நாராயண ஐயங்கார்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
அப்பனையங்கார் திரு நாராயண ஐயங்கார் இதழாசிரியர்; ஆய்வாளர்; நூலாசிரியர்.
பிறப்பு
தமிழ் இலக்கிய உலகில் திரு நாராயண ஐயங்கார் என்று அறியப்பட்ட அ. நாராயண ஐயங்கார் விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் வட்டத்தில் உள்ள எதிர்க்கோட்டை என்னும் சிற்றூரில் 1861 அக்டோபர் 31 ஆம் நாளில் கோ. அப்பனையங்கார் – செங்கமலவல்லி என்னும் இணையருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தார். இவர் தமிழ், வடமொழி ஆகியவற்றில் புலமை பெற்றவர்.[1]
கல்வி
நாராயணனார் உள்ளூரில் தொடக்கக் கல்வியைப் பெற்றார். பின்னர் இராமநாதபுரம் சென்று அங்கு வாழ்ந்த பந்தல்குடி வேங்கடாசாரியாரிடம் வடமொழியையும் சித்தாத்திக்காடு சிறீநிவாசாசாரியாரிடம் திவ்யப் பிரபந்தம் உள்ளிட்ட வைணவ நூல்களையும் சாமாசாரியாரிடம் ஏரணமுறை (தருக்கம்)யையும் பழனிக்குமார தம்பிரானிடம் சைவநூல்களையும் கற்றார்[2]. மேலும் சதாவதானம் முத்துசாமி ஐயங்காரிடம் குருகுலவாசம் செய்து பல நூல்களைக் கற்றறிந்தார்.
Remove ads
பணி
கல்வி கற்றல் நிறைவடைந்ததும் தன்னோடு பயின்ற பாண்டித்துரைத் தேவர் அரசவையில் அவைக்களப் புலவராகப் பணியாற்றினார். 24.5.1901 ல் தமிழ்ச்சங்கம் நிறுவப்பட்டபோதிருந்து தமிழ்ச்சங்கக் கலாசாலைத் தலைமை ஆசிரியராகப் பொறுப்பேற்று[3], தன் இறுதிக்காலம் வரை (ஏறத்தாழ நாற்பத்தாறு ஆண்டுகள்) அப்பதவியைத் திறம்பட நிர்வகித்தார்.
இதழாசிரியர்
நாராயண ஐயங்கார் மதுரைத் தமிழ்ச் சங்கத்தால் வெளியிடப்படும் செந்தமிழ் இதழின் ஆசிரியராக[4] 1911 ஆம் ஆண்டு முதல் 1947 ஆம் ஆண்டு வரை பணியாற்றினார். இவருக்கு முன்னர் அவ்விதழுக்கு 1902 முதல் 1907 வரை இரா. இராகவையங்காரும் 1907 முதல் 1911 வரை மு. இராகவையங்காரும் ஆசிரியர்களாக இருந்தனர்.
படைப்புகள்
இவர் பின்வரும் நூல்களையும் கட்டுரைகளையும் எழுதியுள்ளார்:[1]
- வான்மீகரும் தமிழும் - 1938 செந்தமிழ் இதழில் கட்டுரையாக வந்தது, பின்பு புத்தகமாக வெளியிடப் பட்டது.
- நியாயப் பிரவேச மணிமேகலை - அநுமான விளக்கம்
- பரதாழ்வான் வைபவம் - செந்தமிழ் இதழில் கட்டுரையாக வந்தது, பின்பு "படியில் குணத்து பரதநம்பி" என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிடப் பட்டது.
- அண்ட கோள விருத்தி - 1931 செந்தமிழ் இதழில் கட்டுரையாக வந்தது, பின்பு "வான்மீகரும் தமிழும்" புத்தகத்தின் பகுதியாக வெளியிடப் பட்டது.
- அமிர்த ரஞ்சனி - 1939 செந்தமிழ் இதழில் கட்டுரையாக வந்தது, பின்பு "வான்மீகரும் தமிழும்" புத்தகத்தின் பகுதியாக வெளியிடப் பட்டது.
- தமிழ் ஜாதகசந்திரிகா - ஜாதகசந்திரிகா என்ற வடமொழி நூலை தமிழ் வெண்பாக்களாக வடிக்கப்பட்ட நூல்
- பழமொழி நானூறு உரை - பழமொழி நானூறின் முதல் 200 பாக்களுக்கான விரிவான உரை
- பாண்டியம் - 1911ஆம் ஆண்டு முதன் முதலில் எழுதப்பட்ட, பல மொழிகளுக்குப் பொதுவான எழுத்து வடிவமும் சுருக்கெழுத்தும்[5]
இவை தவிர இலக்கணம். இலக்கியம். ஏரணம் (தருக்கம்), சோதிடம், வரலாறு, சமயம் தொடர்பாக ஐம்பதிற்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியிருக்கிறார்[2].
Remove ads
விருதுகள்
நாராயண ஐயங்கார் பெற்ற விருதுகளும் பாராட்டுக்களும் பல. சில இங்கே வருமாறு:
- 1896 விக்டோரியா மகாராணியாரின் ஜுபிலீ பண்டிகைக் கொண்டாட்டத்தில் உதவி கலெக்டர் ராஜாராமையாவால் பரிசளிக்கப்பட்டு பாராட்டப்பட்டார்.
- 1922 ஜனவரி 13 வேல்ஸ் இளவரசர் சென்னை வருகையை முன்னிட்டு, சென்னை அரசாங்கம் நாராயண ஐயங்காரின் தமிழ் புலமையை மெச்சி அவருக்கு தங்கத் தோடாவும், பதக்கமும், சால்வையும், இளவரசர் கரத்தாலே பரிசளிக்கச் செய்து கௌரவித்தது.
- 1934 மதுரை தமிழ் சங்கத்தின் முப்பத்து மூன்றவது வருட விழாவில், அவர் தமிழ் சங்கத்திற்கு ஆற்றிய தொண்டை மெச்சி சென்னை மாகாண கவர்னர் முஹமது உஸ்மான் ஸாஹிப் பகதூர் கரத்தால் பொன்முடிப்பும் சால்வையும் அளித்துச் சிறப்பித்தனர்.
- 1945 சேது வேந்தர் ஷண்முக ராஜேஸ்வர நாகநாத சேதுபதி அவர்கள் தமது முப்பத்து ஏழாம் ஆண்டு நிறைவு விழாவில் பொற்பதக்கமும் பட்டும் பரிசும் நல்கிப் பாராட்டினார்
Remove ads
மறைவு
நாராயண ஐயங்கார் 1947 சூலை 29 ஆம் நாள் மறைந்தார்.
சான்றடைவு
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads