ஆண்டாள்

7ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வைணவ ஆழ்வார்களுள் ஒருவர். From Wikipedia, the free encyclopedia

ஆண்டாள்
Remove ads

ஆண்டாள் தமிழகத்தில் பொ.ஊ. 7ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வைணவ ஆழ்வார்களுள் ஒருவர்.[4][5] வைணவம் போற்றும் 12 ஆழ்வார்களில் இவர் ஒருவரே பெண்ணாவார். ஆண்டாள், திருப்பாவை, நாச்சியார் திருமொழி என்னும் இரண்டு பாடற் தொகுதிகளை இயற்றியுள்ளார். வைணவ சமய நூல்கள் கூறும் இவரது வரலாறு இறைவன் மீது இவர் கொண்டிருந்த காதலை நமக்கு எடுத்துரைக்கிறது. மேலும், ஆண்டாள் பூமிப் பிராட்டியின் அவதாரமாகக் கருதப்படுகிறார்.

விரைவான உண்மைகள் ஆண்டாள், பிறப்பு ...
Remove ads

ஆண்டாளின் தோற்றமும் வாழ்க்கையும்

மதுரைக்கு அண்மையிலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் என்னும் ஊரில் வசித்துவந்த விஷ்ணுசித்தர் (பெரியாழ்வார்) என்னும் அந்தணர் ஒருவரால் ஒரு குழந்தையாகத் துளசிச் செடியின் கீழ் கிடந்தபோது, ஆண்டாள் கண்டெடுக்கப்பட்டாள். இந்த அந்தணர் திருவில்லிபுத்தூர் ஆண்டாள் சமேத அரங்கநாதர் கோவிலுக்கு மலர்கள் கொய்து கொடுப்பதைத் தமது கடமையாகக் கொண்டவர். தனக்கெனக் குடும்பம் எதுவும் இல்லாதிருந்த நிலையிலும், கண்டெடுத்த குழந்தையைத் தனக்கு இறைவனால் வழங்கப்பட்ட கொடை எனக் கருதி வளர்த்து வரலானார். ஆயர் குல பெருமை அறிந்த பெரியாழ்வார் அக்குழந்தைக்கு இட்ட பெயர் கோதை என்பதாகும்.

இளம் வயதிலேயே, தனக்குத் தெரிந்த சமயம் சார்ந்த கருத்துகள் மற்றும் தமிழ்மொழி போன்ற அனைத்தையுமே விஷ்ணுசித்தர் கோதைக்குச் சொல்லிக் கொடுத்தார். இதனால் கோதை இளம் வயதிலேயே கண்ணன் மீது மிகுந்த பக்தியுணர்வு கொண்டவராயும் தமிழில் நல்ல திறமை கொண்டவராகவும் இருந்தார். சிறு வயதிலேயே கண்ணன் மீதிருந்த அளவற்ற அன்பு காரணமாக அவனையே மணம் செய்துகொள்ள வேண்டுமென்ற எண்ணத்தையும் வளர்த்துக்கொண்டார். தன்னைக் கண்ணனின் மணப்பெண்ணாக நினைத்துப் பாவனை செய்துவந்தார். கோயிலில் இறைவனுக்கு அணிவிப்பதற்காக விஷ்ணுசித்தர் தொடுத்து வைத்திருக்கும் மாலைகளை ஒவ்வொரு நாளும் அவருக்குத் தெரியாமல் தான் அணிந்து கண்ணனுக்கு ஏற்றவளாகத் தானிருக்கிறோமா என்று கண்ணாடியில் பார்த்து மகிழ்ந்து பின்னர்த் திரும்பவும் கொண்டுபோய் வைத்துவந்தார். இதனால் கோதை சூடிய மாலைகளே இறைவனுக்கும் சூடப்பட்டன. ஒருநாள் இதனை அறிந்து கொண்ட விஷ்ணுசித்தர் கோதையைக் கடிந்துகொண்டார். அவள் சூடிய மாலையை ஒதுக்கிவிட்டுப் புதிய மாலை தொடுத்து இறைவனுக்கு அணிவித்தார். அன்றிரவு இறைவன் அவரது கனவில் தோன்றிக் கோதை அணிந்த மாலைகளே தனக்கு உகப்பானவை எனவும் அவற்றையே தனக்குச் சூடவேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார். இதனாலேயே "சூடிக்கொடுத்த சுடர்க்கொடி" என்றும் "இறைவனையே ஆண்டவள்" என்ற பொருளில் ஆண்டாள் என்றும் போற்றப்படுகிறார்.

கோதை மண வயதடைந்த பின்னர் அவளுக்காக ஒழுங்கு செய்யப்பட்ட திருமண ஏற்பாடுகளை மறுத்து, திருவரங்கம் (ஸ்ரீரங்கம்) கோயிலில் உறையும் இறைவனையே மணப்பதென்று பிடிவாதமாக இருந்தார். என்ன செய்வதென்று அறியாது கவலையுடனிருந்த விஷ்ணுசித்தருடைய கனவில் தோன்றிய இறைவன், கோதையை மணப்பெண்ணாக அலங்கரித்து திருவரங்கம் கோயிலுக்கு அழைத்துவருமாறு பணித்தார். குறித்த நாளன்று கோயிலுக்கு அழைத்துச் செல்லப்பட்ட கோதை, கோயில் கருவறைக்குள் சென்று இறைவனுடன் கலந்துவிட்டாள் என்பது ஆண்டாள் வரலாறு.[6]

Remove ads

ஆண்டாளின் பக்தி

வட இந்தியாவில் ராதாவின் பக்தி பிரபலமாகப் போற்றப்படுகிறது. பெண் பக்தியாளர்களில் மீராபாய் கண்ணனிடம் கொண்ட அர்பணிப்புடன் கூடிய பக்தியைப் போலத் தமிழகத்தில் ஆண்டாளின் பக்தி போற்றப்படுகிறது. இவரது முதல் படைப்பான திருப்பாவை 30 பாடல்களைக் கொண்டுள்ளது. இத்தொகுப்பு, ஆண்டாள் தன்னை ஆயர்பாடியில் வாழும் கோபிகையாக நினைத்துக் கொண்டு, கண்ணனின் திருவடியை அடைதலையே தன் வாழ்வின் இலட்சியமாக எண்ணிப் பாடியுள்ளதைக் குறிப்பதாக உள்ளது.[7]

Remove ads

ஆண்டாளின் மலர் மாலைகளும் திருப்பதி வெங்கடேச பெருமாளும்

திருவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிய மலர் மாலைகள் ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி பெருமாளுக்குச் சார்த்துவதற்காக வருடந்தோறும் அனுப்பப்படுகிறது. இவ் வைபவம், தமிழ் மாதமான புரட்டாசியில், திருப்பதி பிரம்மோற்சவம் விழாவில், குறிப்பாகக் கருட சேவை அன்று நடைபெறுகிறது. ஆண்டாள் சூடிய மலர் மாலையைப் பெருமாள் சூடிக்கொண்டு பவனி வருகிறார். இந்த மலர்மாலை, துளசி, செவ்வந்தி மற்றும் சம்பங்கி பூக்களால் தொடுக்கப்பட்டதாக உள்ளது.[8] மேலும், திருப்பதி பெருமாளின் மலர்மாலை, வருடந்தோறும் நடைபெறும் திருவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவத்திற்காக அனுப்பப்படுகிறது.[9]

கள்ளழகர்

மதுரையில் நடைபெறும் பிரசித்தமான சித்திரைத் திருவிழாவின் போது, ஆண்டாளின் மலர்மாலை கள்ளழகருக்கு அணிவிப்பதற்காகத் திருவில்லிப்புத்தூரிலிருந்து கொண்டு செல்லப்படுகிறது.[9]

ஆண்டாள் சிகையலங்காரம்

ஆண்டாள் கொண்டை தமிழ்நாட்டில் பிரசித்தி பெற்றது. இந்தச் சிகையலங்காரம், கேரள மாநில நம்பூதிரிகளின் சிகை அலங்காரத்திற்கு ஒத்ததாக உள்ளது.[10]

ஆண்டாளின் கிளி

திருவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆண்டாளின் இடக்கையில் கிளி இருக்கிறது. இது தினமும் புதியதாக இன்றளவும் செய்யப்படுகிறது.[11] இந்தக் கிளியைச் செய்வதற்குத் தோராயமாக நான்கிலிருந்து நாலரை மணி நேரம் எடுத்துக்கொள்ளப்படுகிறது. இக் கிளியைச் செய்வதற்கு, மாதுளம் மரத்தின் பூக்கள் கிளியின் அலகு மற்றும் வாய்ப்பகுதி செய்வதற்கும், மூங்கில் குச்சிகள் கிளியின் கால் பகுதிக்கும், வாழை மரத்தின் இலைகள் மற்றும் நந்தியாவட்டை மரத்தின் இலைகள் உடல் பகுதி செய்வதற்கும் பயன்படுத்தப் படுகின்றன.[12]

Remove ads

திருவிழாக்கள்

திருவில்லிப்புத்தூர் திருத்தலம் இரண்டு கோவில்களை உள்ளடக்கியதாக உள்ளது. ஒன்று ஆண்டாள் கோவில். பொதுவாக அனைத்து வைணவக் கோவில்களில் ஆண்டாளுக்குத் தனிச் சன்னிதி அமைந்துள்ளது. நிறைய திருவிழாக்கள் ஆண்டாள் நினைவாகத் தமிழகத்தில் கொண்டாடப்படுகின்றன. அவற்றில் முக்கியமானது "பாவை நோன்பு" ஆகும். இது தமிழ் மாதம் மார்கழி ஒன்றாம் தேதியிலிருந்து முப்பதாம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. பங்குனி மாதத்தில் "ஆண்டாள் திருக்கல்யாணம்", பகல்பத்து, இராப்பத்து, மற்றும் ஆடிப் பூரம், ஆடித் திருவிழா போன்றவை சில முக்கிய விழாக்களாகும்.[13] பன்னிரண்டு ஆழ்வார்களில், ஒருவராக ஆண்டாள் இருந்தாலும், தமிழகத்தில் ஆண்டாள் ஒரு பெண் தெய்வமாகவே வழிபடப்படுகிறார்.[14] ஆடிப் பூரத் திருவிழா, திருவில்லிப்புத்தூரில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. வருடந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் இவ் விழாவில் பங்கேற்கின்றனர்.[15][16]

Remove ads

ஆண்டாள் இயற்றிய பாடல்கள்

ஆண்டாள் தனது 15ஆம் வயதில் இறைவனுடன் இரண்டறக் கலப்பதற்கு முன் திருப்பாவை, நாச்சியார் திருமொழி என்னும் இரண்டு நூல்களை இயற்றியுள்ளார். இவ்விரு நூல்களும் அதன் இலக்கிய செழுமை, தத்துவம், பக்தி ஆகியவற்றிக்காக அனைவராலும் போற்றப்படுகின்றது. இவரது முதல் படைப்பான திருப்பாவை 30 பாடல்களைக் கொண்டுள்ளது. இத் திருப்பாவை ஆண்டாள் தன்னை ஆயர்பாடியில் வாழும் கோபிகையாக நினைத்துக் கொண்டு பாடப்பெற்ற பாட்டுகளின் தொகுப்பாகும்.

இவரது இரண்டாவது படைப்பான நாச்சியார் திருமொழி 143 பாடல்களைக் கொண்டுள்ளது. இறைவனை நினைத்துருகிப்பாடும் காதல்ரசம் மிகு பாடல்களின் தொகுப்பாகக் காணப்படுகின்றது. இது வடமொழியில் எழுதப்பட்ட ஜெயதேவரின் கீத கோவிந்தம் எனும் நூலினை ஒத்ததன்மை உடையதாகக் காணப்படுகின்றது. கண்ணனை மணமுடிப்பதாக ஆண்டாள் பாடியுள்ள நாச்சியார் திருமொழியில் உள்ள ’வாரணமாயிரம்’ பாடல் தொகுப்பு புகழ் பெற்றது. இது சில தமிழ்த் திரைப்படங்களில் பாடல் காட்சியாக எடுத்தாளப்பட்டுள்ளது.[17] ஆண்டாளின் இவ்விரு படைப்புகளும் குறிப்பாகத் திருப்பாவை நாட்டின் (தென்கலை மற்றும் வடகலை பின்பற்றும்) அனைத்து வைணவதலங்களிலும் வைணவர்களின் இல்லங்களிலும் தினந்தோறும் ஓதப்பட்டு வருகின்றது. மேலும் வைணவதலங்களில் நடைபெறும் முக்கிய விழாக்களிலும் வைணவர்களின் இல்ல விழாவிலும் வடமொழி மறைகளுக்கு நிகராகத் தவறாமல் ஓதப்படுகின்றது.

Remove ads

கோதை மண்டலி

கோதை மண்டலி என்னும் அமைப்பு 1970-இல் தொடங்கப்பட்டு, 1982-இல் பதிவு செய்யப்பட்ட அமைப்பாக விளங்குகிறது. இதன் முக்கிய நோக்கம் ஆண்டாள் இயற்றிய பாடல்களைத் தொலைக்காட்சியிலும் வானொலி நிகழ்ச்சிகளிலும் பரப்புவதே ஆகும்.[18][19]

மேலும் பார்க்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads