ஆங்கில-ஈராக்கியப் போர்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஆங்கில-ஈராக்கியப் போர் (Anglo-Iraqi War) என்பது இரண்டாம் உலகப் போரின் போது ஐக்கிய இராச்சியத்துக்கும் ஈராக்கின் புரட்சி அரசுக்கும் இடையே நடைபெற்ற போர். மே 2-31, 1941 காலகட்டத்தில் நடைபெற்ற இப்போர் நடுநிலக்கடல், மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்க களத்தின் ஒரு பகுதியாகும்.
முதலாம் உலகப் போருக்குப்பின் பிரிட்டன் உலக நாடுகள் சங்கத்தின் அனுமதியோடு ஈராக்கை நிருவகித்து வந்தது. 1932 இல் ஈராக்கிற்கு தன்னாட்சி வழங்கி படிப்படியாக தனது படைகளை விலக்கிக் கொண்டது. ஈராக்கிய பிரதமர் நூரி அஸ்-சைத் ஒரு பிரித்தானிய ஆதரவாளர். அவரது ஆட்சியில் ஈராக் பிரித்தானியாவுடனும் பிற நேச நாடுகளுடனும் நட்புறவுடன் செயல்பட்டு வந்தது. இரண்டாம் உலகப் போர் மூண்டவுடன் நாசி ஜெர்மனியுடனான தூதரக உறவை முறித்துக் கொண்டது. ஆனால் மார்ச் 1940 இல் அஸ்-சைத் பதவியிலிருந்து இறக்கப்பட்டு தேசியவாதியான ரசீத் அலி பிரதமரானார். அவர் அச்சு நாட்டு ஆதரவாளர். அவரது நிருவாகத்தில் ஈராக் அச்சு நாடுகளுக்கு ஆதரவாகச் செயல்படத் தொடங்கியது. மத்திய கிழக்காசியாவில் அச்சு நாடுகளின் கூட்டணி நாடு போலவே செயல்பட்டது. ஆனால் ஜனவரி 1941 இல் ரசீத் அலியின் அரசு கவிழ்ந்து தாகா அல் ஹஷீமி பிரதமரானார். மீண்டும் ஈராக் நேச நாட்டு ஆதரவு நாடானது. ஆனால் ஏப்ரல் 1941 இல் ரசீத் அலி இராணுவ அதிகாரிகளுடன் துணையுடன் புரட்சி ஒன்றை ஏற்படுத்தி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றினார். விடுதலைக்கு முன்பு பிரிட்டனுடன் செய்து கொண்ட ஒப்பந்தகங்களை ரத்து செய்ய முயன்றார். மேலும் பிரிட்டனுக்கு ஆதரவான மன்னராட்சி பதிலாளுனர் அப்துல்லாவையும் பதவியிலிருந்து அப்புறப்படுத்தினார். இதனால் கோபம் கொண்ட பிரித்தானியத் தலைவர்கள், படைபலத்தால் ஈராக்கைப் பணிய வைக்க முடிவு செய்தனர்.
ஏப்ரல் 1941 இல் ஈராக்குக்கு பிரித்தானிய தரை, கடல் மற்றும் வான்படைப் பிரிவுகள் பல அனுப்பப்பட்டன. இதனால் இரு தரப்புக்குமிடையே பேச்சுவார்த்தைகள் முறிந்து வெளிப்படையாகப் போர் மூண்டது. மே 2ஆம் தேதி ஈரக்கியப் படைகள் ஹப்பானியாவிலிருந்து வேந்திய வான்படைத் தளத்தை முற்றுகையிட்டன. இந்த முற்றுகையை முறியடிக்க பிரித்தானியப் படைகள் முயன்றன. அடுத்த சில வாரங்களில், ரசீத் அலி அரசுக்கு ஆதரவாக அச்சுப் படைகள் ஈராக்குக்கு அனுப்பப்பட்டன. நாசி ஜெர்மனி, பாசிச இத்தாலி, விஷி பிரான்சு ஆகியவை ரசீத் அலிக்கு ஆதரவாக படைப்பிரிவுகளையும் தளவாடங்களையும் ஈராக்குக்கு அனுப்பின. ஹப்பானியா முற்றுகையை முறியடிக்க பாலஸ்தீனத்திலிருந்து ஜெனரல் ஆர்ச்சிபால்டு வேவல் தலைமையில் ஒரு பிரித்தானியப் படை வடக்கிலிருந்து ஈராக் மீது படையெடுத்தது. இரு பிரிவுகளாக ஈராக்கினுள் முன்னேறி மே 17ம் தேதி ஹப்பானியா தளத்தை அடைந்து முற்றுகையை முறியடித்தது. இதே வேளை ஈராக்கின் தெற்கே பாஸ்ரா நகரிலிருந்து பிரித்தானியப் படைகள் ஈராக்கினுள் முன்னேறின. மே 18ம் தேதி ஃபல்லூஜா கைப்பற்றப்பட்டது. மே 27ம் தேதி பிரித்தானியப் படைகள் ஈராக்கியத் தலைநகர் பக்தாத்தை நோக்கி முன்னேறத் தொடங்கின. மே 31ம் தேதி பக்தாத் நகரம் சரணடைந்து போர் முடிவுக்கு வந்தது.
ரசீத் அலியின் அரசு கலைக்கப்பட்டு, அப்துல்லா மன்னராட்சி பதில் ஆளுனராக மீண்டும் நியமிக்கப்பட்டார். மேலும் ஒரு பிரித்தானிய ஆதரவு அமைச்சரவை ஈராக்கில் பதவியேற்றது.
Remove ads
குறிப்புகள்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads