குசராத்து
இந்திய மாநிலம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
குசராத்து (குசராத்தி: ગુજરાત, Gujarat) இந்தியாவின் மேற்குப்பகுதியில் அமைந்துள்ள ஒரு மாநிலமாகும். இம்மாநிலத்தில் தற்போது 33 மாவட்டங்கள் உள்ளன. இது இந்தியாவில் மகாராட்டிரத்திற்கு அடுத்து நன்கு தொழில் வளர்ச்சி அடைந்த மாநிலமாகும். இதன் வடமேற்கில் பாக்கித்தானும் வடக்கில் இராசத்தானும் , மேற்கில் மத்திய பிரதேசம் மற்றும் தெற்கில் மகாராட்டிர எல்லைகளாக அமைந்துள்ளன.[7]
காந்தி நகர் இதன் தலைநகராகும். இது மாநிலத்தின் முன்னாள் தலைநகரும் பொருளாதாரத் தலைநகருமான அகமதாபாத்தின் அருகில் அமைந்துள்ளது.
மகாத்மா காந்தி, சர்தார் வல்லப்பாய் படேல், கே. எம். முன்சி, மொரார்சி தேசாய், யு. என். தேபர் மற்றும் நரேந்திர மோடி ஆகியோர் இம்மாநிலத்தில் பிறந்தவர்களாவர்.
Remove ads
வரலாறு
குஜராத் (குஜராத்து) என்னும் பெயர் மத்திய ஆசியாவில் இருந்து இன்றைய குஜராத்துக்கு குடிபெயர்ந்த குர்ஜ் இன மக்களிடம் இருந்து தோன்றியதாக வரலாறு. குர்ஜ் இன மக்கள் இன்றைய ஜார்ஜியா (பண்டைய காலத்தில் குர்ஜிஸ்தான் என்று அழைக்கப்பட்டது) நாட்டிலிருந்து பொ.ஊ.மு. முதலாம் நூற்றாண்டு வாக்கில் குடிபெயர்ந்தனர். பொ.ஊ. 35 முதல் 405 வரை ஈரானிய சாகஸ் இன மக்களின் ஆட்சியின் கீழ் இருந்தது. பின்னர், சில காலம் இந்திய-கிரேக்க அரசாட்சியின் கீழ் இருந்தது. குஜராத்தின் துறைமுகங்கள் குப்த பேரரசாலும், மௌரிய பேரரசாலும் பெரிதும் பயன்படுத்தப்பட்டன. ஆறாம் நூற்றாண்டு வாக்கில், குப்தர்களின் வீழ்சசிக்குபின், குசராத்து தன்னாட்சி பெற்ற இந்து அரசாக விளங்கியது. குப்த பேரரசின் சேனாதிபதியான மைதிரேகாவின் குலவழிகள், ஆறாம் நூற்றாண்டு முதல் எட்டாம் நூற்றாண்டு வரை வல்லாபியை தலைநகராக கொண்டு குஜராத்தை அரசாண்டனர். பொ.ஊ. 770 களில் அரேபிய படையெடுப்பாளர்களின் முயற்சியால் வல்லாபி குல ஆட்சி முடிவுக்கு வந்தது. பொ.ஊ. 775ல், பார்சி இன மக்கள் ஈரானிலிருந்து, குஜராத்தில் குடியேறத் துவங்கினர். பின்னர், எட்டாம் நூற்றாண்டில் பிரத்திகா குல அரசர்களாலும், ஒன்பதாம் நூற்றாண்டில் சோலன்கி குல அரசர்களாலும் அரசாளப்பட்டது. பல இஸ்லாமிய படையெடுப்புகளையும் தாண்டி சோலன்கி ஆட்சி 13ம் நூற்றாண்டின் கடைசி வரை தொடர்ந்தது.
பொ.ஊ. 1024–1850

பொ.ஊ. 1024–1025இல் கஜினி முகமது, சோமநாதபுரம் மீது படையெடுத்து, கோயில் செல்வங்களை கொள்ளையடித்துச் சென்றார். பொ.ஊ. 1297–1298 ல் தில்லி சுல்தான் அலாவுதீன் கில்சி அன்கில்வாரா நகரை அழித்து குஜராத்தை தில்லி சுல்தானகத்துடன் இணைத்தார். 14ம் நூற்றாண்டின் கடைசியில், தில்லி சுல்தானியம் பலவீனம் அடைந்த நிலையில், தில்லி சுல்தானியத்தின் மாநில ஆளுனராக நியமிக்கப்பட்டிருந்த ஜபர்கான் முசாப்பர் தன்னை குசராத்தின் முழு ஆட்சியாளராக அறிவித்துகொண்டார். அவனை தொடர்ந்து ஆட்சிக்கு வந்த அவனது மகன் அகமது ஷா, அகமதாபாத் நகரத்தை நிறுவி, அந்நகரை தன் தலைநகராய் கொண்டு பொ.ஊ. 1411 முதல் 1442 வரை ஆட்சி செய்தார். குசராத்து சுல்தானிகம் பொ.ஊ. 1576 ஆம் ஆண்டில் பேரரசர் அக்பரின் படையெடுப்பின் மூலம் முடிவுக்கு வந்தது. மொகலாயர்களுக்கு பின் மராத்திய மன்னர்களாலும், குறுநில மன்னர்களாலும் ஆட்சி செய்யப்பட்டது.
பிரித்தானிய இந்தியா அரசின் கீழ் குஜராத்தில் பரோடா அரசு, பவநகர் அரசு, கட்ச் இராச்சியம், ஜாம்நகர் அரசு, ஜூனாகாத் அரசு, பாலன்பூர் அரசு, படான் அரசு, போர்பந்தர் அரசு, ராஜ்பிபாலா அரசு உள்ளிட்ட 49 சுதேச சமஸ்தானங்கள் இருந்தன.
பொ.ஊ. 1614–1947
போர்த்துகீசர்கள் தமது ஏகாதிபத்தியத்தை குசராத்தின் துறைமுக நகர்களான தாமன், தியு ஆகிய இடங்களிலும் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி ஆகிய இடங்களிலும் நிறுவினர். பிரித்தானியாவின் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம், 1614ல், தனது முதல் தொழில்சாலையை சூரத்து நகரில் நிறுவியது. மராட்டிய அரசுகளுடன் நடந்த இரண்டாம் ஆங்கிலேய மராட்டிய போரின் முலம் பெரும்பான்மையான பகுதிகளை ஆங்கிலேயர் கைப்பற்றினர். குறுநில ஆட்சியாளர்களிடம் பல அமைதி ஓப்பந்தங்களை உருவாக்கி, அவர்களுக்கு குறைந்த சுயாட்சி வழங்கி, அனைத்து பகுதிகளையும் தம் ஆட்சியின்கீழ் கொண்டு வந்தனர்.
இந்திய விடுதலை போராட்டம்
இந்திய விடுதலைப் போராட்டத் தலைவர்களான மகாத்மா காந்தி, சர்தார் வல்லபாய் பட்டேல், கே. எம். முன்ஷி மொரார்ஜி தேசாய், மற்றும் பாகிஸ்தானின் முதல் கவர்னர் செனரலான முகமது அலி ஜின்னா போன்றவர்கள் குசராத்தைச் சேர்ந்தவர்கள்.
விடுதலைக்குப் பின்
இந்திய விடுதலைக்குப்பின், 49 சுதேச சமஸ்தானங்களைக் கொண்டிருந்த குசராத்தை பம்பாய் மாகாணத்துடன் இணைக்கப்பட்டது. 1 மே 1960 அன்று, பம்பாய் மாகாணத்தை மொழி அடிப்படையில் பிரிக்கப்பட்டு மகாராட்டிரம் மற்றும் குசராத்து மாநிலங்கள் உருவானது. குசராத்து மாநிலத்தின் தலைநகராக அகமதாபாத் நகர் தேர்வு செய்யப்ப்ட்டது. பின், 1970ல் காந்திநகருக்கு மாற்றப்பட்டது.
Remove ads
மக்கள் தொகையியல்
2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி குஜராத் மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை 60,439,692 ஆக உள்ளது. நகர்புறங்களில் 42.60% மக்களும், கிராமப்புறங்களில் 57.40% மக்களும் வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 19.28% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் 31,491,260 ஆண்களும் மற்றும் 28,948,432 பெண்களும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 919 பெண்கள் வீதம் உள்ளனர். மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டரில் 308 பேர் வீதம் வாழ்கின்றனர். இம்மாநிலத்தின் சராசரி படிப்பறிவு 78.03% ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 85.75% ஆகவும், பெண்களின் படிப்பறிவு 69.68% ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 7,777,262 ஆக உள்ளது.[8] இம்மாநிலத்தில் பில் பழங்குடி மக்கள் தொகை 34,41,945 ஆக உள்ளது.
சமயம்
இம்மாநிலத்தில் இந்து சமயத்தவரின் மக்கள் தொகை 53,533,988 (88.57%) ஆகவும், இசுலாமிய சமய மக்கள் தொகை 5,846,761 (9.67%) ஆகவும், கிறித்தவ சமயத்தினரின் மக்கள் தொகை 316,178 (0.52%) ஆகவும், சீக்கிய சமய மக்கள் தொகை 58,246 (0.10%) ஆகவும், சமண சமய மக்கள் தொகை 579,654 (0.96%) ஆகவும், பௌத்த சமய மக்கள் தொகை 30,483 (0.05%) ஆகவும், பிற சமயத்து மக்கள் தொகை 16,480 (0.03%) ஆகவும் மற்றும் சமயம் குறிப்பிடாதவர்கள் மக்கள் தொகை 57,902 (0.10%) ஆகவும் உள்ளது.
மொழிகள்
இம்மாநிலத்தின் ஆட்சி மொழியான குஜராத்தி, உடன் இந்தி, மராத்தி, உருது மொழிகள் பேசப்படுகின்றன.
Remove ads
பொருளாதாரம்
மாநிலத்தின் முக்கிய வேளாண் பயிர்கள் பருத்தி, நிலக்கடலை, பருப்பு வகைகள், நவதாணியங்கள் மற்றும் பேரீச்சம் பழம் ஆகும். பால் மற்றும் பால் பொருட்கள் தயாரிப்பில் இந்தியாவில் முதலிடத்தில் உள்ளது. சிமெண்ட், கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் இயற்கை எரிவாயு உற்பத்தி நிலையங்கள், வைரங்களை பட்டை தீட்டும் தொழிற்கூடங்கள், துணி மற்றும் ஆடை உற்பத்தி ஆலைகள் மாநிலத்தின் பொருளாதாரத்திற்கு துணையாக உள்ளது.[9] சூரிய மின்சக்தி கலங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தைப் பிற மாநிலங்களுக்கு விற்பதன் மூலம் நிதி ஆதாரங்கள் பெருகி வருகின்றன. இம்மாநிலத்தின் கண்ட்லா துறைமுகம் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி மூலம் வருவாய் ஈட்டுகிறது.
போக்குவரத்து வசதிகள்
தொடருந்துகள்
அகமதாபாத் தொடருந்து சந்திப்பு நிலையம் குஜராத் மற்றும் இந்தியாவின் பிற நகரங்களுடன் இணைக்கும் தொடருந்துகள் இருப்புப் பாதை வழியாக இணைக்கிறது.[10]
வானூர்திகள்
சர்தார் வல்லபாய்படேல் பன்னாட்டு விமான நிலையம் வான் வழியாக இந்தியா மற்றும் பன்னாட்டு நகரங்களை இணைக்கிறது.[11]
தேசிய நெடுஞ்சாலைகள்
குஜராத் மாநிலம் வழியாக செல்லும் பதினோறு தேசிய நெடுஞ்சாலைகள், குஜராத்தை நாட்டின் பிற பகுதிகளை தரை வழியாக இணைக்கிறது. முக்கிய தேசிய நெடுஞ்சாலைகள்; தேசிய நெடுஞ்சாலை 6, தேசிய நெடுஞ்சாலை 8.
Remove ads
மாவட்டங்கள்
2001 குசராத்து நிலநடுக்கம்
2001 ம் ஆண்டு ஜனவரி 26ம் நாள் காலை 08:46 மணிக்கு நிகழ்ந்த பயங்கர நிலநடுக்கதிற்கு சுமார் 12,000 பேர் பலியாயினர். சுமார் 55,000 பேர் படுகாயமுற்றனர்.
Remove ads
குசராத்தில் மழைநீர் சேகரிப்புத் திட்டமும் வேளாண்மை வளர்ச்சியும்
குசராத்தில் குறிப்பாக மழை வளம் மிகக் குறைவாக உள்ள கத்தியவார் தீபகற்பத்தில், குடிநீர் பற்றாக்குறை நீக்க்வும் மற்றும் வேளாண்மை வளர்ச்சி மேம்படுத்தவும் பசுமை புரட்சி திட்டம் செயல்படுத்தப்பட்டு வெற்றியும் அடைந்துள்ளது. ‡
சரணாலயங்கள்
குசராத் மாநிலத்தில் ஆசிய சிங்கங்களுக்கு பெயர்பெற்ற கிர் தேசியப் பூங்கா மற்றும் பிற விலங்குகள் மற்றும் பறவைகளுக்கான சரணாலயங்கள் உள்ளது.#
புனித தலங்கள்
தொல்லியற் களங்கள்
2002 குசராத்து வன்முறை
கோத்ரா இரயில் நிலயத்தில், சபர்மதி விரைவு வண்டியில் பயணித்த பயணிகளுடன் இரயில் பெட்டியை எரித்த காரணத்தினால் அப்பாவி இந்து பயணிகள் 59 க்கும் மேற்பட்டவர்கள் பலியானர்கள், நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். இந்த குற்றச் செயலுக்கான தீர்ப்பு 21.11.2011ல் குசராத் உயர்நீதிமன்றம் வெளியிட்டது↑. பிப்ரவரி 2002 ம் ஆண்டு இவ்வுணர்வு மிகப்பெரிய வன்முறையாக வெடித்தது. இதில், 790 முஸ்லிம்களும், 254 இந்துகளும் கொல்லப்பட்டனர். சுமார் 2500 பேர் காயம் அடைந்தனர்.[13] இவ்வன்முறை தொடர்பாக மத்திய மற்றும் மாநில அரசுகளை மனித உரிமைகள் கழகம் கடுமையாக கண்டித்துள்ளது.
படக்காட்சியகம்
குஜராத் மாநிலத்தில் பார்க்க வேண்டிய இடங்கள்;
- மகாதேவர் கோயில், பவநாத்
- பகாவூதீன் மக்பார மசூதி, ஜூனாகத்
- மகாத்மா காந்தி பிறந்த வீடு, போர்பந்தர்
- ஹரிசித்தி மாதா மலைக்கோயில், போர்பந்தர்
- பண்டைய லோத்தல் நகரம்
- தோலாவிராவின் கிணறு
Remove ads
மேலும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads