இங்க்ரிட் நியூகர்க்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இங்க்ரிட் எலிசபெத் நியூகர்க் (ஆங்கிலம்: Ingrid Elizabeth Newkirk) (திருமணத்திற்கு முந்தைய பெயர்: வார்டு; பிறப்பு: ஜூன் 11, 1949) ஒரு பிரித்தானிய–அமெரிக்க விலங்குரிமை ஆர்வலரும் உலகின் மிகப்பெரிய விலங்குரிமை அமைப்பான பீட்டா (PETA) இயக்கத்தின் தலைவரும் ஆவார். இவர் தி பீட்டா பிராக்டிகல் கைடு டு அனிமல் ரைட்ஸ் (2009), அனிமல்கைண்டு (2020) உள்ளிட்ட பல நூல்களை இயற்றியுள்ளார். 1972-ம் ஆண்டு முதல் விலங்குகள் பாதுகாப்பு இயக்கத்திற்காக நியூகர்க் பணியாற்றி வருகிறார். 1970-களில் கொலம்பியா மாகாணத்தின் முதல் பெண் பொதுநாய்கள் காப்பக மேற்பார்வையாளராக அவரது தலைமையின் கீழ், வாஷிங்டன், டி. சி. நகரில் முதல் விலங்குக் கருத்தடை மருத்துவமனை ஒன்றை உருவாக்க சட்டம் இயற்றப்பட்டது. அத்துடன் விலங்குகள் தத்தெடுப்பு திட்டமும் கால்நடை மருத்துவ சேவைகளுக்கான பொது நிதியுதவித் திட்டமும் உருவாக்கப்பட்டது. இவற்றின் விளைவாக 1980-ம் ஆண்டு அந்த ஆண்டின் வாஷிங்டனியர்களில் ஒருவராக நியூகர்க் தேர்ந்தெடுக்கப்பட்டு கெளரவிக்கப்பட்டார்.[1] நியூகர்க் ஒரு இறைமறுப்பாளர் ஆவார்.[2]
நியூகர்க் மார்ச் 1980-ல் சக விலங்குரிமை ஆர்வலரான அலெக்ஸ் பச்சேகோவுடன் இணைந்து பீட்டா அமைப்பினை நிறுவினார். 1981-ம் ஆண்டில் மேரிலாந்தில் உள்ள சில்வர் ஸ்பிரிங் நகரில் உள்ள நடத்தை ஆராய்ச்சி கல்வி நிறுவனத்தின் ஆராய்ச்சிக் கூடத்தில் 17 மக்காக் குரங்குகள் கொடூரமான முறையில் பரிசோதனை செய்யப்படுவதை பச்சேகோ புகைப்படம் எடுத்து அந்த ஆராய்ச்சியினை வெளியுலகின் கவனத்திற்குக் கொண்டு வந்தார். சில்வர் ஸ்பிரிங் குரங்குகள் வழக்கு என்று தற்போது அறியப்படும் இந்த வழக்கின் விளைவாக பீட்டா அமைப்பு உலகின் பொது கவனத்திற்கு வந்தது. இச்செயல் அமெரிக்காவில் முதன் முறையாக ஒரு விலங்கு ஆராய்ச்சி ஆய்வகத்தை காவல்துறையின் சோதனை வளையத்திற்கு கொண்டு வந்து மேலும் விலங்குகள் நலச் சட்டத்தில் 1985-ல் திருத்தம் செய்யவும் வழிவகுத்தது. அதன் பின்னர் நியூகர்க் அறிவியல் பரிசோதனைகளில் விலங்குகளைப் பயன்படுத்துவதை நிறுத்துவதற்கான பிரச்சாரங்களை மேற்கொண்டு வந்துள்ளார். மேலும் விலங்குகள் மீது அழகுசாதனப் பொருட்களைப் பரிசோதிப்பதை நிறுத்துமாறு அழகுசாதன நிறுவனங்களை வலியுறுத்தியும் அதற்கேற்ற செயல் மாற்றங்களைச் செய்யத் தூண்டியும்; இறைச்சித் தொழிற்றுறையில் மேம்பட்ட விலங்கு நலத் தரங்களுக்காக வேண்டி அழுத்தம் கொடுத்ததும்; விலங்குகளைக் கையாளும் நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், கேளிக்கை அமைப்புகள் ஆகியவற்றை இரகசியமாகக் கண்காணித்து விதிகளை மீறியவற்றிற்கு எதிராக அரசாங்கத் தடைகளைக் கொண்டு வரச் செய்தும் பலவகையில் விலங்குரிமைச் செயற்பாடுகளை மேற்கொண்டு வந்துள்ளார்.[3] குறிப்பாக, விலங்குப் பாதுகாப்பு பிரச்சினைகளில் மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக செய்யப்படும் ஊடக கவன ஈர்ப்பு செயற்பாடுகளுக்கு அவர் பெரிதும் அறியப்படுகிறார். எடுத்துக்காட்டாக, நியூகர்க் தனது உயிலில் தனது தோலை பணப்பைகளாகவும், கால்களை குடை நிறுத்திகளாகவும், தனது சதைகளை "நியூகிர்க் நகெட்ஸ்" என்ற பெயரில் அனலில் வறுத்த சிற்றுண்டியாகவும் மாற்றுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.[4] 2003-ம் ஆண்டு தி நியூ யார்க்கர் நாளிதழுக்குத் தந்த பேட்டியொன்றில் "விலங்கு வன்கொடுமை சமூகத்திற்கு எதிரான தீவிர நிலைபாட்டிற்கும் போராட்டச் செயற்பாடுகளும் ஊடகங்களின் கண்களுக்கு எவ்வாறு அறியப்படுவீர்கள்" என்ற கேள்விக்கு "ஊடகங்களின் கண்களுக்கு நாங்கள் முழுக்க முழுக்க ஊடக வேசிகள் என்றே அறியப்படுவோம்" என்று கூறிய நியூகர்க் "இருப்பினும் இது நமது கடமையும் கூட. ஏனெனில் நாம் பணிவு கொண்டு தன்மையாகவும் எந்த சலசலப்பையும் உருவாக்காமலும் செயற்படுவதால் எந்தப் பயனுமில்லை" என்று அதை மேலும் விளக்கினார்.[5]
விலங்குகளின் நலனை மேம்படுத்த பீட்டா படிப்படியான அணுகுமுறையையே கையாண்டாலும், நியூகர்க் விலங்குகளின் பயன்பாட்டை முற்றிலுமாக நிறுத்துவதில் உறுதியாக உள்ளார். இதுவே பீட்டாவின் முழக்க வசனமும் கூட: "விலங்குகள் நம் உடமையல்ல, அவற்றை நாம் உண்பதற்கும், அணிவதற்கும், பரிசோதனை செய்வதற்கும், அல்லது பொழுதுபோக்கிற்காகப் பயன்படுத்துவதற்கும்".[5] கேரி பிரான்சியோனி உள்ளிட்ட சில விலங்குரிமை ஒழிப்புவாதிகள் பீட்டாவையும் அதுபோன்ற இதர அமைப்புகளையும் "புதிய நலவாதிகள்" ("new welfarists") என்று விமர்சிக்கின்றனர்.[6] எனினும் விலங்குரிமை இயக்கத்திற்குள் சிலர் பிரான்சியோனியின் இந்த நிலைப்பாட்டினை தேவையற்ற பிரிவினையை ஏற்படுத்தும் ஒன்று என்று கருதுகின்றனர்.[7] விலங்கு விடுதலை முன்னணியின் பெயரில் மேற்கொள்ளப்பட்ட சில நடவடிக்கைகளுக்காகவும் நியூகர்க் விமர்சிக்கப்படுகிறார். இருப்பினும் "விலங்குரிமை இயக்கம் ஒரு புரட்சிகரமான ஒன்று" என்பதும், "புரட்சிகரமான சிந்தனைகள் உருவாவது சிந்தனையாளர்களால் என்றாலும், அவை செயற்படுத்தப்படுவது என்னவோ தீவிரமாக இயங்குபவர்களால் தான்" என்பதுமே நியூகர்க்கின் நிலைப்பாடாக உள்ளது.[8] இந்நிலையிலும் "மனிதர்கள் மனிதரல்லா விலங்குகள் என யாரையும் காயப்படுத்தும் செயல்களை ஆதரிக்காது அகிம்சை வழிக் கொள்கைகளைப் மட்டுமே பேணும் வண்ணம்" பீட்டாவின் செயற்பாடுகள் அமைந்துள்ளன.[9] பீட்டாவின் விலங்குக் காப்பகங்களுக்கு எடுத்துச் செல்லப்படும் செல்லப்பிராணிகள் உட்பட பல விலங்குகளைக் கருணைக்கொலை செய்வதற்காகவும்,[10] செல்லப்பிராணி என்ற கருத்தாக்கத்தை முழுவதுமாக எதிர்ப்பதற்காகவும் நியூகர்க்கும் பீட்டாவும் விமர்சிக்கப்படுகின்றனர். மேலும் "ஒரு மனிதனுக்கு தனிச்சிறப்பு உரிமையும் அந்தஸ்தும் உண்டு என்று கூறுவதற்கு எந்தப் பகுத்தறிவு அடிப்படையும் இல்லை. ஒரு எலியும் ஒரு பன்றியும் ஒரு நாயும் ஒரு சிறுவனும் ஒன்றே" என்பதும் நியூகர்க்கின் வெகுவாக அறியப்பட்ட சிந்தனைகளில் ஒன்றாகும்.[11] இவ்விமர்சனங்கள் அனைத்திற்கும் பீட்டா பதிலளித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.[12]
Remove ads
இவற்றையும் பார்க்க
மேற்கோள் தரவுகள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads