இந்தியாவில் கிறிஸ்தவம்

From Wikipedia, the free encyclopedia

இந்தியாவில் கிறிஸ்தவம்
Remove ads

2011 கணக்கெடுப்பின்படி இந்தியாவில் கிறிஸ்தவம் மூன்றாவது பெரிய சமயமாக, கிட்டத்தட்ட 27.8 மில்லியன் அங்கத்தவர்களுடன் இந்திய மக்கள் தொகையில் 2.3 சதவீதமாகவுள்ளது.[2] கிறிஸ்தவத்தை இந்தியாவிற்கு தோமா (திருத்தூதர்) அறிமுகப்படுத்தினார் என்றும், தமிழகத்தின் முசிறித் துறைமுகத்தை கி.பி 52ல் வந்தடைந்தார் எனவும் நம்பப்படுகின்றது. ஆயினும் பொதுவான புலமையாளர்களின் கணக்குப்படி கிறிஸ்தவம் நிச்சயமாக கி.பி. 6ஆம் நூற்றாண்டிற்கு முன்பே அறிமுகப்படுத்தப்பட்டது எனக் கருதப்படுகிறது.

விரைவான உண்மைகள் மொத்த மக்கள்தொகை, குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் ...
Remove ads

தொடக்க காலம்

“உலகெங்கும் சென்று நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்" என்ற உயிர்த்த இயேசுவின் அறிவுரைக்கு ஏற்ப, அவரது பன்னிரு திருத்தூதர்களில் ஒருவரான தோமா இந்தியாவுக்கு வந்து கிறிஸ்தவ சமயத்தை நிறுவினார் என பழங்கால வரலாற்று ஆவணங்கள் சான்று பகர்கின்றன. கிறிஸ்தவ ஆய்வாளர்களின் கருத்து மற்றும் மரபின்படி, தோமா கடல் வழியாக பயணம் செய்து கேரளாவின் கொடுங்காலூர் கடற்கரைக்கு (முசிறி துறைமுகம்) கி.பி.52ஆம் ஆண்டு வந்து இறங்கினார். மேற்கு கடலோர ஊர்களில் இயேசுவைப் பற்றி அறிவித்து, 7 இடங்களில் திருச்சபையை நிறுவினார். பின்னர் கிழக்கு பகுதிக்கு வந்து, சோழ மண்டல கடற்கரையில் நற்செய்தியை அறிவித்தார். சென்னை மயிலாப்பூர் உள்ளிட்ட இடங்களில் பலரை கிறிஸ்தவர்களாக மனந்திருப்பிய அவரை, கி.பி.72ல் எதிரிகள் ஈட்டியால் குத்திக் கொலை செய்தனர்.[3]

தோமா தமிழகத்தில் கிறிஸ்தவ சமயத்தை நிறுவிய அதே காலத்தில், திருத்தூதர் பர்த்தலமேயு மும்பையின் கல்யாண் உள்ளிட்ட இடங்களில் இயேசுவின் நற்செய்தியை அறிவித்ததாக வரலாற்று பதிவுகள் உள்ளன. முதல் நூற்றாண்டில் இந்தியாவில் உருவான கிறிஸ்தவ சமூகங்கள், மற்றவர்களை மதமாற்றம் செய்ய ஆர்வம் காட்டவில்லை. இதன் காரணமாக, இந்தியாவில் கிறிஸ்தவம் சில குடும்பங்களுக்குள் மட்டுமே முடங்கிக் கிடந்தது. கி.பி.2ஆம் நூற்றாண்டில் மும்பைக்கு வந்த பார்த்தனேயுஸ் என்ற கிரேக்க அறிஞர், திருத்தூதர் பர்த்தலமேயுவால் உருவாக்கப்பட்ட கிறிஸ்தவ சமூகங்களை சந்தித்ததாக குறிப்புகள் உள்ளன. திருத்தூதர் மத்தேயு எழுதிய நற்செய்தி நூல் அவர்களிடம் இருந்ததாகவும் பார்த்தனேயுஸ் எழுதி வைத்துள்ளார்.[4]

Remove ads

இடைக்காலம்

கி.பி.300ல் பசாரா ஆயரான தாவீது தென்னிந்திய பகுதிகளில் நற்செய்தி அறிவித்து பலரை கிறிஸ்தவர்களாக மனந்திருப்பியதாக சான்றுகள் உள்ளன.[5] 345ல் கேரளாவின் திருவிதாங்கோட்டுக்கு 72 குடும்பங்களுடன் வந்த சிரியா நாட்டு வியாபாரியான தாமஸ் கானா என்பவர், சிரியன் கிறிஸ்தவ வழிபாட்டு முறைகளை கேரளாவில் அறிமுகம் செய்தார். இந்த குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் தெக்கும்பகர்கள் என்றும், திருத்தூதர் தோமாவால் கிறிஸ்தவர்களாக மாறியவர்கள் வடக்கும்பகர்கள் என்றும் தங்களை அழைத்துக் கொள்கின்றனர்.[6] சென்னை புனித தோமையார் மலை மீது 5ஆம் நூற்றாண்டு முதல் 8ஆம் நூற்றாண்டு முடிய சிரிய கிறிஸ்தவ துறவிகள் குழு ஒன்று வாழ்ந்ததாக தெரிகிறது. அவர்கள் தங்கள் வழிபாட்டுக்காக பயன்படுத்திய கற்சிலுவை தற்போதும் அங்குள்ள ஆலயத்தில் உள்ளது.[7] தோமையார் சிலுவை என்று அழைக்கப்படும் இந்த சிலுவை கி.பி.640ஆம் ஆண்டைச் சேர்ந்தது ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

கோட்டயத்தில் காணப்படும் கற்சிலுவைகளும், 7 மற்றும் 8ஆம் நூற்றாண்டுகளில் இந்தியாவில் கிறிஸ்தவம் இருந்ததற்கான சான்றுகளாக உள்ளன. பெர்சியா நாட்டு ஆயர்கள் இரண்டு பேர், 9ஆம் நூற்றாண்டில் கொல்லத்தில் திருச்சபையை வளர்த்தது குறித்த செப்பு ஆவணங்கள் நமக்கு கிடைத்துள்ளன. கேரளாவின் மலபார் பகுதியில் 10ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கிறிஸ்தவர்களை ஒரு கிறிஸ்தவ அரசர் ஆட்சி செய்ததாக சிரியா நாட்டைச் சேர்ந்த வணிகர்களின் குறிப்பில் காணப்படுகிறது. 1295ஆம் ஆண்டு இந்தியாவில் பயணம் செய்த இத்தாலி நாட்டவரான மார்க்கோ போலோ, மயிலாப்பூரில் இருந்த கிறிஸ்தவர்கள் மற்றும் தோமாவின் கல்லறையைப் பற்றி குறிப்பு எழுதி வைத்துள்ளார்.[8]

1305ல் இந்தியாவில் தங்கியிருந்த ஜான் மோந்தே என்ற கிறிஸ்தவ குரு, மயிலாப்பூரில் வாழ்ந்த கிறிஸ்தவர்கள் மற்ற மதத்தினரால் துன்பத்துக்கு ஆளானதாக தமது கடிதத்தில் தெரிவித்துள்ளார். 14ஆம் நூற்றாண்டில் கன்னியாகுமரியில் கிறிஸ்தவ ஆலயம் ஒன்று இருந்ததாக, முட்டம் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டு சான்று பகர்கிறது. 1321ல் ஜோர்டான் கட்லானி என்பவர் தலைமையில் ஐந்து கிறிஸ்தவ குருக்கள், மகாராஷ்டிர மாநிலத்தில் கிறிஸ்தவ சமயத்தை பரப்பும் பணியைத் தொடங்கினர். பின்னர் கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்களுக்கும் அவர்களின் பணி விரிவடைந்தது.[4]

Remove ads

நவீன காலம்

1510ல் கோவாவை கைப்பற்றிய போர்ச்சுக்கீசியர், அங்கு கிறிஸ்தவ சமயத்தை பரப்பும் பணியில் தீவிரம் காட்டினர். 1535ஆம் ஆண்டு, முத்துக்குளித்துறை பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் கிறிஸ்தவர்களாக மனந்திரும்பினர். 1542ல் தமிழகத்துக்கு வந்த புனித பிரான்சிஸ் சேவியர், தென்கடலோர பகுதிகளில் கிறிஸ்தவத்தின் வளர்ச்சியை விரைவுபடுத்தினார். 16ஆம் நூற்றாண்டில், கத்தோலிக்க குருக்களின் முயற்சியால் மத்திய இந்தியாவில் கிறிஸ்தவ சமயம் நிறுவப்பட்டது. மொகாலயப் பேரரசர் அக்பரின் ஆதரவுடன், டெல்லி, ஆக்ரா, பாட்னா போன்ற பகுதிகளிலும் அவர்கள் இயேசுவின் நற்செய்தியை அறிவித்தனர்.[9] இதனிடையே, புனித அருளானந்தர், அருளாளர் தேவசகாயம் பிள்ளை ஆகியோர் தமிழகத்தில் மறைசாட்சிகளாக கொல்லப்பட்டனர்.

கிழக்கு இந்தியாவில் தொடங்கப்பட்ட வங்காள மிஷன் மூலம், கூக்ளி உள்ளிட்டப் பகுதிகளில் கிறிஸ்தவம் பரவியது. 18ஆம் நூற்றாண்டில் லூத்தரன் மற்றும் ஆங்கிலிக்கன் சபைகளைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் இந்தியாவில் மறைபரப்பு பணியைத் தொடங்கினர்.[10] 1837ல் தமிழகத்தில் தொடங்கப்பட்ட புதிய மதுரை மிஷனால், கத்தோலிக்க திருச்சபை விரைந்து வளர்ந்தது. அதே காலத்தில், கால்டுவெல் உள்ளிட்டோரின் முயற்சியால் பிற கிறிஸ்தவ சபைகளும் வளர்ச்சி கண்டன. கிறிஸ்தவர்களின் சேவையால் கவரப்பட்ட வடகிழக்கு இந்திய பழங்குடி மக்கள் பெரும்பாலானோர், 19ஆம் நூற்றாண்டில் கிறிஸ்தவத்தை ஏற்றனர்.[11] ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை அறிவிக்கும் குழுக்கள் மூலம், இந்தியாவில் கிறிஸ்தவம் இன்றும் வளர்ந்து வருகிறது.

மக்கள் தொகை

Thumb
கிறிஸ்தவர்களின் பரவல் 2011

2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 2 கோடியே 78 லட்சம் கிறிஸ்தவர்கள் இந்தியாவில் உள்ளனர். இது இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் 2.3% ஆகும். இவர்களில் பெரும்பான்மையாக லத்தீன், சீரோ மலபார், சீரோ மலங்கரா வழிபாட்டு முறைகளை உள்ளடக்கிய ஒரு கோடியே 79 லட்சம் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் உள்ளனர். எண்ணிக்கையில் 2வது இடத்தில் சீர்திருத்தத் திருச்சபையினரும், 3ஆம் இடத்தில் கிழக்கு மரபுவழி திருச்சபையினரும் உள்ளனர். நாகாலாந்து, மிசோரம், மேகாலயா, மணிப்பூர் ஆகிய வடகிழக்கு மாநிலங்களில் கிறிஸ்தவம் பெரும்பான்மை சமயமாக உள்ளது. அருணாச்சல் பிரதேசம், ஆந்திர பிரதேசம், கேரளா, தமிழ்நாடு, கோவா, அந்தமான் நிக்கோபார் தீவுகள் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க அளவு கிறிஸ்தவர்கள் வாழ்கின்றனர்.[12]

Remove ads

இவற்றையும் பார்க்க

உசாத்துணை

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads