை மிகையியக்கம் குறைபாட்டைக்கொண்ட அரைவாசிச் சிறார்களும் பதின்மவயதுடையவர்களும் தமது சகாக்களால் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. சமூகத்தில் பழகுவது, உரையாடுவது என்பது இவர்களுக்குச் சிக்கல் நிறைந்ததாகக் காணப்படுகின்றது. இவர்களால் மொழிமூலமான, அசைவு மூலமான உரையாடலை ஏற்படுத்துவதில் இயலாமை இருக்கின்றது.[13]
கோபத்தைக் கட்டுப்படுத்துவதும் இக்குறைபாட்டைக் கொண்டுள்ளவர்களுக்குச் சிக்கல் நிறைந்ததாக இருக்கின்றது.[14] இதைவிட இவர்களின் கையெழுத்து சீராக இருப்பதில்லை எனவும் அறியப்பட்டுள்ளது.[15]மேலும் இவர்கள் பேசும் பருவத்தில் பேசத்தொடங்குவதில்லை. [16][17] இவ்வகைக் குறைபாடுகள் இருந்தும் இவர்களால் தமக்கு விருப்பமான செயல்களில் அக்கறையுடன் கவனம் செலுத்தி ஈடுபட முடிவதுண்டு.[18]
Remove ads
இணைந்து வரக்கூடிய குறைபாடுகள்
பொதுவாக இவ்வகையான உளக்குறைபாடுகள் வேறு உளகுறைபாடுகளுடன் இணைந்து வருவதுண்டு. அவ்வகையில் கீழ்க்காணும் குறைபாடுகள் அவதானக் குறை மிகையியக்கம் குறைபாட்டுடன் இணைந்துவரக்கூடியவை.
- கற்றல் குறைபாடு (Learning disability): ஏறத்தாழ 20–30% அவதானக் குறை மிகையியக்கம் குறைபாட்டைக் கொண்டவர்களில் இது காணப்படுகின்றது. மொழியைக் கற்றல், எழுதுதல், வாசித்தல் மற்றும் கணிதம் பயிலல் என்பன இக்குறைபாடுடையவருக்குக் கடினமாக இருக்கும். அவதானக் குறை மிகையியக்கம் குறைபாடு ஒரு கற்றல் குறைபாடு அல்ல என்றாலும் அவர்களின் பாடசாலைப் பெறுபேறுகள் பின்தங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.
- தொரட் கூட்டறிகுறி பொதுவாக அவதானக் குறை மிகையியக்கம் குறைபாட்டுடன் இணைந்து இருப்பது அறியப்பட்டுள்ளது.[19]
- எதிர்வுப் பணியாமைக் குறைபாடு (Oppositional defiant disorder), நடத்தைக் குறைபாடு (Conduct disorder) போன்றன முறையே அவதானக் குறை மிகையியக்கம் குறைபாட்டின் 50% மற்றும் 20% நிகழ்வுகளில் இருக்கின்றன. எதிர்வுப் பணியாமைக் குறைபாடு என்பது பெற்றோர், ஆசிரியர் அல்லது பெரியோருக்கு மதிப்புக் கொடுக்காது வயதுக்கு மீறிய கோபம், விவாதம், அடிபணியாமை போன்ற குணங்களைக் கொண்டுள்ள உளக்குறைபாடு ஆகும். நடத்தைக் குறைபாட்டில் களவு வேளைகளில் ஈடுபடல், பொய் சொல்லல், பிடிவாதம், ஏமாற்றுதல் ஆகிய அம்சங்கள் அடங்கியுள்ளது. நடத்தைக் குறைபாடு மற்றும் அவதானக் குறை மிகையியக்கம் போன்றவை திருத்தப்படாத பட்சத்தில் பதினெட்டு வயதுக்கு மேலேயுள்ளவரில் சமூகவெதிர் ஆளுமைக் குறைபாடு (antisocial personality disorder) என அழைக்கப்படும். [4]
- மனநிலைப் பிறழ்வுகள் (Mood disorders) (குறிப்பாக இருமுனையப் பிறழ்வு மற்றும் பெரும் மனத்தளர்வுப் பிறழ்வு): அவதானக்குறைவு மற்றும் மிகை இயக்கம் இரண்டும் சேர்ந்த குறைபாட்டு வகையைக் கொண்ட பையன்கள் அனேகமாக மனநிலைப் பிறழ்வை எதிர்நோக்குவர்.[20] முதிர்ந்தவரில் இருமுனையப் பிறழ்வு இருக்கக்கூடும், இந்நிலையில் இவ்விரண்டையும் கவனமாக அறுதியிட்டு சிகிச்சை வழங்கவேண்டி இருக்கும்.[21]
- மனோவிசாரப் பிறழ்வுகள் (Anxiety disorder) அவதானக் குறை மிகையியக்கம் குறைபாட்டு மக்களில் இருப்பது அறியப்பட்டுள்ளது.[20]
- வயத்தூண்டுமை நிர்ப்பந்தக் குறைபாடு (Obsessive–compulsive disorder - OCD) அவதானக் குறை மிகையியக்கம் குறைபாட்டில் இணைந்து வரலாம். வயத்தூண்டுமையின் அறிகுறிகள் அவதானக் குறை மிகையியக்கத்தில் காணப்படலாம். [22]
- போதைப்பொருள் பயன்பாடு அவதானக் குறை மிகையியக்கம் குறைபாடுடைய இளம்வயதினருக்கு மிகையாக ஏற்படக்கூடிய இடர்நிலை காணப்படுகின்றது.[1] மதுபானம், கஞ்சா போன்றவை முதன்மையான பயன்பாட்டுப் பொருட்களாகத் திகழ்கின்றன. மனித மூளையில் தாம் விரும்பும் மகிழ்வளிக்கும் நடத்தையில் ஈடுபடுவதற்கென உள்ள பாதை, செயல்விளைவுப் பாட்டை (reward pathway) எனப்படுகின்றது. அவதானக் குறை மிகையியக்கம் குறைபாடுடையவருக்கு இந்தப் பாட்டையில் ஏற்படும் மாற்றம் காரணமாக போதைப்பொருள் பயன்பாட்டை நாடக்கூடிய வாய்ப்புண்டு.[1] இதனைத் தவிர்ப்பதற்கு இவர்களில் இச்சிக்கல் முதன்மையாகக் குணப்படுத்தப்படல் தேவையானது, இதன்காரணமாக அவதானக் குறை மிகையியக்கம் குறைபாட்டை அறிவதிலும் அதற்கு கொடுக்கப்படும் சிகிச்சை அணுகுமுறையிலும் மாற்றம் ஏற்படுகின்றது.[23]:p.38[24]
- துயில் பிறழ்ச்சிகள் அவதானக் குறை மிகையியக்கம் குறைபாட்டுடன் சேர்ந்து உள்ளன. இவை அவதானக் குறை மிகையியக்கத்துக்குப் பயன்படுத்தப்படும் மருந்துவகைகளின் பக்கவிளைவாகவும் ஏற்படலாம். சிறார்களில் துயிலின்மை பொதுவாகக் காணப்படுகின்றது.[25][26] துயில் கொள்ளத் தொடங்குதல் அவதானக் குறை மிகையியக்கம் குறைபாட்டு மாந்தர்களுக்குச் சிரமமாக இருந்தாலும் பின்னர் அவர்களது தூக்கம் ஆழமான துயிலாக இருக்கும்; காலையில் எழும்புவதற்கும் சிரமம் காணப்படும்.[27] சிறார்களுக்கு துயிலின்மையைப் போக்க சிலசமயங்களில் மெலடோனின் கொடுக்கப்படுகின்றது.[28]
Remove ads
காரணிகள்
பெரும்பான்மையான குறைபாட்டு நிகழ்வுகளுக்குக் காரணங்கள் அறியப்படவில்லை. எனினும், புறச்சூழல் மற்றும் மரபியல் மூலகாரணிகளுக்கு இடையேயான இடைவினைகளாக இருக்கலாம் என்று நம்பப்படுகின்றது.[29][30] முன்னர் ஏற்பட்ட தொற்றுடன் அல்லது மூளையில் ஏற்பட்டிருக்கக்கூடிய காயத்துடன் சில நிகழ்வுகள் தொடர்புடையனவாக உள்ளன.[29]
மரபியல் காரணிகள்
இக்குறைபாடு பெற்றோரில் இருந்து மகவுக்கு பரம்பரையாக மரபியல் சார்பில் கடத்தப்படுகின்றது என்பதை இரட்டையர்ப் படிப்புகள் (Twin studies) குறிப்பிட்டுக் காட்டுகின்றன.[23][31][32]அவதானக் குறை மிகையியக்கம் குறைபாடு இளவயது தாண்டியும் தொடர்ந்து நிலைக்குமா என்பதையும் மரபியல் மூலகாரணிகள் தீர்மானிக்கலாம் என்று நம்பப்படுகின்றது.[33]
சில குறிப்பிட்ட வகை மரபணுக்கள் அவதானக் குறை மிகையியக்கம் குறைபாட்டுடன் தொடர்புடையனவாக உள்ளன. இவற்றில் பெரும்பான்மையானவை டோபாமின் நரம்புக்கடத்துகையை நேரடியாகப் பாதிக்கின்றன.[34][35] டோபாமினுடன் தொடர்பு கொண்டுள்ள மரபணுக்கள்: DAT1, DRD4, DRD5, TAAR1, MAOA, COMT, DBH [35][36][37] இக்குறைபாட்டுடன் தொடர்புடைய ஏனைய மரபணுக்கள்: 5HTT, HTR1B, SNAP25, GRIN2A, ADRA2A, TPH2, BDNF[34][35]
புறச்சூழல்
புறச்சூழல் காரணிகள் குறைந்தளவிலேயே தாக்கத்தை ஏற்படுத்துவதாக நம்பப்படுகின்றது. கர்ப்பத்தின் போது மதுபான வகைகள் அருந்துவது முதிர்க்கரு மதுமியத் தொடர்ப் பிறழ்ச்சிகளைத் (fetal alcohol spectrum disorder) தோற்றுவிக்கக்கூடும், இவற்றில் ஏடிஎச்டியின் அறிகுறிகள் காணப்படுகின்றன.[38]கர்ப்பிணித் தாய்மார்கள் புகையிலையின் புகைப்பிடித்த வளியை நுகருவதால் சிசுவுக்கு மைய நரம்புத் தொகுதியின் விருத்தியில் தடைகள் ஏற்படலாம், இது அவதானக் குறை மிகையியக்கம் குறைபாடு உண்டாவதற்குரிய இடர்க்காரணியாகத் திகழ்கின்றது.[39] புகைப்பிடித்தலால் பாதிக்கப்படும் சிறார்களில் ஏடிஎச்டி தோன்றுவதில்லை அல்லது அவர்களில் குறைந்தளவு அறிகுறிகளே தென்படுகின்றன, இவை ஏடிஎச்டிக்கான அறுதியிடல் எல்லையைத் தொடுவதில்லை. ஈயம், பல்குளோரினேற்ற இருபீனைல்கள் ஆகியனவற்றின் வெளிப்பாட்டால் பாதிக்கப்பட்ட சிறார்களில் ஏற்படும் அறிகுறிகள் ஏடிஎச்டியை ஒத்திருக்கின்றன.[40]
நோய் உடற்செயலியல்
மூளையின் அமைப்பு
அவதானக் குறை மிகையியக்கம் குறைபாட்டின் நோய் உடற்செயலியல் வெவ்வேறு ஒன்றுக்கொன்று சவாலான விளக்கங்களின் மத்தியில் தெளிவாக வரையறுக்கப்படவில்லை.[22] இக்குறைபாட்டில் சிறுவரின் மூளையின் கொள்ளளவு பொதுவாகக் குறைந்தும் விகிதாசாரப்படி மூளையின் இடதுபுற முன்-நுதல் புறணியின் ( prefrontal cortex) கொள்ளளவு மிகவும் குறைந்தும் காணப்படுகின்றது
வெளி இணைப்புகள்
உசாத்துணைகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads