இந்தியாவில் பெண்கருக் கலைப்பு

From Wikipedia, the free encyclopedia

இந்தியாவில் பெண்கருக் கலைப்பு
Remove ads

இந்தியாவில் பெண்கருக் கலைப்பு அல்லது பெண்கருக் கொலை (Female foeticide in India) என்பது சட்டத்துக்குப் புறம்பான கருக்கலைப்பு வழிகளில் பெண்கருவைக் கொல்லும் செயலாகும். ஆண்டாடுகாலமாய்த் தொடரும் கலாச்சாரக் காரணங்களால் இந்தியாவில் இது நிகழ்கிறது.

Thumb
வங்காளத்தில் தன் பெண்குழந்தையை கங்கையில் மூழ்கடிப்பதற்காகத் தூக்கிச் செல்லும் ஒரு இந்துப் பெண் (1852)[1]
Thumb
தன் பெண் குழந்தையைப் பலியிடும் இந்துத் தாய் (நவம்பர் 1853, X, p.120)[2]

இந்தியாவின் பிறப்புப் பாலின விகிதத்தை அடிப்படையாகக் கொண்டு பெண்கரு கலைப்பின் அளவு கணிக்கப்படுகிறது. 103 - 107 என்பது இயல்பான ஆண்-பெண் குழந்தைகளின் பிறப்புப் பாலின விகிதமாகக் கொள்ளப்படுகிறது. இதற்கு அதிகமான விகிதம் பெண்கரு கலைப்பை உணர்த்தும். இந்திய பத்தாண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி, 100 பெண் குழந்தைகளுக்கு 102.4 ஆண் குழந்தைகள் என 1961 இல் இருந்த 0-6 வயதினரின் பாலின விகிதம், 1980 இல் 104.2, 2001 இல் 107.5, 2011 இல் 108.9 என உயர்ந்துள்ளது. [3][4]

இந்தியாவின் அனைத்து கிழக்கு, தெற்கு மாநிலங்களில் குழந்தைகள் பாலின விகிதம் இயல்பான நிலையிலேயே உள்ளது. ஆனால் சில மேற்கு மாநிலங்களிலும், குறிப்பாக பஞ்சாப், அரியானா சம்மு காசுமீர் (2011 கணக்கெடுப்பின்படி 118, 120, 116)) போன்ற வடமேற்கு மாநிலங்களிலும் குறிப்பிடத்தக்க அளவு அதிகமாக உள்ளது.[5] .[6] 2011 கணக்கெடுப்பின்படி, மகாராட்டிரம். இராஜஸ்தான் மாநிலங்களில் குழந்தைகள் பாலின விகிதம் 113 ஆகவும், குசராத்தில் 112, உத்திரப் பிரதேசத்தில் 111 ஆகவும் உள்ளது.[7]

உயர் சமூகப் பொருளாதார நிலை மற்றும் கல்வியறிவுக்கும் பாலின விகித உயர்வுக்கும் ஒரு நேர் தொடர்பு இருப்பதை இந்திய மக்கட்தொகைக் கணக்கெடுப்பு காட்டுகிறது. பாலின விகித உயர்வுக்கு வரதட்சணை முறையும் ஒரு காரணமாகும். வரதட்சணைக் கொடுமையின் உச்சவிளைவாக வரதட்சணை மரணங்கள் நிகழ்கின்றன. 1991, 2001, 2011 ஆம் ஆண்டு மக்கட்தொகைக் கணக்கெடுப்புகளின்படி குழந்தை பாலின விகித உயர்வு கிராமப்புறங்களைவிட நகர்ப்புறங்களில் அதிகமெனக் கணக்கிடப்பட்டுள்ளதால், பெண்கருக் கொலை கிராமப்புறங்களைவிட நகர்ப்புறங்களிலேயே அதிகம் நிகழ்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம். அதிகமான குழந்தை பாலின விகிதம், இயல்பான பாலின விகிதம் இரண்டுமே பெரும்பான்மையான இந்துக்கள், இசுலாமியர், சீக்கியர், கிறித்துவர்களிடையே காணப்படுகிறது. இந்த முரண்பாடான தரவால் கல்வியறிவிலாதவர், ஏழைகள் அல்லது குறிப்பிட்ட சமயத்தினர் ஆகியோரிடம்தான் குறிப்பிட்ட பாலினக் குழந்தைகளை விரும்பும் வழக்கமுள்ளது என்ற எண்ணம் உண்மையல்ல என்பதை உறுதிப்படுத்துகிறது.[6][8]

இந்தியாவில் பாலின விகிதம் அதிகமாவதற்கு பெண்கருக் கலைப்பு மட்டுமே காரணமா இல்லை வேறு ஏதாவது இயற்கையான காரணங்களும் உள்ளனவா என்ற விவாதங்கள் நிகழ்ந்தவண்ணம் உள்ளன.[9] 1994 இல் இந்திய அரசு குழந்தை பிறப்புக்கு முன்னரே அதன் பாலினம் அறிசோதனையையும் பெண்கருக் கலைப்பையும் தடை செய்து சட்டம் கொண்டு வந்துள்ளது[10]. இப்போது இந்தியாவில் கருவின் பாலினத்தைக் கண்டுபிடித்துச் சொல்வது சட்டப்படிக் குற்றமாகும். எனினும் இச்சட்டம் சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்பது குறித்த அக்கறையும் நிலவுகிறது.[11]

Remove ads

மூலம்

Thumb
1941 - 2011 இந்திய மக்கட்தொகைக் கணக்கெடுப்புகளின்படி பாலின விகிதம் (ஆண்/பெண்).

1990களின் தொடக்கத்தில் கிடைக்கப்பெற்ற தொழினுட்ப வசதி பெண்கருக் கலைப்புடன் தொடர்புபடுத்தப்படுகிறது. மகப்பேறு மீயொலி வரைவு கொண்டு கருவின் பாலினத்தை அறியமுடிந்தது. கருவுற்ற 12 வாரங்களுக்குப் பின் இதனைச் செய்யலாம். 2001 ஆண்டின் ஒரு ஆய்வறிக்கை இந்நிலையில் அறியப்படும் பாலின விவரம் 75 விழுக்காடு சரியானதாக இருக்குமெனத் தெரிவிக்கிறது.[12] ஆண் கரு என்ற விவரம் 50% சரியானதாகவும், பெண்கரு என்ற விவரம் கிட்டத்தட்ட 100% சரியானதாகவும் இருக்கும். கருவுற்ற 13 வாரங்களுக்குப் பின்னர் எடுக்கப்படும் மீயொலி வரைவு அநேகமாக 100% துல்லியமான விவரத்தைத் தரும்.[12]

சீனாவிலும் இந்தியாவிலும் மீயொலி வரைவு தொழினுட்ப வசதி 1979இல் அறிமுகமானது. இந்தியாவில் இது மெதுவாகத்தான் பரவியது. 1980களில் இந்தியாவின் முக்கிய நகரங்களில் அறிமுகமான மீயொலி வரைவு தொழினுட்பப் பயன்பாடு 1990களில் பிற நகர்ப்பகுதிகளுக்குப் பரவிப் பின் 2000களில் எல்லா இடங்களுக்கும் பரவியது.[13]

Remove ads

பெண்கருக் கலைப்பின் மதிப்பீடு

பெண்கருக் கலைப்பின் அளவைக் கணக்கிடும் முறை அறிஞருக்கறிஞர் மாறுபடுகிறது. ஒரு குழுமம் 1990 களிலிருந்து இந்தியாவில் நடைபெற்ற சட்டத்துக்குப் புறம்பான பெண்கருக் கலைப்பின் எண்ணிக்கை 10 மில்லியனுக்கும் அதிகமானதென்றும், பெண்கருக் கலைப்பால் இழக்கப்படும் பெண்குழந்தைகளின் எண்ணிக்கை 500,000 எனவும் மதிப்பீடு செய்தது[14] கருவிலுள்ளது பெண்குழந்தை என்ற காரணத்தால் ஆண்டுதோறும் இந்தியாவில் செய்யப்படும் கருக்கலைப்பின் எண்ணிக்கை 100,000 ஆகத் தொடர்கிறதென மாக்பெர்சன் மதிப்பிட்டுள்ளார்.[15]

Remove ads

இந்திய மாநிலவாரியான குழந்தை பாலின விகிதமும் பெண்கருக் கலைப்பும்

Thumb
இந்திய மாநிலங்கள் மற்றும் ஒன்றியப்பகுதிகளின் 2011 மக்கட்தொகை கணக்கெடுப்பில் 0-1 வயதினரின் பாலின விகித வரைபடம்.[16]

கீழுள்ள அட்டவணையில் இந்திய மாநில, ஒன்றியப்பகுதிகளின் 0-1 வயது பாலின விகிதம் 2011 கணக்கெடுப்பின்படி தரப்பட்டுள்ளது.[17] இத்தரவின் படி இந்தியாவில் பிறப்பு பாலின விகிதம் 18 மாநிலங்கள்/ஒப இல் 107 க்கு அதிகமாகவும், 13 மாநிலங்கள்/ஒப இல் இயல்பானதாகவும், 4 மாநிலங்கள்/ஒப இல் பிறப்பு பாலின விகிதம் 103 க்குக் குறைவானதாகவும் உள்ளது.

மேலதிகத் தகவல்கள் மாநிலம் / ஒன்றியப்பகுதி, ஆண் (0-1 வயது) 2011 மக்கட்தொகை கணக்கெடுப்பு ...

பெண்கருக் கலைப்பிற்கான காரணங்கள்

பல்வேறு காரணங்கள் பெண்கருக் கலைப்பிற்கானவையாக முன்வைக்கப்படுகின்றன. சில ஆய்வாளர்கள் கலாச்சாரத்தைக் காரணங்காட்டுகின்றனர்.[18] சிலர் முற்றிலும் வேறுபட்டு, பாலினப் பாகுபாட்டின் அடிப்படையில் வளங்கள் கிடைக்கும் குறைபாட்டைக் காரணமாய்க் கருதுகின்றனர்.[15] மேலும் சில மக்கட்தொகை ஆய்வாளர்கள் பாலினம் சார்ந்த கருக்கலைப்புதான் பாலினவிகித உயர்வுக்குக் காரணம் என்ற கூற்றை ஏற்றுக்கொள்ளாமல், பெண்குழந்தைகளின் பிறப்பு குறித்துத் தெரிவிக்காமல் இருப்பதும் இதன் காரணமாக இருக்கலாம் என்ற கருத்தினைக் கொண்டுள்ளனர்.[19][20] இயற்புக்கு மாறான பாலினவிகித உயர்வுக்கு இயற்கையான காரணங்களும் இருக்கலாம்.[9][21] ஆய்வாளர்கள் கிளேசன், விங்க் (Klasen and Wink) இருவரும் இந்தியாவிலும் சீனாவிலும் பாலின விகித உயர்வுக்கு, பாலினம்சார் கருக்கலைப்பே காரணம் என்கின்றனர்.[22]

கலாச்சாரக் காரணங்கள்

ஒரு சில ஆய்வாளர்கள் பெண்கருக் கலைப்பு பழங்காலமாகவே வரலாற்றில் உள்ளதென்றும், அது கலாச்சாரப் பின்னணி கொண்டதென்றும் சுட்டுகின்றனர். பொதுவாக, உடல் உழைப்புக்காகவும் வம்ச விருத்திக்காகவும் பெண்குழந்தைகளைவிட ஆண் குழந்தைகளையே மக்கள் விரும்புகின்றனர். பல வெவ்வேறான சமூகப் பொருளாதாரக் காரணங்களுக்காக பெண் குழந்தைகளைவிட ஆண் குழந்தைகளைப் பெற்றுக் கொள்வதை விரும்பும் கலாச்சாரம் கொண்ட இடங்களில் பெண்கருக் கலைப்பு அதிகளவில் நிகழ்கிறது.[23] பொருளீட்டி, குடும்பத்தைக் காப்பாற்றுவான் என்ற எண்ணத்தால் மகன் குடும்பத்தின் சொத்தாகவும், மகளானவள் திருமணமாகி வேறொரு குடும்பத்துக்குச் சென்று விடுவாள்; பொருளாதார ரீதியாக அவளால் குடும்பத்துக்கு எந்தவிதப் பலனும் கிடையாது என்பதால் அவள் குடும்பத்திற்கு ஒரு சுமையாகவுமே கருதப்படுகிறாள். பெண் சிசுக் கொலை, பெண் குழந்தைகள் பிறந்தபின் அவற்றின் நலனில் கவனம் செலுத்தாமல் இருத்தல் போன்ற செயல்கள் பெண்கருக் கலைப்பின் தொடர் நிகழ்வுகளாக உள்ளன.[24] மேலும், சில கலாச்சாரங்களில் மகன்களே தனது பெற்றோரை அவரது முதுமையில் பேணும் கடமை கொண்டவர்களாவர்.[25] சில தொற்றும் மற்றும் தொற்றா நோய்கள் ஆண் குழந்தைகளையும் பெண் குழந்தைகளையும் தாக்கும் அளவு மாறுபடுவதால், நோய்களின் தாக்கமும் சேர்ந்து பாலின விகித உயர்வுக்கான காரணங்களை மேலும் சிக்கலாக்குகிறது.[24]

வள அணுக்கப் பாகுபாடு

பிறப்பு பாலின விகிதத்தின் மாறுபாட்டுக்கும் பெண்கருக் கொலைக்கும் வள அணுக்கத்திலுள்ள பாலினப் பாகுபாடும் ஒரு காரணமாக அமையும். பாலியல் வன்முறை நிகழ்வுகளில் காணப்படும் பாலின வேறுபாடும், பெண் குழந்தைகளுக்கும் ஆண் குழந்தைகளுக்கும் இடையே நிலவும் உணவு, உடல்நலம், நோய்த்தடுப்பு போன்ற வள அணுக்கப் பாகுபாடும், பாலின விகித மாற்றங்களை ஏற்படுத்துகிறது.[15]

சமூகப்பொருளாதாரநிலையுடன் நெருங்கிய தொடர்புள்ளதாக வள அணுக்கப் பாகுபாடு காணப்படுகிறது. சில ஏழைக் குடும்பங்களில் உணவுத் தட்டுப்பாடு காரணமாகப் பெண்குழந்தைகளைவிட, ஆண் குழந்தைகளுக்கே உணவளிப்பதில் முன்னுரிமை தரப்படுகிறது.[22] எனினும் 2001 இல் கிளசென் நடத்திய ஆய்வில், இப்பழக்கம் மிகவும் ஏழைக் குடும்பங்களில் குறைவாகவும், அவர்களைவிட சற்றுக் குறைவான ஏழ்மையானவர்களிடம் உயர்ந்தும் காணப்பட்டது தெரியவந்தது[22] 2003 இல் கிளசெனும் விங்கும் மேற்கொண்ட ஆய்வின்படி, மிகவும் ஏழைக் குடும்பங்களில் கலாச்சார விதிமுறைகள் அதிகளவில் கடைப்பிடிக்கப்படவில்லை; பெண்கள் வேலைக்குச் சென்று குடும்பத்தைப் பராமரிப்பவர்களாக இருப்பதால் அவர்கள் அதிகப்படியான சுதந்திரம் கொண்டவர்களாய் உள்ளனர் என்பதும் தெரியவந்தது.[22]

ஒரேயளவில் வளங்கள் கிடைக்கப்பெறும்போது, ஆண் குழந்தைகளை விடப் பெண்குழந்தைகள்தான் அதிகநாள் உயிர்வாழ்கின்றனர் என்று லோபெசு மற்றும் ருசிகாவால் (Lopez and Ruzikah 1983) கண்டறியப்பட்டது. எனினும், உலகளவில் எல்லா இடங்களிலும் ஒரேயளவான வளங்கள் இருபாலருக்கும் கிடைப்பதில்லை. உடல்நலம் பேணல், கல்வி, சத்துணவு போன்ற வளங்கள் ஆண் குழந்தைகளுக்குக் கிடைக்குமளவு பெண்குழந்தைகளுக்கு கிடைப்பதில்லை என்பதால் உலகின் சில நாடுகளில் காணப்படும் உயர் பாலின விகிதத்திற்கு வள அணுக்கப் பாகுபாடும் காரணமாய் உள்ளது[22]

Remove ads

சட்டங்களும் ஒழுங்குமுறைவிதிகளும்

Thumb
ஒரு இந்திய மருத்துவமனையில், குழந்தை பிறப்புக்குமுன் அதன் பாலினம் அறிதல் குற்றமெனச் சுட்டும் ஒரு அறிவிப்புப் பலகை.

இந்தியாவில் முதன்முறையாக 1971 இல் கருக்கலைப்புத் தொடர்பான சட்டம் கொண்டுவரப்பட்டது[26]. இச்சட்டத்தின்படி பெரும்பான்மையான இந்திய மாநிலங்களில் சில குறிப்பிட்டக் காரணங்களுக்காக முறையான மருத்துவர்கள் மூலம் செய்து கொள்ளப்படும் கருக்கலைப்பு சட்டரீதியாக அனுமதிக்கப்பட்டது. அக்கருவால் தாயின் நலனுக்கு கேடாகக்கூடுமென மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்டாலோ, வன்புணர்வால் கருவுற்றோலோ அதனைக் கலைப்பதற்கு இச்சட்டம் அனுமதித்தது. கருக்கலைப்பு செய்யக்கூடிய முறையான மருத்துவர்களையும், மருத்துவமனைகளையும் வரைமுறைப்படுத்தியது. ஆனால் மேம்பட்ட தொழினுட்ப வளர்ச்சியால் கரு ஆணா அல்லது பெண்ணா என்று தெரிந்து கொண்டு, வேண்டாத கருவைக் கலைத்துவிடும் அபாயத்தை இச்சட்டமானது எதிர்நோக்கவில்லை.[27] 1980களில் இந்திய நகர்ப்புறங்களில், கருவிலிருக்கும் குழந்தை ஆணா அல்லது பெண்ணா என்பதைத் தீர்மானம் செய்யக்கூடிய தொழினுட்ப வசதி பெருகியதால் பெண்கருக்கலைப்பு நிகழ்வுகளும் அதிகமானது. இதனால் 1994 ஆல் கருவின் பாலினமறிதலோ அல்லது தெரிவித்தலோ குற்றமென சட்டம் கொண்டுவரப்பட்டது[28]. 2004 இல் இச்சட்டம் மேலும் திருத்தப்பட்டு, குழந்தை பிறக்குமுன் அதன் பாலினத்தை அறிய முயற்சிப்பதும் பெண்கருக் கலைப்பும் தண்டணைக்குரிய குற்றங்களாக்கப்பட்டன. என்றாலும் இச்சட்டம் சரியானபடி அமலாக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.[11]

பெண்கலைப்பு தொடர்பான இந்தியச் சட்டங்களும் அவற்றின் அமலாக்கமும் தெளிவாக இல்லை. 2009 இல் இச்சட்டங்களின் தாக்கத்தை மதிப்பீடு செய்யுமாறு ஐக்கியநாடுகள் அவையின் மக்கட்தொகை நிதி (UNFPA) மற்றும் இந்திய மனித உரிமை ஆணையம் இரண்டும் இந்திய அரசைக் கேட்டுக்கொண்டன. 2010 இல் முன்னோடி ஆய்வு நிறுவனமான இந்திய பொது நல அமைப்பானது, இந்தியாவின் பலபகுதிகளில் இச்சட்டங்கள் குறித்த விழிப்புணர்வின்மை, தகுதிவாய்ந்த அதிகாரிகளின் செயற்பாடின்மை, குழந்தைப் பிறப்புக்குமுன் நலம்பேணும் சில சேவைமையங்களின் தெளிவின்மை, சட்டத்தை மீறும் சில மருத்துவர்களின் சட்ட மீறல்கள் ஆகியவற்றைத் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.[8] ஊடக விளம்பரங்கள் மற்றும் கல்வியறிவின் மூலம் இச்சட்டம் குறித்த விழிப்புணர்வை மருத்துவர்களுக்கும் வருடி மையங்களுக்கும் ஏற்படுத்தும் முயற்சிகளை இந்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் மேற்கொண்டது. இந்திய மருத்துக் கழகம் தனது கூட்டங்களிலும் மாநாடுகளிலும் ”பெண்மகவைக் காப்பாற்றுவோம்” (Beti Bachao) என்ற வாசகங்கொண்ட அணிபட்டைகளைத் தனது உறுப்பினர்களுக்கு அளித்து, பெண்கருக் கலைப்பைப் தவிர்க்கும் விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சி செய்தது.[8][29] இருப்பினும் 2013 இல் நடத்தப்பட்ட ஒரு ஆய்வறிக்கையின்படி (Nandi and Deolalikar), 1994 இல் கொண்டுவரப்பட்டச் சட்டத்தால் பத்தாண்டுகளில் 106,000 பெண்கருக் கலைப்பை மட்டுமே தடுக்க முடிந்துள்ளது என்று அறியப்படுகிறது[30]

2007 இல் மேக்பெர்சன் நடத்திய ஆய்வின்படி அரசுசாரா அமைப்புகளும் அரசும் இச்சட்டம் குறித்த விளம்பரங்களை அதிகளவு மேற்கொண்டன. கருக்கலைப்பு ஒரு வன்செயலாக இவ்விளம்பரங்களில் காட்டப்பட்டு, கருக்கலைப்பு குறித்து மக்களிடையே ஒரு அச்சவுணர்வை ஏற்படுத்தின. சமயம் மற்றும் ஒழுக்கம் சாந்ந்த அவச்செயலாக கருக்கலைப்பை முன்னிறுத்தின. மேக்பெர்சனின் கூற்றுப்படி இவ்விளம்பரங்கள் மக்களிடையே தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்குப் பதில், ஒழுக்கக்கேடான செயல் என்ற கருத்தை விதைத்து, மக்களை கருக்கலைப்பு குறித்து வெளிப்படையாகப் பேசவிடாமல் செய்தது.[15] கருக்கலைப்பை ஒழுக்கம் சார்ந்த அவச்செயலாகக் காட்டியதன் விளைவாக, அச்சம் மற்றும் அவமானம் காரணமாய் பாதுகாப்பற்ற முறையில் நிகழும் கருக்கலைப்புகளின் எண்ணிக்கை அதிகமானது.[15]

2011 இன் ஆய்வறிக்கையின்படி, இந்திய அரசு கருவின் பாலினம் அறிதல் மற்றும் கருக்கலைப்பு தொடர்பான சட்டங்கள் குறித்த புரிதலை மக்களிடையே ஏற்படுத்த எல்லாநிலைகளிலும் செயற்பட்டது. முன்கூட்டியே கருவின் பாலினம் அறிதலே சட்டத்துக்குப் புறம்பானது; மருத்துவர்களின் பரிந்துரைப்படியான தகுந்த காரணங்களுக்காக கலைக்கலைவு செய்துகொள்வது சட்டத்துக்குட்பட்டதே என்ற கருத்தை மக்களிடையே நிலைப்படுத்தும் வகையில் பரப்புரைகள் மேற்கொள்ளப்பட்டன. பாலினப் பாகுபாட்டைக் களைவதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளையும், நிகழ்ச்சிகளையும், ஊடக விளம்பரங்களையும் இந்திய அரசு ஆதரிக்கிறது.[8][29]

நாட்டில் குழந்தைகள் பாலின விகித அதிகரிப்பும், பாலினம் அறிவதைத் தடைசெய்யும் சட்ட அமலாக்கம் குறித்து அறிக்கை தருமாறு 2003ல் உச்ச நீதிமன்றம் மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டதையும் தொடர்ந்து, இந்திய அமைச்சகம் ஒரு குழுவை (NIMC) ஏற்படுத்தியது. மருத்துவர் ரத்தன் சந்த் தலைமையில் ஏற்படுத்தப்பட்ட இந்தக் குழு மகாராட்டிரம், பஞ்சாப், அரியானா, இமாச்சலப் பிரதேசம், தில்லி, குசராத் உள்ளிட்ட மாநிலங்களில் சோதனை நடத்தியது. அந்தந்த மாநில முதன்மைச் செயலர்களுக்கு அனுப்பப்பட்ட சோதனை அறிக்கைகளில், பதிவு செய்யப்பட்ட மருத்துவமனைகளை அதிகாரிகள் முறையாக கண்காணிக்கவோ சோதனை நடத்தவோ இல்லையென்ற விபரம் குறிப்பிடப்பட்டிருந்தது.[31]

அண்மைக்காலத்தில் பல இந்திய மாநிலங்களில் பொருளாதார வசதியற்ற குடும்பங்களிலுள்ள பெண் குழந்தைகளுக்கும் அவரது பெற்றோருக்கும் பயனிக்கக்கூடிய பல திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.[32] நிபந்தனையின்பேரில் அளிக்கப்படும் பணப்பரிமாற்றமும், பெண்குழந்தைகளுக்கு மட்டுமே அளிக்கப்படும் உதவித்தொகைகளும் வழங்கப்படுகின்றன. அவ்வாறு வழங்கப்படும் உதவித்தொகையானது ஒரு பெண்குழந்தையின் பிறப்பு, குழந்தைப் பருவம், பள்ளியில் முதலில் சேரும் காலம், ஆறாவது, ஒன்பதாவது, பனிரெண்டாவது வகுப்பு முடிக்கும் நிலைகள், 21 வயதடைந்த பின் நடைபெறும் திருமணமென அவள் வாழ்வின் ஒவ்வொரு காலகட்டங்களிலும் பிரித்தளிக்கப்படுகிறது. சில மாநிலங்களில் ஒன்று அல்லது இரண்டு பெண் குழந்தைகளைக் கொண்ட பெற்றோருக்கு அதிகப்படியான ஓய்வூதியப் பலன்கள் தரப்படுகின்றன. ஒவ்வொரு மாநிலமும் பெண்குழந்தைகளை நோக்கி செயற்படுத்தப்படும் வெவ்வேறான புதுப்புது உத்திகளைக் கையாளுகின்றன.[32][33]

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads